search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நள்ளிரவில் அரசு பஸ்சை வழி மறித்த அரிசி கொம்பன் யானை- பயணிகள் பீதி
    X

    நள்ளிரவில் அரசு பஸ்சை வழி மறித்த அரிசி கொம்பன் யானை- பயணிகள் பீதி

    • அரிசி கொம்பன் யானையால் கேரள மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் தற்போது தமிழக பகுதிக்குள் நுழைந்துள்ளதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • சுழற்சி முறையில் வனப்பகுதி முழுவதும் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி அரிசி கொம்பனை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 10 பேரை பலி வாங்கிய அரிசிக் கொம்பன் என்ற யானை கடந்த சில தினங்களுக்கு முன்பு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. 5 முறை ஊசி செலுத்தி மயக்கமடைந்த அரிசிக் கொம்பனின் கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தமிழக-கேரள எல்லைப் பகுதியான தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்டது.

    தற்போது தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட இரவங்கலாறு வனப்பகுதியில் இந்த யானை நுழைந்திருப்பது வனத்துறையினர் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது.

    இதனால் தேனி மாவட்ட வனத்துறையினர் மேகமலை வனப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேகமலை, இரவங்கலாறு, மணலாறு, மகாராஜா மெட்டு, ஹைவேவிஸ் போன்ற பகுதிகளில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஏராளமாேனார் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மேகமலை, சிலுவை கோயில் அருகே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் செல்லும் பாதையில் இந்த யானையின் நடமாட்டம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் இரவு நேர பயணத்தைத் தவிர்க்க வேண்டும் எனவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தேனி வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மேகமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பயணிகள் அனைவரும் மேகமலை அடிவார பகுதியான சின்னமனூர் அருகே உள்ள தென்பழனி வனத்துறை சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    அரிசி கொம்பன் யானையால் கேரள மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் தற்போது தமிழக பகுதிக்குள் நுழைந்துள்ளதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சின்னமனூர் அருகே வந்த அரசு பஸ்சை அரிசி கொம்பன் யானை வழி மறித்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சின் அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு பயணிகளிடம் அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தினார். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அரிசி கொம்பன் அதே இடத்தில் சுற்றி சுற்றி வந்து பின்னர் நகரத் தொடங்கியது. அதன் பின்னர் முகப்பு விளக்குகளை எரியவிடாமல் பஸ்சை மெதுவாக டிரைவர் நகர்த்தி எடுத்துச் சென்றார். இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். எனவே உடனடியாக இந்த யானையை மலைப்பகுதியை விட்டு வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்வதற்கு வனத்துறையினர் மற்றும் தமிழக அரசும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பகல் நேரங்களில் வீட்டை பூட்டிச் சென்றாலும் அரிசி கொம்பன் உடைத்து சேதப்படுத்திவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமலும், அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    இதன் காரணமாக சுழற்சி முறையில் வனப்பகுதி முழுவதும் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி அரிசி கொம்பனை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×