என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்.
    வாலாஜா:-

    ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா வாலாஜா பஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. 

    நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். 

    மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால், முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஏழுமலை, மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் என்.முனிசாமி, முன்னாள் நகரமன்ற தலைவர் வேதகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலாஜா நகர செயலாளர் மோகன் வரவேற்றார். 

    நிகழ்ச்சியில் வாலாஜா நகராட்சி அலுவலகம்  முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சுரேஷ், நகர அவை தலைவர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வார ஓய்வு எடுப்பதால் போலீசார் மகிழ்ச்சியுடன் வேலை பார்க்கின்றனர் என போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம் என 2 போலீஸ் உட் கோட்டங்கள் உள்ளன. 

    சட்ட ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் 18, அனைத்து மகளிர் போலீஸ் காவல் நிலையங்கள் 2, போக்குவரத்து போலீஸ் காவல் நிலையங்கள் 2, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு 2, என மொத்தம் 24 போலீஸ் நிலையங்கள் உள்ளன. ஆயுதப்படையுடன் சேர்ந்து 734 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

    போலீசார் தங்கள் உடல் நலனை பேணிக் காத்திட ஏதுவாக தங்கள் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்கு இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் முதல் நிலைக் காவலர்கள் வரையிலான போலீசாருக்கு வாரத்தில ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 

    அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒரு நாள் ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது.
    தினமும் 60 முதல் 80 காவலர்கள் வார ஓய்வு செல்கின்றனர். இதனால் தங்களது உடல் நலனை பேணிக் காக்கவும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடவும் முடிகிறது.

    இதனால் போலீசார் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் தெரிவித் துள்ளார்.
    வாலாஜா அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    வாலாஜா:

    வாலாஜாபேட்டை அடுத்த தென் கடப்பந்தங்கள் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் வருண் (24) இவர் சென்னை சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வரும் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 14ம் தேதி தீடீரென தன் வீட்டிலேயே மண்ணெண்னையை தனக்கு தானே மேலே ஊற்றிக் கொண்டு தீயை பற்ற வைத்துக் கொண்டார். 

    இதில் பலத்த தீக்காயம் அடைந்த வருணை அக்கம்பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை அனுமதித்தனர். 
    பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வருண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இச்சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

    போலீசார் விசாரணையில் பட்டதாரி வாலிபரான வருண் வேலைக்கு சரிவர செல்லாமல் இருந்ததால் தந்தை தன்ராஜ் கண்டித்ததாலும் மேலும் வருண் வேலை செய்த இடத்தில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் தற்போது அந்த பெண் வருண் காதலை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. 

    இதனால் மனமுடைந்த வருண் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
    ஆற்காடு அருகே வேலூர் தொழிலாளியை அவரது மனைவி, மாமியார் மாமனார் சேர்ந்து அடித்து கொலை செய்தனர்.
    ஆற்காடு:-
    வேலூர் சாய்நாத புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 38). கேபிள் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வெண்ணிலா (35). இவர்களுக்கு ஜெயகிருஷ்ணன் (13), சுதர்சன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    வெண்ணிலாவிற்கும், ஜெயபாலுவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வெண்ணிலா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது தந்தை வீடான ஆற்காடு அடுத்த காவனூருக்கு  சென்று விட்டார்.

    நேற்று இரவு வெண்ணிலாவை அழைத்து வர ஜெயபால் மாமனார் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த மாமனார் மோகன், மாமியார் வளர்மதி ஆகியோரிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 

    அப்போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் மோகன் மற்றும் வளர்மதி, வெண்ணிலா ஆகியோர் சேர்ந்து ஜெயபாலை கத்தி மற்றும் கம்புகளால் சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயமடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் ஜெயபால் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இச்சம்பவம் தொடர்பாக வெண்ணிலா மற்றும் வளர்மதி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மோகனை போலீசார் தேடி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் துணை வேளாண்மை எந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். 

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி, வேளாண் எந்திரங்கள் பெற விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். 

    பின்னர் விண்ணப்பம் மத்திய அரசின் இணைய தளமான www.agrimachinery.nic.in என்ற இணையதளத்தில் விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் எந்திரங்கள், கருவிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம்.

    நடப்பு ஆண்டில் முதல் தவணையாக ரூ.20 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் 30 எந்திரங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் விவரங்கள் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும். விவசாயிகள் எந்திர கருவியை தேர்வு செய்தால் அவர்கள் 1, 2, 3 என எண் இடப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.ஏற்கனவே கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படாது. 

    எனவே இந்த 2021-22 ஆண்டுக்கு புதியதாக பதிவு செய்ய வேண்டும்.ஒரு நிதியாண்டில் தனக்குத் தேவைப்படும் ஏதாவது 2 வேளாண் எந்திரங்கள், கருவிகள் மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்க முடியும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அதே வகையான வேளாண் எந்திரங்கள், கருவிகளை மானிய விலையில் வாங்க முடியும்.

    இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பாலாறு அணைக்கட்டு ரோடு, வாலாஜா, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
    பெற்றோர் திருமணத்திற்கு மறுத்ததால் காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த வேலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் சந்தியா (வயது18) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த காசி மகன் கதிர்வேல் (24) கேட்டரிங் படித்து விட்டு வேலைபார்த்து வந்தார்.

    இருவரும் அடிக்கடி பார்த்துக்கொண்டதால் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இருவரும் உயிருக்கு உயிராக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சந்தியாவை திருமணம் செய்துகொள்ள கதிர்வேல் முடிவு செய்தார். இதற்காக சந்தியாவின் பெற்றோர்களிடம் பெண் கேட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கு சந்தியாவின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சந்தியா செய்வதறியாது தவித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தியா வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ராணிப்பேட்டை போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காதலி இறந்த தகவலை கேட்ட கதிர்வேல் நொறுங்கிப் போனார். அவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். சோளிங்கர் அருகே உள்ள நரசிங்கபுரம் என்ற கிராமத்தில் உள்ள மலையடிவாரத்திற்கு சென்றார். காதலி இறப்பால் துடிதுடித்த அவர் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சோளிங்கர் போலீசார் கதிர்வேல் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் ஜோடி உயிரை மாய்த்து மரணத்தில் ஒன்று சேர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர் மாவட்டத்தில் கொரோனா விதி மீறினால் மாடு விடும் விழா ரத்து செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மாடு விடும் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. 

    இதில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பேசியதாவது:&
    பொங்கல் பண்டிகையையொட்டி நமது பண்பாடு கலாசாரத்திற்காகவும் நமது ஊரின் கவுரவத்திற்காகவும் மாடு விடும் விழா நடத்தப் படுகிறது.
    கொரோனா அதிகரித்துவரும் நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாடு விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

    இதனை விழாக்குழுவினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மாடு விடும் விழா நடைபெறும் இடம் பெரிய மைதானமாக காலியிடமாக இருக்க வேண்டும். கண்டிப்பாக பார்வையாளர்கள் 150 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது. 
    ஒருவேளை பெரிய கிராமமாக இருந்தால் வெளியூர்க்காரர்கள் விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்க மாட்டோம். காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே காளைகளை விடவேண்டும்.

    3 மணிக்கு மேல் ஒரு காளை கூட விட அனுமதிக்க மாட்டோம் ஒரு விழாவில் 100 காளைகளுக்கு மேல் விட வேண்டாம். விழாக்குழுவினர் ஒரு காளையை ஒரே ஒரு விழாவில் மட்டுமே பங்கேற்க அனுமதிப்பது குறித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.

    மாடு விடும் விழா மூலம் கொரோனா பரவி விடக்கூடாது. இதில் விழாக்குழுவினர் முழு கவனம் செலுத்த வேண்டும்.

    அனைத்து கிராமங்களிலும் மாடு விடும் விழாவின்போது விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் மாடு விடும் விழா ரத்து செய்யப்படும். ஒரு கிராமத்தில் விதியை மீறினால் அடுத்து விழா நடத்த அனுமதி வழங்க மாட்டோம்.

    ஜல்லிக்கட்டு, மாடு விடும் விழா போன்றவை நடத்துவதற்கு எப்படி ஒற்றுமையாக போராட்டத்தில் ஈடுபட்டீர்களோ  அதேபோல கொரோனா பரவாமல் கட்டுக்கோப்புடன் மாடு விடும் விழா நடத்த அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி.சுந்தரமூர்த்தி டி.எஸ்.பி.க்கள் பழனி, ராமமூர்த்தி, தனிப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் மாடு விடும் விழாக்குழுவினர் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
    வேலூர் மார்க்கெட்டில் ஒரு கட்டு கரும்பு ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    வேலூர்:

    பொங்கல் பண்டிகை யொட்டி வேலூர் மார்க்கெட்டுக்கு லாரிகள் மூலம் கரும்புகள் கொண்டு வரப்பட்டது.

    சிதம்பரம், பண்ரூட்டி சேத்தியாதோப்பு போன்ற பகுதிகளிலிருந்து கரும்புகள் வந்தன. 20 கரும்புகள் கொண்ட ஒருகட்டு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பொங்கலையொட்டி மண்பானை, மஞ்சல், வண்ணகோல பொடிகள், பூக்கள் மக்கள் ஆர்வமாக வந்து வாங்கி செல்கின்றனர்.

    பொங்கல் பண்டிகைக்கான அதிகளவில் சக்கரை வள்ளி கிழங்கு, பூசணிக்காய், வாழைத்தார், கருணை கிழங்கு போன்றவை வந்துள்ளன.
    வேலூர் மார்க்கெட்டுக்கு மக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் குற்ற நடவடிக்கைகள் தடுக்க போலீசார் மாறு வேடத்தில் மக்களோடு மக்களாக தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர்.

    கொரோனா பரவி வருவதால் வியாபாரிகள் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    ராணிப்பேட்டையில் ரோடுகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடை, கிருஷ்ணகிரி சாலை, காரை கூட்ரோடு, எம்.எப் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன விபத்துக்கள் அதிக அளவில் ஏற்படுகிறது.

    இந்நிலையில் நேற்று ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜன் உத்தரவின்படி நகராட்சி தூய்மைப்பணி அலுவலர் ரகீம், நகராட்சி ஆய்வாளர் தேவிபாலா, மேற்பார்வையாளர்கள் உமாசங்கர், கோவிந்தசாமி மற்றும் பணியாளர்கள் நகரில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் கட்டி வைத்தனர். 

    இது குறித்து தகவல் அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகம் வந்தனர். பின்னர் மாட்டின் உரிமையா ளர்கள் ஒவ்வொரு வருக்கும் மாட்டுக்கு ரூ.1000 செலுத்தி மாடுகளை மீட்டு சென்றனர். 

    மேலும் மீண்டும் சாலைகளில் மாடுகளை விட்டால் மாடுகள் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி அலுவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.
    ஆற்காடு அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலியானர்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த கலவை வேண்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது45). கூலி தொழிலாளி. இவர் வேலை சம்பந்தமாக கலவை சென்றுவிட்டு மீண்டும் வேண்டிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

    வேண்டி அருகே வரும்போது வெங்கடேசன் என்பவர் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக குமார் ஓட்டி வந்த பைக் வெங்கடேசன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் குமாருக்கு பின்பக்க தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த  கலவை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமார் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காயமடைந்த வெங்கடேசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொரோனா தடுப்பூசியால் தான் உயிரிழப்புகள் ஏற்படாமல் உள்ளது என வாலாஜாவில் அமைச்சர் காந்தி பேசினார்.
    வாலாஜா:

    வாலாஜா நகராட்சி அலுவலகம் எதிரில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து முன்னெச்சரிக்கையாக பாதுகாத்துக் கொள்ள உடல் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். 

    அப்போது அவர் கூறுகையில்:-

    இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர்கள் நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் ஒரு வாரம் வரையில் வழங்குவார்கள், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், தடுப்பூசியால் தான் தற்போது தொற்று அதிகரித்து வரும் நிலையிலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் உள்ளது என்றார்.

    அதன்பிறகு வாலாஜா பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்நோய்த்தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் சிறப்பு மையம் தயார் படுத்தப்பட்டு வருவதை அமைச்சர் பார்வையிட்டார். 

    சுமார் 700 படுக்கைகள் தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளங்களில் அமைக்கப்பட்டு வருகிறது, ஒரு அறைக்கு 6 படுக்கைகள் இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளது, மற்றொரு கட்டிடத்தில் சித்தா மையம் அமைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    மேலும் முதற்கட்டமாக அனைத்து வட்டங்களிலும் ஒரு மையம் தயார்படுத்தும் பணிகள் நிறைவடையும், இவைகளில் வாலாஜா கல்லூரியில் 245 படுக்கைகளும், சோளிங்கர் சி.எம்.அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில் 200 படுக்கைகளும், கலவை ஆதிபராசக்தி கலைக்கல்லூரியில் 120 படுக்கைகளும், அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 50 படுக்கைகளும், காவேரிப்பாக்கம் சப்தகிரி பொறியியல் கல்லூரியில் 200 படுக்கைகளும், விளாப்பாக்கம் மகாலட்சுமி கலைக் கல்லூரியில் 200 படுக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. 

    தயார் நிலையில் உள்ள மையங்களை அடுத்து தொற்று பாதிப்பைப் பொறுத்து மற்ற மையங்களும் உடனடியாக சிகிச்சைக்காக கொண்டு வரப்படும் என தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியின் போது, வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கடரமணன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட துணைத்தலைவர் லட்சுமணன், அவைத் தலைவர் சரவணன், செயலாளர் ரகுராமன், வாலாஜா அக்பர் ஷரிப், செயலாளர் குமார் மேல்விஷாரம் முகமது அயூப், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ஆற்காடு அருகே டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை நடந்துள்ளது.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் செல்லும் ஆரணி சாலையில் அரசு டாஸ்மாக் உள்ளது. 

    இந்த மதுபான கடையில் தங்கராஜ் என்பவர் மேற்பார்வையாளராகவும், விற்பனையாளர் ஒருவரும் பணியாற்றி வருகின்றர்.

    வழக்கம் போல நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளருக்கும், 
    திமிரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். 

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தங்கராஜ் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் மற்றும் 3 சி.சி.டி.வி. கேமராக்களை கொள்ளையர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. 

    இது சம்பந்தமாக திமிரி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திருடு போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×