என் மலர்
ராணிப்பேட்டை
- 2 நாட்களாக சரிவர சாப்பிடாமல் மன அழுத்தமுடன் இருந்ததார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நவல்பூர் கிரேட் நகர் பகுதியை சேர்ந்தவர் அமுதா இவரது மகள் ராஜஸ்ரீ (வயது 23). ராஜஸ்ரீ பி.காம் படித்துவிட்டு வேலூரில் உள்ள தனியார் ஹெல்த் கேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர்.
கடந்த 2 நாட்களாக ராஜஸ்ரீ சரிவர சாப்பிடாமல் மன அழுத்தமுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவில் அமுதா காய்கறி வாங்க சந்தைக்கு சென்றுள்ளார்.
பின்னர் அமுதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜஸ்ரீ வீட்டின் பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை
- 11 இரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை:
கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நம் நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும், கைத்தறி தொழில் நலிவடையாமல் பாதுகாக்கவும். கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசால் 1985-ம் ஆண்டு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டு 1998ஆம் ஆண்டு முதல் 11 இரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட குறிப்பிட்ட தொழில்நுட்ப குறிப்பீடுகளுடைய ரகங்களான கரை பாவுபோட்டு டிசைனுடன் கூடிய காட்டன் வேட்டி இரகம், பாவு பேட்டு மற்றும் ஊடை பேட்டு மற்றும் புட்டா மற்றும் பட்டு சேலை ரகம், கரை மற்றும் முந்தியுடன் கூடிய காட்டன் துண்டு ரகம், கரை பாவு பேட்டு டிசைன் மற்றும் முந்தியுடன் கூடிய கிரே அங்கவஸ்திரம், லுங்கி, பெட்சீட், ஜமுக்காளம், சட்டை துணிகள், கம்பளி, சால்வை, உல்லன்ட்வீட் மற்றும், சத்தார்க் உள்ளிட்ட 11 ரகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப்பிரிவு (5)-ன்படி சட்டத்தை மீறிய செயலாகும். இது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் பிரிவு 10(ஏ)- ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றதா என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் அதிகபட்சமாக 6 மாதகால சிறை தண்டனையோ அல்லது அதிகபட்சமாக விசைத்தறி ஒன்று ரூ.5ஆயிரம் /- வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ தண்டனையாக வழங்கப்படும்
கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற சென்னை குறளகத்தில் இயங்கி வரும் கைத்தறி துணை இயக்குநர் அமலாக்க பிரிவு - அலுவலகத்ததை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- ரூ.3,000 பணத்தை எடுத்து சென்றுவிட்டனர்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
பாணாவரம் அருகே உள்ள கீழ்வீராணம் அடுத்த சூரைகுளம் ரோட்டு தெருவை சோ்ந்தவா் சரோஜா (75). இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகள். இருவருக்கும் திருமணம் முடித்து வெவ்வேறு இடங்களில் குடும்பத்தி னருடன் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்க்கு முன் சரோஜாவின் கணவா் இறந்துவிட்டார். சரோஜா மட்டும் தனியாக வசித்து வருகின்றாா்.
இந்நிலையில் தனியாக இருப்பதால் அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு நேற்று இரவு தூங்க சென்றுள்ளாா்.
நள்ளிரவில் வீடு புகுந்த திருட்டு கும்பல் பீரோவில் இருந்த 1½ பவுன் தங்க நகை, ரூ.3,000 பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகளிர்களுக்கு உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது
- அமைச்சர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் ஊராட்சியில் உள்ள சிப்காட், வ.உ.சி நகர், திருவள்ளுவர் நகர், புளியங்கண்ணு ஆகிய இடங்களில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி, மாவட்ட ஊராட்சி நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,ஒன்றிய பொது நிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகிய நிதிகளிலிருந்து மொத்தம் ரூ.97 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 7 வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
இதன்படி கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டிடங்கள், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், காரிய மேடை, அங்கன்வாடி மைய கட்டிடம், நெற்களம், நாடக மேடை ஆகியவற்றிற்கான திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
விழா நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட இரண்டே கால் ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் புதுமையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்கும் பொழுதெல்லாம் மக்களை கேட்காமலேயே மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவார்.
அதே வழியில் நமது முதல் அமைச்சரும் மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், புதுமைப் பெண், காலை உணவு, இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதால் மகளிர்கள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர்.
செப்டம்பர் முதல் மகளிர்களுக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த நவ்லாக் ஊராட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் ரூ.11 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு பயன்பெற வேண்டும் .
இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.
இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி,ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பக்தவச்சலம், கோமதி விஜயகுமார், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தியாகராஜன், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், நவ்லாக் ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதி குமார், நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
- குற்ற ஆய்வு கூட்டம் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சாலமன் ராஜா,காண்டீபன், பாரதி, சப் இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், சீனிவாசன், தினேஷ் ரகு, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன்,சுப்பிரமணி, மதிவாணன்,சதாசிவம், ஜான்சி, போலீஸ் ஏட்டுகள் மாறன், அப்துல் முஜீர், மீனா, ஜானகி தேவி போலீசார் கோபிகிருஷ்ணா, வெங்கடேசன், தாமோதரன், அமித் பாஷா திவாகர் ஆகியோரை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேசுவரய்யா, அரக்கோணம் உதவி சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு, ரவிச்சந்திரன், ராஜா சுந்தர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- குடும்ப தகராறில் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி மாலதி (வயது 43). ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்கு தகராறு ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாலதி நேற்று அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்பகுதிமக்கள் நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாலதி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேர்த்திக்கடன் செலுத்தினர்
- ஏராளமாேனார் தரிசனம் செய்தனர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
இங்கு ஆடி மாதம் 3-ம் வெள்ளியை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது.
முன்னதாக ஊர் பொது மக்கள் அனைவரும் தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்தனர்.
அதனை தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்ட முத்து மாரியம்ம னுக்கு மாலை போட்டு விரதம் இருந்த பக்தர்கள் கொக்கி போட்டு ஊர்வலமா கவும், அலகு குத்தியும், தீ சட்டி எடுத்தும் மேலதாள முடன் சாமி ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் கயிற்றில் தலை முடியை கட்டிய நிலையில் பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் பென்னகர் சுற்றுவட்டார பகுதிகளான மாம்பாக்கம், வேம்பி, தோனிமேடு, பாரியம ங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கலவை:
காட்பாடி தாலுகா, 5 புத்தூர் பகுதியைச் பலராமன் (வயது 33).
இவர் திருவண்ணாமலை மாவட்டம் ராந்தம் கிராமத்திலிருந்து வேனில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மழையூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அத்தியானம் - குட்டியம் சாலையில் சென்றபோது அவ்வழியில் தாழ்வாகச் சென்ற மின் ஒயர் வேனின் மீது உரசியது. வைக்கோலில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் கலவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இருப்பினும் தீ அனைத்து பகுதிகளிலும் பரவி வேன் முற்றிலும் சேதமானது.
தகவல் அறிந்து வந்த கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உருவப்படத்திற்கு மாலை அணிவிக்க வலியுறுத்தல்
- அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 5-வது நினைவு நாளை யொட்டி வருகிற 7-ந்தேதி காலை 9 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் வட்ட கிளைகள் தோறும் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும்.
இதில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தும் வகையில் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- மாணவிகளுடன் ஆலோசனை நடத்தினார்
- உணவில் காய்கறிகள், கீரைகளை சேர்க்க வேண்டுமென அறிவுரை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் உள்ள சிறுபான்மையினர் நல மற்றும் வாலாஜாவில் உள்ள மிக பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதிகளில் கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாணவிகள் தங்கியுள்ள அறைகள், பயன்படுத்தும் கழிவறைகள், சமையலறைகள், உணவுப் பொருட்களின் இருப்புகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் விடுதி காப்பாளர்களிடம் நாள்தோறும் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து கேட்டறிந்து, உணவில் அதிக அளவில் காய்கறிகள், கீரைகளை சேர்க்க வேண்டுமென விடுதி காப்பாளரை கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 25 ்கோவில்களில் கோவில் பாதுகாப்பு பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்குராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பித்த விவரத்தினை வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்குமாறும், மேலும் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் அல்லது 0416-2977432- என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட உள்ளது
- கட்டிடங்கள் அகற்றுவது குறித்து கேட்டறிந்தார்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி ஆற்காடு நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். அப்போது உழவர் சந்தையை பார்வையிட்ட அவர் அங்கு விவசாயிகள் உள்ளனரா அல்லது வியாபாரிகள் உள் ளனரா என கேட்டறிந்தார். பின்னர் அங்கு இயற்கை முறை யில் தேன்மற்றும் சிறுதானிய கஞ்சி வகைகள் தயாரிக்கும் கடை வைத்திருப்பவர்களிடம் விற்பனைகள் குறித்து கேட்ட றிந்தார்.
இதனைத் தொடர்ந்து பார்த்திபன் நகர் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் குழந்தைகள் பொழுதுபோக்கு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணிகளையும் விரைவாக முடிக்கும்படி ஒப்பந்ததாரரிடம் கேட்டுக் கொண்டார்.
தோப்புக்கானா பகுதியில் அமைந்துள்ள நகர்புற நல வாழ்வு மையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆற்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட உள்ளதால் அந்த இடத்தில் மரங்கள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டியதையும் நகராட்சி ஆணையரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஆற்காடு வட்டார வேளாண்மை அலுவலகத் தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள், மருந்துகள். உரங்கள் மற்றும் இருப்பு அறையை பார்வையிட்டார். ஆய் வின்போது நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கணேசன், மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெயபிரகாஷ். வேளாண்மைதுறை கண்காணிப்பாளர் கோபி, உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராஜ்குமார், உதவி நிர்வாக அலுவலர் யோகேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.






