என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    காவேரிப்பாக்கத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு சுகாதார பணியாளர்கள் அபராதம் விதித்தனர்.

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் பேரூராட்சி சார்பில் பஸ் நிலையம், திருப்பாற்கடல் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து மற்றும் சுகாதார பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது போலீஸ் நிலையம் அருகே முககவசம் அணியாமல் பைக்கில் வேகமாக சென்ற 10 பேரை மடக்கி ரூ.200 வீதம் 2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா என கேட்டறிந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு அந்த இடத்திலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

    கொரோனாவின் புதிய வடிவமான ஒமைக்ரான் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.நம்மை பாதுகாத்து கொள்ள சமூக இடைவெளி, முககவசம் அணிதல், சோப்பு போட்டு கைகளை கழுவுதல் உள்ளிட்ட செயல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    2 டோஸ் தடுப்பூசி அனைவரும் கட்டாயம் எந்தவித பயமின்றி செலுத்தி கொள்ள வேண்டும் என்று ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்தனர்.
    பாணாவரம் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் பாணா வரம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கோவிந்தசாமி கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்.

    இந்நிலையில் கொரோனா டெஸ்ட் எடுத்து பார்த்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    அவருடன் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.
    சோளிங்கரில் முதியோர்களுக்கு உதவித் தொகை வழங்கும் ஆணையை முனிரத்தினம் எம்.எல்.ஏ வழங்கினார்.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் மோட்டூரில் வருவாய் துறை சார்பில் முதியோர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் ஒன்றிய தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார்.

    கிராம நிர்வாக அலுவலர் ராகசுதா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ கலந்து கொண்டு கொடைக்கல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள 11 முதியோர்களுக்கு உதவிதொகை பெறும் ஆணையை வழங்கினார். 
    அரக்கோணத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் வழங்க கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் நகர பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் தலைமையிலான  வருவாய் அலுவலர்கள் ஜெயபால், கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், முகமது இலியாஸ் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

     கடைகாரர்களிடம் முக கவசம் அணியாமலும், சமுக இடைவெளி பின்பற்றி வராதவர்களுக்கு பொருட்களை தர கூடாது   அரசு தெரிவித்துள்ள கொரோனா விதிமுறைகள் மீறி கூட்டம் கூடியிருந்தால் அபராதம் விதிக்கப்படும் என தாசில்தார் பழனிராஜன் தெரிவித்தார். 

    இதனை  தொடர்ந்து  ராணிபேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்தியன் நேற்று அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில்  கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என டிரோன் மூலம் ஆய்வு செய்தார். 

    அரக்கோணம் நகர பகுதிகளில் உள்ள சாலை முழுவதும் நகராட்சி பணியாளர்கள் முழுவதுமாக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடியது.
    ராணிப்பேட்டை:

    தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கர், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், பாணாவரம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் இயக்கப்படவில்லை. 

    இதனால் ரோடுகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் முக்கிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர். வெளியில் சுற்றி திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. ஆந்திராவில் இருந்து சென்ற வாகனங்கள் தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டன.
    அத்தியாவசியமான வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர். 

    காவேரிப்பாக்கம் ஓச்சேரி பகுதியில் வாகனங்கள் இயக்கப்படாததால் சென்னை& பெங்களூர் 6 வழிச்சாலை வெறிச்சோடி கிடந்தது.
    காவேரிப்பாக்கம் அருகே செல்போன் பார்த்ததை பாட்டி கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த பாகவெளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 75).இவரது மனைவி ஆயம்மாள். இவர்களின் பேத்தி ஆனந்தி (16). 

    வாலாஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்தார். இவரின் பெற்றோர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர்.

    இதனால் தாத்தா செல்வராஜ் பாட்டி ஆயம்மாள் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். சம்பவத்தன்று ஆனந்தி நீண்ட நேரமாக செல்போன் பார்த்தாக கூறப்படுகிறது. 

    இதனை கண்ட  ஆயம்மாள் அவரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த மாணவி வீட்டில் உள்ள பூச்சி மருந்தை குடித்து விட்டு மயக்கம் அடைந்தார். 

    மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து செல்வராஜ் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.
    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் தெரிவித்ததாவது ராணிப்பேட்டை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனை தொழிலில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு

    ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் தலைமை காவலர் நித்தியானந்தம் முதல்நிலைக் காவலர் மணிகண்டன் ஆகியோர் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் ரோந்து மற்றும் கடைகளில் ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது வாலாஜா நரோசிஜி ராவ் தெருவில் இயங்கி வரும் ஒரு மளிகை கடையில் ஆய்வு செய்த போது சட்டத்திற்குப் புறம்பாக மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 27 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ஜீவாராம் (21) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் தெரிவித்ததாவது ராணிப்பேட்டை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனை தொழிலில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    அரக்கோணம் நகராட்சி முன்னாள் பெண் ஊழியர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் காந்தி நகரை சேர்ந்த ஜெய்சங்கர் மனைவி ஜோதி (வயது 48) இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    அரக்கோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் இன்று காலை ஜோதி பிணமாக மிதந்தார்.

    இதனைகண்ட பணியாளர்கள் நகராட்சி அலுவலர்களுக்கு தெரிவித்தனர். உடனே தீயணைப்புத் துறை மற்றும் போலீசாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து சடலத்தை  மீட்டனர். 

     போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிக பணியாளராக வேலை செய்துவந்ததார். உடல்நிலை பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப் பட்டதால் பணியிலிருந்து நின்று விட்டார்.

    இந்நிலையில் கொரோனோ ஊராடங்கால் கடந்த சில மாதங்களாக போதிய வருமானம் இன்றி தவித்து வந்தார். நகராட்சியில் அலுவலர்களிடம் மீண்டும் வேலை கேட்டு வந்தார்.

     இந்நிலையில் ஜோதி பிணமாக மீட்கப்பட்டுள்ளார். உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்தாராஅல்லது வேறு ஏதேனும் காரணமா என்று அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    சென்னை- காட்பாடிக்கு மின்சார ரெயில்கள் இயக்கும் திட்டம் ஏதும் இல்லை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு நடத்தினார்.

    பின்னர் ரெயில் நிலையத்தில் ஒட்டுனர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கும் மையத்தையும், 2-வது நடை மேடையில்  குடிநீர் பாட்டில்களை நசுக்கும் (கிரஷர்) எந்திரத்தை திறந்து வைத்தார்.

    ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கான ஏசி வசதி கொண்ட தங்குமிடத்தை திறந்து வைத்து மரக்கன்றுகளை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தொடர்ந்து விண்டர்பேட்டையில் ரெயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்பையும்  திறந்து வைத்தார்.

    அவர் கூறியதாவது:-

    சென்னையிலிருந்து காட்பாடிக்கு மின்சார ரெயில் களை இயக்கும் திட்டம் எதுவும் இல்லை. விரைவு ரெயில்களில் பொது பெட்டிகள் விரைவில் முழுமையாக இணைக்கப்படும். 

    ரெயில் பெட்டிகளில் குறிப்பாக மின்சார ரெயில் களில் கல்லூரி மாணவர்கள் பயணத்தின்போது சாகசங்கள் செய்வதாகவும், பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்வதாகவும் குற்றச் சாட்டுகள் வந்துள்ளன. 

    தொடர்ந்து அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் மாணவர்கள் மீது கண்டிப்பாக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். மோசூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே வளாகத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.

    இதனையடுத்து அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் தலைவர் நைனாமாசிலாமணி பொது செயலாளர் குணசீலன் மற்றும் நிர்வாகிகள்   பொது மேலாளரிடம் மனு அளித்தனர்.

    அதில் அரக்கோணம் பழனிபேட்டை பகுதியில் உள்ள மூன்றாவது கண் சுரங்க நடைபாதையை உடனடியாக சீர் செய்து திறக்க வேண்டும். அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு  மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில் இயக்க வேண்டும். 

    திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரிட்டன் டிக்கெட் வழங்க வேண்டும், அரக்கோணத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ரெயில் இயக்க வேண்டும். 

    அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற் கரைக்கு மின்சார ரெயில் இரவு நேரத்தில் இயக்க வேண்டும்  உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மற்றும் சென்னை கோட்ட மேலாளரிடமும் அளித்தனர். 

    ஆய்வின்போது ரெயில்வே துறையின் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது.

    அதில் முதலில் கொரோனா உறுதியானது. அதன் பிறகுதான் ஒமைக்ரான் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த சிறுவன் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் அவன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

    அரக்கோணத்தில் உள்ள கடற்படை, தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் அரக்கோணம் பகுதியை சேர்ந்த போலீசார் என 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்களுக்கு ஒமைக்ரான் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்கள் மற்றும் குடும்பத்தினர் என 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்.

    சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். கிருமி நாசினிகளை கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
    ராணிப்பேட்டை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நவல்பூரில் நடந்தது. 

    கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.
    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 597 ரேசன் கார்டுதாரர்களுக்கும், 380 இலங்கை தமிழர் மறுவாழ்வு குடும்பங்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் என மொத்தம் 3  லட்சத்து 37 ஆயிரத்து 977 குடும்ப  அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு  தொகுப்பு வழங்கப்பட  உள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், நகர பொறுப்பாளர் பூங்காவனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நகர துணை செயலாளர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    அரக்கோணம் அருகே தண்டவாளங்களில் ஜல்லி கற்களை பேக்கிங் செய்யும் ரெயில் மோதியதில் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அருள். இவரது மகன் விக்னேஷ் (வயது10). அங்குள்ள தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    வீட்டில் இருந்து சைக்கிளில் சென்ற விக்னேஷ் புளியமங்கலம் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த தண்டவாளங்களில் ஜல்லி கற்களை பேக்கிங் செய்யும் ரெயில் சிறுவன் மீது மோதியது. இதில் விக்னேஷ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தான்.

    அரக்கோணம் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×