என் மலர்tooltip icon

    தேனி

    • அரிசி கொம்பனை பிடிக்க வரவழைக்கப்பட்ட 3 கும்கிகளும் கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • கம்பம், சின்னமனூர், சரகங்களைச் சேர்ந்த வனத்துறையினர் மட்டும் அரிசி கொம்பனை கண்காணித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றி வந்த அரிசி கொம்பன் காட்டு யானை கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது.

    அதன் பின்பு அங்கேயே சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் கடந்த மாதம் 27-ந் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் அதிரடியாக புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    அங்கிருந்து சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புகுந்த அரிசி கொம்பன் சண்முகா நதி அணைப்பகுதியில் தஞ்சமடைந்தது. கடந்த 5 நாட்களாக அதே பகுதியில் உள்ள அரிசி கொம்பன் யானைக்கு பார்வை குறைபாடு மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது.

    அதற்கு தேவையான உணவை வனத்துறையினர் வைத்து விட்டு வந்து விடுகின்றனர். குறிப்பாக அரிசி, பலாப்பழங்கள் ஆகியவற்றை வைப்பதால் அதனை உண்டு வருகிறது. மேலும் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் அதற்கு இதமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    சாந்தமாக இருந்தாலும் மக்கள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் சத்தம் போட்டவாறே நகர்ந்து வருகிறது. இதனால் அதன் செய்கையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி தலைமையில் நூற்றுக்கும் அதிகமான வனத்துறையினர் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து முகாமிட்டுள்ளனர்.

    அரிசி கொம்பனை பிடிக்க வரவழைக்கப்பட்ட 3 கும்கிகளும் கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. யானையை பிடிக்க வரவழைக்கப்பட்ட தெப்பாக்காடு மற்றும் குரங்கணி பகுதியைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் 22 பேரும் கடந்த 3 நாட்களாக ஓவுலாபுரம் வனப்பகுதியில் தங்கியுள்ளனர்.

    அங்குள்ள பெருமாள் கோவிலை அரிசி கொம்பன் சுற்றி வருகிறது. கம்பம், சின்னமனூர், சரகங்களைச் சேர்ந்த வனத்துறையினர் மட்டும் அதனை கண்காணித்து வருகின்றனர்.

    ஏற்கனவே அரிசி கொம்பனுக்கு மயக்க ஊசி செலுத்திய கேரள டாக்டர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. பொதுவாக மரங்கள் மற்றும் பாறைகளின் மேல் நின்று மயக்க ஊசி செலுத்த வேண்டும். ஆனால் அரிசி கொம்பனை அவ்வாறு செய்ய முடியாது. ஏதாவது வாகனங்களின் மீது அமர்ந்து 10 அல்லது 15 அடி தூரத்தில் இருந்து மயக்க ஊசியை செலுத்த வேண்டும். அந்த சமயத்தில் அது எதிர்தாக்குதல் நடத்த வாய்ப்பு உண்டு.

    அப்போது வாகனங்களை பயன்படுத்த வேண்டும். பொதுவாக யானைகளை விரட்ட பட்டாசு கொளுத்தினால் அது மிரண்டு ஓடும். ஆனால் அரிசி கொம்பன் பட்டாசு கொளுத்திய திசையை நோக்கி ஓடி வரும் என்பதால் அது போன்ற செய்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

    இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் அதிக நாட்கள் சுற்றி வந்த அரிசி கொம்பன் தற்போது உடல் நலம் குன்றி காணப்படுவதாக அறிந்த செய்தி கேட்டு அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், அரிசி கொம்பன் பார்ப்பதற்கு மற்ற யானைகளைக் காட்டிலும் பிரம்மிப்பான தோற்றத்தில் இருக்கும். அதற்கு தேவையான இரை கிடைத்து விட்டால் யாரையும் தொந்தரவு செய்யாது. யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியில் குடியிருப்புகள் இருப்பதால் அதனை நோக்கி நகர்ந்து வருகிறது.

    பெரும்பாலும் அரிசி கொம்பன் கூரை வேயப்பட்ட வீடுகளையே குறி வைத்து சேதப்படுத்தும். ஏனெனில் அங்குதான் அரிசி இருக்கும் என்பதை அது நன்றாக உணர்ந்துள்ளது. கடந்த மாதம் ஹைவேவிஸ் தொழிலாளர்கள் குடியிருப்பில் 10 நாட்கள் சுற்றி வந்த போதும் யாரையும் எதுவும் செய்யவில்லை.

    ரேசன் கடை ஜன்னலை மட்டும் உணவுக்காக சேதப்படுத்தியது. தற்போது அதன் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் வனத்துறையினர் உரிய சிகிச்சை அளிக்க முன் வர வேண்டும் என்றனர். அரிசி கொம்பன் யானைக்கு மூணாறு பகுதியில் ரசிகர் மன்றம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்குள்ள ஜீப் டிரைவர்கள் சார்பில் அரிசி கொம்பன் தேனீர் கடை தொடங்கப்பட்டது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் யானை உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    • பால் கறக்கச் செல்லும் தொழிலாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
    • வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அதே பகுதுயைச் சேர்ந்த சொக்கர் என்பவரை தேடி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள பொன்னம்மாள்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி சமுத்திரக்கனி (வயது 48). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    பெருமாள் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகனும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்தார். இதனையடுத்து தனது மூத்த மகளை பொன்னம்மாள் பட்டியிலும், 2-வது மகளை வருசநாடு அருகே உள்ள காந்திபுரம் பகுதியிலும் திருமணம் செய்து கொடுத்தார்.

    2-வது மகளை திருமணம் செய்து கொடுத்த காந்திபுரம் பகுதியிலேயே வீடு எடுத்து சமுத்திரக்கனி தங்கி இருந்தார். பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இன்று அதிகாலை அவரது வீட்டு முன்பு சமுத்திரக்கனி ரத்தக்காயங்களுடன் கிடந்துள்ளார்.

    அந்த பகுதிக்கு பால் கறக்கச் செல்லும் தொழிலாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது கை, கால், மார்பு என பல இடங்களில் அரிவாளால் வெட்டி கொடூரமான நிலையில் சமுத்திரக்கனி கிடந்தார்.

    அவரை சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அதே பகுதுயைச் சேர்ந்த சொக்கர் என்பவரை தேடி வருகின்றனர். கள்ளக்காதல் பிரச்சினையில் இந்தக் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இசம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • இதுகுறித்து க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே பிராதுகாரன்பட்டியை சேர்ந்தவர் சிவா (31). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். நேற்று தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வைகை அணை அருகே ரெங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி (44). டிரைவர் வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி பிரிந்து சென்றார். இந்த நிலையில் வீட்டில் தவறி விழுந்த அவர் மயக்கமடைந்தார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வைகை அணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர்.
    • யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் சுற்றித் திரிந்து 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் கடந்த மாதம் பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.

    அங்கிருந்து வெளியேறிய அரிசி கொம்பன் மேகமலை வனப்பகுதியில் சுற்றித் திரிந்தது. கடந்த 27-ந் தேதி கம்பம் நகருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பன் அதன் பிறகு சுருளிப்பட்டி வழியாக கூத்தநாச்சியம்மன் கோவில் பகுதிக்கு வந்தது.

    நாராயணத்தேவன் பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டங்களில் இருந்த பயிர்களை சேதப்படுத்தி அங்கிருந்த வேலிகளை சேதப்படுத்தியதில் அதன் துதிக்கையில் காயம் ஏற்பட்டது.

    மேலும் தற்போது வலது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு விரும்பிய உணவு கிடைக்கச் செய்யும் வகையில் வனத்துறையினர் அது சுற்றித் திரியும் இடங்களில் பலாப்பழம், அரிசி, கரும்பு ஆகியவற்றை வைத்து வருகின்றனர்.

    தற்போது அது முகாமிட்டுள்ள இடம் வாழை, தென்னை, கொய்யா, கரும்பு, திராட்சை தோட்டங்கள் சூழ்ந்த பகுதியாகும். இந்த வாசனை யானைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அரிசி கொம்பன் கடந்த 4 நாட்களாக அங்கேயே உள்ளது.

    யானையை பிடிக்க ஊட்டி தெப்பக்காட்டில் இருந்து பயிற்சி பெற்ற 20க்கும் மேற்பட்டோர் கம்பம் வந்துள்ளனர். அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் சிறிது நேரம் உணவு சாப்பிட்டு விட்டு அது மின்னல் வேகத்தில் மறைந்து விடுகிறது.

    சண்முகா நதி அணையை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொழிலதிபரின் வாழைத் தோட்டத்தில் புகுந்து 50க்கும் மேற்பட்ட செவ்வாழைத்தார்களை சாப்பிட்டது. பின்னர் சின்ன ஓவுலாபுரம் மலைப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்றது. இன்று காலை வரை அதே இடத்தில் இருப்பதால் யானையின் நகர்வினை கம்பம் வனச்சரக அலுவலகத்தில் உள்ள ரேடியோ காலர் ரிசவர் மூலம் உறுதி செய்து வருகின்றனர். கம்பம் வனச்சரக அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம், மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. யானை ஒரே இடத்தில் இருப்பதால் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களையும் வேலைக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    தேனி மாவட்டம் அரசரடி, சோலைத்தேவன்பட்டி, முந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் காட்டு யானையைப்பற்றி நன்கு அறிந்தவர்கள். இவர்கள் யானையின் போக்கு மற்றும் நடமாட்டத்தை அறிந்து அதனை விரட்டும் தன்மை கொண்டவர்கள். மேலும் ஓரிரு நாட்களில் யானையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வல்லமை படைத்தவர்கள். அது போன்ற பழங்குடி இன மக்கள் மற்றும் முதுமலைப்பகுதியில் இருந்து வரழைக்கப்பட்ட மக்களை யானை முகாமிட்டுள்ள பகுதிக்கு வரவழைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    குறிப்பிட்ட இடத்துக்கு வந்தவுடன் மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதிக்குள் விரட்டவும் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இயற்கை காரணிகள் பாதகமாக இருப்பதால் மயக்க ஊசி செலுத்தும் முயற்சி தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • முல்லைபெரியாறு அணை தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
    • 2-ம் கட்டமாக மற்ற 2 இடங்களில் கருவி பொருத்துவதற்கு மீண்டும் விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு பொருத்தும் பணி நடைபெற்றது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14707 ஏக்கர் விவசாய நிலங்களில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

    இதன் உறுதிதன்மை குறித்து பலமுறை நிருபிக்கப்பட்ட பின்னரும் கேரள அரசு நிலநடுக்க ஆபத்து இருப்பதாக புகார் கூறி வந்தது. இதனை தொடர்ந்து அணையை ஆய்வு செய்ய மத்திய கண்காணிப்பு குழுவினர் வந்தனர். அப்போது இதுகுறித்து அவர்களிடம் கேரள அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அணைப்பகுதியில் நில அதிர்வு மானிகள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி 23-ந்தேதி தேசிய புவியியல் ஆய்வு மைய முதுநிலை முதன்மை விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் முல்லைபெரியாறு அணை மேல்பகுதியில் நிலஅதிர்வு கணக்கிடும் கருவி பொருத்தப்பட்டது.

    இதில் பதிவாகும் அதிர்வலைகள் செயற்கைகோள் மூலமாக ஐதராபாத்தில் உள்ள தேசிய புவியியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வரைபடமாக கிடைக்கிறது. இந்த நிலையில் 2-ம் கட்டமாக மற்ற 2 இடங்களில் கருவி பொருத்துவதற்கு மீண்டும் விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு பொருத்தும் பணி நடைபெற்றது.

    அப்போது பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவிசெயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், நவீன்குமார், முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக அதிகாரிகள் தேக்கடியில் இருந்து தமிழக பொதுப்பணித்துறை கண்ணகி படகில் அணைக்கு சென்றனர். முல்லை பெரியாறு அணையில் நிலஅதிர்வு கருவிகள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நிலநடுக்க ஆபத்து குறைவாகவே உள்ளது. எனவே அணை பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் முல்லைபெரியாறு அணை மேல்பகுதியில் நிலஅதிர்வு கணக்கிடும் கருவி பொருத்தப்பட்டது.

    • தேனி மாவட்டம் கம்பம் ரிஷி யோகா அறக்கட்டளையின் சார்பில் பங்கேற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மேலும் கடந்த முறை மலேசியாவில் நடைபெற்ற யோகா போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்கள். எனவே அவர்களுக்கு சர்வதேச போட்டி என்பது புதிது அல்ல இருப்பினும் தீவிர பயிற்சி அளித்து வருகின்றோம் என்றார்.

    கம்பம்:

    இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் வருகின்ற ஜூன் மாதம் 25-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சர்வதேச யோகா போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான மாணவர்களை தேர்வு செய்யும் தகுதி போட்டிகள் பழனியில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில யோகாசன சங்கத் தலைவர் யோகி ராமலிங்கம் பங்கேற்று மாணவ- மாணவிகளை தேர்வு செய்தார்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ -மாணவிகள் பங்கேற்றனர். இதில் தேனி மாவட்டம் கம்பம் ரிஷி யோகா அறக்கட்டளையின் சார்பில் பங்கேற்ற மாண வர்கள் தேர்வு செய்ய ப்பட்டனர். அவர்கள் தீவிர யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். யோகா ஆசிரியர்கள் துரை ராஜேந்திரன் மற்றும் ரவி ராம் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட யோகா சங்க தலைவர் துரை ராஜேந்திரன் கூறியதாவது, சர்வதேச யோகா போட்டிகள் கொழும்பில் நடைபெறுகின்றது.

    இதில் பங்கேற்கும் 14 மாணவ-மாணவிகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றோம். அந்த மாணவர்கள் ஏற்கனவே பலமுறை மாநில மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள். மேலும் கடந்த முறை மலேசியாவில் நடைபெற்ற யோகா போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்கள். எனவே அவர்களுக்கு சர்வதேச போட்டி என்பது புதிது அல்ல இருப்பினும் தீவிர பயிற்சி அளித்து வருகின்றோம் என்றார்.

    • அரிசி கொம்பன் யானை ஓர் இடத்தில் தொடர்ந்து நின்றால் மட்டுமே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும்.
    • மருந்து செலுத்தியதும் அங்கும் இங்கும் 1 மணி நேரம் அரிசி கொம்பன் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதால் அந்த பாதையை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் அட்டகாசம் செய்து 11 பேரை பழி வாங்கிய அரிசி கொம்பன் கடந்த ஏப்ரல் மாதம் கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

    அதன் பிறகு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் கடந்த 27-ந் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்தது. சாலைகள் மற்றும் தெருக்களில் நடந்து சென்றவர்களை விரட்டியதுடன் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோவையும் சேதப்படுத்தியது.

    சாலையில் நடந்து வந்த கம்பத்தைச் சேர்ந்த பால்ராஜ் (65) என்பவரை தாக்கியதில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.

    இதனிடையே சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி பகுதிகளில் புகுந்த அரிசி கொம்பன் ராயப்பன்பட்டி சண்முகா நதி அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனை பிடிப்பதற்காக அழைத்து வரப்பட்ட 3 கும்கி யானைகள் கம்பம் வனப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    சண்முகநாதன் கோவிலில் புகுந்த அரிசி கொம்பன் அங்கே தங்கி இருந்து கோவிலில் பூஜை செய்து வரும் சரஸ்வதியம்மாள் (63) என்பவரது வீட்டை இடித்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து அவர் கோவிலுக்குள் சென்று கிரில் கேட்டை பூட்டிக் கொண்டார். அதன் பிறகு கோவிலுக்கு வந்த யானை அங்கிருந்த சமையலறை சுவற்றை சேதப்படுத்தி உள்ளே இருந்த பருப்பு, அரிசி, உப்பு ஆகியவற்றை தின்று விட்டு சென்றது. கடந்த 5 நாட்களாக கம்பம் சுற்று வட்டார பகுதிகளை பீதியில் ஆழ்த்தியுள்ள அரிசி கொம்பன் யானை சோர்வுடனும், தும்பிக்கையில் காயத்துடனும் சுற்றி வருகிறது.

    அரிசி கொம்பன் யானை ஓர் இடத்தில் தொடர்ந்து நின்றால் மட்டுமே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும். அதிலும் கடந்த முறை நடந்த ஆபரேசனின்போது 6 மயக்க ஊசி செலுத்தியும் அரிசி கொம்பன் பிடிபடவில்லை. எனவே மருந்தின் அளவை அதிகரித்து மயக்க ஊசி செலுத்தும் முனைப்பில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    மருந்து செலுத்தியதும் அங்கும் இங்கும் 1 மணி நேரம் அரிசி கொம்பன் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதால் அந்த பாதையை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் யாரும் செல்லாமல் கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த 5 நாட்களாக வனத்துறையினர், போலீசார் என 150-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து அரிசி கொம்பனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் தற்போது பாதிக்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டனர். சிறு சிறு குழுக்களாக சுழற்சி முறையில் யானை இருக்கும் இடத்தை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

    தற்போது இருக்கும் இடம் மேகமலை அடிவார பகுதியாகும். இங்கிருந்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியிலேயே தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை உள்ளிட்ட யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் சமிக்ஞை மொழிகளை பேசி தைரியமாக நுழைபவர்கள் முதுமலை பழங்குடி இன மக்கள். இவர்கள் ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் யானைகளிடம் சங்கேத மொழிகளால் பேசி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திறமை பெற்றவர்கள்.

    அக்குழுவைச் சேர்ந்த பொம்மன், சுரேஷ், சிவா, ஸ்ரீகாந்த் ஆகிய 4 பழங்குடியினர் கம்பம் வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் அரிசி கொம்பனை அதன் பாணியில் நடந்து வெளியே கொண்டு வர கும்கி யானைகளுடன் செல்ல உள்ளனர். எனவே அரிசி கொம்பன் யானை இன்று வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • டி.வாடிப்பட்டி ரேசன்கடைகளில் பெரியகுளம் வட்டார பொதுவினியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பொருட்களின் இருப்பும் குறைவாக இருந்தது தொடர்ந்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் ஆரோக்கியசுகுமார் வெளியிட்டுள்ள செய்தி யில் கூறியிருப்பதாவது, பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி மற்றும் டி.வாடிப்பட்டி ரேசன்கடைகளில் பெரியகுளம் வட்டார பொதுவினியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் திடீர் ஆய்வு மேற்கொ ண்டார்.

    அப்போது ரேசன் கடை விற்பனையாளர் ஜெயக்குமார் முறை கேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் பொருட்களின் இருப்பும் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இதனைதொடர்ந்து ஜெயக்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும் அவர்மீது உத்தமபாளையம் குற்றப்புலனாய்வுத்துறை குடிமைப்பொருள் வழங்கல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • நேற்று மாலை இப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கி தென்னைமரம் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது
    • மின்னல் தாக்கியதில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் டி.வி, மோட்டார், பேன் உள்பட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடிமின்ன லுடன் மழை பெய்து வருகிறது. மேலும் அவ்வ ப்போது சூறைக்காற்றும் வீசி வருகிறது. சங்க ராபுரம் பகுதியில் அங்காளஈஸ்வரி கோவில் அருகே தென்னை மரங்கள்உ ள்ளது.

    நேற்று மாலை இப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கியது. இதில் தென்னைமரம் தீப்பற்றி கொளு ந்துவிட்டு எரிய தொடங்கியது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் தீயை அணைக்க முயன்ற னர். ஆனால் முடியாததால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து சுமார் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். மேலும் மின்னல் தாக்கியதில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் டி.வி, மோட்டார், பேன் உள்பட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது.

    • காலை 500 பேருக்கும், மதியம் 500 பேருக்கும், இரவு 500 பேருக்கும் என நாள் ஒன்றுக்கு 1,500 பேருக்கு தற்போது உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    • வயதானவர்கள், கூலி தொழிலாளர்கள், குழந்தைகள் குடும்பம் குடும்பமாக வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு விசைத்தறி, மஞ்சள், ஜவுளி, தோல் தொழிற்சாலைகள் அதிகளவில் இயங்கி வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஈரோடு பிரப் சாலையில் புதிய உணவகம் தொடங்கப்பட்டு உள்ளது. ஆற்றல் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் மலிவு விலையில் ரூ.10-க்கு உணவு கிடைக்கிறது. காலை 8 மணி முதல் 10 மணி வரை சுடச்சுட இட்லி, சாம்பார், சட்னியும், மதியம் 12 மணி முதல் 2 மணி வரை சாதம், சாம்பார், பொரியல், மோர் மற்றும் ஊறுகாயும், இரவு 7 மணி முதல் 9 மணி வரை இட்லி, சாம்பார், சட்னியும் சுடச்சுட வழங்கப்படுகிறது.

    இங்கு ரூ.10 கட்டணத்தில் பசியாற விரும்புவோருக்கு ருசியான தரமான உணவை வாரம் 7 நாட்களும் காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் அளவில்லா உணவு வழங்கப்படுகிறது. இதற்காக சிறந்த சமையல் கலைஞர்கள், ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து உணவு சாப்பிடும் இடவசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த உணவகம் ஈரோட்டில் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. காலை 6.30 மணி முதலே உணவகத்தில் மக்கள் சாப்பிடத் திரண்டு விடுகின்றனர். கூட்டம் அலைமோதுவதால் வரிசையில் பொதுமக்கள் நின்று சாப்பிட்டு செல்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இட்லி தீர்ந்து விடுகிறது.

    இதேபோல் மதியம் 40 நிமிடங்களுக்குள்ளாகவே சாதம் தீர்ந்து விடுகிறது. இரவும் இதே நிலைமை தான் இருக்கிறது. சாதாரண கூலி தொழிலாளர்கள் ஏழைகள் மட்டுமின்றி வசதி படைத்தவர்களும் குடும்பமாக வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.

    சாப்பிட வருபவர்களிடம் உணவை வீணடிக்க வேண்டாம் என்று கூறி தான் உணவு பரிமாறப்படுகிறது. சாப்பிட்டு முடித்ததும் அவர்களே தட்டுகளை கழுவி ஊழியரிடம் கொடுக்க வேண்டும். நல்ல காற்றோட்ட வசதியுடன் உணவு அருந்தும் வகையில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. சாப்பிட வருபவர்களுக்கு ஆர்.ஓ. வாட்டர் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ஆற்றல் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஆற்றல் அசோக்குமார் கூறியதாவது:-

    ஆற்றல் அறக்கட்டளை சார்பில் ஏராளமான சமுதாய பணிகள் செய்து வருகிறோம். எங்கள் அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் சம உரிமை வழங்குவது தான்.

    எங்கள் அறக்கட்டளை மூலம் கிராமப்புற பள்ளிகளை மேம்படுத்துதல், சமுதாயக்கூடம் கட்டி கொடுத்தல், ஆட்டோ டிரைவர்கள், கூலித்தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர்களை பாராட்டி கவுரவித்தல் உள்பட ஏராளமான சேவைகளை ஆற்றி வருகிறோம்.

    தற்போது புதிய முயற்சியாக பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு மலிவான விலையில் தரமான உணவு வழங்க முடிவு செய்யப்பட்டு முதல் முறையாக ஆற்றல் அறக்கட்டளை சார்பாக மலிவு விலை உணவகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

    முதலில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் உணவின் மதிப்பு தெரியாமல் போய்விடும் என்பதால் 10 ரூபாய் கட்டணத்தில் காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் தலா ரூ.10-க்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    காலை 500 பேருக்கும், மதியம் 500 பேருக்கும், இரவு 500 பேருக்கும் என நாள் ஒன்றுக்கு 1,500 பேருக்கு தற்போது உணவு வழங்கப்பட்டு வருகிறது. பார்சல் வசதி கிடையாது. பொதுமக்கள் நேரடியாக உணவகத்திற்கு வந்து சாப்பிட்டு செல்லலாம்.

    இதன் முக்கிய நோக்கம் அனைத்து தரப்பு மக்களும் வயிறார தரமான உணவை சாப்பிட்டு செல்ல வேண்டும் என்பதுதான். உணவகம் தொடங்கி சில நாட்களே ஆகிறது. ஆனால் பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

    வயதானவர்கள், கூலி தொழிலாளர்கள், குழந்தைகள் குடும்பம் குடும்பமாக வந்து சாப்பிட்டு செல்கின்றனர். சாப்பிட வருபவர்களிடம் உணவை வீணாக்க வேண்டாம் என அன்பு கட்டளை இடுகிறோம். ஏனென்றால் கொரோனா காலகட்டத்தில் தான் உணவு அருமை நமக்கு தெரிய வந்தது. உணவுக்காக பலர் கஷ்டப்பட்டனர்.

    கொரோனா காலகட்டத்தில் ஆற்றல் அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்களை நேரடியாக சென்று சந்தித்து உணவு பொட்டலங்களை வழங்கினார்கள். இதன் அடிப்படையிலேயே தற்போது மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

    கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்களை காக்க வைக்காமல் இருப்பதற்காக நவீன எந்திரங்கள் மூலம் ஒரே நேரத்தில் 100 இட்லி வரை தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த உணவகத்திற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கும் ஆற்றல் உணவகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போது சண்முகா நதி அணை பகுதியில் அரிசி கொம்பன் யானை சுற்றித் திரிகிறது.
    • மருத்துவ குழுவினர் தெரிவிக்கையில், யானையை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திய பிறகே கும்கிகளை வரவழைக்க முடியும்.

    கம்பம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் காட்டு யானையை கடந்த மாதம் 27-ந் தேதி கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.

    அதன் பிறகு மெல்ல மெல்ல தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. கடந்த 27-ந் தேதி லோயர் கேம்ப் தனியார் திருமண மண்டபம், சுருளியாறு மின் நிலையம், நாட்டுக்கல், நந்தகோபாலன் கோவில் தெருக்களில் சுற்றித் திரிந்தது.

    அன்று கம்பத்தில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்த காவலாளியான மேற்கு ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 65) என்பவரை தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை அமைச்சர்கள் இ.பெரியசாமி, மதிவேந்தன் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன் நிவாரண உதவியும் வழங்கினர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கம்பம் 28-வது மேற்கு ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். 1 மகளுக்கும், மகனுக்கும் திருமணம் ஆகி விட்டது. விஷ்ணுபிரியா என்ற 2-வது மகளுக்கு திருமணம் ஆகவில்லை. அவருக்கு வரன் பார்த்து வந்த நிலையில் பால்ராஜ் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அவரது மனைவி பிச்சையம்மாள் கூறுகையில், ஏழ்மையான எங்கள் குடும்பத்தில் ஒரே ஆதரவாக எனது கணவர் மட்டுமே இருந்தார். ஒரு மகனையும், ஒரு மகளையும் திருமணம் செய்து வைத்த நிலையில் 2-வது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு முன்பாகவே இறந்து விட்டார். இனி எங்கள் குடும்பத்துக்கு யார் ஆதரவு என்பது தெரியவில்லை. எனவே அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

    இதனிடையே அரிசி கொம்பன் யானையை பிடிக்க தொடர் வேட்டை நடந்து வருகிறது. அதனை பிடிக்க வந்த 3 கும்கி யானைகள், கம்பம் வனத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சண்முகா நதி அணை பகுதியில் அரிசி கொம்பன் யானை சுற்றித் திரிகிறது.

    இதனையடுத்து வனத்துறையினர் மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி, துணை இயக்குனர் ஆனந்த் தலைமையில் முகாமிட்டுள்ளனர். மருத்துவக்குழுவினர், மயக்க ஊசி செலுத்த தயாராகினர். ஆனால் சுதாரித்துக்கொண்ட அரிசி கொம்பன் டாக்டர்களை கண்டதும் அங்கிருந்து வெளியேறியது. அது செல்லும்போது மயக்க ஊசி செலுத்த முடியாது என்பதால் 'ட்ரேக்கிங் டீம்' ஊட்டி யானைகள் முகாமில் இருந்து வந்த சிறப்பு குழுவினர் பின் தொடர்ந்து சென்றனர். அதனையடுத்து சண்முகநாதன் கோவில் வழியாக பத்துக்கூடு பகுதிக்கு சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அரிசி கொம்பன் யானையை பிடிக்க ஏற்கனவே இருந்த டாக்டர்கள் விடுவிக்கப்பட்டு பிற மாவட்டங்களில் இருந்து வன உயிரின சிறப்பு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவ குழுவினர் தெரிவிக்கையில், யானையை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திய பிறகே கும்கிகளை வரவழைக்க முடியும். அதற்கு முன்பாக கும்கிகள் இங்கு வந்தால் அது வேறு இடத்துக்கு சென்று விடும். வனப்பகுதியில் உள்ள பாதைகளை ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு சமப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அது விரும்பும் உணவு கிடைக்காததால் மிகவும் சோர்வோடு காணப்படுகிறது. மேலும் 3 நாட்களில் ஒருமுறை மட்டுமே சாணமிட்டுள்ளது. எனவே காலி வயிற்றுடன் நடமாடுவதால் மலை ஏற முடியாமல் சுற்றி வருகிறது என்று தெரிவித்தனர்.

    இதனிடையே அரிசி கொம்பன் யானையை பிடிக்க அங்குள்ள கூத்தநாச்சி கோவிலில் தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி ஆலோசனைப்படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கம்பம், சுருளிப்பட்டி, காமையகவுண்டன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு தொடர்கிறது. ராயப்பன்பட்டி அருகே விவசாய தோட்டங்களில் வேலை செய்து வந்த கூலித் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சுருளி அருவிக்கு குளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

    அரிசி கொம்பன் யானையை பிடிக்கும் பணியில் 150 போலீசார் மற்றும் வனத்துறையினர், மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இருந்தபோதும் அவர்களுக்கு பிடி கொடுக்காமல் யானை தொடர்ந்து போக்கு காட்டி வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    • பொதுமக்கள் அச்சமடையாமல் யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
    • ட்ரோன் மூலம் படம் பிடிக்க முயன்ற ஹரிஹரனை வனத்துறையினர் கைது செய்து ட்ரோனையும் பறிமுதல் செய்தனர்.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை வனப்பகுதியில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி வனப்பகுதியில் கடந்த மாதம் 29-ந் தேதி விட்டனர்.

    அங்கிருந்து படிப்படியாக முன்னேறிய அரிசி கொம்பன் தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் நுழைந்தது. ஏகலூத்து ரோடு ஆசாரி மார் வீதிகளில் வலம் வந்த அரிசி கொம்பன் சுருளிப்பட்டி மின் நிலையம் அருகே உள்ள புளியந்தோப்பில் தஞ்சமடைந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து நந்தகோபாலசாமி நகரை ஒட்டியுள்ள வாழைத்தோப்புக்குள் புகுந்தது.

    அங்கு அரிசி கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் திடீரென அங்கிருந்து கிளம்பிய யானை சாமாண்டிபுரம் வழியாக சுருளிப்பட்டி மற்றும் கூத்தநாச்சியம்மன் கோவில் பகுதிக்குள் புகுந்தது.

    இன்று காலை வரை அதே இடத்தில் அரிசி கொம்பன் யானை முகாமிட்டுள்ளது. யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் சிக்னலை வைத்து வனத்துறையினர் அதன் இருப்பிடத்தை அறிந்து வந்தனர். ஆனால் வனப்பகுதிக்குள் சிக்னல் கிடைக்காததால் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது.

    இந்த யானையை பிடிக்க பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சுயம்பு, அரிசி ராஜா, உதயன் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. இவை வெவ்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு அரிசி கொம்பனை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் கும்கிகள் முன்பு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு அதன் முன்பு செல்பி எடுக்க தொடங்கியதால் அதன் இருப்பிடத்தை மாற்றினர்.

    தற்போது சுருளிப்பட்டி வனப்பகுதியில் 3 கும்கி யானைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. டாக்டர் பிரகாஷ் தலைமையில் டாக்டர்கள் செல்வம், சந்திரசேகரன், கலைவாணன் ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உள்ளனர்.

    மருத்துவ குழுவினர் தெரிவிக்கையில், அரிசி கொம்பன் யானை தற்போது யானை கஜம் பகுதியில் உள்ளது. மயக்க ஊசி செலுத்திய உடன் யானைக்கு கிறுகிறுப்பு ஏற்பட்டு சுமார் 1 மணி நேரம் அங்கும் இங்கும் அலைந்து அதன் பிறகுதான் கீழே விழும். எனவே சமதளத்தில் யானை இருந்தால் தான் மயக்க ஊசி செலுத்த முடியும். மலைப்பாங்கான பகுதியில் மயக்க ஊசி செலுத்தும்போது திடீரென பள்ளத்தில் விழுந்து விடும் அபாயமும் உள்ளது.

    அதற்காகத்தான் மயக்க ஊசி செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொரு டோசும் 5 முதல் 7 மில்லி அளவில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும்.

    மயக்க ஊசியின் அளவு குறித்து ஏற்கனவே இதனை பிடித்த கேரள வனத்துறையினரிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டுள்ளது என்றனர்.

    கம்பம், சுருளிப்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் எந்த நேரமும் அரிசி கொம்பன் யானை மீண்டும் வந்து விடும் என்ற அச்சத்தில் அப்பகுதியில் இன்று 3-வது நாளாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் திராட்சை தோட்டங்கள், ஏலத் தோட்டங்கள், தினசரி கூலி வேலைகளுக்கு செல்லும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனிடையே யானை நடமாட்டம் உள்ள பகுதியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் தெரிவிக்கையில், 35 வயது மதிக்கத்தக்க அரிசி கொம்பன் ஆண் யானை 12 அடி உயரம் கொண்டது. இதன் பிரம்மாண்ட தோற்றம் மற்றும் சத்தம் காரணமாக அருகில் பொதுமக்கள் செல்ல இயலாது. தற்போது அதனை பிடிக்க சிறப்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். மயக்க ஊசி செலுத்தி பிடித்த உடன் பரம்பிக்குளம் பகுதியில் விட திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களாக யானை நகருக்குள் சுற்றி வந்ததால் 3 கிலோ எடை குறைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    பொதுமக்கள் அச்சமடையாமல் யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சவாலான பணி என்ற போதிலும் இதனை சிறப்பு குழுக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார்.

    அரிசி கொம்பன் யானை கம்பம் நகருக்குள் வந்த முதல் நாளே அதனை ட்ரோன் மூலம் படம் பிடிக்க யூடியூப்பர் முயன்றதால் அதன் திசை மாறியது. மின் வாரிய அலுவலகம் அருகே புளியந்தோப்பில் யானை முகாமிட்டு இருந்தபோது சின்னமனூரைச் சேர்ந்த ஹரிஹரன் (23) என்பவர் ட்ரோன் மூலம் படம் பிடித்தார். இதனால் மிரண்டு போன அரிசி கொம்பன் வெவ்வேறு இடங்களுக்கு ஓடத்தொடங்கியது. இதனையடுத்து ட்ரோன் மூலம் படம் பிடிக்க முயன்ற ஹரிஹரனை வனத்துறையினர் கைது செய்து ட்ரோனையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அரிசி கொம்பன் யானை இருப்பிடம் குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெவ்வேறு செய்திகள் பரப்பப்பட்டு வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து பொய்யான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    ×