search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem Student"

    • இளைய மகள் அமுதா மட்டும் வீட்டில் இருந்ததால் உயிர் தப்பினார்.
    • பிளஸ்-2 பொது தேர்வில் அமுதா முதல் மதிப்பெண் எடுத்துள்ளார் .

    சேலம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கல்பாரப்பட்டி செவ்வாய்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். தறி தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதிக்கு பூங்கொடி மற்றும் அமுதா ஆகிய 2 மகள்கள். இதில் இளைய மகள் அமுதா, மாற்றுத்திறனாளி ஆவார்.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி தன்னுடைய மாமியார் வீட்டுக்கு செல்வதற்காக வெங்கடாசலம், தனது மனைவி மாரியம்மாள், மகள் பூங்கொடி ஆகியோரை அழைத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் மல்லூருக்கு சென்று விட்டு திரும்பியபோது கார் மோதி விபத்துக்குள்ளாகி 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இளைய மகள் அமுதா மட்டும் வீட்டில் இருந்ததால் உயிர் தப்பினார். பிளஸ்-2 பொது தேர்வில் அமுதா முதல் மதிப்பெண் எடுத்துள்ளார் . ஆனால், பெற்றோரை இழந்ததால் அவரால் மேற்படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர் பலரிடமும் உதவி கோரினார்.

    இதுபற்றி அமுதா உருக்கமாக கூறியதாவது:-

    கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அப்பா, அம்மா, அக்கா 3 பேருமே விபத்தில் இறந்துட்டாங்கா. எனக்கு உடல் சார்ந்த பிரச்சனை சின்ன வயதில் இருந்தே இருக்கு. நான் அதையும் மீறி படிக்கணும் என நோக்கமாக இருந்தேன். எனக்கு படிக்கணுங்கிற ஊக்கம் கொடுத்தது முதலில் உலகத்திலேயே ரொம்ப முதல் ஆசிரியர் யாருனு கேட்ட அப்பா, அம்மா என சொல்வேன்.

    பள்ளிக்கு அக்கா தான் என்னை கூட்டிட்டு போயிட்டு வருவாங்க. நான் ரொம்ப சிரமப்பட்டு இருந்தேன் . அப்புறமாக நான் மெடிசன் எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு எல்லாம் போய் பார்த்தோம். அதற்கு அப்புறம் கொஞ்சம் சரியாயுடுச்சு.

    அதற்கு அப்புறம் படிப்பு நல்லா தொடர முடிஞ்சுது. இப்ப நான், 11, 12-ம் வகுப்பு இரண்டுலையும் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து இருக்கேன். ஆனாலும் இப்ப அந்த சந்தோஷத்தை கொண்டாட யாரும் இல்ல. கல்வி தொடரணும். கிரீன் இங்க்-ல சைன் போட்டு ஏழைகளுக்கு உதவனுங்கிறது தான் 3 பேருடைய ஆசையாக இருந்தது.

    எனக்குனு என்னுடைய குடும்பத்தில யாரும் இல்லனாலும் குடும்பத்தில் ஒருத்தரா அரசு முன்வந்து உதவி செய்யணும் என எதிர்பார்க்கிறேன். இப்போது என்னுடைய ஆசை நிறைவேற்றனுன்னா தயவு செய்து அரசு தொடர்ந்து உதவி செய்யணும். இதை என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் சிலர் அவருக்கு கல்லூரியில் சேர உதவி செய்தனர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இது பற்றி தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவி அமுதாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து, சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாணவியை நேரில் அழைத்து அவருக்கு கலெக்டர் கார்மேகம் ஆறுதல் தெரிவித்ததோடு, வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்வதாகவும், மருத்துவ செலவு, கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்திற்கான செலவை ஏற்பதாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    மேலும் மாணவிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு கட்டிக் கொள்ள வீரபாண்டி கல்பாரப்பட்டியில் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைக்கான ஆணையை நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் கார்மேகம் வழங்கியதோடு, வீடு கட்டிக்கொள்ள போதுமான நிதியையும் ஒதுக்கீடு செய்தார்.

    இதை தொடர்ந்து மாணவி அமுதா, தன்னுடைய கோரிக்கையை ஏற்று உதவி செய்த தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

    தொடர் பாலியல் தொல்லையால் பிளஸ்-2 மாணவி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து கராத்தே மாஸ்டர் மற்றும் நடவடிக்கை எடுக்காத பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவர் கடந்த 22-ந் தேதி தனது வீட்டில் இருந்தபோது, பிளேடால் தனது கையை அறுத்தும், மின்விசிறியில் தூக்குப்போட்டும் தற்கொலைக்கு முயன்றார். பெற்றோர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இருந்தபோதிலும் மாணவி தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து பெற்றோரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். அவருக்கு பல்வேறு கவுன்சிலிங் அளித்த பின்னரே நேற்று முன்தினம் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவலை கூறினார்.

    கடந்த 4 ஆண்டுகளாக அவர் படித்து வந்த பள்ளியில் கராத்தே மாஸ்டராக இருக்கும் ஆத்தூர் சீலியம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா (வயது 46) மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    அதாவது, அந்த மாணவி 8-ம் வகுப்பு படிக்கும்போது, அந்த பள்ளியில் கராத்தே மாஸ்டராக வந்த ராஜா அப்போது இருந்தே பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். முதலில் தவறாக அந்த மாணவி கருதாத நிலையில், ராஜாவின் அத்துமீறல் தொடரவே அப்போதே பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜிடம் இதுதொடர்பாக புகார் கூறி உள்ளார். ஆனால் அவர் மாணவியின் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இந்த தகவல் காட்டுத்தீ போன்று அந்த பகுதியில் பரவியதால் சம்பந்தப்பட்ட கராத்தே மாஸ்டர் ராஜாவை ஊர் பொதுமக்களே பிடித்து தர்ம அடி கொடுத்து நேற்று கருமந்துறை போலீசில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து மாணவி கொடுத்த புகாரின்பேரில், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கராத்தே மாஸ்டர் ராஜா மற்றும் நடவடிக்கை எடுக்காத தாளாளர் ஸ்டீபன் தேவராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 10-ம் வகுப்பு மாணவியின் கர்ப்பத்தை கலைத்தது தொடர்பாக காதலன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அரசன். இவரது மகன்கள் ராஜா (வயது 21), பரமசிவம் (21). இவர்கள் இருவரும் இரட்டையர்கள் ஆவர்.

    ராஜா லாரி டிரைவாக வேலை பார்த்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார்.

    இது பற்றி மாணவி வீட்டில் தெரிவிக்காமல் மறைத்து வந்தார். 4 மாதம் கழித்து மாணவியின் வயிறு பெரியதாக மாறியதை தொடர்ந்து சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் இது பற்றி கேட்டனர். அப்போது அவர், தன்னை லாரி டிரைவர் ராஜா பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அதனால் நான் கர்ப்பம் அடைந்தேன் என்று கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவருக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    இதையறிந்த சேலம் மாவட்ட குழந்தை திருமண தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி, மாணவிக்கு இன்னும் திருமண வயது ஆகவில்லை. அதற்கு முன்பு திருமணம் செய்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் ராஜா அந்த மாணவியின் கர்ப்பத்தை கலைக்க மாத்திரை வாங்கி கொடுத்தார். இதற்கு ராஜாவின் குடும்பத்தினர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    மாத்திரையை சாப்பிட்டதும் மாணவியின் கர்ப்பம் கலைந்தது. இதையடுத்து அவரை திருமணம் செய்ய ராஜா மறுத்து விட்டார்.

    இது குறித்து கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரில் மகளின் வாழ்க்கையை சீரழித்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கூறியிருந்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் சகோதரர் பரமசிவம், இவரது நண்பர் சேவியர் என்கிற வேலுசாமி (28) ஆகியோரை கைது செய்தனர். ராஜா மற்றும் அவரது தாய் லட்சுமி(47), தாய் மாமன் ராமர் (41) ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

    இதில் ராமர் கெங்கவல்லி அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக உள்ளார். இவர்கள் 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தலைமறைவாக உள்ள 3 பேரையும் கண்டுபிடிக்கும் பணியில் தனிப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
    ×