என் மலர்
சிவகங்கை
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கருதாவூரணி கிழக்கு சாலையை சேர்ந்தவர் அழகப்பன் செட்டியார் (வயது 73), தொழிலதிபர். இவருக்கு சென்னை மற்றும் கோவையில் தொழில் நிறுவனங்கள், வீடுகள் உள்ளன. இதனால் பெரும்பாலும் அங்குள்ள வீடுகளிலேயே அழகப்பன் செட்டியார் குடும்பத்தினருடன் தங்குவது வழக்கம்.
எனவே கருதாவூரணி வீடு பூட்டப்பட்டு இருந்தது. இங்கு இரவு காவலாளியாக முத்துப்பட்டினம் அருகே உள்ள வலனை கிராமத்தை சேர்ந்த வட்டப்பன் (65) பணி செய்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழகப்பன் செட்டியார் தனது மனைவி ராசுவுடன் கருதாவூரணி வந்தார்.அவர் நேற்று இரவு வீட்டில் மனைவியுடன் இருந்தார்.காவலாளி வட்டப்பன் வீட்டின் வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இரவு 10 மணிக்கு அவர் கேட்டை அடைத்து விட்டு படுத்தார். இந்த நிலையில் சுமார் 11.30 மணியளவில் திடீரென வெளியில் இருந்து வீட்டு காம்பவுண்டுக்குள் பாட்டில் குண்டுகள் வீசப்பட்டன. அந்த பாட்டில் குண்டுகள் வட்டப்பனின் படுக்கை மீது விழுந்ததில், படுக்கை எரிந்து நாசமானது.
மேலும் வட்டப்பனும் பலத்த காயம் அடைந்தார். பாட்டில் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது. அதன் பிறகு தீக்காயமடைந்த வட்டப்பனை சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 50 சதவீத தீக்காயத்துடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சிவக்குமார், பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்- இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். நொறுங்கிக்கிடந்த பாட்டில் சிதறல்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். மர்ம மனிதர்கள் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதில் தீ வைத்து வீசியிருக்கலாம் என தெரிகிறது.
பாட்டில் குண்டு வீசப்பட்டது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
நேற்று இரவு காவலாளி வட்டப்பன் பணியில் இருந்த போது வீட்டின் அருகே சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க 4 பேர் மது அருந்தி உள்ளனர். இதனை கண்ட அவர் 4 பேரையும் கண்டித்துள்ளார். மேலும் இங்கு மது அருந்தக்கூடாது என விரட்டியடித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் 4 இளைஞர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்த முன் விரோதத்தில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் அவர்கள் பாட்டில் குண்டுகளை வீசி சென்றார்களா? அல்லது தொழிலதிபரை தாக்கும் நோக்கத்தில் யாராவது இதனை செய்துள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் சம்பவம் நடந்த வீட்டின் அருகே இருந்த 2 கடைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனையும் மர்ம கும்பல் தான் செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய குழந்தைகள். நாளைய இந்தியாவின் தூண்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்தி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. வீட்டில் குழந்தைகள் இருப்பதை காட்டிலும் பள்ளிக்கூடங்களில் தான் அதிக நேரம் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் தான் குழந்தைகளின் வளர்ப்பு பெற்றோராக அவர்களை கண்காணித்து வருகிறார்கள்.
கல்வி கற்பதோடு, நல்ல ஒழுக்கத்தையும் ஆசிரியர்கள் கற்பித்து கொடுக்கிறார்கள். நல்ல சமூகம் அமைவதற்கு ஆசிரியர்களின் பங்கு அபரிமிதமானது. அதற்கு மானாமதுரை அருகே நடந்த இந்த நிகழ்வு, ஒரு எடுத்துக்காட்டாகி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பர்மா காலனியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று வழக்கம் போல 1-ம் வகுப்பு மாணவி தீபா வந்திருந்தாள். வகுப்பறைக்கு சென்றபோது அங்கு 50 ரூபாய் நோட்டு கீழே கிடந்துள்ளது. அதை பார்த்த சிறுமி, எடுத்து வைத்துகொண்டு, பின்னர் ஆசிரியை ராமலட்சுமி வகுப்பறைக்கு வந்தவுடன், அந்த 50 ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தாள். அப்போதுதான் ஆசிரியைக்கு, அதற்கு முந்தைய நாள் தன் 50 ரூபாயை தவறவிட்டது பற்றி ஞாபகம் வந்தது.
உடனே சிறுமி தீபா பிரபாவின் நேர்மையை பாராட்டி ஆசிரியை கைகுலுக்கினார். மற்ற மாணவ-மாணவிகளையும் கைதட்ட சொல்லி அவளை ஊக்கப்படுத்தினார். அதன்பிறகு மாணவியை தலைமை ஆசிரியர் ஞானசேகரிடம் அழைத்துச் சென்று, மாணவியின் செயலை கூறி உள்ளார்.
இதனால் வியந்த தலைமை ஆசிரியர் ஞானசேகர், மாணவியை கவுரவிக்க முடிவு செய்தார். 6 வயது சிறுமியின் நேர்மை மற்ற மாணவ-மாணவிகளுக்கும் ஒரு ஊக்கமாக இருக்க வேண்டும் என நினைத்தார். உடனே சிறுமி தீபா பிரபாவை தலைமை ஆசிரியர் தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார். ஒருநாள் முழுவதும் தலைமை ஆசிரியராக இருக்கும்படி அந்த மாணவியிடம் எடுத்துக்கூறி கவுரவப்படுத்தினார். நேற்று பணி நேரம் முடியும் வரை சிறுமி, தலைமை ஆசிரியர் இருக்கையை அலங்கரித்தது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக பணியாளர் மகாலட்சுமி பங்கேற்று பேசுகையில், குழந்தைகளுக்கு அன்றாடம் கல்வி கூடங்கள் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் ஏற்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் மற்றும் சிறுவர்களை தொழில் செய்யும் இடங்களில் அமர்த்துதல், மனரீதியாக சிறார்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் குறித்தும், அதனை தடுக்கும் விதமாக கையாளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசினார்.
பேரூராட்சி செயல்அலுவலர் ராதாகிருஷ்ணன், எழுத்தர் ரேணுகாதேவி, குழந்தைகள் பாதுகாப்பு உதவி அலுவலர் ஜூலி மற்றும் பணியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
புத்தகம் வாசிப்பு என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமானதாகும். பொதுமக்களின் எண்ணம் மற்றும் சிந்தனைகளை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குவதற்கும் அடிப்படையாக அமைகிறது.
தற்சமயம் சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியிடும் செய்திகளை மட்டுமே வைத்து பொதுமக்கள் தங்களின் பொது அறிவுத்திறனை வளர்த்து வருகிறார்கள். புத்தக வாசிப்புத்திறனை அதிகப்படுத்திடும் போது அறிவுத்திறனை மேம்படுத்த முடியும்.
புத்தகவாசிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிவகங்கை நகர்ப்பகுதியில் முதன் முறையாக பெரிய அளவில் புத்தகத் திருவிழாவினை பபாசி அமைப்புடன் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புத்தகதிருவிழா வருகிற 15ந்தேதி முதல் 25ந்தேதி வரை 11 நாட்கள் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த புத்தகத்திருவிழா புத்தக பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் ஆகியோர்களைக் கொண்டு நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவில் 110அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. அதில், 100 அரங்குகள் புத்தகக் கண்காட்சிகளுக்கும், 10அரங்குகள் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு அறிந்து கொள்ளும் வகையிலும் அமைக்கப்படவுள்ளது.
மேலும், 600 பேர் அமரும் வகையில் மிகப்பெரிய அரங்கு அமைக்கப்பட்டு, அதில் தினந்தோறும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவ, மாணவிகளிடையே இலக்கியம் சார்ந்த பல்வேறு போட்டிகள் மற்றும் 1 மணிநேரம் கூட்டாக புத்தக வாசிப்பு நிகழ்ச்சியும், சிறுவர்களுக்கான குறும்படங்களை அனைத்து மொழிகளிலும் திரையிடுவதற்கென சிறிய திரையரங்கும் மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பேச்சாளர்கள், பட்டிமன்றங்கள், நாட்டுப்புற கலைஞர்களைக் கொண்ட கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பாரம்பரிய உணவுப் பொருட்களை கொண்ட உணவகங்களும் அமைக்கப்பட உள்ளது.
புத்தகத்திருவிழாவினை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரி களைச் சார்ந்த மாணவ, மாணவிகள் தினந்தோறும் வருகை புரிந்து பார்த்து பயன்பெறும் வகையில், தனித்தனியாக நேரம் ஒதுக்கீடு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஊராட்சிகளிலும் மக்கள் வருகை புரிவதற்கும், சம்பந்தப் பட்ட ஊராட்சி மன்றத்தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிதில் புத்தகத் திருவிழாவிற்கு வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுத்தப்பட்டு, குடிநீர் வசதி, கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட உள்ளது.
பொதுமக்களுக்கு வாசிப்புத்திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இப்புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பயன்படுத்திக் கொண்டு தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டரின்நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், செய்திமக்கள்தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி ஆகியோர் உடனிருந்தனர்.
தேவகோட்டை நாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன். கட்டிட தொழிலாளியான இவர் நேற்று இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு, தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு மனைவி மற்றும் மகளுடன் சென்று விட்டார்.
இந்தநிலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் அவரது வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அது பற்றி பூமிநாதனுக்கு செல் போனில் தகவல் தெரிவித்தனர்.
மேலும் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பூமிநாதன் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்தார்.
வீட்டில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்ததும், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ, மரச்சாமான்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25½ பவுன் தங்க நகைகளை காணவில்லை.
இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் வாசிவன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பூமிநாதன் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
பூமிநாதன் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பவம் குறித்து தடயங்கள் எதுவும் போலீசுக்கு கிடைத்து விடாமல் இருப்பதற்காக வீட்டிற்கு தீ வைத்துள்ளனர்.
இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டதாக கூறப்படுகிறது.
பூமிநாதனின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்கள், அவரது பக்கத்து வீடான நாச்சியப்பன் என்பவரது வீட்டிலும் புகுந்துள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு நகை, பணம் எதுவும் கிடைக்காததால் அப்படியே சென்று விட்டனர்.
பூட்டியிருந்த வீட்டில் புகுந்து நகைகளை திருடியது மட்டுமின்றி, வீட்டிற்கும் மர்மநபர்கள் தீ வைத்து விட்டு சென்ற சம்பவம் தேவகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேவகோட்டை பகுதியை பொருத்தவரை அங்குள்ள போலீஸ் நிலையத்தில் போதுமான அளவிற்கு போலீசார் இல்லை எனவும், இதனால் ரோந்து, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் போலீசார் முழு வீச்சில் ஈடுபடமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தேவகோட்டை பகுதியில் சமீப காலமாக திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தேவகோட்டையில் போதுமான அளவில் போலீசார் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






