என் மலர்tooltip icon

    தேனி

    • பிரேத பரிசோத னையின் முடிவில் தான் அவர் எவ்வாறு இறந்தார் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
    • பிரேத பரிசோத னையின் முடிவில் தான் அவர் எவ்வாறு இறந்தார் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    கம்பம்:

    கம்பம் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்தவர் இருளாண்டி. இவர் கம்பம் வாரச்சந்தையில் கோழி வியாபாரம் செய்து வரு கிறார். இவரது மகன் வீரமணி (வயது 25). இவ ருக்கு கடந்த 8 வருடங்க ளுக்கு முன்பு சங்கவி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு துர்கேஸ்வரன், சக்தீஸ்வ ரன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்ற வீரமணி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இருளாண்டி குடும்பத்தினர் அனைவரும் வீரபாண்டி கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது வீரமணி மட்டும் இல்லாததால் அவரை பல்வேறு இட ங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது புதுபஸ் நிலையம் சாலையில் உள்ள டாஸ்மாக் பார் எதிரே மர்மமான முறையில் வீரபாண்டி இறந்து கிடந்தார்.

    அப்பகுதியில் மழை பெய்து ஓய்ந்திருந்த நிலையில் உடல் தண்ணீரில் ஊறி காணப்பட்டது. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் வீரமணி இறப்பில் சந்தேகம் உள்ளது. அவரை யாரோ அடித்து கொலை செய்து விட்டனர். எனவே உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்த னர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ள்ளது. பிரேத பரிசோத னையின் முடிவில் தான் அவர் எவ்வாறு இறந்தார் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • டாக்டர்கள் சிறுமியின் வயதை பரிசோதித்தபோது 17 வயதில் திருமணம் நடந்தது தெரியவந்தது.
    • சிறுவர் திருமண தடுப்புச்சட்டம் , போக்சோ சட்டங்களின்கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி அம்மாபட்டியை சேர்ந்தவர் வீரச்சாமி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியரின் 17 வயது மகளை போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தை சேர்ந்த செல்வன் மகன் சந்திரபிரகாசுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார். அவரை பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெற்றோர்கள் சேர்த்தனர்.

    அப்போது டாக்டர்கள் சிறுமியின் வயதை பரிசோதித்தபோது 17 வயதில் திருமணம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து சமூகநலத்துறைக்கு புகார் தெரிவித்தனர். பின்னர் போடி அனைத்து மகளிர் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் செல்வன், மகேஸ்வரி, கணவர் சந்திரசேகர், சிறுமியின் பெற்றோர் வீரச்சாமி, லட்சுமி ஆகிய 5 பேர் மீதும் சிறுவர் திருமண தடுப்புச்சட்டம் , போக்சோ சட்டங்களின்கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    ஜெயமங்கலம் அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது40). இவருக்கு அனிதா (40) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடத்துக்கு முன்பு பிரிந்து விட்டனர். மனைவி பிரிந்ததில் செந்தில் வருத்தத்தில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஒரு தென்னந்தோப்பில் மரத்தின் உச்சியில் கைலியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது மனைவிக்கும் ஜெயமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மனைவி அனிதா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மாணவி தேர்வு முடிவு வெளியான நிலையில் 6 பாடங்களில் 5 பாடத்தில் தோல்வியடைந்தார்.
    • வேதனை யடைந்த மாணவி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெரு பெரியகருப்பன் மகன் சுபஸ்ரீ மகா பிரதிநிஷா (வயது 20) இவர் பெரியகுளம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில் 6 பாடங்களில் 5 பாடத்தில் தோல்வியடைந்தார்.

    இதனால் வேதனை யடைந்த மாணவி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் தீபக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமி 4 மணி நேரம் 18 நிமிடம் நீரில் மிதந்து உலக கின்னஸ் சாதனை படைத்தார்.
    • சாதனை படைத்த சிறுமிக்கு மெடல் மற்றும் கின்னஸ் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி அருகே பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மகள் டைஷா (வயது6). இவர் உலக கின்னஸ் சாதனைக்காக நீரில் மிதக்கும் சாதனை முயற்சியை மேற்கொ ண்டார். இம்முயற்சி தேனி மாவட்ட விளையாட்டு மைய வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வை தேனி மாவட்ட விளையாட்டு கழக தலைவர் வக்கீல் முத்து ராமலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சாதனை நிகழ்ச்சிக்கு யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் போரம் கின்னஸ் சுனில் ஜோசப், அனீஸ் ஜெபஸ்டின் ஆகியோர் மேற்பார்வை யாளராக இருந்தனர். இந்த நிகழ்வில் தேனி வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகி நாணயம் சிதம்பரம், நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் உள்பட சிறுமியின் பெற்றோ ர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து நீரில் மிதக்கும் முயற்சியை மேற்கொண்ட சிறுமி டைஷா 4 மணி நேரம் 18 நிமிடம் நீரில் மிதந்து உலக கின்னஸ் சாதனை படைத்தார். இதனை அடுத்து யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் போரம் சாதனை படைத்த சிறுமிக்கு மெடல் மற்றும் கின்னஸ் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இவர் கடந்த 1½ ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்த சிறுமி மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி என மெடல்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 8 நாட்கள் நடைபெறும் திருவிழா இன்று தொடங்கி வருகின்ற 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வருகின்ற 12-ந் தேதி நடைபெறுகிறது.

    தேனி:

    தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா. கடந்த மாதம் 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து 19-ம் தேதி கம்பம் நடப்பட்டது.

    இதனை த்தொடர்ந்து திருவிழாவில் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, பால்குடம் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தக்கூடிய பக்தர்கள் கங்கணம் கட்டி விரதம் இருந்து வந்தனர். அதுபோல திருவிழாவுக்காக நடப்பட்ட கம்பத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித ஊற்றி அம்மனை வழிபட்டு வந்தனர். இந்நிலையில் 8 நாட்கள் நடைபெறும் திருவிழா இன்று தொடங்கி வருகின்ற 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த திருவிழாவின் போது நேர்த்திக்கடன் செலுத்தக்கூடிய பக்தர்கள் முல்லை பெரியாற்றங்கரை பகுதியில் இருந்து தீச்சட்டி, ஆயிரம் கண் பானை எடுத்து கோவில் வரை ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வருகின்ற 12-ந் தேதி நடைபெறுகிறது.

    இதனைத்தொடர்ந்து உற்சவ கவுமாரியம்மன் தினசரி பூ பல்லாக்கு, முத்து பல்லாக்கு போன்ற பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து தேர் கோவில் வளாக பகுதியை ஒவ்வொரு நாளாக சுற்றி திருவிழா நிறைவிற்கு முன்பு தேர் நிலையை வந்தடையும். அதுபோல திருவிழாவிற்கு வந்து செல்லும் பொது மக்கள் மற்றும் சிறுவர்களின் பொழுதுபோக்கிற்காக திருவிழா பகுதியில் பலவகையான எந்திர ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் ஆங்காங்கே உணவு கூடங்களும், வியாபார கடைகளும் அமைக்கப்பட்டு ள்ளது. இந்த திருவிழா விற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகமும், சுகாதாரப் பணிகளை வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகமும், பாதுகாப்பு பணிகளை போலீசாரும் செய்து வருகின்றனர்.

    • மாணவன் உடலை கைப்பற்றிய போலீசார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள சின்னமுட்டில் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் அருண் பல்லவ் (வயது 19). இவர் தேனி மாவட்டம் குள்ளப்புரத்தில் உள்ள தனியார் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரியில் விடுதியில் தங்கி 2ம் ஆண்டு இளநிலை பட்டபடிப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது தண்ணீரில் மூழ்கி அருண் பல்லவ்வை அவரது நண்பர்கள் மீட்டு வைகை அணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவனின் தந்தை சந்திரசேகர் ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது புகாரில் தனது மகன் இறந்ததாக கூறப்படும் கிணற்றில் 20 அடி ஆழம் மட்டுமே உள்ளது என்றும் அதில் 7 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது என்றும் தனது மகனுக்கு நீச்சல் நன்றாக தெரியும். அவ்வாறு உள்ள நிலையில் எப்படி நீரில் மூழ்கி இறந்திருக்க முடியும்? எனவே எனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. கல்லூரி நிர்வாக பொறுப்பாளர்கள் மற்றும் சக மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    அதன் பேரில் மாணவன் உடலை கைப்பற்றிய போலீசார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருண் பல்லவ் உயிரிழந்த கிணறு மற்றும் சக மாணவர்கள் ஆகியோரிடம் மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே விசாரணை மேற்கொண்டார். தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
    • சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவ தால் மறு உத்தரவு வரும்வரை யாரும் குளிக்ககூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒருசில குடியிருப்பு களுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். கனமழை காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 117.40 அடியாக உள்ளது. வரத்து 308 கனஅடி, திறப்பு 100 கனஅடி, இருப்பு 2159 மி.கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 52.53 அடி, வரத்து 229 கனஅடி, திறப்பு 72 கனஅடி, இருப்பு 2341 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.90 அடி, வரத்து 30 கனஅடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.23அடி, வரத்து 8 கனஅடி, திறப்பு 3 கனஅடி.

    கனமழை காரணமாக சுருளி அருவியில் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவ தால் மறு உத்தரவு வரும்வரை யாரும் குளிக்ககூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரியாறு 4.6, தேக்கடி 9.8, கூடலூர் 6.3, சண்முகாநதி அணை 2.4, உத்தமபாளையம் 1.8, போடி 0.6, வைகை அணை 5.2, சோத்துப்பாறை 12, மஞ்சளாறு 5, பெரியகுளம் 21, வீரபாண்டி 8, அரண்மனைப்புதூர் 57, ஆண்டிபட்டி 5.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • முகமது கைசர் வீட்டிற்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் பழனியில் விசாரணை நடத்திய நிலையில் முகமது கைசரை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முகமது கைசர் (வயது 50). பழனியில் டீக்கடை நடத்தி வரும் இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக இருந்துள்ளார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளயில் முகமது கைசர் வீட்டிற்கு வந்த என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே இவரது வீட்டில் 2 முறை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்திச் சென்றனர்.

    பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியின் உறுப்பினர்கள் சதாம், ஜியாவுல்ஹக் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த ஹபீப் ரகுமான் ஆகிய 4 பேர்களிடம் கடந்த ஜனவரி மாதம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது திருப்புவனம் ராமலிங்கம் படுகொலை, கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்துவதாக தகவல் வெளிவந்துள்ளது.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் பழனியில் விசாரணை நடத்திய நிலையில் அவரை கைது செய்து ஜீப்பில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். இச்சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரிசி கொம்பன் யானையால் கேரள மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் தற்போது தமிழக பகுதிக்குள் நுழைந்துள்ளதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • சுழற்சி முறையில் வனப்பகுதி முழுவதும் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி அரிசி கொம்பனை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 10 பேரை பலி வாங்கிய அரிசிக் கொம்பன் என்ற யானை கடந்த சில தினங்களுக்கு முன்பு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. 5 முறை ஊசி செலுத்தி மயக்கமடைந்த அரிசிக் கொம்பனின் கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தமிழக-கேரள எல்லைப் பகுதியான தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்டது.

    தற்போது தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட இரவங்கலாறு வனப்பகுதியில் இந்த யானை நுழைந்திருப்பது வனத்துறையினர் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது.

    இதனால் தேனி மாவட்ட வனத்துறையினர் மேகமலை வனப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேகமலை, இரவங்கலாறு, மணலாறு, மகாராஜா மெட்டு, ஹைவேவிஸ் போன்ற பகுதிகளில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஏராளமாேனார் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மேகமலை, சிலுவை கோயில் அருகே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் செல்லும் பாதையில் இந்த யானையின் நடமாட்டம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் இரவு நேர பயணத்தைத் தவிர்க்க வேண்டும் எனவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தேனி வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மேகமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பயணிகள் அனைவரும் மேகமலை அடிவார பகுதியான சின்னமனூர் அருகே உள்ள தென்பழனி வனத்துறை சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    அரிசி கொம்பன் யானையால் கேரள மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் தற்போது தமிழக பகுதிக்குள் நுழைந்துள்ளதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சின்னமனூர் அருகே வந்த அரசு பஸ்சை அரிசி கொம்பன் யானை வழி மறித்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சின் அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு பயணிகளிடம் அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தினார். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அரிசி கொம்பன் அதே இடத்தில் சுற்றி சுற்றி வந்து பின்னர் நகரத் தொடங்கியது. அதன் பின்னர் முகப்பு விளக்குகளை எரியவிடாமல் பஸ்சை மெதுவாக டிரைவர் நகர்த்தி எடுத்துச் சென்றார். இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். எனவே உடனடியாக இந்த யானையை மலைப்பகுதியை விட்டு வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்வதற்கு வனத்துறையினர் மற்றும் தமிழக அரசும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பகல் நேரங்களில் வீட்டை பூட்டிச் சென்றாலும் அரிசி கொம்பன் உடைத்து சேதப்படுத்திவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமலும், அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    இதன் காரணமாக சுழற்சி முறையில் வனப்பகுதி முழுவதும் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி அரிசி கொம்பனை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.
    • தற்போது பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் கனிசமாக உயர்ந்து வருகிறது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. தற்போது பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் கனிசமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 117.30 அடியாக உள்ளது. அணைக்கு 204 கனஅடி நீர் வருகிறது.

    தமிழக பகுதிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 52.46 அடியாக உள்ளது. 113 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக அணையில் இருந்து 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.70 அடியாக உள்ளது. 30 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 87.74 அடியாக உள்ளது. 10 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 2, தேக்கடி 0.4, போடி 0.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
    • தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியை சேர்ந்தவர் நல்லகாமு மகன் காமராஜ் (வயது 36). இவர் தனது நண்பர் கருப்பையா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் போடி-தேனி சாலையில் சென்று கொண்டிருந்தார். சாலை காளியம்மன் கோவில் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காயமடைந்த 2பேரையும் போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிசிக்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காமராஜ் உயிரிழந்தார்.

    இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×