என் மலர்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சி, 8 பேரூராட்சிகளில் 288 வார்டுகள்கள் உள்ளன.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் மொத்தம் 288 வார்டு உறுப்பினர்களுக்கான நேரடி தேர்தல் மற்றும் தலைவர், துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தல்கள் கால அட்டவணையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார்.
அதன்படி நகராட்சிகள் பெயர் பெயர், மொத்த வார்டுகள், மொத்த வார்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை, மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, மொத்த வாக்காளர்கள் குறித்த விவரம் வருமாறு:-
அரக்கோணத்தில்- 36 வார்டுகள், 74 வாக்குசாவடி மையங்கள், 66,845 வாக்காளர்கள் உள்ளனர். ஆற்காட்டில், 30 வார்டுகள், 59 வாக்குசாவடி மையங்கள், 46,988 வாக்காளர்கள் உள்ளனர்.
மேல்விஷாரம் - 21 வார்டுகள், 42 வாக்குசாவடி மையங்கள், 39,600 வாக்காளர்கள் உள்ளனர். ராணிப்பேட்டை -30 வார்டுகள், 47 வாக்குசாவடி மையங்கள், 41,689 வாக்காளர்கள் உள்ளனர். வாலாஜா -24 வார்டுகள், 32 வாக்குசாவடி மையங்கள் , 26,790 வாக்காளர்கள் உள்ளனர்.
சோளிங்கர் -27 வார்டுகள், 35 வாக்குசாவடி மையங்கள், 29,531 வாக்காளர்கள் உள்ளனர். நகராட்சி அளவில் மொத்தம் 168 வார்டுகள் ,289 வாக்குசாவடி மையங்கள். 2,51,443 வாக்காளர்கள் உள்ளனர்.
பேரூராட்சிகளில் அம்மூரில் - 15 வார்டுகள், 15 வாக்குசாவடி மையங்கள், 10,750 வாக்காளர்கள் உள்ளனர். கலவையில் - 15 வார்டுகள், 15 வாக்குசாவடி மையங்கள், 7,708 வாக்காளர்கள் உள்ளனர்.
காவேரிப்பாக்கத்தில்- 15 வார்டுகள், 15 வாக்குசாவடி மையங்கள், 12,172 வாக்காளர்கள் உள்ளனர். நெமிலியில் - 15 வார்டுகள், 15 வாக்குசாவடி மையங்கள், 9,310 வாக்காளர்கள் உள்ளனர்.
பனப்பாக்கத்தில் 15 வார்டுகள், 15 வாக்குசாவடி மையங்கள், 10,077 வாக்காளர்கள் உள்ளனர். தக்கோலத்தில் 15 வார்டுகள், 15 வாக்குசாவடி மையங்கள், 9,398 வாக்காளர்கள் உள்ளனர்.
திமிரியில் - 15 வார்டுகள், 17 வாக்குசாவடி மையங்கள், 13,481 வாக்காளர்கள் உள்ளனர். விளாப்பாக்கத்தில்- 15 வார்டுகள், 15 வாக்குசாவடி மையங்கள், 6,945 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் -120 வார்டுகள், 122 வாக்குசாவடி மையங்கள், 79,841 வாக்காளர்கள் உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகனங்களை கலெக்டர் தொடங்கிவைத்தார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் பகுதிகளில் நடைபெற உள்ளது. அதற்காக தேர்தல் பறக்கும் படைகள் தலா 3 குழுக்கள் என மொத்தம் 42 பறக்கும் படை குழுக்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த பறக்கும் படை வாகனத்தை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில்:-
காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரு குழுவும், பிற்பகல் 2 மணி வரை இரவு 10 மணி வரை ஒரு குழுவும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒரு குழுவும் என 3 குழுக்கள் ஒவ்வொரு பகுதியிலும் தேர்தல் சோதனை பணிகளில் ஈடுபட உள்ளனர் என்றார்.
சோளிங்கர் பாண்டியநல்லூரில் ரூ.33 லட்சத்தில் கட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் ஊராட்சியில் பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணிரகுராம்ராஜு தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நாகராஜ், சோளிங்கர் ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற துணை தலைவர் அரி அனைவரையும் வரவேற்றார். சோளிங்கர் எ.எல்.ஏ ஏ.எம்.முனிரத்தினம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ரூ.33 லட்சத்தில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார்.
மேலும் 14 பணியாளர்களுக்கு சீருடை வழங்கினார்.
நெமிலி அடுத்த மேலபுலம் அரசு பள்ளியின் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மத்திய அரசின் நிதி ஆயோக் உதவி மூலம் ரூ.12 லட்சம் செலவில் கட்டப்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகத்தினை நெமிலி ஒன்றிய குழுதலைவர் வடிவேலு திறந்து வைத்தார்.
இந்த ஆய்வகம் ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இப்பள்ளிக்கு கிடைத்த கூடுதல் சிறப்பு.
இந்த ஆய்வகத்தில் உள்ள உபகரணங்களின் மூலம் மாணவர்களின் அறிவியல் புதுமைகள் மற்றும் படைப்புகளை நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக அமையும் என அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வகத்தினை பிற பள்ளி மாணவர்களும் முன் அனுமதியைப் பெற்று ஆய்வகத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் தி.பரமேசுவரி, ஆய்வக பொறுப்பாசிரியர் கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
அரக்கோணம் அருகே குடும்ப பிரச்சனையில் கொசு மருந்து குடித்த 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த கீழ் அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி. இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக உள்ளார். இவர் கடந்த ஜனவரி 6-ம் தேதி அன்று ஒரு மாத காலம் விடுப்பில் வீட்டிற்கு வந்துள்ளார். இவரது மனைவி மோகனா (வயது 22).
7 மாத கர்ப்பிணி. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் விரத்தி அடைந்த மோனிகா வீட்டில் இருந்த கொசு மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
இதனை கண்ட வீட்டில் இருந்தவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோனிகாவை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிபேட்டையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியேற்றி நலதிட்ட உதவிகள் வழங்கினார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 73-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 73-வது குடியரசு தின விழா முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியினை ஏற்றிவைத்து சமாதான புறாக்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா, ஆகியோர் பறக்கவிட்டனர்.
இதனை தொடர்ந்து கலெக்டர், எஸ்.பி ஆகியோர் காவல் துறையின் அணிவகுப்பவை பார்வையிட்டு தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
மொத்தம் 338 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து 54 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சத்து 96 ஆயிரத்து 184 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லம், ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பூங்கொடி, அரக்கோணம் கோட்டாட்சியர் சிவதாஸ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சோளிங்கரில் திண்டிவனம் & நகரி ரெயில் பாதை அமையும் இடத்தில் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
சோளிங்கர்:
திண்டிவனம் - ஆந்திர மாநிலத்தின் நகரி இடையே புதிய அகல ரெயில் பாதை திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி பெறவும் ஏழை எளிமக்கள், விவசாய மக்கள் ரெயில் வசதி பெறும் வகையிலும், 2006-இல் அப்போதைய அரக்கோணம் தொகுதி எம்.பி.யும், ரெயில்வே இணை அமைச்சருமான ஆர்.வேலுவின் முயற்சியால், திண்டிவனம் - நகரி ரெயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய ரெயில் பாதை திண்டிவனத்தில் துவங்கி ஆந்திர மாநிலத்தின் நகரியைச் சென்றடையும்.
இந்த ரெயில் அகலப்பதை திண்டிவனம் - நகரி இடையே 184 கி.மீ. தொலைவுக்கு புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் சுமார் ரூ.498 கோடியில் செயல்படுத்தப்படும் என்று 2006-இல் அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு அறிவித்தது. அப்போது 2006 ல் சோளிங்கர் தக்கான்குளம் அருகே அதற்கான திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திண்டிவனம் - நகரி ரயில் பாதையில் திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை, தெள்ளாறு, வந்தவாசி, மாம்பாக்கம், எருமைவெட்டி, செய்யாறு, இருங்கூர், மாமண்டூர், ஆரணி, தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா சாலை சந்திப்பு, கொடைக்கல், சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, அத்திமஞ்சூரிப்பேட்டை, பள்ளிபட்டு, பட்டூர்பேட்டை, நகரி ஆகிய ரயில் நிலையங்கள் அமையவுள்ளது எனவும்.
மேலும், இந்த ரெயில் பாதையில் 12 பெரிய பாலங்கள், 114 சிறிய பாலங்கள், 66 கடவுப் பாதைகள், 11 மேம்பாலங்கள், 30 தரை வழிப் பாலங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் இத்திட்டம் சில காரணங்களால் கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. திண்டிவனம்& நகரி அகல ரெயில் பாதை விரைந்து அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்தநிலையில் நேற்று சோளிங்கர் அடுத்த கீழாண்டை மோட்டூர் வழியாக திண்டிவனம்-நகரி இடையே புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கும் இடத்தை ராணிப்பேட்டை ஆர்.டி.ஓ பூங்கொடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நில எடுப்பு தாசில்தார் வசந்தி, நில அளவர்கள் ஆனந்தன், ராஜா, வி.ஏ.ஓ. கணேஷ், உதவியாளர்கள் சிவா, ஐய்யப்பன் உடனிருந்தனர்.
திண்டிவனம்- நகரி அகல ரெயில் பாதை அமைத்து பயண்பாட்டிற்கு வந்தால் தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் வாழ்வாதாரம் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாட்டின் குடியரசு தின விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குடியரசு தின விழா நாளை (புதன்கிழமை) ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
விழாவில் கலெக்டர் காலை 8 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து அரசுத்துறை பணியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், காவலர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் சேவையாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுகிறார்.
மேலும் அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்குகிறார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் அனைத்து கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதிகமாகக் கூட்டம் கூடுவதை தவிர்க்க விழா நடைபெறும் மைதானத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் வருவதும் தவிர்க்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் வீடு தேடி சென்று சால்வை அணிவித்து மரியாதை செய்ய உள்ளார்கள்.
விழாவில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றவும் வேண்டும். மேலும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
மைதானத்திற்குள் வரும் அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை, அரக்கோணம் ரெயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்:
குடியரசு தினவிழாவையொட்டி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நிற்கும் ரெயில்களில் பயணிகளின் பெட்டிகளிலும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் பயணி களின் உடமை களையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை செய்தனர்.
மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கும் மற்றும் ரெயில்களில் பயணம் செய்ய ஏறும் பயணிகளின் உடமைகளையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை செய்து பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.
ரெயில் நிலையத்தில் நுழைவு வாயிலிலும், பிளாட்பாரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் காட்பாடி ஜோலார்பேட்டை வழித் தடத்தில் ஜோலார்பேட்டை காட்பாடி நோக்கி செல்லும் மார்க்கத்திலும் பெங்களூர் நோக்கி செல்லும் மார்க்கத்தில் உள்ள தண்டவாளங்களில் ஏதேனும் வெடிபொருட்கள் இருக்கிறதா என மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனை நாளை வரை தொடரும் என ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தெரிவித்தார்.
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் அவர்களின் உடமைகளை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் ரெயில்வே இருப்பு பாதை போலீசாரும் சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்திற்குள் அனுமதித்தனர்.
தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பெட்டியில் உள்ளே சென்று பயணிகளிடம் சோதனை செய்தனர்.
மேலும், ரெயில்வே போலீசார் தண்டவாள பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கடத்திய 4.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்ததுபவர்களை பிடிக்க குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன் பட்டி இரயில் நிலையத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு ஓடும் ரெயிலில் கடத்துவதாக குடிமை பொருள் குற்றபுலனாய்வு பிரிவு ஆய்வாளர் சதீஷ் தலைமையிலான தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு ஆய்வாளர் சதிஷ் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று சோதனை நடத்தியதில் சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் ரேஷன் அரிசி கடத்தியதாக கோனேரி குப்பத்தை சார்ந்த ராஜகுமாரி என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்,
இதை தொடர்ந்து திம்மாம்பேட்டை அருகே வாகன சோதனை செய்யும் போது வேகமாக வந்த மாருதி காரை சோதனை செய்த்தில் அதில் 1300 கிலோ ரேசன் அரிசி இருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது, அதை கடத்தி வந்த திம்மாம்பேட்டை பகுதியை சேர்ந்த அருண்குமார் வயது 24, விஜயகுமார் வயது 45 ஆகிய இருவரும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் காரையும் பறிமுதல் செய்தனர்.
நெமிலியில் கூட்டமாக சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நெமிலி:
நெமிலி யூனியனுக்கு உட்பட்ட நெடும் புலி கிராமத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், நூலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல் பட்டு வருகின்றது.
இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் பலர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். வேலை முடித்து விட்டு இரவில் வீடு திரும்பும் போது தெருநாய்கள் கும்பலாக ரோட்டில் அங்கும் இங்கும் ஓடி விபத்து ஏற்படுத்துகின்றது.
மேலும் கிராம நிர்வாக அலுலகத்துக்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.அவர்களை பார்த்து நாய்கள் குரைப்பதால் ஒருவித அச்சத்துடனே வந்து போகின்றனர்.
மேலும் சில தெரு நாய்களுக்கு உடல் முழுவதும் தோல் நோய் ஏற்பட்டு உள்ளது. இதனால் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.நெடும்புலி பஞ்.நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் ஏரியில் செத்து மிதந்த மீன்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் ஊராட்சி நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது.
அதேபோல் நெடுஞ்சாலையையொட்டி வி.சி.மோட்டூர் ஏரியும் உள்ளது. இந்த ஏரியில் மீன் வளர்ப்பதற்கு அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏலம் எடுத்து மீன்கள் ஏரியில் வளர்க்கப்படுகிறது.
இந்த மீன்களை வளர்த்து விற்பனையும் செய்யப்படுகிறது. ஏரியில் 20 ஆயிரம் மீன் குஞ்சுகளை விடப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீன்கள் மர்மமான முறையில் இறந்து ஏரியில் மிதந்தன.
இதுகுறித்து ஏரியில் ஏலம் எடுத்து மீன் வளர்ப்பவர்களிடம் கேட்டபோது பணி காலம் என்பதால் மீன்களுக்கு போதுமான ஆக்சிஜன் இல்லாததால் மீன்கள் இறந்துள்ளது என தெரிவித்தனர்.






