என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்வலி கிழங்குகளுக்கு  உரிய விலை வழங்காவிட்டால் போராட்டம் விவசாயிகள் அறிவிப்பு
    X

    கோப்பு படம்

    கண்வலி கிழங்குகளுக்கு உரிய விலை வழங்காவிட்டால் போராட்டம் விவசாயிகள் அறிவிப்பு

    • 3 மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.
    • கண்வலி விதையின் விலையைக் குறைத்து விடுகின்றனர்.

    மூலனூர் :

    திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த கண்வலி மூலிகை பயிர் செய்யும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் மூலனூர் அருகே உள்ள புதுக்கோட்டையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மூலனூர் சுற்றுவட்டாரத்தில் பயிரிடப்பட்ட கண் வலி பயிர் தற்போது கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. இப்பயிரிலிருந்து கிடைக்கும் விதைகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு கண்வலி கிழங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இடைத்தரகர்கள் கூட்டணி அமைத்து கண்வலி விதையின் விலையைக் குறைத்து விடுகின்றனர். இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் கண்வலி விதை கிலோ ரூ.3ஆயிரத்துக்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் தலைவர் ஈசன் முருகசாமி கூறியதாவது:-

    உலகிலேயே கண் வலி விதை உற்பத்தி செய்யப்படும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் மூலனூர், கள்ளிமந்தயம், அரவக்குறிச்சி போன்ற பகுதிகளில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மிக சிறந்த மருத்துவ தாவரம் இது. பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. கண்வலி விதையை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.கிலோரூ.3ஆயிரத்து800-க்கு விற்பனை செய்யப்பட்ட கண்வலி விதைகள் தற்போது ரூ.1500-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்து கவலையில் உள்ளனர்.

    தமிழ்நாட்டிலேயே வெளிநாட்டிற்கு மூலிகைப் பொருட்களை அனுப்புவதற்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மூலிகை நிறுவனங்களை நடத்தி வருகிறது. இதில் 60-க்கும் மேற்பட்ட தாவரங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். அந்த நிறுவனம் கண் வலி விதைகளை ரூ.3ஆயிரத்திற்கு விவசாயிகளிடமிருந்து வாங்க வேண்டும். அதன் மூலம் மருந்துகள் தயாரித்து ஏற்றுமதி செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும். எனவே அரசாங்கம் விவசாயிகளுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி தாசில்தார்,ஆர்.டி.ஓ. மற்றும் கலெக்டருக்கு மனு கொடுத்தும் தீர்வு காணப்படவில்லை. எனவே மிகப்பெரிய போராட்டங்களை நடத்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×