என் மலர்
சிவகங்கை
- தயாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா தொடங்கியது.
- வருகிற 28ந்தேதி சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் உள்ள காட்டுடை குளத்தில் உள்ளபிரசித்தி பெற்ற தயாபுரம் முத்து மாரியம்மன் கோவிலில் 41-ம் ஆண்டு பங்குனி பொங்கல் விழா நேற்று (வியாழக்கிழமை) காலை காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சி யான பங்குனி பொங்கல் விழா மற்றும் தீச்சட்டிகள், பால்குடங்கள், பூ கரகம் எடுக்கும் நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.
அன்று கோவில் பூசாரி சுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள் மானாமதுரை வைகை ஆற்றில் இருந்து பூ கரகம், தீச்சட்டிகள், பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வலம் வந்து கோவில் முன்பு பூக்குழி இறங்குவர். வருகிற 28ந்தேதி சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
பக்தர்கள் சார்பில் தினமும் மண்டகப் படிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் டிஸ்டிகள் சுப்பிரமணியன், நாகராஜன், முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- இளையான்குடி அருகே பெண் கவுன்சிலரின் பெயர் இல்லாததால் கல்வெட்டு உடைத்து நொறுக்கப்பட்டது.
- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் சமையலறை கட்டிட திறப்பு விழா நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் விஜயன்குடி கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சமையலறைக் கட்டிட திறப்பு விழா நடந்தது. இதில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி பங்கேற்று சமையலறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
விழா தொடங்குவதற்கு முன்பு அந்த கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு வந்த அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரியின் கணவர் செல்வராஜ் விழா கல்வெட்டில் மனைவி பெயர் இல்லாததைக்கண்டு ஆத்திரம் அடைந்தார்.
அதன் பின்னர் அவர் அந்த கல்வெட்டை உடைத்து நொறுக்கினார். இதுகுறித்து விஜயன்குடி ஊராட்சி மன்ற தலைவர் மாரி லோகராஜ் இளையான்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
- இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலக தண்ணீர் தினமான வருகிற 22-ந்தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது. அதன்படி கிராம சபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, உலக தண்ணீர் தினமான 22-ந்தேதி அன்று காலை 11 மணிக்கு அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு கிராமசபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
அன்றைய தினம் நடை பெறும் கிராம சபை கூட்டத்தில் அந்த ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவா தித்தல்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், கிராம வளர்ச்சி திட்டம் 2023-2024 தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஜல் ஜீவன் இயக்கம் ஆகிய கூட்டப்பொருட்கள் இந்த கிராம சபை கூட்டத்தில் விவாதிக் கப்பட உள்ளது. இந்த கிராமசபை கூட்டத்தில்
- குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இதற்கான கொள்முதல் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தற்போது, தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் விலை ஆதரவுத் திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் வகையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.
மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் தென்னை விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய சிவகங்கை மாவட்டத்திற்கு அனுமதி மற்றும் இலக்கீட்டை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
இதன்படி சிவகங்கை விற்பனைக் குழு விற்குட்பட்ட சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் 400 மெட்ரிக் டன், சிவகங்கை ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் 100 மெட்ரிக் டன், திருப்புவனம் ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் 50 மெட்ரிக் டன் என மொத்தம் 550 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இதற்கான கொள்முதல் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளால் வழங்கப்பட வேண்டிய அரவைக் கொப்பரையின் தரம் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வைக்கோல், தூசு, நார் போன்ற அயல் பொருட்கள் அதிக பட்சம் 1 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும். பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை, சுருக்கம் கொண்ட கொப்பரை மற்றும் சில்லு கொப்பரை ஆகியவை அதிகபட்சம் 10 சதவீதம் மட்டுமே இருக்கலாம்.
விவசாயிகள் தங்களது சிட்டா, பயிர்சாகுபடி அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக விபர நகல்களுடன் அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து கொப்பரையை ஒப்படைக்கலாம்.
அலுவலர்களால் தர ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட கொப்பரை எடையிடப்பட்டு அதற்கான விலை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த கொள்முதல் பணி 1.4.2023 முதல் 30.9.2023 வரை மேற்கொள்ளப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட தென்னை விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களிடம் உள்ள கொப்பரையை சிங்கம்புணரி, திருப்புவனம் மற்றும் சிவகங்கை ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து விற்று பயனடையலாம்.
இது குறித்த தகவல்களை பெறுவதற்கு சிங்கம்புணரி- 97862 69851, திருப்புவனம்- 99447 66326 , சிவகங்கை- 70107 92414 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு-காப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.
- அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளார்.
தேவகோட்டை
தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்ட ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தேவகோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு இழப்பீடு, காப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் தாய், மகளை கொலை செய்து 60 பவுன் நகை கொள்ளை யடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்த தங்கநகை, வெள்ளி பொருட்களை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் சம்பந்தபட்டவர்கள் போலீசார் கைப்பற்றிய பொருட்கள் தங்கள் வீட்டில் திருடப்பட்டது இல்லை என கூறியுள்ளனர்.
இதனால் வழக்கின் உண்மை தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. வழக்கு குறித்து போலீசாரும் சரியான பதிலளிக்கவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
கண்ணங்கோட்டை இரட்டை கொலை வழக்கை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வேன். தேவைப்பட்டால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைப்போம். காவல்துறை உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாகனம் மோதி மான் பரிதாபமாக இறந்தது.
- நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகைகள் வைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேவகோட்டை
தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் அதிக அளவில் மான்கள் நடமாட்டம் உள்ளது. நகரின் எல்லை பகுதியில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.இதில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர்.
அமராவதி புதூரில் இருந்து புளியால் வரை உள்ள காட்டுப் பகுதிகளில் மான்கள் அதிகமாக உள்ளது. இந்தப் பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு தண்ணீர் குடிப்பதற்காக மான்கள் நெடுஞ்சாலையைக் கடந்து வருவது வழக்கம்.
அப்படி கடந்து வரும் போது வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை தேவகோட்டை அருகே திருச்சி-ராமேசு வரம் தேசிய நெடுஞ்சாலையில் மாரிச்சான்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் மான் ஒன்று இறந்து கிடந்தது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மானின் உடலை மீட்டுச் சென்றனர்.
மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், நெடுஞ்சாலை ஓரங்களில் மான்கள் நடமாட்டம் குறித்தும், வேகக்கட்டுபாடுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தும் வகையிலும் எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பஸ் நிலையம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்
- மனிதநேய ஜனநாயக கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. பொதுச செயலாளர் ஹாரூன் ரசீது சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மாநில துணைச் செயலாளர் சைபுல்லா முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் சலீம், அபூபக்கர், சிராஜுதீன், அசாருதீன், உஸ்மான், அல்லாபிச்சை, முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சிவகங்கை மாவட்டத்தில் பேரூர்களை இணைக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானா மதுரை, இளையான்குடி, காளையார் கோயில், சிவகங்கை வழித்தட ங்களில் இரு மார்க்கங்களிலும் வட்ட பஸ்கள் இயக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை நேரு பஜாரில் குடியிருப்புகளுக்கு அருகில் மதுக்கடை மற்றும் மதுக்கூடம் மீண்டும் திறக்க முயற்சி நடப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.
இளையான்குடியில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், அமைப்புகளின் எதிர்ப்புகள், போராட் டங்களை மீறி நகருக்கு வெளியே பொதுமக்களுக்கு பயன் தராத வகையில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டுமான பணி களை ஆரம்ப நிலையில் உடனே நிறுத்தி தற்போ துள்ள பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளி ட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பல இடங்களில் ஆட்டோ சங்கங்கள் மற்றும் பெயர் பலகைகளை திறந்து வைத்து கட்சி கொடிகளை பொதுச் செயலாளர் ஹாருன்ரசீது ஏற்றி வைத்தார்.
- பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
- 45 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 85 ஆயிரத்திற்கான காசாசோலையை வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கீழச்சிவல் பட்டி அருகே இளையாத்தங்குடியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் பொது பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பால் உற்பத்தியாளர் களுக்கு போனஸ் தொகை மற்றும் கூடுதல் கொள்முதல் விலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர்கள் பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 45 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 85 ஆயிரத்திற்கான காசாசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, வட்டாட்சியர் வெங்க டேஷன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், துணை செயலாளர் இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்ட மைப்பு தலைவர் மாணிக்க வாசகம், மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், துவார் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், மற்றும் பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.
- வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்ப ணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகா ப்புத்துறை ஆணையர் லால்வேனா, அனைத்து துறை முதல்நிலை அலுவ லர்களுடன் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்ட த்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட ங்களும், மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை அனைத்துப்ப குதிகளிலும் மேம்படுத்தும் வகையிலும் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் தொடர்பாகவும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறைகளின் சார்பில் இதுவரை மேற்கொண்ட திட்டப்ப ணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதிநிலை தொடர்பாக அலுவலர்கள் எடுத்துரைத்து, அவைகள் தொடர்பான விவரங்களை அறிக்கை யாக சமர்ப்பிக்கலாம். அவ்வாறு மேற்கொ ள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகளுடன் தங்களது துறைகளின் சார்பில் மேற்கொ ள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, பொதுமக்களின் தேவைகளை நிறைவே ற்றுவதற்கான நடவடி க்கைகள் மேற்கொ ள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- எடையளவுகள் முத்திரையிடும் முகாம் இன்று முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது.
- முத்திரை முகாமிற்கு வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை கொண்டு வந்து மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டு பயனடையலாம்.
சிவகங்கை
சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சட்டமுறை எடை யளவுகள் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு சட்ட முறை எடையளவுகள் (அமலாக்கம்) விதிகள் 2011-ன்படி வணிகர்கள் பயன்படுத்தும் மின்னனு தராசுகள், மேடைதராசுகள், வில் தராசுகள் ஆகியவை வருடத்திற்கு ஒருமுறையும், மற்றும் பிற மேசை தராசுகள், விட்டதராசுகள், எடைகற்கள், நீட்டல் அளவைகள் போன்றவை 2 வருடத்திற்கு ஒருமுறையும் மறுபரிசீலனை செய்து அரசு முத்திரையிட்டு பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு முத்திரையிடாமல் வணிகர்கள் எடை யளவுகளை பயன்படுத்தும் பட்சத்தில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும்.
வணிகர்களுக்கு உதவும் வகையில் எடையளவுகளை மறுமுத்திரையிட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தற்போது மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் மற்றும் மதுரை, தொழி லாளர் இணை ஆணையரின் உத்தரவுப்படி தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வணிகர்கள் பயனடையும் வகையில் வணிகர்கள் பயன்படுத்தும் எடையளவுக ளை காரைக்குடி கொண்டு வந்து முத்திரை யிடுவதால் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு வணிகர்களின் நலனுக்காக தேவகோட்டை பகுதியில் காரைக்குடி, முத்திரை ஆய்வாளரால் இன்று (15-ந் தேதி) முதல் வருகிற 31-ந் தேதி வரை தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலு வலகம், 5ஏ, மேலவயல் குளக்கால் தெரு, வெள்ளையன்ஊரணி தெற்கு, தேவகோட்டை என்ற முகவரியில் முகா மிட்டு முத்திரைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட முத்திரை முகாமிற்கு வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை கொண்டு வந்து மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டு பயனடை யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 75 சதவீத தீக்காயங்களுடன் கடந்த 2 வாரங்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் அர்ஜூனன் சிகிச்சை பெற்று வந்தார்.
- பெட்ரோல் குண்டு வீச்சில் டாஸ்மாக் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். ஆட்டோ டிரைவரான இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது குடித்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
பள்ளத்தூரில் டாஸ்மாக் கடை இருப்பதால் தான் தனது தந்தை குடிப்பதாக கருதிய ராஜசேகரின் மகன் ராஜேஷ்(வயது23) என்பவர் கடந்த 3-ந்தேதி இரவு 10 மணியளவில் பள்ளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுகளை வீசினார். இந்த குண்டுகள் கடையில் வெடித்து அங்கிருந்த மதுபானங்கள், பொருட்கள் எரிந்து சேதமாகின.
பெட்ரோல் குண்டு வீச்சின்போது கடையில் இருந்த சூப்பர்வைசர் பூமிநாதன், விற்பனையாளர் இளையான்குடி இரண்டான் குளம் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் (45) ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.
75 சதவீத தீக்காயங்களுடன் கடந்த 2 வாரங்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் அர்ஜூனன் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் இன்று காலை அர்ஜூனன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பள்ளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சில் டாஸ்மாக் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
- நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருக்க தொடங்கினர்.
- 21-ந்தேதி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி-பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா நேற்று முதல் கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
முன்னதாக காலை கணபதி பூஜையும் பின்னர் கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்பாளுக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் பால்குடம், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர். நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காப்புகட்டினர். மேலும் விழாவையொட்டி கோவில் முழுவதும் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்டிருந்து.
தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 21-ந்தேதி இரவு முத்தாலம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் கோவில் கரகம், முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
22-ந்தேதி காலை கோவில் பால்குடம், காவடி, பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.. 23-ந்தேதி இரவு அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சியும், 24-ந்தேதி மாலை சந்தன காப்பு அலங்காரத்தில் அம்பாள் காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி, கணக்கர் அழகுபாண்டி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.






