என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணம் அறிவிப்பு தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாலும், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் தமிழகத்தில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை சற்று குறைந்த நிலையில், குமரி மாவட்டத்தில் கனமழை பெய்தது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் வருகிற 19-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் வெள்ள பாதிப்பு, நிவாரண அறிவிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
    ஓச்சேரி அருகே பாலாற்றில் குளிக்க சென்ற 7 இளைஞர்களை மாவட்ட தீயணைப்பு துறை மற்றும் அரக்கோணம் தேசிய பேரிடர் குழுவினர் மீட்டனர்.
    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏழுமலை மகன் நந்தகுமார் (வயது 18), ரஞ்சித்குமார் மகன் சின்ராசு (18), முனுசாமி மகன் விசுவநாதன் (20), சிங்காரம் மகன் சுபாஷ் (20), முருகன் மகன் ரமேஷ் (20), சுதாகர் மகன் கோகுல் (20),மதியழகன் மகன் அமுதன் (20). இவர்கல் 7 பேரும் மாமண்டூர் பாலாற்றில் குளிக்க சென்றுள்ளனர். குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென வெள்ளப்பெருக்கு அதிகரித்து்ள்ளது.

    இதனால் 7 பேரும் கரைக்கு செல்ல முடியாமல் ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கண்ட கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வருவாய் துறையினர் கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் நவீன கருவிகளுடன் வருகை புரிந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.

    சுமார் ½ மணி நேரத்தில் ஆற்றின் மையப்பகுதியில் மணல் திட்டில் சிக்கி தவித்த 7 பேரையும் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நவீன மோட்டார் படகின் உதவியோடு மீட்டனர். அப்போது பாலாற்றில் 10 ஆயிரம் கன அடி நீர் சென்று கொண்டிந்தது.

    7 பேரையும் மீட்ட பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்களை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பாராட்டினர்.
    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்தது.


    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 30 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இது ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

    இதே ஸ்மார்ட்போன் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி பெயரில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதன் தோற்றத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.6 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

    ரெட்மி நோட் 11டி 5ஜி

    இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 50 எம்பி+8 எம்பி பிரைமரி கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிஸ்டீரியஸ் பிளாக், மில்கிவே புளூ மற்றும் மிண்ட் கிரீன் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. 
    நெமிலி அருகே வி‌ஷ வாயு தாக்கி மாமனார், மருமகன் பலியான சம்பவம் அவலூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 54) விவசாயி. இவர் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தார். கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருவதால் விவசாய கிணற்றில் மோட்டார் பழுதானது.

    மின் மோட்டாரை சரி செய்வதற்காக அவரது மருமகன் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் சுபாஷ் (24) என்பவரை அழைத்துக்கொண்டு நேற்று விவசாய நிலத்துக்கு சென்றனர்.

    இருவரும் கிணற்றில் இறங்கி மோட்டாரை சரி செய்யும் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வி‌ஷவாயு தாக்கியதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் உடல்கள் கிணற்றில் மூழ்கியது.

    நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தேடிச் சென்றனர். அப்போது விவசாய கிணற்றின் அருகில் துணி பொருட்கள் இருந்தன. இதனால் அவர்கள் கிணற்றுக்குள் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

    இதுகுறித்து ராணிப்பேட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேரம் போராடி 2 பேரின் உடல்களை மீட்டனர். அவலூர் போலீசார் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விவசாய கிணற்றில் வி‌ஷவாயு தாக்கியது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் மின்சாரம் தாக்கி இறந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அவலூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    இந்த உற்சவங்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்டு உரிய பாதுகாப்புடன் அரசு வழி காட்டுதல்படி பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும்.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தைலக்காப்பு திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் நாளை (14- ந் தேதி) 1-ம் திருவிழாவாக தொடங்குகிறது. அன்று மாலையில் 6.15 மணிக்குமேல் 7.15 மணிக்குள் மிதுனம் லக்கினத்தில் சுந்தர ராச பெருமாளுக்கு தைலக்காப்பு நடத்தப்படும்.

    தொடர்ந்து நாளை மறுநாள் 15-ந் தேதி 2-ம் திருநாள். இதில் கோவில் உள்பிரகாரத்தில் இருக்கும் மேட்டுகிருஷ்ணன் சன்னதியில் சீராப்தி நாதன் சேவை நிகழ்ச்சி நடைபெறும்.

    16-ந் தேதி 3-ம் திருநாள் அன்று காலையில் 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மகர லக்கினத்தில் இருப்பிடத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி சுந்தர ராச பெருமாள் என்ற கள்ளழகர் மலை பாதை வழியாக செல்கிறார்.

    அழகர்மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவிலில் காலை 11 மணிக்கு எழுந்தருள்கிறார். தொடர்ந்து 12 மணிக்குள் கும்ப லக்கினத்தில் கள்ளழகர் பெருமாளுக்கு திருத்தைலம் சாத்தப்பட்டு அங்குள்ள நூபுர கங்கையில் தீர்த்தவாரி நடைபெறும்.

    மேலும் இந்த உற்சவங்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்டு உரிய பாதுகாப்புடன் அரசு வழி காட்டுதல்படி பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும். தவிர தீர்த்தவாரி நிகழ்வு முடிந்து பிற்பகல் 1 மணி அளவில் கள்ளழகர் பெருமாளை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து வந்த வழியாகவே சென்று சாமி கோவிலுக்குள் இருப்பிடம் சேருகிறார்.

    இந்த திருவிழா நிகழ்ச்சிகளை யூ டியூப், முகநூல் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்து பார்த்து தரிசனம் செய்யலாம். இந்த திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
    சோளிங்கர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஐபேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (வயது 56), சோளிங்கரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவந்தார். இவரது மருமகன் குணசேகர் (36) என்பவருக்கு உடல் நலம் சரி இல்லாததால் அவரை, வேலு மோட்டார் சைக்கிளில் சோளிங்கர் அழைத்து வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுபடியும் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    அரியூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வேலு அதே இடத்தில் இறந்தார். குணசேகர் படுகாயமடைந்து சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசலு விசாரணை நடத்தி வருகிறார்.
    ராணிப்பேட்டையில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, காரை நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38) கூலித்தொழிலாளி. இவர் காய் கறி வாங்குவதற்காக சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த அஜீத்குமார் (24) என்பவர் முன்விரோதம் காரணமாக முத்துக்குமாரை மடக்கி, ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்து, அவரை தான் வைத்திருந்த கத்தியால் உடலின் பல பாகங்களில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமாரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இது குறித்து முத்துக்குமாரின் மனைவி ரேகா கொடுத்த புகாரின் பேரில், ராணிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜீத்குமாரை கைது செய்தனர்.
    வேலூரில் கன்சால்பேட்டை, திடீர்நகர், கொணவட்டம், மாங்காய் மண்டி அருகே சக்திநகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பல்வேறு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக முன்எச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. வேலூர் நகரிலும் மழை பெய்தது. காலையில் சாரல் மழை பெய்தது. மதியவேளையில் மழையின் வேகம் அதிகரித்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த மழையின் காரணமாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்புறம் நின்றிருந்த மரம் சாய்ந்தது. அருகில் இருந்த கேண்டீன் மீது மரக்கிளைகள் விழுந்தது. கோட்டை சுற்றுச்சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது. சாலைகள் மோசமாக உள்ளதால் அந்த சாலை வழியாக செல்பவர்கள் அவதிப்பட்டனர்.

    மாலை 3.30 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை 4 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர். நகர் முழுவதும் மழைநீர் தேங்கியது. இந்த மழை விடிய, விடிய தொடர்ந்து பெய்தது. இதனால் நகரில் உள்ள நிக்கல்சன் கால்வாய் உள்பட அனைத்து கால்வாய்களிலும் மழைநீர் கழிவுநீருடன் கலந்து பெருக்கெடுத்து ஓடியது.

    கன்சால்பேட்டை, திடீர்நகர், கொணவட்டம், மாங்காய் மண்டி அருகே சக்திநகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பல்வேறு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள்ளேயும் தண்ணீர் புகுந்தது. இதில் கொணவட்டம் ரகீம்சாதிக் தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் மற்றும் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்தது.

    அரியூர் உமாபதிநகர், திருவள்ளுவர்நகர், பெரியசித்தேரி, குமரன்நகர், சித்தேரி, தென்றல்நகர், ஆர்.என்.பாளையம், சதுப்பேரி, வசந்தம் நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இப்பகுதிகளில் உள்ள கால்வாயை தூர்வாரி நடவடிக்கை எடுக்க கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டிருந்தார். அந்த பகுதியில் மேற்கொண்டிருந்த பணிகளை நேற்று அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கால்வாயில் குப்பைகள் கொட்டக்கூடாது என மக்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். அம்முண்டி ஏரி நீர் செல்லும் கால்வாயை பார்வையிட்டார்.

    மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா தடுப்பணையை தாண்டி பாலாற்றில் ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. இதுதவிர கவுண்டன்ய ஆறு, அகரம் ஆறு, மலட்டாறு ஆகியவற்றில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

    பாலாற்றில் 4 ஆயிரத்து 200 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக பொன்னை ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 2 நாட்களாக இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் வந்தது. ஆனால் நேற்று காலை இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. 1,500 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது.

    கனமழை காரணமாக நேற்றைய காலை நிலவரப்படி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 56 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஊரக பகதிகளில் உள்ள 133 ஏரிகளில் 40 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. மேலும் ஊரக பகுதிகளில் உள்ள 807 குளங்கள், குட்டைகளில் 220 குளங்கள் நிரம்பி உள்ளன. 99 குளங்களில் 75 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் உள்ளது.

    காட்பாடியை அடுத்த கிளித்தான்பட்டறை பகுதியில் கயிறு திரிக்கும் தொழில் செய்து வருபவர்களின் குடிசைகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் அவர்கள் நேற்று இரவு அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் பாய், போர்வைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வழங்கினார். அவர்களுக்கு இரவு நேர உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, மாநகராட்சி கமிஷனர் சங்கரன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் ஆனந்தன், தி.மு.க பகுதி செயலாளர் வன்னியராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    திருத்துறைப்பூண்டியில் மழையால் உடைப்பு ஏற்பட்ட வளவனாறு வாய்க்கால் 700 மணல் மூட்டைகளால் சீரமைக்கப்பட்டது.
    திருத்துறைப்பூண்டி:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கடும் மழை பெய்து வருகிறது. திருத்துறைப்பூண்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர் மழையால் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன் கோட்டம் பகுதியில் கட்டிமேடு வளவனாறு வாய்க்காலில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களும், நெற்பயிர்களும் மழை நீரில் மூழ்கின.

    தகவலறிந்ததும் மாரிமுத்து எம்.எல்.ஏ., ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கர், உதவி செயற்பொறியாளர் ராம்குமார், பிச்சன் கோட்டகம் ஊராட்சி மன்ற தலைவர் சுசிலா மகாலிங்கம், துணை தலைவர் மகேஸ்வரி முருகானந்தம், பாசனதாரர்கள் சங்க தலைவர் கோவி சேகர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து உடைந்த வளவனாறு வாய்க்காலை பார்வையிட்டனர்.

    இதையடுத்து வாய்க்கால் உடைந்த பகுதியில் 700 மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து சீரமைத்தனர். உடனடியாக வாய்க்கால் சீரமைக்கப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள பல்வேறு விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா மகாலிங்கம் தெரிவித்தார்.
    ஓச்சேரி மற்றும் அவளூர் பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    காவேரிப்பாக்கம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓச்சேரி, அவளூர் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பியதன் காரணமாக அதன் கீழ் பகுதியில் உள்ள சுமார் 28 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் பயிர்கள் நீரில் முழ்கி சேதம் அடைந்துள்ளன. இப்பகுதிகளில் மாவட்ட வெள்ள கண்காணிப்பு அலுவலர் ஆர்.செல்வராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் பருவ மழையினால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சேதம் ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு விவசாயிகளிடமும் சேதம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட பயிற்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    இதனையடுத்து காவேரிப்பாக்கம் ஏரியின் பங்களா பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது ஏரியில் உள்ள தண்ணீர் இருப்பு குறித்து பொதுப்பணித் துறை அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், வேளாண்மை துறை இணை இயக்குனர் வேலாயுதம், வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, பொதுப்பணித் துறை உதவி பொறியாளர்கள் சந்திரன், மெய்யழகன், வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம், துணை வேளாண்மை அலுவலர் சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

    காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மற்ற ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதில் பனப்பாக்கம் கல்லாற்றின் வழியாக தென்மாம்பாக்கம் ஏரிக்கு நீர் செல்லும் பாதையில் உள்ள தரைபாலம் மூழ்கி சுமார் 2 அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது.

    பனப்பாக்கம் கல்லாற்றிலிருந்து பல்வேறு வரத்து கால்வாய்கள் மூலம் செல்லும் நீர், கால்வாயை தூர்வாராததால் நீர் செல்லமுடியாமல் அடைப்பு ஏற்பட்டு கால்வாயிலிருந்து நீர் வெளியேறி பனப்பாக்கம் காலனி பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் கோட்டாட்சியர் சிவதாஸ் நேரில் சென்று பார்வையிட்டு அடைப்புகளை விரைவில் சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் பனப்பாக்கம் பேரூராட்சியில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொக்லைன் எந்திரத்தின் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆய்வின் போது நெமிலி தாசில்தார் ரவி, வருவாய் ஆய்வாளர் மருதாச்சலம், பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் குமார், கிராமநிர்வாக அலுவலர் டோமேசன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
    சுசீந்திரம் அருகே வாகனம் மோதி லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுசீந்திரம்:

    சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறையை சேர்ந்தவர் பொன் டேனியல்ராஜா (வயது 54). இவர் ராமனாதிச்சன்புதூரில் லாரி டிரைவராக பணி புரிந்து வந்தார். இன்று காலை 5.30 மணியளவில் வழுக்கம்பாறை சந்திப்பு பகுதியில் பொன் டேனியல் ராஜா பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பொன்டேனியல் ராஜா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரின் சகோதரர் பொன் அருள் ஞானஜோஸ் (47), படுகாயமடைந்த பொன் டேனியல் ராஜாவை மீட்டு மயிலாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பொன் டேனியல் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த மேல் புதுப்பேட்டை கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அதை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து வாலாஜா போலீஸ் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த நிலையில் நேற்று சப்- இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களை போலீசார் மடக்கி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் போளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (32), பாணாவரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜெயபால் (37) என்பதும், வாலாஜா அருகே இரண்டு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, இவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    ×