என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    வாலாஜாவில் குறைதீர்க்கும் முகாமில் ரூ.79 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
    வாலாஜா:

    வாலாஜாப்பேட்டை நகராட்சியில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.

    முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 90 பயனாளிகளுக்கு ரூ.79லட்சத்து 97 ஆயிரத்து 979 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
    ராணிப்பேட்டை அருகே வெண்ணீரில் விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்து அக்ராவரம் மலைமேடு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் நடராஜரகு. இவர் சிப்காட் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 

    இவரது மனைவி துர்கா. தம்பதியின் மகன் குமரன் (வயது 3). கடந்த  25&ந்தேதி துர்கா குளிப்பதற்கு கொதிக்க வைத்த தண்ணீரை இறக்கி வைத்துள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் குமரன் அதில் இறங்கி விட்டான்.இதில் குமரன் உடல் முழுவதும் வெந்து காயம் ஏற்பட்டது. 

    சிறுவனை வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி மருத்து வமனையில் அனுமதித்தனர். 

    அங்கு சிகிச்சை பெற்று வந்த குமரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம் அருகே சாமி சிலைகள் உடைக்கப்பட்ட இடத்தில் மோப்ப நாய் கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர்.
    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற திருப்பாற்கடல் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

    இந்தக் கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து சாமி சிலைகளை உடைத்து தூக்கி வீசி உள்ளனர். மேலும் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர். 
    இது சம்பந்தமாக கோவில் சிலைகள் உடைக்கப்பட்ட இடத்தில் அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    அப்போது கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் சிம்பா வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். 

    அது அதே பகுதியில் உள்ள ஒருவர் வீட்டின் அருகே சென்று நின்று விட்டது.போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.
    கந்துவட்டி கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக ராணிப்பேட்டை எஸ்.பி. ஆபீசில் டாஸ்மாக் விற்பனையாளர் புகார் அளித்துள்ளார்.
    ராணிப்பேட்டை:

    கந்துவட்டி கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக ராணிப்பேட்டை எஸ்.பி. ஆபீசில் டாஸ்மாக் விற்பனையாளர் பாண்டியன் என்பவர் தனது குடும்பத்தினருடன் நேரில் வந்து புகார் அளித்த மனு அளித்தார்.
     
    அந்த மனுவில் கூறியதாவது:

    நான் நெமிலி தாலுக்கா வேகாமங்கலம் கிராமத்தில் வசித்து வருகிறேன். அரக்கோணத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறேன்.

    வீடு கட்டும் பணிக்காக அரக்கோணத்தை சேர்ந்த சிலரிடம் பணம் வாங்கினேன்.

    வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்திய நிலையில் கடன் தொகைக்கு மேல் தினசரி வட்டி மீட்டர் வட்டி என கூறி எனது வீட்டில் இருந்த கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை கந்துவட்டி கும்பல் எடுத்துச் சென்றுவிட்டனர். மேலும் பணம் கேட்டு எனது குடும்பத்தினரை மிரட்டுகின்றனர்.

    இதனால் நாங்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளோம். பணம் கேட்டு மிரட்டும் கந்துவட்டி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
    காவேரிப்பாக்கம் அருகே அம்மன் கோவிலில் சாமி சிலைகளை உடைத்து உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற திருபாற்கடல் பெருமாள்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் ஸ்ரீ துர்கை அம்மன் கோவில் உள்ளது.

    இங்கு நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்து கோவிலில் உள்ள சாமி சிலைகளை உடைத்து தூக்கி வீசியுள்ளனர். மேலும் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    உண்டியலை உடைக்கவும், சிலைகளை சேதப்படுத்தவும் மர்ம கும்பல் கடப்பாறை கம்பியை பயன்படுத்தியுள்ளனர். கடப்பாறை கம்பி ஒன்று அங்கு கிடந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு அருகே விபத்துக்குள்ளான காரில் தடை செய்யப்பட்ட 15 மூட்டை குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் சாதிக்பாட்சா நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகி சாலையோரம் நிற்பதாக அப்பகுதி மக்கள் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

    மேலும் காரில் தடை செய்யப்பட்ட 15 மூட்டை குட்கா இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த 15 மூட்டை குட்காவையும் பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தலில் ஈடுபட்டு விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோயம்புத்தூரில் இருந்து சென்ற லாரியும் பஸ்சும் மோதியதில் டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்
    சோளிங்கர்:

    கோயம்புத்தூரில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு அரக்கோணத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை சிதம்பரம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 40) என்பவர் ஓட்டிச் சென்றார். 

    சோளிங்கர் அடுத்த கொடைக்கல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வளைவில் சென்ற போது சோளிங்கரில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு சென்ற பஸ் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் பஸ் டிரைவர் கண்ணன் தமிழ்ச்செல்வன் இருவரும் வாகனங்களின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். 

    சோளிங்கர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 டிரைவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து கொண்ட பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு அருகே போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ஆற்காட்டை அடுத்த உப்புப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 47). இவர் ஆற்காட்டில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். கடந்த ஒரு வருடமாக பாலாஜி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் பாலாஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை அருகே கிரேன் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே உள்ள அக்ராவரம், மலைமேடு ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 35). அப்பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு அக்ராவரம் பொன்னை- சாலையில், மலைமேடு அருகே நடந்து சென்றபோது, பின்புறம் வந்த கிரேன் வாகனம் நாகம்மாள் மீது மோதியது. இதில் நாகம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொல்கத்தா நகரம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என்று தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்புக்குழு தலைவர் நீதிபதி பி.ஜோதிமணி கூறினார். தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்புக்குழு தலைவர்
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை மாநில திடக்கழிவு மேலாண்மைக்குழு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்புக்குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என ஆய்வு செய்து வருகிறோம்.

    ராணிப்பேட்டை புதிய மாவட்டம் என்றாலும், நகராட்சி வளாகத்துக்குள்ளேயே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தியுள்ளது சிறப்பு ஆகும்.

    இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் பயன் என்னவென்றால் மொத்தமாக கொண்டு வரப்படும் குப்பைகளில் 60 சதவீதம் மக்கும் குப்பைகளாகவும், 40 சதவீதம் மக்காத குப்பைகளாக இருக்கும்.

    ராணிப்பேட்டை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்புக்குழு தலைவர் ஜோதிமணி ஆய்வு செய்த காட்சி.

    பொதுவாக அந்த 60 சதவீதம் மக்கும் குப்பைகளை வீடுகளிலேயே பிரித்து பொதுமக்கள் பிரித்து கொடுத்துவிட்டால், அவற்றை எங்கும் கொட்டவேண்டிய அவசியம் இருக்காது.

    சென்னையைப் பொருத்தவரை 23 சதவீதத்துக்கு மேல் இந்நடைமுறை வரவில்லை. இது தொடர்பாக கடந்த 10 நாள்களுக்கு முன்பு முதல்வரை நேரில் சந்தித்து அறிக்கையை தந்துள்ளேன்.

    அப்போது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனில் சென்னை மற்றும் கோவை நகரங்கள் பிரச்சனைக்குள்ளாகும் எனவும் தெரிவித்துள்ளேன்.

    ராணிப்பேட்டை நகராட்சியில் 95 சதவீதம் குப்பைகள் தரம் பிரித்து அளிக்கப்படுவது சிறப்பு வாய்ந்தது. அதை அப்படியே பராமரிக்க வேண்டும் என்றால் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    உலக வெப்பமயமாதலில் உலக அளவில் திடக்கழிவுகள் 16 சதவீதம் பங்களிப்பு உள்ளதால், 1.5 சதவீதம் கடல் வெப்பம், 2 சதவீதமாக உயர்ந்தால் பாதி சென்னை கடலில் மூழ்கும்.

    கொல்கத்தா நகரம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. வீடுகளிலேயே 100 சதவீதம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என சட்டம் உள்ளது. அதை நகராட்சி, மாநகராட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தார்.


    மக்காத குப்பைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சாலை பணிகளுக்கு பயன்படுத்துமாறு மாநில பசுமை தீர்ப்பாய கண்காணிப்பு தலைவர் வலியுறுத்தினார்.
    ஆற்காடு:

    ஆற்காடு நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம், ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள், ஆற்காடு வீட்டுவசதி வாரியம் பகுதி 1-ல் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நடக்கிறது. இதனை மாநில திடக்கழிவு மேலாண்மைக்குழு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஜோதிமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மக்காத குப்பைகளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சாலைப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கழிவுநீர் பாலாற்றில் கலப்பதால் குடிநீர் மாசு ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஜே. எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் குபேந்திரன், ஆற்காடு நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    அதேபோன்று ராணிப்பேட்டை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளையும் பசுமை தீர்ப்பாய கண்காணிப்புக்குழு தலைவர் ஜோதிமணி ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் குபேந்திரன், நகராட்சி நிர்வாக செயற்பொறியாளர் கமலநாதன், மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர் ரவிச்சந்திரன், ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், துப்புரவு அலுவலர் அப்துல் ரஹீம், துப்புரவு ஆய்வாளர் தேவிபாலா மற்றும் வேலூர், வாலாஜா, ஆற்காடு ஆகிய நகராட்சிகளின் ஆணையாளர்களும், பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களும் உடனிருந்தனர்.
    மத்திய அரசின் நிவாரணத்தொகை ரூ.10 லட்சம் மற்றும் மாநில அரசின் நிவாரண தொகை ரூ.5 லட்சம் மொத்தம் ரூ. 15 லட்சம் நிதியுதவி தொகை அவர்களின் வங்கி கணக்கில் வைக்கப்பட்டதற்கான ஆணையினை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.
    ராணிப்பேட்டை:

    கொரோனா தொற்று ஏற்பட்டு தாய் தந்தையர்கள் இரண்டு பேரையும் இழந்த குழந்தைகளின் மறுவாழ்விற்காக தமிழக அரசின் மூலமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்து அதற்கான நிவாரண நிதிகளை வழங்கினார்கள். அதேபோல மத்திய அரசும் தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கிட ஆணையிட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் தாய் தந்தையை இழந்த 3 குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையின் மூலம் கண்டறிப்பட்டனர்.

    அவர்களுக்கு மத்திய அரசின் நிவாரணத்தொகை ரூ.10 லட்சம் மற்றும் மாநில அரசின் நிவாரண தொகை ரூ.5 லட்சம் மொத்தம் ரூ. 15 லட்சம் நிதியுதவி தொகை அவர்களின் வங்கி கணக்கில் வைக்கப்பட்டதற்கான ஆணையினை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.

    குழந்தைகளின் உறவினர்களிடம் குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்கால பயன்பாட்டிற்காக பயன்படுத்திக்கொண்டு இவர்களை நன்றாக படிக்க வைக்க வேண்டுமென அறிவுரை கூறினார். பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பராமரிக்கும் உறவினர்களுக்கு பராமரிப்பு தொகையாக ரூ.3 ஆயிரம் விரைவில் வழங்கப்படவுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 208 குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவரை இழந்துள்ளனர்.

    இதில் 137 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியுதவி ஏற்கெனவே வங்கி கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் வழங்கபட உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கெஜலட்சுமி, அலுவலக கண்காணிப்பாளர் முருகன், புறத்தொடர்பு அலுவலர் அரவிந்த் மற்றும் உறவினர்கள் கலந்துக்கொண்டனர்.
    ×