என் மலர்tooltip icon

    சேலம்

    • வீட்டின் அருகே சென்றபோது, திடீரென அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேசை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினர்.
    • சேலம் மாநகர் முழுவதுமாக தீவிரமாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர் சிவதாபுரத்தில் வெள்ளி நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு சுரேஷ், அவரது மனைவி விசாலாட்சியும், வியாபாரத்தை முடித்துக் கொண்டு ரூ.6 லட்சம் ரொக்கம் மற்றும் 8 கிலோ வெள்ளியை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில், காட்டூரில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். வீட்டின் அருகே சென்றபோது, திடீரென அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேசை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினர்.

    மேலும் சுரேஷ் மற்றும் விசாலாட்சியை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டனர். கீழே விழுந்ததில் சுரேஷ் படுகாயம் அடைந்தார்.

    பின்னர் சுரேஷின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மர்ம கும்பல் ரூ.6 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளியை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சுரேஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொண்டலாம்பட்டி போலீசார் மற்றும் மாநகர தெற்கு துணை கமிஷனர் லாவண்யா ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற துணை கமிஷனர் லாவண்யா சுரேஷிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து நேற்று இரவு சேலம் மாநகர் முழுவதுமாக தீவிரமாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவில் 4 கொள்ளை கும்பல் உருவம் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    • பருவம் தவறிய மழையால் தக்காளி செடிகளில் பூக்கள் உதிர்தல், அழுகல் உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
    • கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் உள்ளன. இதைத்தவிர மாவட்டத்தில் தினசரி காய்கறி சந்தைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பருவம் தவறிய மழையால் தக்காளி செடிகளில் பூக்கள் உதிர்தல், அழுகல் உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்து ஒரு கிலோ தக்காளி விலை ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் மேச்சேரி தக்காளி பிரசித்தி பெற்றதாகும். இந்த தக்காளி செடிகள் மேச்சேரி, காடையாம்பட்டி ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

    இந்த நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் தக்காளி பயிர் அழுகி விட்டது. தற்போது விவசாயிகள் புதிதாக தக்காளி செடி பயிரிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து கடந்த வாரம் 10 முதல் 15 லோடு தக்காளி வந்த நிலையில் தற்போது 5 லோடு வரை மட்டுமே வரத்து உள்ளது, என்றனர்.

    • காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
    • நேற்று 89.51 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 88.58 அடியாக சரிந்துள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 800 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலையும் அதே அளவில் நீடிக்கிறது.

    அதேசமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 121 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 117 கன அடியாக குறைந்துள்ளது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    நீர் வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 89.51 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 88.58 அடியாக சரிந்துள்ளது.

    • அ.தி.மு.க. தொடங்கிய திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கது என்றார்.
    • வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பல்வேறு ஊராட்சிகளில் அ.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அ.தி.மு.க. கொடியேற்றினார்.

    இதையடுத்து நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    மேட்டூர் அணையை அ.தி.மு.க. அரசுதான் தூர்வாரி விவசாயிகளுக்கு வண்டல் மண் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தது.

    அ.தி.மு.க. தொடங்கிய திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கதது. தி.மு.க. அரசு பல பேருக்கு முதியோர் உதவித்தொகையை நிறுத்திவிட்டது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் விடுபட்ட அனைத்து முதியோர்களுக்கும் உதவித்தொகை கிடைக்கவும், தமிழகம் முழுவதும் ஏழை முதியோர்களை கண்டறிந்து உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதற்கு முன்பு 3 அமைச்சர்கள் குறித்து குற்றச்சாட்டு எழுந்தபோது பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால் செந்தில் பாலாஜியை ஏன் பதவியில் இருந்து விடுவிப்பதற்கு முதலமைச்சர் தயக்கம் காட்டுகிறார். ஏனென்றால் அவர் வாயை திறந்தால் ஊழல் குற்றச்சாட்டு வெளிவந்துவிடும். ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால் கைதியாக அறிவிக்கப்பட்டவரை காப்பாற்ற நினைக்கிறார்.

    தற்போது ரேஷன் கடையிலும் முறைகேடுகள் நடக்கிறது. ஊழலுக்கு சம்மட்டி அடி கொடுக்க வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.

    • சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு செல்லும் நான்கு வழிச்சாலையில் காட்டுக்கோட்டை உள்ளது.
    • இங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டதில் இருந்து பெரும்பாலான பஸ்கள் மேம்பாலம் வழியாக சென்று விடுகின்றன.

    சேலம்:

    சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு செல்லும் நான்கு வழிச்சாலையில் காட்டுக்கோட்டை உள்ளது. இங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டதில் இருந்து பெரும்பாலான பஸ்கள் மேம்பாலம் வழியாக சென்று விடுகின்றன. புறவழிச்சாலையில் எந்த பஸ்களும் நின்று செல்வது இல்லை. எனவே காட்டுக்கோட்டையில் அனைத்து பஸ்களும் நின்று செல்லக்கோரி நேற்று பொதுமக்கள் புறவழிச்சாலை நுழைவு வாயிலில் உண்ணாவிரதம் இருந்தனர். தகவல் அறிந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள், போலீசார் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஸ்கள் நின்று செல்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

    • கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 4 அடி அகலத்தில் 150 அடி நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
    • இந்த தடுப்பணை கடந்த சில மாதங்களாக கட்டப் பட்டு வந்தாலும், தரம் இல்லாமல் கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 4 அடி அகலத்தில் 150 அடி நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணை கடந்த சில மாதங்களாக கட்டப் பட்டு வந்தாலும், தரம் இல்லாமல் கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக ஒப்பந்ததாரரிடம் முறையிட்ட மக்கள், தடுப்பணையை தரமானதாக கட்டும்படி வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பணை கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்த கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது தடுப்பணையை தரமான தாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத் தினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    அதன்பிறகு பொது மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஷீரடி சாய்பாபா கோவிலில், அனைத்து சமூக மக்கள் சகோதரத்துவ நட்புறவு மேம்பாட்டிற்காக சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
    • இந்த சிறப்பு பூஜை வழிபாட்டில், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடியில் மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், அனைத்து சமூக மக்கள் சகோதரத்துவ நட்புறவு மேம்பாட்டிற்காக சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    வாழப்பாடி ஊர் கவுண்டர் மூர்த்தி, கரக்காரர் ஞானசூரியன், பேரூராட்சி துணைத் தலைவர் எம்.ஜி.ஆர். பழனிசாமி, சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகி ஜவஹர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜை வழிபாட்டில், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    மலர்மாலை அலங்காரத்தில் ஷீரடி சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து பக்தர் களுக்கும், அ.வாழப்பாடி கரக்காரர் குடும்பத்தினரால் அன்னதானம் வழங்கப்

    பட்டது. சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி மாதேஸ்வரி ஜவஹர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    • மன்னாயக்கன்பட்டி கிராமங்களில் கோயில் தேர்த்திருவிழா நடத்துவதில் முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது.
    • வாழப்பாடியில் இருந்து சுவாமி சிலைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று, மன்னாயக்கன் பட்டி மாரியம்மன் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை வழிபாடுகளும், தேரோட்டமும் நடத்துவது மரபாக தொடர்ந்து வருகிறது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி – மன்னாயக் கன்பட்டி கிராமங்களில் கோயில் தேர்த்திருவிழா நடத்துவதில் முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது. வாழப்பாடியில் திரவுபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற பிறகு, வாழப்பாடியில் இருந்து சுவாமி சிலைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று, மன்னாயக்கன் பட்டி மாரியம்மன் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை வழிபாடுகளும், தேரோட்டமும் நடத்துவது மரபாக தொடர்ந்து வருகிறது.

    வாழப்பாடி திரவுபதியம்மன் கோயில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த மே மாத இறுதியில் நடைபெற்றது. இதனையடுத்து, மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் சக்தி மாரியம்மன் தேர்த்திருவிழா நடத்திட முடிவு செய்தனர்.

    கடந்த 28-ந்தேதி சக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யாணமும், அம்மன் திருத்தேர் ரதமேறுதல் மற்றும் பக்தர்கள் அலகுகுத்தி, கரகமெடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நேற்றும் நேற்று முன்தினமும், ராஜவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.

    மன்னாயக்கன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் நகர்மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மேட்டூர் காவிரி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு சின்டெக்ஸ் டேங்க் அமைப் பது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ேமட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் நகர்மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் காசி விஸ்வநாதர், ஆணையாளர் (பொறுப்பு) சுகவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேட்டூர் காவிரி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு சின்டெக்ஸ் டேங்க் அமைப் பது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டம் தொடங்கிய வுடன், அ.தி.மு.க.வை சேர்ந்த நகர்மன்ற உறுப்பி னர்கள் கிருஷ்ணன், லாவண்யா, கலா, செல்வ ராணி உட்பட 5 பேரும் மேட்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொத்து வரி வசூலிப்பு நடவடிக்கை யில் வரி மேல்முறையீட்டுக் குழுவினரின் நடவடிக் கையால் நகராட்சிக்கு வரு வாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.

    • சேலம் தலைமை தபால் அஞ்சல் நிலையத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
    • பதிவு தபால், விரைவு தபால் சேவை, அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகள் (பணம் செலுத்துதல், பணம் எடுத்தல்), அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு சேவைகளை பெறலாம்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சேலம் தலைமை தபால் அஞ்சல் நிலையத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, பதிவு தபால், விரைவு தபால் சேவை, அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகள் (பணம் செலுத்துதல், பணம் எடுத்தல்), அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு சேவைகளை பெறலாம்.

    இதுதவிர, தற்பொழுது புதிதாக பெண்களுக்கு என மட்டுமே சிறப்பாக தொடங்கப்பட்டு உள்ள மகிலா சம்மான் சேமிப்பு பத்திரக்கணக்கும் (வட்டி விகிதம் 7.5 சதவீதம், இரண்டு ஆண்டுகள் வரை) தொடங்கும் வசதியும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் உள்ளது.

    இதுபோன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தபால் சேவைகளை சேலம் மாநகரில் இயங்கி வரும் முக்கிய தபால் அலுவலகங்களிலும் கொண்டு வருவதற்கான முயற்சி பரிசீலனையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி க்கொள்ளுமாறு சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

      சேலம்:

      அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்டம், போகா அருகே நகோபரா கிராமத்தை சேர்ந்த ராஜாக் ரப்பா என்பவர் மகன் ப்ரோஹலாத் ரப்பா (வயது 35). இவர் கடந்த மே மாதம் 25-ந் தேதி, தனது உறவினரான அக்ஷய் ரப்பா என்பவருடன், குவாத்தி ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம் வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

      இந்த ரெயில் கடந்த மே மாதம் 30-ந் தேதி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தபோது, தண்ணீர் குடிப்பதற்காக 4-ம் எண் நடைமேடையில் இறங்கினார். அவர் திரும்பி வருவதற்குள் ரெயில் புறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

      இதன் பின்னர் ப்ரோஹலாத் ரப்பாவை காணவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், ப்ரோஹலாத் ரப்பாவின் அக்கா வினிதா ரப்பா (37), சேலம் ரெயில்வே போலீசில் இது தொடர்பாக புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • பொது மக்கள் அமருவதற்கான இருக்கைகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்த அவர் பூங்காவை சிறப்பான முறையில் சீரமைத்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
      • அம்பேத்கர் வீதியில் கான்கீரிட் சாலை பணியை ஆய்வு செய்த அவர் சாலையின் தரம் நன்றாக உள்ளதா, சாலை உறுதி தன்மையுடன் உள்ளதா என்பதையும் அளவீடு செய்து ஆய்வு செய்தார்.

      சேலம்:

      சேலம் கொண்டலாம் பட்டி மணியனூர் பூங்காவை மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் ஆய்வு செய்தார். பூங்காவில் மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சிறுவர்கள் விளையாடு வதற்கான விளையாட்டு உபகரணங்கள், பூங்கா சுத்தம் செய்தல், விளை யாட்டு மைதானம், பொது மக்கள் அமருவதற்கான இருக்கைகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்த அவர் பூங்காவை சிறப்பான முறையில் சீரமைத்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

      அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் வீதியில் கான்கீரிட் சாலை பணியை ஆய்வு செய்த அவர் சாலையின் தரம் நன்றாக உள்ளதா, சாலை உறுதி தன்மையுடன் உள்ளதா என்பதையும் அளவீடு செய்து ஆய்வு செய்தார்.

      அப்பகுதி பொது மக்களிடம் குடிதண்ணீர் வசதி, கழிவுநீர் சாக்கடை வசதி, கழிப்பறை வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா என கேட்ட போது அப்பகுதி பொதுமக்கள் அனைத்து வசதிகளும் உள்ளது என தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் சாக்கடை தண்ணீர் எங்கும் தேங்காத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என சம்மந்தப்பட்ட சுகாதார ஆய்வாளருக்கு அறிவுறுத் தினார்.

      தொடர்ந்து அம்பாள் ஏரி புனரமைப்பு செய்யும் பணியையும் ஆணையாளர் ஆய்வு செய்தார். ஏரியின் மொத்த பரப்பளவு எவ்வளவு? ஏரியை புனர மைப்பு செய்ய என்ன என்ன பணிகள் மேற்கொள்ளப் படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

      இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். சேலம் மாநகராட்சி குகை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியின் முன்னேற்றம் குறித்தும், கட்டடப்பணியின் தரம் குறித்தும் ஆய்வு செய்த ஆணையாளர் பள்ளி கட்ட டங்கள் மிகவும் தரம் வாய்ந்த தாகவும், மழைக்காலங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டடங்கள் உறுதித் தன்மையுடன் கட்டப் பட வேண்டும் என அறி வுறுத்தினார்.

      ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் செந்தில்குமார், கவுன் சிலர்கள் கோபால், மோகன பிரியா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

      ×