என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வட்டார பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் தேர்தல் பணிகள் நியாயமாகவும், வெளிப்படையாகவும் மற்றும் உரிய காலத்தில் துரிதமாக தேர்தல் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்யவும், 

    தேர்தல் தொடர்பான அறிக்கைகள் உடனுக்குடன் மாவட்ட கலெக்டர் மற்றும் பொது பார்வையாளருக்கு சமர்ப்பிக்கவும், ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பும் ஒரு துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர் வட்டார பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி, ராணிப் பேட்டை நகராட்சிக்கு ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஏ.எஸ்.குமார், ஆற்காடு நகராட்சிக்கு ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு) என்.ஏ.மதுமிதா, மேல்விஷாரம் நகராட்சிக்கு ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) ஜி.என்.கௌரி, 

    வாலாஜா நகராட்சிக்கு ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (உள்கட்டமைப்பு-1) ஏ.ஸ்டெல்லா பாய், 

    அரக்கோணம் நகராட்சிக்கு ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (உள்கட்டமைப்பு-2) எம்.சுவாமிநாதன், 

    சோளிங்கர் நகராட்சிக்கு ஊரக வளர்ச்சி முகமை கணக்கு அலுவலர் எஸ்.சசிகலா ஆகியோர் வட்டார பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதேபோல், விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உதவி இயக்குனர் (தணிக்கை) ஆர்.ஆனந்தன், 

    அம்மூர் பேரூராட்சிக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் தாரகேஸ்வரி, 

    காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உதவி இயக்குனர் (வேளாண்மை) கே.சண்முகம், 

    கலவை பேரூராட்சிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எம்.இளவரசி, நெமிலி பேரூராட்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எஸ்.சேகர், 

    பனப்பாக்கம் பேரூராட்சிக்கு தனித்துணை ஆட்சியர் (நிலம் எடுப்பு சிப்காட் பனப்பாக்கம்) எஸ்.அகிலாதேவி, 

    திமிரி பேரூராட்சிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.மணிமேகலை, தக்கோலம் பேரூராட்சிக்கு உதவி ஆணையர் (கலால்) சத்திய பிரசாத் ஆகியோர் வட்டார பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். 

    இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
    கலவை அருகே சாலையில் பாலை ஊற்றி பால் உற்பத்தியாளர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆற்காடு:

    ஆற்காடு கலவை அடுத்த பென்னகர் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்படுகிறது.

     இதில், அதே பகுதியைச் சேர்ந்த ரகு, அங்குள்ளஆதிதிராவிடர் குடியிருப்பில் கடந்த 30 ஆண்டுகளாக பாலைக் கொள்முதல் செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், கடந்த மாதம் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் புதிதாக மகளிர் ஆதிதிராவிடர் பால் கூட்டுறவுச் சங்கம் என்ற பெயரில் மற்றொரு தரப்பினர் பால் கொள்முதல் செய் வருகின்றனர். 

    இதனால், கடந்த ஒரு மாதமாக அந்தக் குடியிருப்பைச் சேர்ந்த 15--க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் ரகு வசிக்கும் இடத்துக்கே சென்று பால் ஊற்றி வந்தனர். 

    இதனால், பால் உற்பத்தியாளர்கள் புதிதாக உருவான பால் கொள்முதல் சங்கத்தைக் கண்டித்து கலவை -வாழைப்பந்தல் சாலையில் பாலை நடுரோட்டில் ஊற்றி மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

    இரு தரப்பையும் அழைத்துப் பேசி, யாருக்கு பால் ஊற்ற விருப்பமோ, அவரவர்களிடமே பாலை ஊற்றிக் கொள்ளலாம், யாரையும் நிர்பந்தம் செய்யக் கூடாது என்று புதிதாக உருவான சங்கத் பொறுப்பாளர்களிடம் எழுதி கையொப்பம் பெறப்பட்டது. 

    இதைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ராணிப்பேட்டை, அரக்கோணத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர்.
    ராணிப்பேட்டை:

    தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்கலாம் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி ராணிபேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டது.

     மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.
    மாணவ- மாணவிகள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பள்ளிக்கு சென்றனர். 

    மாணவர்களுக்கு கொரோனா விதிமுறைகள் பின்பற்றி சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து பள்ளி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்ததால் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தனர். மேலும் விடுமுறை நாட்களில் நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    பள்ளிகள் திறக்கப்பட்டதால் வேலூர் பஸ் நிலையங்களில் மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைமோதியது. கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
    ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.50 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சுகுமார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். எஸ்.எம்.சுகுமார் கடந்த சனிக்கிழமை உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் ராணிப்பேட்டையில் உள்ள அவரது வீடு பூட்டி கிடப்பதை கவனித்த திருட்டு கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.38 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா ரெக்கார்டர் உட்பட அனைத்தையும் திருட்டு கும்பல் கையோடு எடுத்து சென்றனர்.

    வீட்டில் சமையல் பணியாளர்கள் வந்து பார்த்த போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து எஸ்.எம்.சுகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் ராணிப்பேட்டை டி.எஸ்.பி. பிரபுவிடம் புகார் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தி திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.

    இது தொடர்பாக தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த பகுதி ரோட்டில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    அரக்கோணம் அருகே பாரதிதாசனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்ற மாணவரை பாராட்டி ரூபாய் ஐம்பதாயிரத்திற்கான காசோலையை கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.சுந்தர் வழங்கினார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் பாரதிதாசனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2021-2022 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற டி. அரவிந்த் ரகுநாத், பாரதிதாசனார் நீட் அகாடமியில் பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். 

    பாரதிதாசனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்ற மாணவரை பாராட்டி ரூபாய் ஐம்பதாயிரத்திற்கான காசோலையை கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.சுந்தர் வழங்கினார். 

    அப்போது கல்விக் குழுமத்தின் இயக்குனர்கள் எஸ்‌.பத்மா, எஸ்‌. ராஜசேகர், தாளாளர் தெய்வசிகாமணி, முதல்வர் கோபகுமார் ஆகியோர் மாணவரை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
    அரக்கோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்.என்.பாளையம் ஊராட்சி தொடக்க பள்ளியில் ரூ.8.12 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் கட்டி முடிக்கப்பட்டதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் ஒன்றியம் பாராஞ்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பையும் ஊராட்சியில் கட்டப்பட்டுவரும் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் வீடுகளையும் நேரடியாக சென்று பார்வையிட்டார். அப்போது வீடு கட்டும் பணிக்கு நிதி உதவி கிடைக்காமல் பணி நிலுவையில் உள்ளதை பயனாளிகள் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்த போது அதற்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    பின்னர், ஊராட்சியில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி கால்வாய் தூர்வாரும் பணி நடைப்பெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அலுவலர்களிடம் 100 நாள் பணியாளர்கள் பணி நேரம் முழுவதும் பணி செய்வதையும், அதிக வயதானவர்களுக்கு வேலை வழங்கிடும்போது அவர்கள் பணி செய்வார்களா என்பதையும் உறுதி செய்து பணியினை வழங்கிட வேண்டும் என்றும் தெரிவித்தார். 

    தொடர்ந்து, அரக்கோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்.என்.பாளையம் ஊராட்சி தொடக்க பள்ளியில் ரூ.8.12 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் கட்டி முடிக்கப்பட்டதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் மரக்கன்றுகள் இல்லாமல் இருந்ததை பார்த்து பள்ளியை சுற்றிலும் மரக்கன்றுகள் நட உத்தரவிட்டார். அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளில் கட்டுமான பணிகள் தரமானதாக இருப்பதையும் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆய்வின் போது உதவி திட்ட அலுவலர் மதுமிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
    புதேரி கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்ப்பட்ட தகராறு காரணமாக ஒரு தரப்பினர் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நெமிலி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க சென்றனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புதேரி கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்ப்பட்ட தகராறு காரணமாக ஒரு தரப்பினர் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நெமிலி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க சென்றனர். 

    இந்த பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் திருவிழா செய்து சாமி கும்பிட சரவணன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார் அவர் மீது நடவடிக்கை எடுக்க நெமிலி காவல் நிலையத்தில் புகார் அலிக்கப்பட்டது.

    அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு செயதார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் பணிகள் மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகளுக்கான பணிகள் சம்மந்தமாக மாவட்ட தேர்தல் அலுவலுரும், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ், அரக்கோணம்  தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையருமான லதா ஆகியோர் உடன் இருந்தனர். 

    மேலும், அரக்கோணம் - காஞ்சிபுரம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே  ரவுண்டானா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    காவேரிப்பாக்கம் அருகே தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி ஓவிய போட்டி பேச்சு போட்டி நடத்தப்பட்டது.
    காவேரிப்பாக்கம்:

    ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 24-ந்தேதி தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது. 

    இந்நிலையில் காவேரிப்பாக்கம் யூனியனுக்கு உட்பட்ட ஈராளச்சேரி கிராமத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது. 

    இதில் குழந்தைகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. 

    விழாவில் காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கலந்து கொண்டு பேசியதாவது:- 

    வருங்கால நாட்டின் நம்பிக்கை ஒளியான மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை திறம்பட அமைத்து கொள்ள கல்வியே சிறந்த ஆயுதமாகும். எந்த சூழ்நிலை வந்தாலும் பெண்கள் பயப்படாமல் எதிர்த்து நின்று சாதிக்க வேண்டும்.

    மேலும் படிக்கின்ற வயதில் செல்போன் பயன்படுத்தக்கூடாது. செல்போன் நமது பொன்னான நேரத்தை விழுங்கி விடும் அபாயம் மிக்கது என்று அறிவுரை வழங்கினர்.
    பாணாவரம் டெங்கு பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    பாணாவரம்:

    பாணாவரம் அடுத்த ரசூல் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 50). விவசாயி. இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. 

    இந்த நிலையில் சோளிங்கரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைகாக சேர்ந்தார். 

    அங்கும் குணமாகாததால் வேலூர் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அங்கு பரிசோதித்து பார்த்தபோது அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி யானது. 

    இந்நிலையில் வட்டார மருத்துவ அலுவலர் டேவிஸ் பிரவீன் ராஜ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ், சுகாதார ஆய்வாளர் தமிழரசன் உள்ளிட்டோர் பாணாவரம் பகுதிகளில் வேறு யாருக்கும் டெங்கு பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்து வருகின்றனர்.

    மேலும் ரசூல் பேட்டை முழுவதும் கொசுப்புழுக்களை ஒழிக்க பாணாவரம் பஞ்., தலைவர் அர்ஜுனன் மற்றும் ஊழியர்கள் வீடு வீடாக சென்று கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    அரக்கோணம், பனப்பாக்கம், காவேரிப்பாக்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
    பனப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், அரக்கோணம், நெமிலி ஆகிய பகுதிகளில் நகராட்சி, உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வராததால் முதல் நாளன்று உள்ளாட்சி தேர்தல் வெறிச்சோடி காணப்பட்டது.
    பாணாவரம் அருகே மேஸ்திரி வீட்டில் 12 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது30). கட்டிட மேஸ்திரி. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரியங்கா (24). என்பவருடன் திருமணம் நடந்தது.

    இந்நிலையில் தம்பதியர் வீட்டை பூட்டி விட்டு வள்ளுவம் பாக்கம் கிராமத்தில் உள்ள உறவினர் சீமந்த நிகழ்ச்சிக்கு சென்று மாலை 5 மணிக்கு திரும்பி வந்தனர். 

    அப்போது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தனர். 

    அப்போது பீரோவை உடைத்து அதில் பிரியங்கா திருமணத்தின் போது தாய் வீட்டில் சீதனமாக கொடுத்த இரண்டு ஜோடி கம்மல், மோதிரம், செயின் உள்ளிட்ட 12 பவுன் தங்க நகைகள் மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

    மேலும் பீரோவில் இருந்த பர்ஸில் ரேசன் கார்டு, ஆதார் கார்டு 2 ஆயிரம் பணம், வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்களையும் திருடி சென்றுள்ளனர்.
    இதுகுறித்து வெங்கடேசன் பாணா வரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

    வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைத்து அங்கிருந்த சில பொருட்களில் இருந்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்து எடுத்தனர்.
    மேலும் மோப்ப நாய் சிம்பா கொள்ளை நடந்த வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் ஓடி நின்றுவிட்டது. 

    இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன் மாலை 7 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
    ×