என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • 60 லட்சம் நிதி மதிப்பீட்டில் பணியினை மேற்கொள்ள நிர்வாகம் உத்தரவிட்டு அனுமதி வழங்கியுள்ளது .
    • பாராட்டு சான்றிதழை மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் பவன்குமார் ஆகியோர் வழங்கினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் மேயர் தினேஷ்குமார் கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த பணியாளர்களுக்கு விருது உள்ளிட்டவற்றை வழங்கினார்.

    அப்போது திருப்பூர் மாநகராட்சி 22 - வது வார்டு குமரானந்தபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிக்கு "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் சில நாட்களுக்கு முன்பு மேயரிடம் 20,07,500 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது

    அதன் அடிப்படையில் மாநகராட்சி மூலமாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இப்பொழுது 60 லட்சம் நிதி மதிப்பீட்டில் பணியினை மேற்கொள்ள நிர்வாகம் உத்தரவிட்டு அனுமதி வழங்கியுள்ளது .

    அதற்காக திருப்பூர் மாநகராட்சியின் சார்பில் சிறப்பான சேவையை பாராட்டி 22 வது வார்டு கவுன்சிலரும், முன்னாள் மண்டல தலைவருமான ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு சான்றிதழை மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் பவன்குமார் ஆகியோர் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் 21 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பத்மாவதி, 22 வது வட்ட கழக செயலாளர் ராஜ்குமார், வேலுசாமி, ஞானவேல், லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழை பெற்று கொண்டனர்.

    • ஆரிகமி மாடலில் 2 மணி நேரத்தில் 326 மாடல்களின் டிசைன் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
    • தனக்கு கிடைக்கும் வருவாயை அரசு மருத்துவமனையில் அமைய உள்ள புற்றுநோய் மையத்திற்கு வழங்க உள்ளேன்.

    திருப்பூர்:

    திருப்பூர் கே. செட்டிபாளையம் சி.டி. சி. காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மகள் ஹேம அக்ஷயா. இவர் திருப்பூர் கோவில் வழியில் உள்ள பிரண்ட்லைன் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த மாணவி படிக்கும்போதே தனது சொந்த முயற்சியின் மூலம் "லில் லியர்ன்ஸ்" என்ற புத்தகம் ஒன்று எழுதினார். அதனை கடந்த 29ந் தேதி சாகித்ய அகடாமி விருது பெற்ற ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், அதிகாரி ராஜேந்திரன் வெளியிட்டார் . இந்த புத்தகத்தில் குழந்தைகளுக்கான சிறுகதைகள் மற்றும் விழிப்புணர்வு கதைகள் இடம் பெற்றுள்ளன.

    அதேபோல் மாணவி ஹேம அக்ஷயா பல்வேறு சாதனைகளும் படைத்துள்ளார் .அதன்படி இளம் எழுத்தாளர் அக்ஷயா எலைட் விருது, ஏசியன் விருது, தமிழன் ரெக்கார்டர், இந்தியன் ரெக்கார்டர் மற்றும் ஆரிகமி மாடலில் 2 மணி நேரத்தில் 326 மாடல்களின் டிசைன் செய்து உலக சாதனையும் படைத்துள்ளார். இந்த உலக சாதனை விருதுகளை சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் வழங்கினார்.

    இந்த நிலையில் தான் பெற்ற சாதனை சான்றிதழ்கள் மற்றும் மெடல்கள் , புத்தகம் ஆகியவற்றை திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ., சு.குணசேகரனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் மாணவிக்கு சால்வை அணிவித்து மேலும் பல்வேறு சாதனைகள் படைக்க வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

    நிகழ்ச்சியின் போது மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, தென்னம்பாளையம் தொகுதி கழகச் செயலாளர் கே.பி. ஜி.மகேஷ்ராம், நிர்வாகி ஆண்டவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து மாணவி ஹேம அக்ஷயா கூறுகையில், சிறு வயது முதல் புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதன்படி எனது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் இந்த புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளேன். புத்தகங்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அமைய உள்ள புற்றுநோய் மையத்திற்கு வழங்க உள்ளேன். தொடர்ந்து பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் பல்வேறு சாதனைகளை வரும் காலங்களில் நிகழ்த்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

    • ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம்.
    • முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர்.

    தாராபுரம்:

    ஆடி அமாவாசையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலை அமராவதி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை ஆற்றில் கரைத்து வழிபாடு செய்தனர். ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம். அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்கும் காலம். இது ஆடி மாதத்தில் தொடங்குகிறது.

    தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுது. எனவே, இந்த காலத்தில் நம்மை பாதுகாக்கவும், நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து ஆசீர்வதிக்கவும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர்.

    கருட புராணத்தில் இந்த பித்ருலோகம் சூரிய மண்டலத்தில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும் என புரோகிதர்கள் தெரிவித்தனர்.

    தாராபுரம் அமராவதி ஆற்றில் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருந்ததால் சில இடங்களில் தேங்கி நின்ற தண்ணீரில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேப்போல் உடுமலை அமராவதி ஆற்றங்கரை மற்றும் திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில் பக்தர்கள் புனிதநீராடினர். 

    • நாங்குநேரி சம்பவத்தை சாதிப் பிரச்சனையாக்க சில அரசியல் கட்சிகள் முயல்கிறது.
    • அரசியல் விளையாட்டில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது.

    திருப்பூர்:

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பல்லடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் இந்து முன்னணி சார்பில் சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து எழுச்சியாக கொண்டாடப்பட உள்ளது. வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இந்து முன்னணி சார்பில் உழவாரப்பணி மேற்கொள்ள உள்ளோம்.

    நாங்குநேரி சம்பவத்தை சாதிப் பிரச்சனையாக்க சில அரசியல் கட்சிகள் முயல்கிறது. இதனை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இவர்களது அரசியல் விளையாட்டில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது.

    கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை இந்து முன்னணி நடத்தியதால் இன்று எல்லா அரசியல் கட்சிகளும் நாங்கள் இந்துக்கள், நாங்கள் கோவிலுக்கு போறோம் என்று சொல்ல வைத்துள்ளது. இது இந்துக்கள் மத்தியில் பெரிய எழுச்சியை உருவாக்கியுள்ளது. சில அரசியல் கட்சிகள் இந்து மதத்திற்கு எதிரான போக்கை தொடர்ந்து வருகின்றனர். அதனை அவர்கள் கைவிடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெக்கலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி மயக்கம் அடைந்த நிலையில் கிடந்தார்.
    • சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவினாசி:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நீலகிரி எம்.பி.,யும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா கோவை வந்திருந்தார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளையும் முடித்து விட்டு கடைசியாக அவிநாசியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கோவை விமான நிலையம் நோக்கி சென்றார்.

    அப்போது தெக்கலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி மயக்கம் அடைந்த நிலையில் கிடந்தார். உடனே காரை நிறுத்திய ஆ.ராசா எம்.பி., உடனடியாக தனது காரிலேயே வாலிபரை ஏற்றி கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் மயக்கமடைந்த அந்த வாலிபருக்கு உடனிருந்து சிறப்பு சிகிச்சை அளிக்க தன்னுடன் பயணித்த மருத்துவர் கோகுல் என்பவரையும் அனுப்பி வைத்ததோடு இளைஞருக்கு வழங்கப்பட உள்ள சிகிச்சை முறை குறித்தும் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசினார். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தை மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது.
    • மாட்டு வண்டிகளின் வருகையால் உடுமலை- திருமூர்த்திமலை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமலைக்கு வருகை தருகின்றனர்.

    இக்கோவிலில் தை மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது என்பதால் அன்றைய தினங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள்.

    மேலும் அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வருவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.

    அதுமட்டுமின்றி அமாவாசைக்கு முன்தினம் திருமூர்த்தி மலைக்கு மாட்டு வண்டிகளில் வருகின்ற பக்தர்கள் இரவு முழுவதும் கோவில் மற்றும் அணைப்பகுதியில் தங்கி, காலையில் அருவியில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து விட்டு திரும்பிச் செல்வார்கள்.

    அந்த வகையில் இன்று திருமூர்த்திமலையில் நடைபெற்ற ஆடி அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டிகளில் வந்து குவிந்தனர். மாட்டு வண்டிகளின் வருகையால் உடுமலை- திருமூர்த்திமலை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தளி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இன்று காலை பக்தர்கள் அனைவரும் பஞ்சலிங்க அருவியில் குளித்து விட்டு அமண லிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பாலாற்றின் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணமும் கொடுத்தனர்.

    • ஈஸ்வரமூர்த்தி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • தண்டனை காலம் முடிந்து இருவரும் வெளியே வந்திருந்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கொண்டரசம்பாளையம் ஓட்டக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி (வயது 60). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டு மாடுகள் வளர்த்து வந்தார். இன்று அதிகாலை மாடுகளில் பால் கறந்து விட்டு கொட்டா புளிபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் வழங்குவதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    கொண்டரசம்பாளையம் விநாயகர் கோவில் அருகே செல்லும் போது திடீரென அங்கு வந்த ஈஸ்வர மூர்த்தியின் உடன் பிறந்த அண்ணன் பழனிச்சாமி(63) கண்ணிமைக்கும் நேரத்தில் ஈஸ்வரமூர்த்தியை அரிவாளால் வெட்டினார். இதில் ஈஸ்வரமூர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தாராபுரம் டி.எஸ்.பி., கலையரசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ஈஸ்வரமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பழனிச்சாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். ஈஸ்வரமூர்த்தி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஈஸ்வர மூர்த்திக்கும் பழனிச்சாமிக்கும் பொதுவாக 8 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் ஈஸ்வரமூர்த்தி மனைவி முத்துலட்சுமி மற்றும் மகள்கள் வாணி ஸ்ரீ(12 ), இளங்கவி(11) ஆகியோருடன் தோட்டத்தில் வசித்து வந்தார். அதே தோட்டத்தில் மற்றொரு பகுதியில் பழனிசாமி வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நிலத்தை பிரித்து கொடுக்காத காரணத்தினால் ஈஸ்வர மூர்த்திக்கும் பழனிச்சாமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த பிரச்சினையில் இன்று காலை, தம்பி என்றும் பாராமல் ஈஸ்வர மூர்த்தியை பழனிச்சாமி வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஏற்கனவே சகோதரர்களான பழனிச்சாமி , ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கடந்த 38 வருடங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த அண்ணன்-தம்பியான சேது , ஸ்ரீதர் ஆகியோரை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் முடிந்து இருவரும் வெளியே வந்திருந்தனர். இந்தநிலையில் சொத்து பிரச்சினையில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் ஈஸ்வர மூர்த்தியை பழனிச்சாமி கொலை செய்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அனைத்து வருவாய் கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க அறிவுறுத்தப்பட்டது.
    • புதிய சங்கம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

    தாராபுரம் : 

    பால் உற்பத்தி மற்றும் பண்ணை மேம்பாட்டு துறை இயக்குநர் கடந்த வாரம், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பால் வள துணைப் பதிவாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில் தமிழகத்தில் பால் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க அறிவுறுத்தப்பட்டது.அதன்படி அனைத்து சரக முதுநிலை ஆய்வாளர்கள் இதுகுறித்து தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சங்கங்கள் இல்லாத பகுதிகள், புதிய சங்கம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய சங்கம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

    அதேபோல் கறவை மாடுகளுக்கான கடன் வழங்க முகாம் நடத்தி கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய வங்கிகளை அணுகி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக்கடன் வழங்க நிர்ணயித்த இலக்கை அடைய வேண்டும். சரக வாரியாக குறைந்த பட்சம் ஒரு கடன் வழங்கும் முகாமாவது நடத்த வேண்டும்.அனைத்து உறுப்பினர்களுக்கும் பால் கொள்முதல் விவரங்களை உடனே வழங்க வேண்டும். கொள்முதலுக்கான தொகை ஆன்லைன் வாயிலாக வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தி பால் வள துணை பதிவாளர் அலுவலகம் மூலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர், ஒன்றிய பொது மேலாளர் மற்றும் கூட்டுறவு சங்க செயலாட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பால் வள முதுநிலை ஆய்வாளர்கள் இதற்கான பணிகளை துவக்கி உள்ளனர்.

    • 150 விவசாயிகளிடம் இருந்து 750 ஏக்கர் நிலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.
    • ஆனாலும் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.

     மூலனூர் : 

    மூலனூர் அருேக ெபான்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் ஓடையின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கட்டுவதற்கு 1997-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. 2000-ம் ஆண்டில் அணை கட்டும் பணி தொடங்கியது. அணைகட்டுவதற்கு 150 விவசாயிகளிடம் இருந்து 750 ஏக்கர் நிலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.அணை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கேட்டு 2003-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்தவழக்கை விசாரித்த நீதிமன்றம் விவசாயிக்கு இழப்பீடு தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று 2019-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனாலும் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களை 'சீல்' வைத்தனர்.ஆனால் அதன் பிறகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் உரிய இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து நல்லதங்காள் அணையில் இருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மண் எடுத்துக்கொண்டு கோனாபுரத்தில் உள்ள கிராமத்திற்கு வந்தனர். அங்கு அந்த மண்ணுக்கு பூஜை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உரிய இழப்பீடு தொகை தமிழக அரசு வழங்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகன் சாமி தலைமை தாங்கினார். சங்க மாநில தலைவர் சண்முக சுந்தரம், மாநில செயலாளர் முத்துவிசுவநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோனேரிபட்டி பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 77வது சுதந்திர தின விழா மாநகராட்சி வளாகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.
    • விழாவில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 77வது சுதந்திர தின விழா மாநகராட்சி வளாகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, சாலையோர வியாபாரிகளுக்கு உதவி மற்றும் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மேயர் தினேஷ்குமார் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு திருப்பூர் குமரன் நினைவுத்தூண் நோக்கி ஊர்வலமாக சென்று குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் கிரியப்பனவர் ,துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளிகள் பங்கேற்கும் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது
    • ஒவ்வொரு பிரிவுகளிலும் முதலாவதாக வந்த மூன்று போ் தோ்வு செய்யப்பட்டனா்.

    உடுமலை:

    உடுமலை வட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் பங்கேற்கும் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது.இதில் கால்பந்து, ஆக்கி, கபடி, கையுந்து பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட குழு போட்டிகள், தனி நபா் போட்டிகள், பல்வேறு பிரிவுகளில் ஓட்டப் பந்தயங்கள் மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    முதல் நிகழ்வாக உடுமலையை அடுத்துள்ள ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் கேரம் போட்டி நடைபெற்றது. கல்லூரி ஆலோசகா் ஜெ.மஞ்சுளா போட்டிகளை தொடங்கிவைத்தாா்.இதில் இரட்டையா் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 17 பள்ளிகளும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 21 பள்ளிகளும், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 11 அணிகளும் கலந்து கொண்டன.

    ஒற்றையா் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 18 பள்ளிகளும், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 21 பள்ளிகளும், 18 வயதுக்குட்பட்ட பிரிவில் 13 பள்ளிகளும் கலந்து கொண்டன. ஒவ்வொரு பிரிவுகளிலும் முதலாவதாக வந்த மூன்று போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெற முடியும். 

    • பள்ளி ஆசிரியா்களுக்கு தெரியவந்தும்கூட நடவடிக்கை எடுக்கவில்லை
    • அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமை உணா்வுடன் வாழ்ந்து வருகின்றனா்

    திருப்பூர் : 

    நாங்குநேரி சம்பவத்தில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

    இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    நாங்குநேரி பள்ளி மாணவா் வெட்டப்பட்ட விஷயத்தில் பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

    இது சாதிய வன்மத்தை விதைக்க நடக்கும் சதியாகவே இந்து முன்னணி கருதுகிறது. கல்லூரிகளில் நடக்கும் பகடிவதைபோல அங்கு நடந்த மாணவா்களுக்கு இடையேயான தனிப்பட்ட விஷயங்கள் பள்ளி ஆசிரியா்களுக்கு தெரியவந்தும்கூட நடவடிக்கை எடுக்கவில்லை.அறிவுரை கூறி மாணவா்களை நெறிபடுத்தாமல் அலட்சியம் செய்ததற்கு பள்ளி நிா்வாகமும் ஒரு காரணமாகும்.

    நாங்குநேரியில் சுதந்திரப் போராட்ட காலம் தொட்டு இன்று வரையில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமை உணா்வுடன் வாழ்ந்து வருகின்றனா். இந்த சம்பவத்தினால் ஏற்பட்டுள்ள அதிா்வலைகளை சமாளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபா் குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளாா். அவா் பதவியில் இருந்தபோதும், ஓய்வுபெற்ற போதும் சாதிய வன்ம கருத்துக்களை பொது வெளியில் தெரிவித்து வருபவா்.

    பதற்றமான இந்தச் சூழலில் ஒரு நபா் குழு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இந்தக் குழு தேவையற்றது. மாறாக பள்ளிகளில் நீதி நெறி, ஆன்மிக வகுப்புகளை நடத்தலாம். மேலும், மாணவா்களிடையே ஏற்படும் சின்ன சின்ன சச்சரவுகளை கவுன்சிலிங் மூலம் சரி செய்ய பெற்றோா்கள், ஆசிரியா்கள், கல்வியாளா்கள் கொண்ட குழுவை மாவட்டம் வாரியாக நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×