search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிசி கொம்பன் யானையை பிடிக்க முடியாமல் 4-வது நாளாக வனத்துறையினர் திணறல்
    X

    அரிசி கொம்பன் யானை முகாமிட்டுள்ள பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

    அரிசி கொம்பன் யானையை பிடிக்க முடியாமல் 4-வது நாளாக வனத்துறையினர் திணறல்

    • தற்போது சண்முகா நதி அணை பகுதியில் அரிசி கொம்பன் யானை சுற்றித் திரிகிறது.
    • மருத்துவ குழுவினர் தெரிவிக்கையில், யானையை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திய பிறகே கும்கிகளை வரவழைக்க முடியும்.

    கம்பம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் காட்டு யானையை கடந்த மாதம் 27-ந் தேதி கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.

    அதன் பிறகு மெல்ல மெல்ல தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. கடந்த 27-ந் தேதி லோயர் கேம்ப் தனியார் திருமண மண்டபம், சுருளியாறு மின் நிலையம், நாட்டுக்கல், நந்தகோபாலன் கோவில் தெருக்களில் சுற்றித் திரிந்தது.

    அன்று கம்பத்தில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்த காவலாளியான மேற்கு ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 65) என்பவரை தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை அமைச்சர்கள் இ.பெரியசாமி, மதிவேந்தன் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன் நிவாரண உதவியும் வழங்கினர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கம்பம் 28-வது மேற்கு ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். 1 மகளுக்கும், மகனுக்கும் திருமணம் ஆகி விட்டது. விஷ்ணுபிரியா என்ற 2-வது மகளுக்கு திருமணம் ஆகவில்லை. அவருக்கு வரன் பார்த்து வந்த நிலையில் பால்ராஜ் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அவரது மனைவி பிச்சையம்மாள் கூறுகையில், ஏழ்மையான எங்கள் குடும்பத்தில் ஒரே ஆதரவாக எனது கணவர் மட்டுமே இருந்தார். ஒரு மகனையும், ஒரு மகளையும் திருமணம் செய்து வைத்த நிலையில் 2-வது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு முன்பாகவே இறந்து விட்டார். இனி எங்கள் குடும்பத்துக்கு யார் ஆதரவு என்பது தெரியவில்லை. எனவே அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

    இதனிடையே அரிசி கொம்பன் யானையை பிடிக்க தொடர் வேட்டை நடந்து வருகிறது. அதனை பிடிக்க வந்த 3 கும்கி யானைகள், கம்பம் வனத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சண்முகா நதி அணை பகுதியில் அரிசி கொம்பன் யானை சுற்றித் திரிகிறது.

    இதனையடுத்து வனத்துறையினர் மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி, துணை இயக்குனர் ஆனந்த் தலைமையில் முகாமிட்டுள்ளனர். மருத்துவக்குழுவினர், மயக்க ஊசி செலுத்த தயாராகினர். ஆனால் சுதாரித்துக்கொண்ட அரிசி கொம்பன் டாக்டர்களை கண்டதும் அங்கிருந்து வெளியேறியது. அது செல்லும்போது மயக்க ஊசி செலுத்த முடியாது என்பதால் 'ட்ரேக்கிங் டீம்' ஊட்டி யானைகள் முகாமில் இருந்து வந்த சிறப்பு குழுவினர் பின் தொடர்ந்து சென்றனர். அதனையடுத்து சண்முகநாதன் கோவில் வழியாக பத்துக்கூடு பகுதிக்கு சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அரிசி கொம்பன் யானையை பிடிக்க ஏற்கனவே இருந்த டாக்டர்கள் விடுவிக்கப்பட்டு பிற மாவட்டங்களில் இருந்து வன உயிரின சிறப்பு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவ குழுவினர் தெரிவிக்கையில், யானையை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திய பிறகே கும்கிகளை வரவழைக்க முடியும். அதற்கு முன்பாக கும்கிகள் இங்கு வந்தால் அது வேறு இடத்துக்கு சென்று விடும். வனப்பகுதியில் உள்ள பாதைகளை ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு சமப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அது விரும்பும் உணவு கிடைக்காததால் மிகவும் சோர்வோடு காணப்படுகிறது. மேலும் 3 நாட்களில் ஒருமுறை மட்டுமே சாணமிட்டுள்ளது. எனவே காலி வயிற்றுடன் நடமாடுவதால் மலை ஏற முடியாமல் சுற்றி வருகிறது என்று தெரிவித்தனர்.

    இதனிடையே அரிசி கொம்பன் யானையை பிடிக்க அங்குள்ள கூத்தநாச்சி கோவிலில் தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி ஆலோசனைப்படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கம்பம், சுருளிப்பட்டி, காமையகவுண்டன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு தொடர்கிறது. ராயப்பன்பட்டி அருகே விவசாய தோட்டங்களில் வேலை செய்து வந்த கூலித் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சுருளி அருவிக்கு குளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

    அரிசி கொம்பன் யானையை பிடிக்கும் பணியில் 150 போலீசார் மற்றும் வனத்துறையினர், மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இருந்தபோதும் அவர்களுக்கு பிடி கொடுக்காமல் யானை தொடர்ந்து போக்கு காட்டி வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    Next Story
    ×