என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • இணையதளத்தின் வாயிலாக வருகிற 22.8.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பத்தின் நகலை மாணவா் சோ்க்கை நடைபெறும் நாளில் கல்லூரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024ம் கல்வியாண்டு முதுநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இது குறித்து கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் (40), ஆங்கில இலக்கியம் (20), பொருளியல் (20), வணிகவியல் (40), சுற்றுலாவியல் (20), கணிதவியல் (20), புள்ளியியல் (15), இயற்பியல் (30), வேதியியல் (20), கணினி அறிவியல் (40) ஆகிய முதுநிலைப் பட்ட வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 265 மாணவா்களுக்கான இடங்கள் உள்ளன.

    இந்தப் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவா்கள் இணையதளத்தின் வாயிலாக வருகிற 22.8.2023 வரை விண்ணப்பிக்கலாம். மாணவா்கள் கைப்பேசி, மடிக்கணினி, கணினி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    முதலில் தங்கள் பெயா், மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் முதலான விவரங்களை அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னா் விண்ணப்பத்தை முறையாக பூா்த்தி செய்து சமா்ப்பித்த பின்னா் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

    பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலை மாணவா் சோ்க்கை நடைபெறும் நாளில் கல்லூரியில் சமா்ப்பிக்க வேண்டும். மாணவா் சோ்க்கைக்காக விண்ணப்பித்தவா்களின் தர வரிசைப்பட்டியல் கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்படும். 

    • வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட 40 வழக்குகள் உள்ளது.
    • கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளார்.

    அவிநாசி:

    சேவூா் அருகே புதுச்சந்தை வரப்பளத்தான் தோட்டத்தைச் சோ்ந்த கருப்புசாமி மகன் புக்கான் (எ) மூா்த்தி (வயது 39). அவிநாசி, குன்னத்தூா், பெருமாநல்லூா், சேவூா், புன்செய்புளியம்பட்டி, வரப்பாளையம் ஆகிய காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இவா் மீது 40 வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

    கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த இவரை சேவூா் காவல் உதவி ஆய்வாளா்கள் சா்வேஸ்வரன், சேகா், தலைமைக் காவலா் ஆகியோா் கொண்ட தனிப்படை போலீசார் தேடி வந்தனா்.

    இந்த நிலையில் ரகசிய தகவலின்படி, ராயா்பாளையம் அருகே வண்ணாம்பாறை பகுதியில் தலைமறைவாக இருந்த புக்கான் (எ) மூா்த்தியை தனிப்படை போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா். 

    • ரூ.34 லட்சத்து 36ஆயிரத்து 633 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • சிக்கண்ணா அரசு கல்லூரியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    உடுமலை:

    உடுமலை வட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் பங்கேற்கும் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது.இதில் கால்பந்து, ஆக்கி, கபடி, கையுந்து பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட குழு போட்டிகள், தனி நபா் போட்டிகள், பல்வேறு பிரிவுகளில் ஓட்டப் பந்தயங்கள் மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    முதல் நிகழ்வாக உடுமலையை அடுத்துள்ள ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் கேரம் போட்டி நடைபெற்றது. கல்லூரி ஆலோசகா் ஜெ.மஞ்சுளா போட்டிகளை தொடங்கிவைத்தாா்.இதில் இரட்டையா் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 17 பள்ளிகளும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 21 பள்ளிகளும், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 11 அணிகளும் கலந்து கொண்டன.

    ஒற்றையா் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 18 பள்ளிகளும், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 21 பள்ளிகளும், 18 வயதுக்குட்பட்ட பிரிவில் 13 பள்ளிகளும் கலந்து கொண்டன. ஒவ்வொரு பிரிவுகளிலும் முதலாவதாக வந்த மூன்று போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெற முடியும். 

    • திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியில் புதிய பிரதான கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • திருப்பூர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியில் உயர்கல்வித்துறை சார்பில் புதிய பிரதான கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    திருப்பூர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:-

    எல்.ஆர்.ஜி மகளிர் கலைக்கல்லூரியில் சிதலமடைந்துள்ள முதன்மை கட்டிடத்திற்கு மாற்றாக ரூ.10.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பிரதான கட்டிடத்தை முதல் அமைச்சர் திறந்து வைத்தார். இந்த கட்டிடம் பல்வேறு வசதிகளுடன் மூன்று தளங்களாக கட்டப்பட்டுள்ளது.

    இதில் தரைதளத்தில் முதல்வர் அறை, நூலகம், இயற்பியல் ஆய்வகம், இயற்பியல் புத்தக சேமிப்பு அறை, தேர்வு அறை, டிஜிட்டல் அறை, பதிவறை மற்றும் உடற்பயிற்சி அறைகளும், முதல் தளத்தில் ஆசிரியர்கள் அறை, விலங்கியல் அருங்காட்சியம் அறை, 4 வகுப்பறைகள்,4 ஆய்வகங்கள் மற்றும் விலங்கியல் புத்தக சேமிப்பு அறைகளும்,

    இரண்டாம் தளத்தில் ஆசிரியர்கள் அறை, 12 வகுப்பறைகள், கருத்தரங்கு கூடம் மற்றும் புத்தக சேமிப்பு அறைகளும் உள்ளன. மேலும், அனைத்து தளங்களிலும் கழிப்பறை வசதிகள், உடல் திறன் குறைந்தோருக்கான சாய்வுதளம், திறந்தவெளி கலையரங்கம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், மழைநீர் சேமிப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இக்கட்டடத்தில் இடம் பெற்றுள்ளன என்றார்.

    திறப்பு விழா நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், 2-ம் மண்டல தலைவர் கோவிந்தராஜ், எல்.ஆர்.ஜி. கல்லூரி முதல்வர் எழிலி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் சக்திவேல், உதவி பொறியாளர் ஜெயக்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    உடுமலை:

    உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 16-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

    உடுமலை மின்நகா், இந்திரா நகா், சின்னப்பன்புதூா், ராஜாவூா், ஆவல்குட்டை, சேரன் நகா், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, ராமேகவுண்டன்புதூா், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூா். 

    • தனது வீட்டு வாசலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நின்று கொண்டிருந்துள்ளாா்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

    குன்னத்தூர்:

    குன்னத்தூா், வெள்ளிரவெளி கரையாம்புதூரைச் சோ்ந்தவா் அய்யாதுரை மனைவி செல்வராணி (வயது 50). இவா் தனது வீட்டு வாசலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவரை விஷப்பாம்பு கடித்துள்ளது.

    இதையடுத்து அவா் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து குன்னத்தூா் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். 

    • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
    • 40 வயதுக்கு உள்பட்ட திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூா்:

    திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஆற்றுப்படுத்துநா், உதவியாளா் உடன் கூடிய தகவல் உள்ளீட்டாளா் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதில் ஆற்றுப்படுத்துநா் பணியிடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல், உளவியல், பொது சுகாதாரம், ஆற்றுப்படுத்துதலில் பட்டதாரி அல்லது முதுநிலை டிப்ளமோ ஆற்றுப்படுத்துதல் மற்றும் தொடர் பாடல் பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    உதவியாளா் உடன் கூடிய தகவல் உள்ளீட்டாளா் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான வாரியத்தில் இருந்து பட்டயப்படிப்பு, கணினி இயக்குவதில் சான்றிதழ் பெற்றிருப்பதுடன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 40 வயதுக்கு உள்பட்ட திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவச்சான்று மற்றும் புகைப்படத்துடன் வரும் செப்டம்பா் 2ந்தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண் 305, 7 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971198 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ்அறிவுறுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டுதல், சாலை வசதி, குடிநீர் வசதி கோருதல் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 462 மனுக்கள் பெற்று கொள்ளப்பட்டது. அதில் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ்அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பாதுகாவலர் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் சப்- கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, துணை கலெக்டர்கள் மற்றும் அனைத்து அரசு த்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,600 முதல் ரூ.7,800 வரை விற்க்கப்பட்டது.
    • மொத்தம் ரூ.1.30 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

    அவிநாசி:

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.30 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,600 முதல் ரூ.7,800 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.7,500 முதல் ரூ7,600 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.7,400 முதல் ரூ.7,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.30 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. 

      காங்கயம்:

      திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். வேறு எந்தக்கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவிலில் உள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.

      இந்நிலையில் சென்னை பட்டவாக்கத்தை சேர்ந்த முரளிதரன் (வயது 36) என்ற பக்தரின் கனவில் உத்தரவான மண்ணால் செய்யப்பட்ட பசுவுடன் கன்றுக்குட்டி இருக்கும் சிலை ஒன்று நேற்று முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்டு-1-ந் தேதி முதல் விருஷ்ப அஸ்திரம், தனூர்பாண அஸ்திரம், வருண அஸ்திரம், பாசுபத அஸ்திரம், ரூபாய் 101, 6-எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

      நேற்று உத்தரவு பொருள் கொண்டு வைத்த சென்னையை சேர்ந்த பக்தர் முரளிதரன் கூறியதாவது:-

      கடந்த 1-ந்தேதி முதல் ஓசூர் பகுதியில் நானும், எனது நண்பர்களும் சேர்ந்து கூட்டாக சுமார் 10 நாட்டு மாடுகளை வைத்து பண்ணை அமைத்து பால் விற்பனை தொழில் தொடங்கி செய்து வருகிறோம். கடந்த ஆடி 18-ந்தேதி எனது கனவில் ஒரு பெட்டியின் அருகில் நானும் எனது நண்பர்களும் நின்று கொண்டிருப்பதை போலவும், அந்த பெட்டியில் ஒரு சீட்டு இருப்பது போலவும், பெட்டியை திறந்து சீட்டை எடுத்து படிக்கும் போது அதில் பசுவுடன் கன்றுக்குட்டி இருக்கும் விதமாக அதில் எழுதப்பட்டிருந்தது போல் கடவுள் எனக்கு உணர்த்தினார்.

      பின்னர் இது சம்பந்தமாக நான் சமூக வலை தளங்களில் தேடி பார்க்கும் போது காங்கயம் அருகே சிவன்மலை முருகன் கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி பற்றியும், அதில் வைக்கும் பொருள் பற்றியும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று கோவிலுக்கு வந்து சாமியிடம் பூப்போட்டு கேட்டு உத்தரவு ஆன பின் பசு-கன்றுக்குட்டி சிலை வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

      இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், "தற்போது பசுவுடன் கூடிய கன்று உத்தரவாகியிருப்பதன் மூலம் பசுவினம் பெருகி நாட்டில் செல்வவளம் பெருகும். எனினும் இது சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போக போக தெரியவரும் என்று கூறினர்.

      • கார்த்திகேயனுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டு தினமும் குடித்து விட்டு காதலிக்கு தொல்லை கொடுத்துள்ளார்.
      • வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      வெள்ளகோவில்:

      திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மகன் கார்த்திகேயன் (வயது 25). இவர் தற்போது தனது பெற்றோருடன் வெள்ளகோவில் அருகே உள்ள சிவநாதபுரத்தில் தங்கி விசைத்தறி கூட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

      இந்த நிலையில் கார்த்திகேயனுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டு தினமும் குடித்து விட்டு காதலிக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதில் அதிருப்தி அடைந்த காதலி இப்படி குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால் நான் எப்படி உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.

      இதனால் கார்த்திகேயன் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      • வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.
      • போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

      வெள்ளகோவில்:

      வெள்ளகோவில் அருகே காடையூரான் வலசில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தீனதயாளன் (வயது 31) என்பவர் மேனேஜராக வேலை செய்து வருகிறார். அதன் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இரு கம்பெனி தொழிலாளர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

      இதனால் தீனதயாளனை அருகில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வந்த வட மாநில தொழிலாளர்கள் வமிஸ்வர் பானி பட்டர் (22) , கணேஷ் தேகுர் (23) ,அமல் சிகரி (35) ,திலீப் முண்டா (23) ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.அதன் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

      ×