என் மலர்
ராணிப்பேட்டை
வாலாஜா தன்வந்திரி பீடத்தில் கருடன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அடுத்த கீழ்ப்புதுப் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கடந்த 4-ந் தேதி பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் பிரதிஷ்டா வைபவ கால பூஜைகள் தொடங்கப்பட்டது.
5-ந் தேதி (சனிக்கிழமை) மூலவர் விஸ்வரூப அஷ்டநாக கல் கருடருக்கு நவகலச திருமஞ்சனம் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. இதனைதொடர்ந்து மேட்டூர் சகோதரர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் 21 அடி உயரமுள்ள அஷ்ட நாக விஸ்வரூப கல்கருடர் பிரதிஷ்டா வைபவத்தை முன்னிட்டு விஸ்வரூபம், கோ பூஜை, த்வார பூஜை, கும்ப, மண்டல, பிம்ப, அக்னி சதுஸ்தான பூஜை, மஹா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு, கும்ப உத்தாபனம், நூதன பிம்பத்திற்கு ப்ரோக்ஷம், ப்ராணப் பிரதிஷ்டை, தீபாராதனை, சாத்துமுறை நடைபெற்றது.
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சாமிகள் 1000 கிலோ புஷ்ப அபிஷேகம் செய்தார். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புஷ்ப பிரசாதமும், சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் தன்வந்திரி குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் 22 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1,279 மனுக்கள் ஏற்கப்பட்டது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் 1301 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.
இதில் அரக்கோணம் நகராட்சியில் 216 மனுக்களில் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. ஆற்காடு நகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 116 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேல்விஷாரம் நகராட்சியில் 137 மனுக்களில் 2 மனுக்களும், ராணிப்பேட்டை நகராட்சி 126 மனுக்களில் 3 மனுக்களும், சோளிங்கர் நகராட்சியில் 167 மனுக்களில் 5 மனுக்களும், வாலாஜா நகராட்சியில் 92 மனுக்களில் ஒரு மனுவும் நிராகரிக்கப்பட்டது.
அம்மூர் பேரூராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 70 மனுக்களும், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 64 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தக்கோலம் பேரூராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 65 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.கலவை பேரூராட்சியில் 49 மனுக்களில் ஒரு மனுவும், நெமிலி பேரூராட்சியில் 53 மனுக்களில் ஒரு மனுவும், பனப்பாக்கம் பேரூராட்சியில் 44 மனுக்களில் ஒரு மனுவும், திமிரி பேரூராட்சியில் 56 மனுக்களில் ஒரு மனுவும், விளாப்பாக்கம் பேரூராட்சியில் 46 மனுக்களில் ஒரு மனு நிராகரிக்கப்பட்டது.
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குநர் ஆய்வு செய்தார்.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓச்சேரி, மாண்டூர், சிறுகரும்பூர், உள்ளிட்ட ஊராட்சிகளில் சிமெண்ட் சாலை, பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்சி திட்ட பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாமண்டூர் ஊராட்சியில் நடைபெற்று வருகின்ற பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், மற்றும் ரூ.8.75- லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.
சிமெண்ட் சாலையின் உறுதி தன்மமையை ஆய்வுக்கு அனுப்பி வைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் கிடப்பில் உள்ள பணிகளை உடனடியாக முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
இதனையடுத்து சிறுகரும்பூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணிகளையும் ஆய்வு செய்தார்.
மேலும் காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 29- ஊராட்சிகளிலும், கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காவேரிபாக்கம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும் பணிகளை தேர்தல் பொது பார்வையாளர் எஸ்.வளர்மதி ஆய்வு செய்தார்.
காவேரிபாக்கம் பேரூராட்சியில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று.
வேட்புமனுக்களில் வேட்பாளர்கள் வழங்கியுள்ள படிவங்களில் உரிய முறையில் பூர்த்தி செய்து ஆவணங்களை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரிபார்த்த பின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய முகவர்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக தெரிவித்து வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.
மேலும் வேட்புமனுக்கள் நிராகரிப்பு குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்து வேட்பாளரிடம் தெரிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளின் போது ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதை வேட்பாளர்கள் தெரிவிக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
அதற்கான விளக்கங்களையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கினார்கள். இந்த பணிகள் நடைபெற்று வந்ததை காவேரிப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் பொது பார்வையாளர் எஸ்.வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் வேட்புமனுக்கள் ஏற்பு மற்றும் நிராகரிப்பு குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வட்டார தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக 3 வாக்கு எண்ணும் மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், மேல்விஷாரம் ஆகிய 6 நகராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக வாக்கு எண்ணும் மையம் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும், அரக்கோணம் நகராட்சியில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக வாக்கு எண்ணும் மையம் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியிலும்.
அம்மூர், கலவை, காவேரிப்பாக்கம், நெமிலி, பனப்பாக்கம், தக்கோலம், திமிரி, விளாப்பாக்கம் ஆகிய 8 பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக வாக்கு எண்ணும் மையம் தென்கடப்பந்தாங்கல் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியிலும் அமைக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆற்காடு அருகே அரிசி வியாபாரியிடம் ரூ.5 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஆற்காடு:
ஆற்காடு கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 48). அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் திமிரி - அண்ணாநகர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அந்த வழியாக வந்த ஜனார்த்தனனை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் ஆவணங்களின்றி ரூ.5 லட்சம் எடுத்து வந்தது தெரிந்தது.
அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் உரிய ஆவணங்களை காண்பித்து எடுத்துச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினர்.
பின்னர் பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் பொறுப்பாளர் ஏழுமலையிடம் ஒப்படைத்தனர்.
கவேரிப்பாக்கம் அருகே கண்டெய்னர் லாரியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த உத்திரம்பட்டு கிராமம் ஏசுநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 29) இவர் பெங்களூரில் உள்ள தனியார் லாரி கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
சென்னையில் உள்ள கம்பெனியில் லோடு ஏற்ற கண்டெய்னர் லாரியில் சென்றார்.
அப்போது லாரியை ஓச்சேரியில் ரோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு தனது சொந்த ஊரான உத்திரம்பட்டில் உள்ள தனது வீட்டுக்கு குளிக்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை.
அதிர்ச்சியடைந்த அவர் ரோட்டின் 2 பக்கமும் தேடி பார்த்துள்ளார்.இதுகுறித்து அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப் இன்ஸ்பெக்டர் சேகர், சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் உடனடியாக அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தகவல் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் சுங்குவார் சத்திரம் அருகே லாரி நின்றிருப்பதாக தகவல் வந்தது. விரைந்து சென்ற போலீசார் லாரியை மீட்டனர்.
அங்கு லாரியை கடத்தி சென்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த காட்டுக்கொள்ளை கிராமத்தை சேர்ந்த செல்வம் (27) என தெரியவந்தது.
அவர்மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே உள்ளது. அவரை போலீசார் கைது செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் நகராட்சியில் ஒரே நாளில் 116 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 116 பேர் நேற்று ஒரே நாளில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்ற நிலையில் அரசியல் கட்சியினர் நேற்று போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 28&ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.
நேற்று வேட்பு மனு தாக்கல் களைகட்டியது. வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (வெள்ளிக் கிழமை) கடைசி நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் ஏராளமானோர் செய்து வருகிறார்கள். திமுக, அதிமுக, பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.
அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் அரக்கோணம் நகராட்சியில் 116 பேரும், தக்கோலம் பேரூராட்சியில் 23 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இது வரையில் அரக்கோணம் நகராட்சியில் 133 பேரும், தக்கோலம் பேரூராட்சியில் 44 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. நாளை (5-ந்தேதி) மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. பின்னர் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
ராணிப்பேட்டை அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் கொள்ளை நடந்தது குறித்து சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அண்ணா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் எஸ்.எம்.சுகுமார். இவர் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை பொருளாளராக உள்ளார்.
கடந்த 31-ந்தேதி அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு ரூ.38 லட்சம் ரொக்கப் பணம், ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து தொழிலதிபர் சுகுமார் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் டிஎஸ்பி பிரபு தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து டிஎஸ்பி பிரபு கூறியதாவது:-
அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி கொண்டிருக்கிறோம்.
அவரது வீட்டிலிருந்த சி.சி.டி.வி. கேமரா ரிசீவரை மர்ம கும்பல் எடுத்து சென்றதால் வீட்டை சுற்றி உள்ள மற்ற கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்.
விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என தெரிவித்தார்.
வாலாஜா காசி விஸ்வநாதர் கோவிலில் நடந்த கொள்ளை முயற்சியால் பரபரப்பு.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா எம்.பி.டி சாலையையொட்டி காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவில் பிரதோஷ நாட்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பொதுமக்கள் வழிபட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்று விடியற்காலை மர்ம நபர்கள் கோவிலின் சுற்று சுவர் மீது ஏறி கோயிலில் குதித்து கோயில் நுழைவுவாயில் உள்ள அறையின் பூட்டை உடைத்து அறையில் இருந்த கணினி திருடிக்கொண்டு பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள கதவை உடைக்க முயற்சி செய்தனர். அப்போது அலாரம் சத்தம் கேட்டதும் கணினியை தூக்கிக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகிகள் வாலாஜா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாலாஜா தன்வந்திரி பீடத்தில் 16.8 அடியில் விஸ்வரூப அஷ்டநாக கருட பகவான் சிலை நிருவப்பட உள்ளது.
வாலாஜா:
வாலாஜா தன்வந்திரி பீடத்தில் 16.8 அடியில் விஸ்வரூப அஷ்டநாக கல் கருட பகவான் பிரதிஷ்டை வரும் 6-ந் தேதி நடக்கிறது.
இதை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை குபேர சாம்பராஜ்ய மஹாலட்சுமி ஹோமம், மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை பகவத் அனுக்ஞை, பாகவத் அனுக்ஞை, புண்யாக வாசனம், விஷ்வக்சேன பூஜை, ம்ருத்ஸங்கிரஹணம், பாலிகா ஸ்தாபனம், ஸோம ஹோமம், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், திக் பந்தனம்.5ம் தேதி சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கோ பூஜை, வேதபாராயணம், புண்யாஹவாசனம், தீர்த்தஸங்கிரஹணம், யாகசாலை ப்ரவேஸம், மணோன்மான ப்ரமான ஹோமம் முதல் கால பூர்ணாஹுதி சாத்து முறை மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை பிம்ப நயணோன் மீலனம், ஸ்தபன கலச திருமஞ்சனம், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் ஹோமம் பூர்ணாஹுதி சயனாதி வாஸம் சாத்து முறை, 6ம் ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை விஸ்வரூபம், கோ பூஜை, 3ம் காலத்திற்கு த்வார பூஜை, கும்ப, மண்டல, பிம்ப, அக்னி சதுஸ்தான பூஜை, மஹா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு, கும்ப உத்தாபனம் நூதன பிம்பத்திற்கு ப்ரோக்ஷம், ப்ராணப் பிரதிஷ்டை தீபாராதனை நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவ படிப்புக்கு தேர்வான அரசு பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ள 7 மாணவ - மாணவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பாராட்டி பரிசு வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த 7 மாணவ - மாணவிகள் மூலம் மாவட்டத்திற்கு பெருமை கிடைத்துள்ளது. இந்த மாதிரியான வாய்ப்பு அனைவருக்கும் எளிதாக கிடைக்காது.
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ஆகவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நன்றாக படித்து சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும்.
ஒரு ஏழையின் கண்ணீரை நம்மால் துடைக்க முடியும் என்றால் அதைவிட புண்ணியம் வேறு எதுவும் இல்லை.இந்த வாய்ப்பு உங்களுக்கெல்லாம் தமிழக அரசு பிறப்பித்த உள் ஒதுக்கீட்டில் கிடைத்துள்ளது.
உங்கள் படிப்புக்காக அரசாங்கம் செலவழிக்கின்ற பணத்தினை நீங்கள் மக்களுக்கு சேவை மூலமாக வழங்க வேண்டும்.
உங்களைப் படிக்க வைத்த பெற்றோர்களுக்கும் உங்களுக்கும் எனது மனதார பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.






