என் மலர்
சிவகங்கை
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 29). இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் முத்துமணி (26) என்பவருக்கும் இடையே காரைக்குடி வாரச்சந்தையில் மீன் கடை வைப்பதில் தகராறு இருந்து வந்தது.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வாரச்சந்தை கூடுவது வழக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தையில் இவர்களுக்குள் மீண்டும் மீன் கடை வைப்பதில் தகராறு மூண்டது.
இந்த நிலையில் நேற்று இரவு திருச்செல்வமும், முத்துமணியும் வாரச்சந்தை பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த 2 பேரும் ஒருவருக்கொருவர் கத்தியால் மாறி மாறி குத்திக் கொண்டனர்.
இதில் படுகாயம் அடைந்த திருச்செல்வம் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். முத்துமணிக்கும் உடலில் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இன்று காலை அங்கு வந்த பொதுமக்கள் திருச்செல்வம் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அவர்கள் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் மற்றும் போலீசார் அங்கு சென்று திருச்செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முத்துமணியை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெற்குப்பை:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி ஊராட்சியை சேர்ந்த சேர்வைகாரன்பட்டி கிராமத்தில் 136 மக்கள் வசிக்கின்றனர்.
இந்த கிராமத்தில் வெளியூர் சென்றவர்கள் தவிர 92 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, சுகாதார துறையின் மூலம் மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சிங்கம்புணரி வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையிலான வருவாய்த் துறையினர், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் தலைமையிலான ஊரகத்துறை அலுவலர்கள், ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அதிகாரி நபிஷா பானு தலைமையிலான சுகாதாரத்துறை பணியாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் சுகாதார பணியில் முடுக்கி விடப்பட்டுள்ளனர்,
மேலும் அந்த கிராமத்தில் முகாமிட்டு கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஒவ்வொரு வீடாகச் சென்று அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் அந்த கிராமத்தில் தற்சமயம் வாழ்ந்து வரும் 92 பேர்களுக்கு நோய் தோற்று சம்பந்தமான மாதிரிகள் எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்களை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உதவிக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக சுகாதார பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும் சேர்வைகாரன் பட்டி கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, கிராம உதவியாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதைத்தொடர்ந்து இக்கிராமத்திற்கு அருகில் உள்ள பிரான்மலையில் தனியார் மருந்து கடைக்கு சென்று தனி நபர்களுக்கு காய்ச்சலுக்காக மருந்துகள் வழங்கக்கூடாது, காய்ச்சல் தேவைகளுக்காக மருந்து வாங்க வருபவர்கள் பற்றிய விபரங்கள் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் தற்போது கொரோனா 2-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்த கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கொரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்தடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தநிலையில் தற்போது கொரோனா 2-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இன்று (சனிக்கிழமை) முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி தமிழகம் முழுவதும் சட்ட மன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது தமிழகத்தில் உள்ள பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்டன. இதையடுத்து இந்த வாக்குச் சாவடி மையத்திற்கு வாக்கு செலுத்துவதற்காக ஏராளமாக பொதுமக்கள் வந்து சென்றனர்.
இதுதவிர மாலை 6 மணி முதல் 7 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு அவர்களும் வந்து வாக்களித்து சென்றனர். இதையடுத்து இந்த வாக்குச்சாவடியாக செயல்பட்ட பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி சார்பில் அதன் பணியாளர்கள் பள்ளிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.. காரைக்குடி ராமநாதன்செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது.
மேலும் வருகிற 3-ந்தேதி முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதையடுத்து பள்ளி முகப்பு பகுதி, வாக்குச்சாவடி மையம் செயல்பட்ட அறை, தலைமை ஆசிரியர் அறை, வரவேற்பு அறை மற்றும் பள்ளியை சுற்றிலும் கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பணிகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேரடியாக வந்து பார்வையிட்டனர்.






