என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    அரக்கோணம் தொழிற்பாதுகாப்பு படையில் ஆள்மாறாட்டம் செய்து பணியில் சேர்ந்த வடமாநில வாலிபர் சிக்கினார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வாகுபவர்களுக்கு இம் மையத்தில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 

    உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வானவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 25&ந்தேதி பயிற்சிக்கு  வந்தனர். சமையலர் பணி பயிற்சிக்கு வந்த உத்தர பிரதேச மாநிலம், அலே தாத்பூர் பகுதியை சேர்ந்த சுமித் குமார் (வயது 24). என்பவரின் கைரேகையை உயரதிகாரிகள் பதிவிட்டு ஆய்வு செய்தனர். 

    அப்போது உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்வான போது அங்கு பதியப்பட்ட கைரேகையுடன்  அரக்கோணம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பதியப்பட்ட கைரேகையினை சரிபார்த்த போது அவரது கைரேகை சரியாக பொருந்தவில்லை. இதனால் அவர் ஆள்மாறாட்டம் செய்து பயிற்சிக்கு வந்திருக்கலாம் என அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

    இது குறித்து மத்திய தொழிற்பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அகிலேஷ் தக்கோலம் போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சுமித்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஓச்சேரி அருகே சிறுமிக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த ஆயர்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் இவரது மகள் தனுஸ்ரீ ( வயது 7). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு  தனுஸ்ரீ  காய்ச்சலால் அவதிபட்டார். காய்ச்சல் குறையாததால் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு அங்கு பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

    இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் அந்த கிராமத்தில் வீடு, வீடாக சென்று டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தி தூய்மை செய்து கொசுப்புழுக்களை அழிக்க கிருமி நாசினி தெளித்தனர்.
    ராணிப்பேட்டையில் போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்கள பணியாளர்கள், போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.
    ராணிப்பேட்டையில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.4.80 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். 

    அதன்படி ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முககவசம் அணியாத நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராத தொகை ரூ.200 லிருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    நகராட்சி கமிஷனர் ஏகராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அப்துல்ரஹீம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேற்று முத்துக்கடை பஸ் நிலையம், பஜார் வீதி, சித்தூர் சாலை, கடைகள் ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். 

    அப்போது முககவசம் அணியாமல் வந்த பொது மக்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். ராணிப்பேட்டை நகராட்சி பகுதியில் இதுவரை முகக் கவசம் அணியாமல் வந்தவர்களிடம் இதுவரை ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.
    ஆற்காடு அடுத்த திமிரியில் பால் குளிரூட்டும் மையத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் திமிரி - பரதராமி ஊராட்சியில் பால்வளத்துறை (ஆவின்) சார்பில் அமைக்கப்பட்டுள்ள 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் குளிர்விப்பு மையத்தினை  அமைச்சரகாந்தி பயன்பாட்டிற்காக துவக்கி வைத்து குளிர்விப்பு எந்திரத்தினை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர்பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 279 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 

    நாளொன்றுக்கு சராசரியாக 1,15,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு கொடைக்கல் பால் குளிரூட்டும் நிலையம், வேலூர் பால் பண்ணை மற்றும் 26 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் மூலம் கையாளப்பட்டு குளிரூட்டப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தை உள்ளடக்கி 68 சங்கங்களின் மூலம் நாளொன்றுக்கு 33,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
    கொடைக்கல் பால் குளிரூட்டும் நிலையம் மற்றும் இம்மாவட்டத்தில் இயங்கி வரும் 5 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு குளிரூட்டப்படுகிறது. 

    புதிய பால் குளிர்விப்பு மையம்  மூலம் முகமது பேட்டை, மோகனாவரம், நம்பரை, ஆணைமல்லூர், விளாப்பாக்கம், விளாரி, டி.கே.மாங்காடு, சர்வதாங்கள் ,  புண்ணப்பாடி, லாடாவரம் ஆகிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிலிருந்து நாளொன்றுக்கு 2500 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு குளிரூட்டப்பட உள்ளது. 

    நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் ரவிகுமார், ஒன்றியக் குழுதலைவர் அசோக், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தன்ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் வேலு, துணைப் பதிவாளர் (பால்வளம்) வேலூர் விஸ்வேஸ்வரன். துணை பொதுமேளாளர் (பொறுப்பு) கோதண்டராமன், உதவி பொது மேலாளர் ரங்கசாமி, உதவி பொது மேலாளர் பானுமதி, விரிவாக்க அலுவலர் ஆனந்தன், சங்க செயலாளர் வினாயாகமூர்த்தி , பரதராமி சங்க தலைவர் சிவசங்கரன், கிளைச்சங்க செயலாளர்கள், பரதராமி பஞ்சாயத்து தலைவர் மகாலட்சுமி தயாளன், மேலதாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சுமித்ரா பிரகாஷ், ஏ,ஜி.எம்.கோதண்டராமன் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
    அரக்கோணத்தில் திருக்குறள் முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது.
    அரக்கோணம்:

    திருக்குறள் தந்த திருவள்ளுவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15-ந்தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி அரக்கோணம் திருக்குறள் தமிழ்ப் பேரவையின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான 1330 திருக்குறட்பாக்களை இணைய வழி மூலமாக ஒப்புவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாணவ மாணவியர் 133 பேர் கலந்து கொண்டு ஒப்புவித்தனர். வளர்புரம் மேல்நிலைப்பள்ளி சார்பில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு அரக்கோணம் ஒன்றிய கவுன்சிலர் வளர்புரம் நாராயணசாமி மற்றும் வளர்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரிய கழகத்தின் தலைவர் மதி ஆகியோர் திருக்குறள் புத்தங்களை பரிசாக வழங்கினர்.
    அரக்கோணம் பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    அரக்கோணம்:

    கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதிக்கு முன்பு தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் என பூஸ்டர் தடுப்பூசி பெற தகுதி வாய்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. 

    அதன்படி தக்கோலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வளாகத்தில் பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கான கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம்  நடைபெற்றது. 

    இந்நிகழ்ச்சிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை தலைமை மருத்துவ அலுவலர் சந்தீப் ராய் தொடங்கி வைத்தார். இதில்  அதிகாரிகள், வீரர்கள் கலந்து கொண்டு சுமார் 180 பேர் ஒரு பகுதியானராக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
    சென்னையை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக தாயின் 2-வது கணவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அரக்கோணம்:

    சென்னை கே.கே. நகரை சேர்ந்தவர் காவ்யா (வயது 29). முதல் கணவரை பிரிந்து ஒரு மகள், ஒரு மகனுடன் வாழ்ந்து வந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பாலச்சந்தர் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் அடுத்த சித்தூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

    காவ்யா, பாலச்சந்தர் இருவருக்கும் குடும்பதகராறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது பாலச்சந்தர் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் காவ்யாவை தாக்கினார்.

    இதுகுறித்து காவ்யா தக்கோலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பாலச்சந்தர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனையடுத்து பாலச்சந்தர் ஜாமினில் வெளியே வந்தார். மீண்டும் அவர் காவ்யா வீட்டிற்கு வர தொடங்கினார். இதனால் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக காவ்யா தனது 8 வயது மகள் மற்றும் மகனுடன் சென்னையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    சென்னையில் வைத்து அவரது மகளை குளிக்க வைத்தார். அப்போது சிறுமியின் உடலில் சில மாற்றங்கள் தெரிந்தது. இதுகுறித்து கேட்டதற்கு பாலச்சந்தர் பாலியல் கொடுத்து தவறாக நடக்க முயன்றதாக சிறுமி தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த காவ்யா நேற்று சிறுமியை அழைத்துக் கொண்டு அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார்.

    அதில் சிறுமியிடம் அத்துமீறி நடந்த பாலச்சந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இது குறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 349 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    ராணிப்பேட்டை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 349 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் ராணிப் பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,185 பேர். 

    இதுவரை மாவட்டத்தில் 47,383 பேர் குணமடைந்து வீடு களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் 39 பேரும் தனியார் மருத்துவமனையில் 56 பேரும் உள்ளனர். வீட்டு தனிமையில் 1,926 பேர் உள்ளனர்.
    அரக்கோணத்தில் பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
    அரக்கோணம்:

     அரக்கோணம் அடுத்த அம்மனூர் ஸ்ரீனிவாச நகர் 2வது தெருவை சேர்ந்த தொல்காப்பியன்(34). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். 

    இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 15-ந் தேதி அதே பகுதியில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார்.

    பின்னர் நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே    உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது  7 பவுன் தங்க நகை,  வெள்ளி கொலுசு மற்றும் ரூ.10 ஆயிரம் திருட போனது தெரியவந்தது. 

    மேலும், இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    வாலாஜாவில் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பொங்கல் தொகுப்பு குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த 4-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றது. 

    பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று அரசு விடுமுறை நாளிலும் வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டது. 

    அதனடிப்படையில் நேற்று வாலாஜா நகராட்சியில் இயங்கும் பெல்லியப்பா நகர் மற்றும் அணைக்கட்டு சாலையில் உள்ள ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருவதை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    இந்த ஆய்வில் பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளதா என பொருட்களை பிரித்து பார்த்து அவற்றின் அளவையும் சரி பார்த்தார். எவ்வளவு குடும்ப அட்டைதாரர் களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் கேட்டறிந்தார்.  பொருட்களை பெற்றுக்கொள்ளாத பொதுமக்களுக்கு முடிந்தவரையில் அனைத்து பொருட்களும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலரை தெரிவித்தார். 

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 977 குடும்ப அட்டைகளில் இதுவரை 95 சதவீதம் அதாவது 3 லட்சத்து 20 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங் கப்பட்டு உள்ளது. பெரும் பான்மையானவர்களுக்கு பொருட்கள் வழங்கப் பட்டுள்ளது. நாளை (இன்று) தைப்பூசம் அரசு விடுமுறை, எஞ்சியுள்ளவர்களுக்கு வருகிற 19-ந் தேதி வழங்கிட வேண்டும் என மாவட்ட வழங்கல் அலுவலருக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். 

    மேலும் அனைத்து தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட விவரங்களை அன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.  

    இந்த ஆய்வின்போது தாசில்தார் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலர் குமார், மண்டல துணை தாசில்தார் விஜயசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
    அரக்கோணம் அருகே வீட்டின் கூரையில் இருந்து தவறி விழுந்ததில் முதியவர் பலியானார்.
    அரக்கோணம்:-

    அரக்கோணம் அடுத்த பெருமுச்சி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (58). இவர் தனது வீட்டின் சிமெண்ட் ஷீட் கூரை  பகுதியினை சரிசெய்து கொண்டிருந்த போது திடிரென தவறி  கீழே விழுந்தார்.
     
    இதில் சீனிவாசன்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வந்த  அரக்கோணம் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×