என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    அரக்கோணம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த நாகவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் (47). சென்னை தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். 

    சம்பவத்தன்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து பலியானார். 

    தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    திருக்குறளை பின்பற்றி நடந்தால் வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு செல்லலாம் என கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் பேசினார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், திருக்குறள் முற்றோதல் செய்த மாணவ மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ், காந்தியடிகள் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கி, பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். 

    அப்போது அவர் பேசியதாவது:-

    உலகில் உள்ள 6 செம்மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று. உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்றளவும் ஒலி வடிவிலும், எழுத்து வடிவிலும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்ற மொழி நம் தமிழ்மொழி. நம் வாழ்க்கையில் குறைந்தது பத்து திருக்குறள் களை பின்பற்றி நடந்தால் வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு செல்லலாம். நம் வாழ்க்கைக்குத் தேவையான பல அரிய கருத்துக்களை திருக்குறள் நமக்கு எடுத்துரைக்கிறது. 

    திருக்குறள் மட்டுமே கற்றறிந்து பல அறிஞர்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டு சொற்பொழிவு ஆற்றி வருகின்றனர். பேச்சாற்றல் ஒரு நபரின் தனித்துவத்தையும், சொல் ஆற்றலையும் வெளிக்கொண்டு வருகிறது. ஒரு நாட்டின் தலைவரின் பேச்சுத்திறமையே அவரின் ஆளுமையை பறைசாற்றுகின்றது. பேச்சாற்றலால் மக்களின் நன்மதிப்பைப் பெற்று ஆளுமையை வளர்க்கும் திறன் பேச்சாற்றலுக்கு உண்டு. 

    மாணவ&மாணவிகள் நாட்டின் தலைவர்களின் வாழ்க்கை வரலாறை பள்ளிப் பருவத்திலேயே கற்றறிந்து அவர்களின் புகழை அனைவரிடமும் தெரிவிக்கும் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    அரக்கோணம், நெமிலி பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தினர்.
    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை  மாவட்ட  கலெக்டர்  பாஸ்கர பாண்டியன்  நேற்று  முன்தினம் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம் குறித்த கூட்டத்தில்  அரக்கோனம், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி உள்ளிட்ட டவுன் பஞ்களில் ஜனவரி மாத இறுதிக்குள் கட்டாயம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

    இந்த நிலையில் காவேரிப்பாக்கம் டவுன் பஞ்., சார்பில்  அரசு  மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார  நிலையம், பஞ்., அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

    சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் டவுன் பஞ்., ஊழியர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை  கையோடு  அழைத்து  வந்து  தடுப்பூசி  செலுத்த ஏற்பாடுகள் செய்தனர். 

    ராமசாமி தெரு, இருளர் காலனி, தோட்டக்காரன்  தெரு,  பஜார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வட்டார மருத்துவ அதிகாரி டேவிஸ் பிரவீன் ராஜ்குமார், சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ், செயல்  அலுவலர் மனோகரன் உள்ளிட்டோர் தலைமையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களின் பெயர்களை வைத்து வீடு வீடாக சென்று ஆய்வு செய்து பட்டியல் தயார் செய்யப்பட்டது. 

    வீட்டில் இல்லாத நபர்களை அவர்களின் செல்போன் மூலம்  தொடர்பு  கொண்டு உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
    பாணாவரம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
    பாணாவரம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அரசு மருத்துவமனைக்கு அருகே ஓட்டு வீட்டில் வசிப்பவர்கள் குப்பு (54), கோவிந்தராஜ் (49), வேலு (38). இவர்கள் அனைவரும்  வேலூர்,  சித்தூர்  உள்ளிட்ட இடங்களில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.

    வழக்கம்போல வீடுகளை பூட்டி விட்டு வேலைக்கு சென்று உள்ளனர். இந்த நிலையில் வேலை முடிந்து நேற்று காலை வந்து பார்த்தபோது வீடுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து ரூ. 2 ஆயிரம், வெள்ளி கொலுசு, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். 

    இதுகுறித்து 3 பேரும் பாணாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    ஒரே நேரத்தில் 3 வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அரக்கோணத்தில் ரெயில் மோதி முதியவர் பலியானார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் கிருஷ்ணாம் பேட்டையை சார்ந்த கொள்ளாபுரி (80). இவர் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த ரெயில் மோதியதில் படுகாயம் அடைந்தார். 

    உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷணன்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
    சோளிங்கர் பகுதியில் 245 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றிய அலுவலகத்தில் 245 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட சமூக நல அலுவலர் வசந்திஆனந்தன் தலைமை தாங்கினார். 

    ஒன்றியக்குழு தலைவர் கலைகுமார், துறைத்தலைவர் பூங்கொடி ஆனந்தன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தலங்கை மாரிமுத்து வெங்குப்பட்டு ராமன், சோமசுந்தரம் சுகந்திமுருகேசன், புலிவலம் நதியாமகேஷ் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் ரகுராம்ராஜு முன்னிலை வகித்தார். 

    சோளிங்கர் சமூக நல விரிவாக்க அலுவலர் சுகந்தி அனைவரையும் வரவேற்றார். 

    இந்த தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் ஏ.எம். முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சோளிங்கர் ஒன்றியத்துக்குட்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு மொத்தம் 245 பவுன் மற்றும் நோயாளிகளுக்கு நேரிலும் மற்றும் 87 லட்சம் ரூபாய் மட்டும் அவர் அவரது வங்கிக் கணக்கில் வரவு செய்து வழங்கினார்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ் சவுந்தரராஜன், தனசேகர், செங்கல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், ஒன்றிய அலுவலக மேலாளர் பிரபாகர் மற்றும் பயனாளிகள் உடனிருந்தனர்.
    அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில்  உள்ள குத்தகை அடிப்படையில் வாடகை கடை வியாபாரிகள்,  நடைபாதையை 3 அடிக்கு மேல் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர். 

    இதனால் பஸ் நிலையத்தில் பொதுமக்கள், நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பல முறை புகார்கள் சென்றாலும் நகராட்சி அதிகாரிகள், பெயரளவுக்கு மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும்,  மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகுவதும் தொடர் கதையாகவே நடந்து வந்தன. 

    இந்நிலையில் நேற்று நகராட்சிக்கு சொந்தமான புதிய பஸ் நிலையத்தில் குத்தகை அடிப்படையில் வாடகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கடைகளின் முன்பாக 3 அடிக்கு மேல் உள்ள பகுதிகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இருக்கும் நடைபாதை வழியில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கடையின் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

    அரக்கோணம் நகராட்சி ஆணையர் லதா தலைமையில் தாசில்தார் பழனிராஜன், அரக்கோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்திகணேஷ் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
    சோளிங்கர் அடுத்த தகரகுப்பம் பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வசதியாக தரைப்பாலம் அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தகரகுப்பம் ஊராட்சியில் 10 கிராமங்கள் உள்ளது. 

    தகரகுப்பம் உட்பட 9 கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் லாலாபேட்டை, ரெண்டாடி, கொடைக்கல் மற்றும் லாலாப்போட்டைக்கு சென்றும், கல்லூரி மாணவர்கள் சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டையில் படித்து வருகின்றனர்.

    லால்பேட்டையில் உள்ள சிப்காட் தொழிற் சாலையில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களின் பிரதான சாலையாக ஏரி பகுதியில் இருந்து தகரகுப்பம் பஸ் நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும். 

    அருகே உள்ள மலைப் பகுதியிலிருந்து ஓடை கால்வாய் உள்ளது. ஏரிக்கு செல்லும் வழியில் 3 இடங்களில் ஓடையில் இறங்கி தான் பள்ளிக்கும், விவசாயத்திற்கும், வேலைக்கும், விவசாய பொருட்கள் கொண்டு செல்கின்றனர். 

    மழைக்காலங்களில் ஓடையில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் இப்பகுதியில் இருந்து தகர குப்பம் பஸ் நிறுத்தம் அருகே செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படு கின்றனர்.இதனால் அவர்களின் அன்றாட பணிகள் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். 

    இதனால் ஓடை கால்வாய் புதிய பாலம் மற்றும் சிறு பாலம் அமைக்க வேண்டும். மேலும் ஓடையில் உள்ள பழைய பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 49 பேரும் தனியார் மருத்துவமனையில் 68 பேரும் உள்ளனர். வீட்டு தனிமையில் 2,005 பேர் உள்ளனர்.
    ராணிப்பேட்டை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 734 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,767-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் 48,863 பேர் குணமடைந்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 49 பேரும் தனியார் மருத்துவமனையில் 68 பேரும் உள்ளனர். வீட்டு தனிமையில் 2,005 பேர் உள்ளனர்.

    பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
    அரக்கோணம் அருகே ரெயில் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    அரக்கோணம்:

    திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் வேலு (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். 

    தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் 
    ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷணன் வேலுவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்படைவதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என விக்கிரமராஜா கூறியுள்ளார்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ளாட்சி, நகராட்சி மாநகராட்சியின் மூலம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளுக்கு அதிக அளவு கட்டணம் வசூலிப்பதுடன் கொரோனா காலத்தில் மிகவும் தொல்லை கொடுக்கின்றனர். இதனால் வியாபாரப் பெருமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். அரசு இதனை ஒருமுறைபடுத்த முன்வர வேண்டும். 

    இதேபோல் காய்கறி மார்க்கெட்டில் கொரோனா காலத்தில் பல்வேறு இடையூறுகளை சந்தித்து உள்ளனர், ஒரு நாளைக்கு ஒரு இடம் என மாற்றும் சூழ்நிலை ஏற்பட்டது, இதனால் வியாபாரிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும், வணிகர் சங்கங்களின் சார்பில் மார்க்கெட் கடைகள் கட்டப்பட்டு அது நியாயமான, குறைந்த விலைக்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளோம், அது விரைவில் செயல்படுத்த உள்ளோம். 

    மத்திய மாநில அரசுகள் வியாபார நோக்கத்தில் வியாபாரிகளிடம் தொற்று எனவும், இதரக் கட்டணம் எனவும் கூறி அபராதங்கள் விதிக்கின்றனர். 

    இதனை உடனடியாக தடுத்து நிறுத்த அரசு நிர்வாகம் முன்வரவேண்டும். பொங்கல் பண்டிகைக்கு தரமற்ற பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டு வந்தது. 

    இது டெண்டர் விடப்பட்டு இருந்ததால் அதனை எடுத்தவர்கள் இத்தகைய நிலையை ஏற்படுத்தி விட்டனர். இதுபோன்ற காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் இடமே கூறினால் தரமான நல்ல பொருட்களை நியாயமான விலையில் அரசுக்குத் தர முன்வருவோம். 

    கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் என்ற புதிய தொற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதனால் உயிர் சேதம் ஏதும் இல்லை என்றாலும் வியாபார மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஏனெனில் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் சனிக்கிழமையன்று அதிக அளவில் கடைகளில் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அப்போது தான் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தற்போது ஏற்றப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மீண்டும் குறைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உள்ளோம்.

    அதிலும் குறிப்பாக டோல்கேட் கட்டணம் அதிக அளவில் நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டே போகின்றனர். மேலும் அடாவடித்தனமாக ரவுடிகளை கொண்டும் அந்த பகுதியில் கட்டணத்தை வசூலிக்கின்றனர்.

    இதனை தடுக்க முழுமையாக டோல் கேட் கட்டணத்தை ரத்து செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    நெமிலியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    நெமிலி:
     
    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், ரெட்டிவலம், துறையூர், சிறுவளையம், பெருவளையம், வேட்டாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்த நெல்லை வெயிலில் உலர்த்தி மூட்டை கட்டி தங்களது வீட்டில் வைத்துள்ளனர். இந்த நெல்லை தனியாரிடம் விற்பதற்கு சென்றால் அவர்கள் அடி மாட்டு விலைக்கு கேட்பதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

    மேலும் உரங்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் சில விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். 

    இந்நிலையில் உடனடியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து விவசாயிகளிடம் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய ஆவணம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தின் மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    ×