என் மலர்tooltip icon

    சேலம்

    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
    • நேற்று 103.54 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 103.53 அடியாக சரிந்தது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 1,222 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை சற்று குறைந்து வினாடிக்கு 1,212 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 103.54 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 103.53 அடியாக சரிந்தது.

    • மது பாட்டில்கள் எடுக்க ஊழியர்கள் அங்குள்ள அறைக்குள் சென்றனர். அப்போது அங்கு சாரை பாம்பு ஒன்று இருந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் மதுபான கடைக்கு சென்று சுமார் 3 மணி நேரம் போராடி சாரை பாம்பை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ளது போட்டுகாடு கிராமம். இங்கு தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மது பிரியர்கள் அதிகமானோர் இங்கு மது வாங்கி செல்வார்கள்.

    நேற்று மதியம் 12 மணிக்கு கடை திறந்து வியாபாரம் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மது பாட்டில்கள் எடுக்க ஊழியர்கள் அங்குள்ள அறைக்குள் சென்றனர். அப்போது அங்கு சாரை பாம்பு ஒன்று இருந்தது.

    இதை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் மதுபாட்டில்களை எடுப்பதை நிறுத்திவிட்டு கடையில் இருந்து கூச்சல் போட்டபடி வெளியே ஓடி வந்து விட்டனர்.

    இதனால் குடிமகன்களுக்கு மது விற்பது நிறுத்தப்பட்டது. இதில் 3 மணி நேரம் மது பிரியர்கள் டாஸ்மாக் கடை முன்பு காத்திருந்தனர்.

    இதனை அறிந்த ஏற்காடு தீயணைப்பு வீரர்கள் மதுபான கடைக்கு சென்று சுமார் 3 மணி நேரம் போராடி சாரை பாம்பை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

    இதன் பிறகே ஊழியர்கள் கடைக்குள் சென்று பணியில் ஈடுபட்டனர். பின்னர் மது பிரியர்கள் வரிசையாக நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.

    • கருணாகரன் புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் அங்கு சென்று கருணாகரனை கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் தெருவில் வசித்து வருபவர் ரகுமான் (வயது 50). இவர் செவ்வாய்ப்பேட்டை பழைய மார்க்கெட் பகுதியில் சமையல் எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையில் 16 ஆண்டுகளாக கருணாகரன் (45) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் ரகுமான் வரவு-செலவு கணக்குகளை சரிபார்த்த போது கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை கடையிலிருந்து 1 கோடி ரூபாய்க்கும் மேல் கருணாகரன் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கேட்டபோது கருணாகரன் ரகுமானை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரகுமான் சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கருணாகரன் மோசடி செய்த பணத்தை தனது மனைவி பவித்ராவின் வங்கி கணக்கில் செலுத்தியது தெரியவந்தது. இதனால் கணவன், மனைவி இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கருணாகரன் புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று கருணாகரனை கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • கடந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால், தேங்காய் அமோக விளைச்சலை தந்துள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் பொள்ளாச்சி, சேலம், உடுமலைப்பேட்டை, பெருந்துறை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளாவிலும் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் தேங்காய் இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையால் அனைத்து பகுதிகளிலும் தென்னை மரங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் தேங்காய் விலை சரிய தொடங்கி உள்ளது. குறிப்பாக சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ தேங்காய் ரூ.32 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து சேலம் தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 டன் தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இதனை சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். கடந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால், தேங்காய் அமோக விளைச்சலை தந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து கூடியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு டன் தேங்காய் ரூ.30 ஆயிரத்திற்கு விற்றது. தற்போது டன்னுக்கு ரூ.4 ஆயிரம் சரிந்து ரூ.26 ஆயிரம் என விற்பனை செய்யப்படுகிறது. சில்லரையில் சிறிய அளவுள்ள தேங்காய் ரூ.8 என்றும், நடுத்தர அளவு ரூ.10 முதல் ரூ.15 என்றும், பெரிய தேங்காய் ரூ.18 முதல் ரூ.20 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் தேங்காய் வரத்து அதிகரிக்கும். அப்போது மேலும் விலை சரிய வாய்ப்புள்ளது என்றனர்.

    • தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ், டிஜி லாக்கர் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
    • இரண்டாம் தாளில் 12.76 லட்சம் பேர் பங்கேற்றதில் 3.76 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

    சேலம்:

    மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) இணைப்பில் உள்ள பள்ளிகள் மற்றும் இந்திய அரசாங்கம் சார்பில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிடெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

    அதன்படி நடப்பாண்டுக்கான தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 7-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதில் சென்னை, கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளநிலை ஆசிரியர் பட்டதாரிகள், முதுநிலை ஆசிரியர் பட்டதாரிகள் ஏராளமானோர் பங்கேற்று ஆர்வத்துடன் எழுதினர்.

    இதன் முடிவுகள் மத்திய கல்வி அமைச்சகத்தின் https://ctet.nic.in/ என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ், டிஜி லாக்கர் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

    அதில் இருந்து தேர்வர்கள் தங்கள் செல்போன் எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம். தேர்வில் 14.22 லட்சம் பேர் முதல் தாளில் பங்கேற்றனர். அவர்களில் 5.80 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இரண்டாம் தாளில் 12.76 லட்சம் பேர் பங்கேற்றதில் 3.76 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

    • சேலம் பள்ளப்பட்டி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ விநாயகர்- மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • இந்த நிலையில் பணம் கேட்டு மிரட்டி வரும் திமுகவினர் மீது நடவடிக்கை கோரி முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் மாரியப்பன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ விநாயகர்- மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படை யில் இந்த ஆண்டு வருகின்ற 8-ம் தேதி முதல் 12 -ம் தேதி வரை திருவிழா நடத்த கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கோவிலுக்கு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் திருவிழாவின் போது அப்பகுதியில் உள்ள மக்கள் தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். தற்போது திருவிழா நடைபெறுவதை யொட்டி அங்கு தற்காலிகடை அமைப்பதற்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை ெபாதுமக்களிடம் தி.மு.க.வினர் சிலர் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பொதுமக்களுக்கும் தி.மு.கவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனை அறிந்து அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் தற்காலிக கடை அமைக்க பணம் கேட்ட திமுக பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்பொழுது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது.

    இதையடுத்து தகவல் அறிந்து வந்த பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார், பிரச்சினை நடைபெறாமல் இருக்க பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது ஆண்டாண்டு காலமாக திருவிழாவின் போது தற்காலிக கடை அமைக்க பணம் ஏதும் கொடுக்காமல் தொழில் செய்து வந்தோம். தற்போது திமுகவிவை சேர்ந்த சிலர் தற்காலிக கடை அமைப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். மிரட்டி வருகின்றனர். இல்லை என்றால் கடை நடத்த முடியாது என மிரட்டுவதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பணம் கேட்டு மிரட்டி வரும் திமுகவினர் மீது நடவடிக்கை கோரி முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் மாரியப்பன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தியா நேரு யுவ கேந்திரா சங்கதன் அமைப்பும் இணைந்து இளையோர் கலந்துரையாடல் - 2047 எனும் நிகழ்ச்சியை சமூக அடிப்படை மேம்பாட்டு நிறுவனங்கள் மூலமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடத்த உள்ளது.
    • இந்த நிகழ்வை பொறுப்பேற்று நடத்த விரும்பும் சமூக அடிப்படை நிறுவனங்கள் நேரு யுவ கேந்திராவை அனுகி இதற்கான விண்ணப்பங்க ளைப் பெற்று விண்ணப்பிக்க லாம்.

    சேலம்:

    மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகமும், அதன் தன்னாட்சி நிறுவனமாகிய இந்தியா நேரு யுவ கேந்திரா சங்கதன் அமைப்பும் இணைந்து இளையோர் கலந்துரையாடல் - 2047 எனும் நிகழ்ச்சியை சமூக அடிப்படை மேம்பாட்டு நிறுவனங்கள் மூலமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடத்த உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில், மிகச் சிறந்த சமூக மேம்பாட்டு வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள் தலைமை யிலான இளையோர் கலந்துரையாடல், 5 உறுதிமொழிகள் குறித்த நேர்மறை விவாதம் நடை பெறும். இதில் குறைந்த பட்சம் 500 இளையோர் (இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள்) பங்கேற்பர்.

    இதன் நிறைவில் எதிர்கால இந்தியாவிற்கான திட்டங்கள் உருவாக ஆணை செய்வார்கள். இந்நிகழ்ச்சியை சிறப்பாக திட்டமிட்டு அமைப்ப தற்கான செலவு தொகை யாக ரூ.20 ஆயிரம் பொறுப்பேற்று நடத்தும் சமூக அடிப்படை நிறுவ னத்திற்கு நிகழ்ச்சி முடிந்தபின் தரப்படும்.

    இந்த நிகழ்வை பொறுப்பேற்று நடத்த விரும்பும் சமூக அடிப்படை நிறுவனங்கள் நேரு யுவ கேந்திராவை அனுகி இதற்கான விண்ணப்பங்க ளைப் பெற்று விண்ணப்பிக்க லாம். விண்ணப்பிப்போர் எவ்வித அரசியல், கட்சி சார்பற்றவர்களாகவும், எந்த வித களங்கமும், இல்லாத முன்வரலாறு கொண்டவர்களாகவும் இருப்பதோடு நிறுவனங்கள் மீது எவ்வித குற்ற வழக்கும் இருக்கக் கூடாது.

    மேலும் இளையோர் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தி முடிக்க போதிய நிறுவன அமைப்பு பலம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நேரு யுவகேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் டர்வின் சார்லஸ்டன் தெரிவித்து உள்ளார்.

    • ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07356) ஆகிய ரெயில்கள் தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக வாரந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.
    • இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்- 07355) மற்றும் ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07356) ஆகிய ரெயில்கள் தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக வாரந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மார்ச் மாதம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரெயில் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி ஹூப்ளி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் (வண்டி எண்-07355) சேவை காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 24-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் ஹூப்ளி ரெயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு ஓசூர், தர்மபுரி, வழியாக இரவு 7.50 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் ராமேஸ்வரம்-ஹூப்ளி வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07356) அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதி முதல் ஜூன் மாதம் 25-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை களில் காலை 6.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல் வழியாக மறுநாள்(திங்கட்கிழமை) காலை 5.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 5.50 மணிக்கு புறப்பட்டு தர்மபுரி, ஓசூர் வழியாக இரவு 7.25 மணிக்கு ஹூப்ளி சென்றடையும், இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வரகம்பாடி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (59) என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 55). இவர் மின் மோட்டார்களை சரி செய்யும் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    இவர் இன்று காலை வரகம்பாடி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (59) என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் அருகே உள்ள ஜாரிகொண்டலாம்பட்டியில் ரூ.2 கோடி கடன் தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்தனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கணேஷ் மூர்த்தி மற்றும் பாலசுப்பிரமணி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1.85 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள ஜாரிகொண்டலாம்பட்டி ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 63). இவர் தனது தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக முயற்சி மேற்கொண்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அதில் பேசிய திருப்பூர் மாவட்டம் அவிநாசி செந்தில் நகர் பகுதியை சேர்ந்த கணேஷ் மூர்த்தி( 51),கோவை சரவணம்பட்டி சக்தி ரோடு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (52) ஆகியோர் குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறினார்.

    பின்னர் பாலகிருஷ்ணனின் வீட்டிற்கு நேரில் வந்து அவருக்கு தேவையான ரூ.2 கோடி கடன் தொகையை குறைந்த வட்டியில் வாங்கி தருவதாக கூறி அதற்கு கமிஷனாக முன்பணம் ரூ.2 லட்சத்தை வாங்கிக் கொண்டு சென்றனர்.

    அதன் பிறகு அவர்கள் தங்களது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கணேஷ் மூர்த்தி மற்றும் பாலசுப்பிரமணி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1.85 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் கூடிய பழைய அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது.
    • 3-வது யூனிட்டில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது

    மேட்டூர்:

    மேட்டூரில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் கூடிய பழைய அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இதில் 3-வது யூனிட்டில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது இதன் காரணமாக இந்த 3-வது யூனிட்டில் மின்உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டு பழுது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய மின் நிலையத்தில் தற்போது 630 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    • சேலம் தெய்வீக தமிழ்சங்கம் அறக்கட்டளை சார்பாக 1 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட உள்ளது.
    • தொடக்க விழாசேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் அருகே உள்ள ஹோட்டல் சாய் விஹாரில் இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உற்பத்தியாகி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே காவிரியில் கலக்கும் புனித நதியான திருமணி முத்தாற்றை பாதுகாக்க வேண்டி அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், சேலம் தெய்வீக தமிழ்சங்கம் அறக்கட்டளை சார்பாக 1 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழாசேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் அருகே உள்ள ஹோட்டல் சாய் விஹாரில் இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முருகேச பூபதி, முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மோகன், ராசி கே.சரவணன், தியாகராஜன், என்.ஸ்ரீதர், ஆறுமுக உடையார், முருகன், ஜெய்சந்த் லோடா, ஓ டெக்ஸ் இளங்கோவன், டாக்டர் பி.எஸ்.பன்னீர்செல்வம், கவிஞர் பொன்னுரங்கன், பா.மா.ஆறுமுகம், ஸ்ரீஇராமன், லக்ஷ்மன் குமார் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் செம்முனி, டாக்டர் சந்திரசேகர், தெய்வீக தமிழ்சங்க தலைவர் ராமன், பொருளாளர் ஸ்ரீதர், டாக்டர் கே.குமாரசாமி ஆகியோர் செய்துள்ளனர்.

    ×