என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    திருநெல்வேலி அடுத்த தலைவன்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜா குணசேகரன்(வயது 40).இவர் மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

    நேற்று மாலை இந்த ரயில் அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தபோது திடீரென ராஜா குணசேகரன் நடைமேடையில் இறங்கி வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட சக பயணிகள் உடனடியாக ரெயில்வே போலீசாரிடம் தெரிவித்தனர்.

    பின்னர் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்க்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • வருகிற 9-ந் தேதி நடக்கிறது
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு பிரிவில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட95 வாகனங்கள் பொது ஏலம் மூலம் அகற்றுதல் குறித்து விரிவான அறிக்கையில் வாகன உரிமையாளர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் 95 வாகனங்களையும் யாரும் உரிமை கோராததால் அரசுடைமையா க்கப்பட்டது.

    மேற்படி வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற 9-ந் தேதி காலை 10 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.

    வாகனங்களை 6,7ஆகிய தேதிகளில் பார்வையிடவும் ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் 8-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.15 ஆயிரம் முன் வைப்புத் தொகையை ராணிப்பேட்டை ஆயுதப்படையில் செலுத்தி தங்களுடைய பெயர் விலாசத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    9-ந்தேதி காலை 10 மணியிலிருந்து பொது ஏலம் நடைபெறும். மேலும் ஏலம் எடுப்பவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து காண்பித்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி.தொகையும் சேர்த்து உடனடியாக செலுத்தி வாகனத்தை சான்றிதழுடன் பெற்றுக் கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

    • 1,213 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது
    • தோல் காலணி மற்றும் துணைப்பொருட்கள் தொகுப்பு அமைக்க முடிவு

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கம் கிராமத்தில் 1213.43 ஏக்கரில் தொழில் பேட்டை அமையும் இடத்தை அமைச்சர்கள் ஆர்.காந்தி, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த தொழிற்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு சுமார் 1,213 ஏக்கர் நிலம் கையகபடுத்தப்பட்டது. தொழிற்பூங்காவுக்கு தேவையான நிலம் நெடும்புலி, துறையூர், பெருவளையம், அகவலம் ஆகிய கிராமங்களிலிருந்து கையகப்படுத்தபட்டது. இதில் சுமார் 300 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு ஆகும்.

    அப்பூங்காவில் 351.89 ஏக்கர் பரப்பிலான நிலம் சிப்காட் மூலம் கையகப்படு த்தப்பட்டுள்ளது. சிப்காட் நிறுவனம் இப்பூங்காவில் 300 ஏக்கர் நிலபரப்பில் பெரும் தோல் காலணி மற்றும் துணைப்பொருட்கள் தொகுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதில் 201 ஏக்கர் நிலபரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படுகிறது.

    அந்தசிறப்பு பொருளாதார மண்டலத்தில் 125 ஏக்கர் நிலபரப்பில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு கொள்கை ஒதுக்கீட்டு ஆணைப்படி நில ஒதுக்கீடு ஆணைப்படி வழங்கப்பட்டுள்ளது.

    இப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு குறித்த காலத்திற்குள் நிறைவு செய்ய தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மற்றும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் அலுவலர்களை கேட்டுக்கொண்டார்கள்.

    இந்த ஆய்வின் போது மேலாண்மை இயக்குனர் சிப்காட் சுந்தரவல்லி,ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., சிப்காட் கண்காணிப்பு பொறியாளர் தேவஇரக்கம். ராணி ப்பேட்டை சிப்காட் திட்ட அலுவலர் மகேஸ்வரி, நில எடுப்பு துணை ஆட்சியர் அகிலாதேவி, நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு. பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா, நில எடுப்பு வட்டாட்சியர் ஜெயபி ரகாஷ். நெமிலி வட்டாட்சியர் பாலசுந்தர், சயனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி, நெமிலி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் தனது மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
    • சிறுமியின் தாய் அரக்கோணம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அரக்கோணம்:

    காவேரிப்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கிராம நிர்வாக அலுவலர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

    அதேபகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் தனது மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    நாளுக்கு நாள் இவரது தொல்லை அதிகரித்ததால் மாணவி தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார்.

    இது குறித்து சிறுமியின் தாய் அரக்கோணம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கிராம நிர்வாக அலுவலரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • நீர்நிலைகளில் இருந்து விலகி இருத்தல் வேண்டும்
    • ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது, மழை காலங்களில் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து விலகி இருத்தல் வேண்டும். நீர் நிலைகளில் தவறி விழுந்தால் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் செயல்முறை விளக்கங்களுடன் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • நீரில் மூழ்கியவரை பிணமாக மீட்பு
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த ஜாகீர்தண்டலம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 84). இவருக்கு கலைச்செல்வன் (44) என்ற மகன் உள்ளார்.

    நடராஜ் நேற்று வழக்கம்போல் தன்னுடைய விவசாய நிலத்திற்கு துணி துவைக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை.

    இதையடுத்து அவரது மகன் கலைச்செல்வன் மற்றும் உறவினர்கள் அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தனர். அப்போது கிணற்றின் அருகே நடராஜ் வேட்டி கிடந்தது.

    இது குறித்து அரக்கோணம் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது கிணற்றில் நடராஜ் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது உடலை அவர்கள் மீட்டனர்.இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரு மையங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது
    • கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2023 ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் மாவட்ட கலெக்டர் வழிகாட்டு தலின்படியும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஆலோசனை படியும் ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் பனப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளி ஆகிய இரு மையங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த மையங்கங்களில் நீட் தேர்வு பயிற்சி பெற்று தேர்ச்சி அடைந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 12 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கும், 4 மாணவர்கள் பி.டி.எஸ் படிப்பிற்கும் என மொத்தம் 16 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.

    இவர்களுக்கு கலெக்டர் வளர்மதி புத்தகங்கள் வழங்கி பராட்டினார்.

    அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட போட்டித்தேர்வு ஒருங்கிணை ப்பாளர் பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், மகன் சூரிய பிரகாஷ் (23) இவர் சென்னையில் வேலை செய்து வந்தவர்.

    விடுமுறையில் ஊருக்கு வந்த சூரிய பிரகாஷ் நேற்று மதியம் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், குமரன் ஆகியோருடன் கிணற்றில் குளிப்பதற்காக அருகே உள்ள தெங்கால் கிராமத்திற்கு சென்று அங்கு தனியார் கிணற்றில் குளித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக சூரிய பிரகாஷ் நீரில் மூழ்கியுள்ளார் இதை பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியாததால் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் அங்கு விரைந்து சென்று வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய சூரிய பிரகாஷை பிணமாக மீட்டனர்.

    இதை தொடர்ந்து சிப்காட் போலீசார் சூரிய பிரகாஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடை அகற்ற வேண்டும்
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சுஜாதாவினோத் தலைமையில் நடந்தது.

    துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ஆணையாளர் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகரசபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பாலாற்றின் கரையோரம் உள்ள டாஸ்மாக் மது கடையை அகற்ற வேண்டும்,கடை அருகில் உள்ள காரிய மேடையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.காரிய மேடையை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    சுடுகாட்டில் உள்ள நவீன எரிவாயு தகனமேடை பயன்படுத்தப்படாமல் உள்ளது அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    நகராட்சி பகுதியில் நடைபெறும் குடிநீர் குழாய் அமைப்பு பணிகளை அதிகாரிகள் அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    நகராட்சி பகுதியில் தெரு நாய்களை பிடித்து முறையாக கருத்தடை செய்ய வேண்டும்.

    நகரில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் நம்ம டாய்லெட் கழிவறைகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    கூட்டத்தில் நகர மன்ற தலைவர்,துணைத் தலைவர், உறுப்பினர்களுக்கு கடந்து ஜூலை மாதம் முதல் மதிப்பூதியம் வழங்க உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நகர சபை உறுப்பினர்கள் அப்துல்லா, வினோத், கே.பி.சந்தோஷம், குமார்,நரேஷ், ஜோதி சேதுராமன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 135 வது ஆண்டு அக்னி வசந்த விழா
    • பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் உள்ள பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலின் 135 வது ஆண்டு அக்னி வசந்த விழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும், மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.

    விழாவில் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.பின்னர் மாலையில் தீ மிதி விழாவும் நடைபெற்றது. இதில் காப்புகட்டி விரதமிருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அடுப்பில் இருந்த தீ பரவி எரிந்தது
    • தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்றனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் பைராகி மடம் தெருவை சேர்ந்தவர் சரளா (37), கூலித் தொழிலாளி. இவரது, வீட்டின் மேல்மாடியில் இருந்த அறையில் இருந்து நேற்று முன்தினம் இரவு திடீரென தீ வி பத்து ஏற்பட்டு புகை வெளியேறியது. இதனை வெளியில் இருந்தபடி பார்த்த பொதுமக்கள் சோளிங்கர் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில், சோளிங்கர் சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, வீட்டில்இருந்தவர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டது குறித்து தெரியாமல் இருந்துள்ளது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உயிரை பொருட்படுத்தாமல் விரைந்து மாடிக்கு சென்று, குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன், எரிந்து கொண்டி ருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டடது. தீ விபத்தில் யாருக்கும் எவ்வித அசம் பாவிதமும் ஏற்படவில்லை.

    விசாரணையில், வெந்நீர் காய வைப்பதற்காக மாடி மீது அடுப்பு பற்ற வைத்துவிட்டு, நெருப்பை சரியாக அணைக்காமல் விட்டுள்ளனர். இதனால், அடுப்பில் இருந்த நெருப்பு பரவி விறகுகளில் தீப்பிடித்தது தெரியவந்தது. சிறிது நேரத்தில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பின்னர் திரும்பி சென்று விட்டனர். உரிய நேரத்தில் விரைந்து வந்து தீயை அணைத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • முன்பக்க கண்ணாடி உடைந்தது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவை அடுத்த மருதாலம் கூட்ரோடு பகுதியில் கடந்த 28-ந் தேதி நெய்வேலியில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.கவினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக திருத்தணியில் இருந்து வேலூர் நோக்கி செல்வதற்காக வந்த அரசு பஸ் மீது கற்கள் வீசப்பட்டது.

    இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    இது தொடர்பாக வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில் பஸ்மீது கல் வீசி தாக்கியதாக ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரியை சேர்ந்த மணிவண்ணன் (24) என்பவரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    ×