என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • குழந்தையை தூக்கிக் கொண்டு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
    • பரிசோதனை குழந்தைக்கு ஆஸ்துமா நோய் இருந்தது தெரியவந்நது.

    ஊத்துக்குளி: 

    ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை, செல்வம் நகரை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30). இவரது மனைவி பிரணவி. இவர்களுக்கு ஈசன்வி என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளது. இவர்கள் குன்னத்தூரில் இருந்து செங்கப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள ஆதியூரில் வசித்து வருகிறார்கள். சம்பவத்தன்று பிரணவி தனது குழந்தை ஈசன்வியுடன் வீட்டின் வராண்டாவில் உள்ள கட்டிலில் உட்கார்ந்து இருந்தார்.

    அப்போது ஈசன்வி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரணவி, தனது குழந்தையை தூக்கிக் கொண்டு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் அங்கிருந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பிரேத பரிசோதனை மையத்தில் குழந்தை வைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு ஆஸ்துமா நோய் இருந்ததாக தெரிகிறது. அதனால் மூச்சு விட முடியாமல் மயங்கி விழுந்துள்ளது. இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுபானகடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என தொடர்ந்து போராடி வருகின்றனர்.
    • நகரின் மையப்பகுதியில் இந்த டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் மதுபான கடையில் தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் மது வாங்க வருவது வழக்கம்.

    இந்த நிலையில் அங்கு மது வாங்க வரும் சிலர் அங்கேயே குடித்து விட்டு அருகிலுள்ள கடைகளுக்கு சென்று படுத்து உறங்குவதும்,ரோட்டிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதும் என அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி வருவதாக கூறி, அந்த மதுபானகடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் மதுபானகடையை அகற்றக்கோரி நேற்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இது குறித்து சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது :- இந்த மதுபான கடையால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. மதுபானம் வாங்கி குடித்துவிட்டு போதைதலைக்கேறி அருகில் உள்ள கடைகளின் முன்பு குடிமகன்கள் படுத்து விடுகின்றனர். மேலும் பலர் பெண்கள் வருவது கூட தெரியாமல் அங்கேயே இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர்.

    குடிமகன்கள் எந்தநேரமும் போதையில் நிற்பதால் அவ்வழியே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பெண்கள் ஆகியோர் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் பல்லடம்- செட்டிபாளையம் சாலை போக்குவரத்து நிறைந்த சாலை ஆகும். மதுபானம் வாங்க வரும் குடிமகன்கள் கடை முன்பு நடுரோட்டில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இந்த மதுபானகடையை அகற்றகோரி 15 ஆண்டுகளாக பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே மதுபானகடையை அகற்றும் வரை தொடர்ந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால் மீண்டும் மதுபானகடையை அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றார்.

    மதுபானகடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் இந்த மதுபானகடை இங்கு செயல்படாது எனவும் தற்காலிகமாக மூடப்படும் என தெரிவித்தார்.தாசில்தாரின் இந்த அறிவிப்பை உற்சாகமாக கைதட்டி வரவேற்ற பொதுமக்கள் அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

    மேலும் அந்தப் பகுதியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இந்த நிலையில் தாசில்தாரின் உத்தரவை மீறி மதியம் சுமார் 3 மணி அளவில் மதுபான கடை மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதையடுத்து மீண்டும் அங்கு வந்த பொதுமக்கள் மதுக்கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலுக்கும் முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • போராட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகே நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கைது செய்தார்.

    தாராபுரம்:

    பட்டியல் இன மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியதாக கூறி பா.ஜனதா திருப்பூர் தெற்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் பிச்சை அளிக்கும் போராட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகே நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி மாவட்ட தலைவர் நத்தக்காடையூர் சாமிநாதன் தலைமையில் 23 பேர் வந்தனர். அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கைது செய்தார்.  

    • நூற்பாலை உரிமையாளர்கள் மாதம் ஒருமுறை தங்களுடைய நூல் விலையை நிர்ணயித்து வந்தார்கள்.
    • மூன்று மாதங்கள் கழித்துதான் அதை விற்பனைக்கு கொண்டு செல்ல முடிகிறது.

    .திருப்பூர் : 

    தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூரின் பாரம்பரியமிக்க பின்னலாடைத் தொழில் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்து கேள்விக்குறியாய் நிற்கிறது. முந்தைய காலக்கட்டத்தில் நூற்பாலை உரிமையாளர்கள் மாதம் ஒருமுறை தங்களுடைய நூல் விலையை நிர்ணயித்து வந்தார்கள்.

    ஆனால் தற்போது நூற்பாலைகளால் 15 நாட்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பிட்ட சில நூற்பாலைகள் வாரம் ஒரு முறை நூல் விலையை நிர்ணயம் செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் உற்பத்தி சூழ்நிலையில் நூல் கொள்முதல் செய்து அதனை ஆடையாக மாற்றுவதற்கு குறைந்தபட்சம் 2 மாதங்களும், சரக்கு இருப்புக்காக ஒரு மாதமும் என குறைந்தபட்சம் 3 மாதங்கள் கழித்துதான் அதை விற்பனைக்கு கொண்டு செல்ல முடிகிறது. 3 மாதங்களில் 3 முறை நூல் விலை மாற்றம் ஏற்படுவதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. விலை அதிகரிக்கும் போது மொத்த விற்பனையாளர்கள் பழைய விலைக்கு தருமாறு நிர்பந்தம் செய்கின்றனர். விலை குறையும் போது கொள்முதல் செய்வதை தவிர்க்கிறார்கள். எனவே அடிக்கடி மாற்றம் செய்கின்ற நூல் விலையினை குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போதுதான் விலை நிர்ணயம் செய்வதில் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். நூற்பாலை உரிமையாளர்கள் சங்கம், பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கம், பஞ்சு விற்பனையாளர்கள் என்ற ஒரு முத்தரப்பு குழுவினை அமைத்து குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நூல் விலை சீராக இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் பல லட்சம் பின்னலாடை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், பின்னலாடை உற்பத்தியாளர்களின் சிரமங்கள் குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் 6-ம் நாள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
    • போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2, தமிழ்நாடு உணவுத்துறை மற்றும் மாவட்ட ஊரக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் மற்றும் தெற்கு காவல் நிலையம் சார்பில் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் 6-ம் நாள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவேல், காவல் ஆய்வாளர் சிவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

    உணவு பாதுகாப்பு அலுவலர் பேசுகையில்:- போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. காய்கறிகள், கீரைகள், போன்ற உணவுகளில் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளது.அன்று உணவே மருந்து இன்று மருந்தே உணவாயிற்று. சிறுதானியங்களில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்றவை அடங்கி உள்ளது என்று பேசினார். அங்கன்வாடி பணியாளர் ஹேமலதா கலந்து கொண்டார்.

    மாணவச் செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, காமராஜ், செர்லின், தினேஷ்கண்ணன், சபரிவாசன், விஜய், பூபதி ராஜா ஆகியோர் தலைமையில் 60க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஊட்டச்சத்து உணவுகளை அனைவரும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • உதயநிதி ஸ்டாலின் உருவபொம்மையை எரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
    • சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்யவேண்டிய முதல் பணி.

    திருப்பூர்:

    சிவசேனா கட்சியின் இளைஞரணி தலைவர் திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சனாதன ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக்கூடாது ஒழித்துக்கட்டவேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்யவேண்டிய முதல் பணி என்றார். இது சர்ச்சைக்குள்ளாகியது. பல்வேறு அமைப்புகளும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக சிவசேனா மாநில அமைப்பாளர் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் உருவபொம்மையை எரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் சிவசேனா மாநில அமைப்பாளர் பாலாஜியை கைது செய்து நடவடிக்கை எடுத்திருப்பது தி.மு.க.வினரின் கையாளாகதனத்தை காட்டுகிறது.

    உடனடியாக தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லை எனில் தமிழக சிவசேனா கட்சி சார்பில் மாநிலம் தழுவிய கடுமையான போராட்டம் நடத்தப்படும் .மாவட்ட தலைநகரங்களில் உள்ள தி.மு.க., அலுவலகங்களை முற்றுகையிட்டு பேராட்டம் நடத்தப்படும் .இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • தூய்மைப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
    • 140 பேருக்கு அனுமதிபெற்றுள்ள நிலையில் 80 போ் மட்டுமே பணியாற்றி வருகிறோம்

    காங்கயம் : 

    காங்கயம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்து தலித் விடுதலை இயக்கத்துடன் இணைந்து தூய்மைப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

    இதுகுறித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:-

    காங்கயம் நகராட்சியில் கோவையை சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி வருகிறோம். 140 பேருக்கு அனுமதிபெற்றுள்ள நிலையில் 80 போ் மட்டுமே பணியாற்றி வருகிறோம். தங்களது வங்கி கணக்குப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொண்ட ஒப்பந்ததாரா்கள் நிா்ணயிக்கப்பட்ட சம்பளத்தைவிட குறைவான சம்பளமே வழங்குகின்றனா்.

    மேலும், எங்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, மருத்துவ உதவிகள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்திலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே, சம்பளம் உள்ளிட்ட அனைத்திலும் முறைகேடு செய்துள்ள ஒப்பந்ததாரா் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    இதையடுத்து, நகரமன்றத் தலைவா் என்.சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் ஜி.கனிராஜ் ஆகியோா் தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவா் ச.கருப்பையாவுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.இதில், தூய்மைப் பணியாளா்கள் குறிப்பிடப்படும் முறைகேடு குறித்து ஒரு மாத காலத்தில் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனா்.

    • சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
    • தேசிய முதியோா் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் 37,521 பயனாளிகளுக்கு ரூ.113.20 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 72,373 பயனாளிகளுக்கு ரூ.216.20 கோடி மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:- தமிழகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இந்திராகாந்தி தேசிய முதியோா் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் 37,521 பயனாளிகளுக்கு ரூ.113.20 கோடி, இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 5,957 பயனாளிகளுக்கு ரூ.19.61 கோடி, இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனனுடையோா் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 946 பயனாளிகளுக்கு ரூ.3.57 கோடி, விதவை உதவித்தொகை திட்டத்தின் கீழ் 12,945 பயனாளிகளுக்கு ரூ.32.61 கோடி, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தில் 10,756 பயனாளிகளுக்கு ரூ.33.60 கோடி, உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 677 பயனாளிகளுக்கு ரூ.2.31 கோடி என 72,373 பயனாளிகளுக்கு ரூ.216.20 கோடி மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது என நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
    • ஸ்வான் நிதியுதவித் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது

    வெள்ளகோவில் : 

    வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது என நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு சாா்பில் ஸ்வான் நிதியுதவித் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாம் நகராட்சி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது.எனவே விருப்பமுள்ள சாலையோர வியாபாரிகள் தங்களது வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா், கைப்பேசி எண் ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு நாடுகளை சேர்ந்த, 800 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் உறுப்பினராக உள்ளன.
    • கண்காட்சிகள் தொடர்பான தகவல்கள் ஆகியவை உறுப்பினர்களுக்கு இந்த கூட்டமைப்பால் உடனுக்குடன் பகிரப்படுகிறது

    திருப்பூர் : 

    நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்சில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 800 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் உறுப்பினராக உள்ளன.

    சர்வதேச அளவில் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப பகிர்வு, சர்வதேச அளவில் நடக்கும் கண்காட்சிகள் தொடர்பான தகவல்கள் ஆகியவை உறுப்பினர்களுக்கு இந்த கூட்டமைப்பால் உடனுக்குடன் பகிரப்படுகிறது.

    இந்த கூட்டமைப்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் உறுப்பினராக இணைந்துள்ளது. இதனால், சர்வதேச சந்தைகளில் ஒவ்வொரு அசைவுகளும், திருப்பூருக்கு உடனுக்குடன் தெரியவரும் என ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து, ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

    அமெரிக்க நிறுவனங்கள் அதிகம் உறுப்பினராக உள்ள டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்சில், சர்வதேச அளவிலான நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கமும், உறுப்பினராக இணைந்துள்ளது.

    உலக அளவில் 800 உறுப்பினர்கள் இருப்பதால், சர்வதேச கண்காட்சி, தொழில் வளர்ச்சி வர்த்தக சந்திப்பு, மூலப்பொருள் சப்ளை தொடர்பான விபரம் ஆகியவை உடனுக்குடன் தெரியவரும்.திருப்பூரில் நடக்க உள்ள 50வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி தொடர்பான விபரத்தை முதன்முதலாக டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்ச் தளத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

    • தொட்டம்பட்டி காட்டுப்பகுதியில் செல்லும்போது வெங்கடேசன் சிறுநீர் கழிக்க வேண்டும் என தெரிவித்தான்.
    • டி.எஸ்.பி. சவுமியா பாதுகாப்புக்காக வெங்கடேசன் மீது மற்றொரு ரவுண்டு சுட்டார்.

    பல்லடம்:

    பல்லடம் 4 பேர் கொலை வழக்கில் சரணடைந்த முக்கிய குற்றவாளியான வெங்கடேசனிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பல்லடம் தொட்டம்பட்டி பகுதியில் உள்ள முட்புதர்களில் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தான்.

    இதையடுத்து ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக இன்று அதிகாலை 4.45 மணியளவில் பல்லடம் டி.எஸ்.பி. சவுமியா மற்றும் போலீசார் வேனில் பலத்த பாதுகாப்புடன் தொட்டம்பட்டி பகுதிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு சென்றதும் முட்புதர்களில் பதுக்கி வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வெங்கடேசன் போலீசாரிடம் எடுத்து கொடுத்தான். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவனை பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு வேனில் அழைத்து சென்றனர். தொட்டம்பட்டி காட்டுப்பகுதியில் செல்லும்போது வெங்கடேசன் சிறுநீர் கழிக்க வேண்டும் என தெரிவித்தான். இதையடுத்து போலீசார் வேனை நிறுத்தினர். சிறுநீர் கழிக்க சென்ற வெங்கடேசனின் பாதுகாப்புக்காக 2 போலீசார் கூடவே சென்றனர். சிறிது தூரம் சென்றதும் வெங்கடேசன் திடீரென 2 போலீசாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு தப்பிச்சென்றான்.

    இதனை சற்றும் எதிர்பாராத டி.எஸ்.பி. சவுமியா உடனே தான் வைத்திருந்த துப்பாக்கியால் வெங்கடேசனை நோக்கி சுட்டார். இதில் அவரது ஒரு காலில் குண்டு பாய்ந்ததில் தவறி விழுந்தான். இருப்பினும் ஒரு காலுடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றான். மேலும் அவனை பிடிக்க முயன்ற போலீஸ்காரர்கள் மீது கற்களை வீசி தாக்கினான். இதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.

    இதையடுத்து டி.எஸ்.பி. சவுமியா பாதுகாப்புக்காக வெங்கடேசன் மீது மற்றொரு ரவுண்டு சுட்டார். இதில் வெங்கடேசனின் மற்றொரு காலில் குண்டு பாய்ந்தது. 2 கால்களிலும் காயம் ஏற்பட்டதால் சரிந்து கீழே விழுந்த வெங்கடேசனை போலீசார் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் வெங்கடேசன் கல்லால் தாக்கியதில் காயமடைந்த போலீஸ்காரர் ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • காவல் நிலையத்தில் நேற்று வெங்கடேஷ் உள்பட இருவர் சரண் அடைந்தனர்
    • ஆயுதங்களை கைப்பற்ற போலீசார் அழைத்துச் சென்றபோது தப்பி ஓட முயற்சி

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 47), பா.ஜ.க. பிரமுகர் மோகன்ராஜ் (45), மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி (68), செந்தில்குமாரின் சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகிய 4 பேரும் கடந்த 3-ந்தேதி இரவு வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

    பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம், வழிப்பாதையில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பான பிரச்சினையில் நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்கிற ராஜ்குமார் (27), திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து (24), தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா (22) ஆகிய 3 பேரும் சேர்ந்து 4 பேரை கொடூரமாக கொலை செய்தனர்.

    ஒரே குடும்பத்தில் 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக செல்லமுத்துவை போலீசார் முதலில் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான வெங்கடேசன், சோனை முத்தையாவை 5 தனிப்படைகள் கொண்ட போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

    இந்தநிலையில் வெங்கடேசன், சோனை முத்தையா ஆகியோர் நேற்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை நாள் என்பதால் குற்றவாளிகள் 2 பேரையும் பல்லடம் கோர்ட்டு நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்துவது குறித்து போலீசார் ஆலோசனை நடத்தினர்.

    இது தொடர்பாக பல்லடம் துணைக்காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோவை மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி, திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் மற்றும் டி.ஐ.ஜி., சரவண சுந்தர் ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் வெங்கடேசன், சோனை முத்தையா ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தொட்டம்பட்டி பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து 2 பேரையும் இன்று காலை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் தொட்டம்பட்டி பகுதிக்கு அழைத்து சென்றனர். தொட்டம்பட்டி சென்றதும் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்த பகுதிக்கு அழைத்து சென்றபோது திடீரென வெங்கடேசன் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றபோது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டார்.

    இதனால் போலீசார் பாதுகாப்புக்காக தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் வெங்கடேசனின் 2 கால்களில் சுட்டனர். இதில் 2 கால்களில் குண்டு பாய்ந்ததில் வெங்கடேசன் கால்கள் முறிந்து கீழே விழுந்தார். உடனே அவரை போலீசார் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதனிடையே இந்த கொலை தொடர்பாக வெங்கடேசனின் தந்தை அய்யப்பனை போலீசார் கைது செய்தனர். அவர் 4 பேர் கொலைக்கு ஆயுதங்களை கொடுத்து உதவியதால் அவரை கைது செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஏற்கனவே இந்த கொலை வழக்கில் கைதான செல்லமுத்துவையும், ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த தொட்டம்பட்டி பகுதிக்கு அழைத்து சென்றனர். மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை எடுக்க முயன்ற போது தொட்டியில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றதில் செல்லமுத்து வின் வலது கால் முறிந்தது குறிப்பிடத்தக்கது.

    ×