என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேவகோட்டை அருகே ரூ.35 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்- 2 பேர் கைது
- பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு ரூ.35 லட்சமாகும்.
- கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கட்டானியங்கல் கண்மாய் பகுதியில் டி.ஆலங்குடியை சேர்ந்த மணிகண்டன் (வயது48) என்பவருக்குச் சொந்தமான தோப்பு உள்ளது. இங்கு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை, காரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் அட்டைகளை கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக ராமநாதபுரம் ஒருங்கிணைந்த புலனாய்வு போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது 700 கிலோ கடல் அட்டைகளை சிலர் பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் ராமநாதபுரம் மாவட்டம் செக்கன்திடலைச் சேர்ந்த கார்த்திக்(24), சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலைச் சேர்ந்த பூமிநாதன்(53) ஆகியோரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு ரூ.35 லட்சமாகும். இதை சிவகங்கை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. கைதான இருவரிடம் விசாரணை நடத்தியதில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக கடல் அட்டைகளை தயார்படுத்தியது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






