என் மலர்
சிவகங்கை
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெற்கு சந்தனூரை அடுத்த நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45).
இவர் கோவை அருகே உள்ள சேரன்மாநகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இதனால் குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறார்.
மானாமதுரை அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் செல்ல அய்யப்பன் திட்டமிட்டார். அவருடன் உறவினர்கள் சிலரும் வருவதாக கூறினர்.
இதனை தொடர்ந்து அய்யப்பன், அவரது மனைவி தேவி (37), மகள்கள் கிரிஜா (18), ஆர்த்தி (17), மகன் திருமலை (16) மற்றும் உறவினர்கள் காரில் நேற்று இரவு கோவையில் இருந்து புறப்பட்டனர். காரை உறவினரான குமார் ஓட்டினார்.
இன்று காலை மானாமதுரை வந்த அவர்கள் வழிபாட்டுக்கு தேவையான பூ மற்றும் பூஜை பொருட்களை வாங்கினர். பின்னர் காரில் புறப்பட்ட அவர்கள் காலை 6.30 மணி அளவில் மானாமதுரை-தாயமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
மாங்குளம் விலக்கு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. வேகமாக சென்ற கார் அங்குள்ள தரைபாலத்தில் மோதி நின்றது.
கார் தாறுமாறாக ஓடிய போது அதில் பயணித்தவர்கள் கூச்சலிட்டனர். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
இந்த விபத்தில் காரில் வந்த பாண்டி, அய்யப்பன் மகள் ஆர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் கதறினர்.
பலத்த காயம் அடைந்த அய்யப்பன், அவரது மனைவி தேவி, மகள் கிரிஜா, மகன் திருமலை, மதியழகன், அவரது மகன் குமார் (27), திருஞானம் (24), வேல்முருகன் (20), கார்த்திகா (29) ஆகியோர் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோவிலுக்கு வந்த கார் விபத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் மானாமதுரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர்:
மேட்டூரை அடுத்த காவேரி கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் செல்ல வேலு (வயது34). லாரி டிரைவரான இவர் கடந்த 17-ந்தேதி கிழக்கு, மேற்கரை கால்வாய் கரை பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். மர்ம நபர்கள் செல்லவேலுவை கொலை செய்து கால்வாய் கரை பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்ல வேலு உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார்.
கொலை நடந்து 3 நாட்களாக கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் துப்பு துலங்காமல் இருந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொலையாளிகளை தேடினர். அப்போது இந்த கொலையில் செல்லவேலுவிடம் கிளீனராக இருந்த 17 வயது சிறுவன் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
செல்லவேலுவுக்கு அந்த பகுதியை சேர்ந்த 40 வயது பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அடிக்கடி அந்த பெண்ணை தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இது அந்த சிறுவனுக்கு தெரியவந்தது. செல்லவேலுவுக்கு தெரியாமல் சிறுவன் அந்த பெண்ணிடம் பழக ஆரம்பித்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணும் சிறுவனும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த வேளையில் அங்கு வந்த செல்லவேலு அவர்களை கையும் களவுமாக மடக்கி பிடித்தார். சிறுவனை கண்டித்த செல்லவேலு இதுபற்றி அவனது பெற்றோரிடம் சொல்லிவிடுவதாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்லவேலுவை கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் சிறுவனை கைது செய்தனர். அவனிடம் இருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த ஆண்டு கார்த்திகை திதி நேற்றுமுன்தினம் மாலை ஆரம்பமாகி நேற்று நண்பகல் முடிந்தது. இதையடுத்து 2,500 அடி உயர பிரான்மலையில் காத்திகை மகா தீபம் ஏற்றப் பட்டது. முன்னதாக மெகா திரி தயார் செய்யப்பட்டு மலை உச்சியில் உள்ள மெகா கொப்பரையில் சுமார் 100 லிட்டர் எண்ணெய் ஊற்றப்பட்டு வழிபாடு நடத்தி மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து பாலமுருகனுக்கும் மலை தீபம் ஏற்றப்பட்டது.
முன்னதாக நேற்று காலை பிரான்மலை அடிவாரத்தில் உள்ள அம்பாளுக்கும் வள்ளி தெய்வானையோடு உள்ள முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மலை தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பிரான்மலை மங்கை பாகர் தேனம்மை கோவிலில் லட்ச தீபம் ஏற்றப் பட்டது. தொடர்ந்து அன்னதான விழாவை சிங்கம் புணரி ஆன்மிக நண்பர்களுடன் இணைந்து பிரான்மலை கிராமத்தார்கள் வழங்கினர்.
கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்திருநாளில் பிரான் மலையை சுற்றி உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பிரான்மலை கார்த்திகை தீபம் பார்த்தவுடன் தான் விரத வழிபாட்டை நிறைவேற்றுவார்கள் என்பது சிறப்பு.
கார்த்திகை மாத பவுர்ணமி அருணாச்சலேசுவரருக்கு உகந்த நாளையொட்டி பிரான்மலை பகுதியில் கார்த்திகை கிரிவலம் நடைபெற்றது. ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதினம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
கோவை:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் அளித்தார்.
நான் கோவையில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. எனக்கு எனது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நான் அவரை 6 மாதத்தில் பிரிந்து எனது பெற்றோர் வீட்டில் இருந்தபடி கல்லூரிக்கு சென்று வந்தேன். கருத்துவேறுபாடு காரணமாக எனது கணவரை பிரிந்ததால் என்னால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக 2-ம் ஆண்டுக்கான திறன் மதிப்பீட்டு அறிக்கையை என்னால் சமர்ப்பிக்க முடியவில்லை.
இதனையடுத்து எங்களது துறை தலைவர் பேராசிரியர் விளாங்குறிச்சி மதி நகரை சேர்ந்த ரகுநாதன் (வயது 42) என்பவர் அவரது அறைக்கு வருமாறு அழைத்தார். நான் அறைக்கு சென்ற போது எதற்காக அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என கேட்டார். அதற்கு நான் என்னுடைய குடும்ப சூழ்நிலையை எடுத்து கூறினேன். அதற்கு ஆறுதலாக பேசிய அவர் திடீரென என்மேல் கையை வைத்து தகாத முறையில் நடந்து கொண்டார். அதிர்ச்சியடைந்த நான் கையை தட்டி விட்டு வெளியே வந்து விட்டேன்.
பின்னர் அவர் எனக்கு உதவி செய்வது போல அறிக்கையை நான் சமர்ப்பிப்பதற்காக நோட்ஸ் கொடுப்பது போல காரில் எனது ஊருக்கு வந்தார். அங்குள்ள சந்தை அருகே நான் நின்று கொண்டு இருந்தேன்.
அப்போது அவர் இங்கு கூட்டம் அதிகமாக உள்ளது காரை நிறுத்த முடியாது எனவே காருக்குள் ஏறு என கூறினார். நான் ஏற மறுத்ததால் கையை பிடித்து இழுந்து காருக்குள் ஏற்றினார். பின்னர் காரில் வைத்து ஆறுதலாக வார்த்தைகள் பேசி என்னிடம் தவறாக நடக்க முயன்றார். மேலும் அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், அவரது மனைவியை விவாகரத்து செய்து விடுவதாகவும் கூறினார். நான் மறுத்து சத்தம் போட்டு விடுவதாக கூறினேன்.
இதனையடுத்து அவர் நடந்த சம்பவங்களை வெளியே சென்னால் கொலை செய்வதாக மிரட்டி விட்டு சூலூரில் என்னை இறக்கி விட்டு சென்றார்.அதன் பின்னர் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மூடப்பட்டதால் நான் நடந்த சம்பவங்களை வெளியே செல்ல முடியாமல் இருந்தேன். மீண்டும் நான் கல்லூரி சென்றதும் இது குறித்து எனது தோழிகளிடம் கூறினேன். அவர்களுக்கும் துறை பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர். எனவே பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
மாணவி அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் ரகுநாதன் மீது கடத்தல், மானபங்கம்படுத்துதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது கட்டிக்குளம் கண்மாய். இந்த கண்மாய் மூலம் கொம்புக் காரனேந்தல், மேட்டுமடை, பெரும்பச்சேரி, கட்டிகுளம் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறுகின்றன.
கட்டிகுளத்தில் கண்மாய், கால்வாய் ஆகியவை சரிவர தூர் வாராததால் கண்மாய்க்கு வரும் மழை தண்ணீர் வெளியேறி பெரும்பச்சேரி கிராமத்தில் பயிரிடப்பட்ட நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சூழ்ந்ததால் நீரில் மூழ்கின. மேலும் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளே சிக்கின. அவற்றை விவசாயிகள் மீட்டனர்.
வைகையில் திறக்கப்பட்ட தண்ணீர், மழை நீரால் மானா மதுரை பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. கண்மாய் நிரம்பும் அளவிற்கு கண்மாய் பல இடங்களில் தூர் வாராமல் பல இடங்களில் தண்ணீர் வெளியேறி வயல்வெளிக்குள் சென்று வருகிறது.
மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தில் கட்டிகுளம் கண்மாய்க்கு வரும் தண்ணீர் வெளியேறி பெரும்பச்சேரி கிராமத்தில் பயிரிடப்பட்டு இருந்த நெல், கரும்பு ஆகியவை நீரில் மூழ்கி உள்ளன. இதனால் பல லட்சம் ரூபாய் வீணாகி உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.






