என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பினை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை எல்.எப்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரி, ஆற்காடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.

    மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரி, சோளிங்கர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரக்கோணம் சி.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பினை தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது தேர்தல் பொது பார்வையாளர் கூறியதாவது:-

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கான பணிகளை எவ்வித பிரச்சினைகள் ஏற்படாமலும், சலசலப்புக்கு இடமளிக்காத வகையிலும் இப்பயிற்சி வகுப்பில் அனைத்து தகவல்களையும் முறையாக தெரிந்து கொள்ள வேண்டும். 

    வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாளில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று மாதிரி வாக்குப்பதிவை மேற்கொண்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியான முறையில் இயங்குகின்றனவா? என உறுதி செய்ய வேண்டும்.

    வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் படிவங்களை எவ்வித தவறும் ஏற்படாத வண்ணம் பூர்த்தி செய்வதை தெரிந்து கொள்ள வேண்டும். 

    வாக்களிக்க தெரியாத நபர்கள் எவரேனும் வாக்களிக்க உதவி செய்யுமாறு கேட்கும்போது, அவர்களை வெளியில் ஒட்டப்பட்டுள்ள வாக்களிப்பது எப்படி என்பதற்கான படிவத்தினை பார்த்து தெரிந்து கொள்ளும்படி தெரிவிக்க வேண்டும்.வாக்காளர்களுக்கு எக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட பட்டனை அழுத்துங்கள் என தெரிவிக்க கூடாது.

    வாக்குப்பதிவின் போது அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் அருகில் சென்று ஏதேனும் பிரச்சனையை சரிசெய்யும் போது அங்குள்ள ஏஜெண்டை அருகில் வைத்துக்கொண்டு அப்பணியைச் செய்ய வேண்டும். 

    செல்போனில் வாக்குப்பதிவை பதிவு செய்வதையும் செல்பி புகைப்படம் எடுப்பதையும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும்.

    வாக்குப்பதிவு எந்திரங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனுக்குடன் மண்டல அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரி செய்திடும் நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதை வாக்குச்சாவடி அலுவலர் முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 
    வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு எந்திரத்தில் பூஜ்ஜியம் காட்டுகிறதா என்பதை பூத் ஏஜென்ட்கள் முன்னிலையில் காண்பிக்க வேண்டும்.

    வாக்குப்பதிவின் போது மாலை 5 மணிக்கு பிறகு வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு வரிசையின் கடைசி நபரிடமிருந்து டோக்கன் வழங்கிட வேண்டும். 

    கொரோனா பாதித்த வாக்காளர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. விதி முறைகளை கடைப்பிடித்து அவர்கள் வாக்களிப்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

    எந்த ஒரு நபருக்கோ அல்லது கட்சிக்கு சாதகமாக செயல்படுவது குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் நடுநிலையுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    ராணிப்பேட்டை அருகே திருட்டில் ஈடுபட்ட 2-பேர் கைது செய்யப்பட்டனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் நேற்று ஆட்டோ நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

    அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். 

    போலீசார் விசாரணையில் மதுரையைச் சேர்ந்த அஜித் (23) ராணிப்பேட்டையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். மற்றொருவர் 17 வயது சிறுவன் ஆவான்.இவர்கள் இருவரும் ராணிப்பேட்டை மற்றும் வாலாஜா பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. 

    சமீபத்தில் ராணிப்பேட்டை தனியார் கம்பெனி அருகே ஒரு பெண்ணிடம் 2 சவரன் செயின் பறிப்பு மற்றும் வாலாஜா கோயிலில் ரூ.3000 ரோக்கம் மற்றும் கணினி திருட்டு ஆகிய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. 

    இதனை அடுத்து அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிளில் இரண்டு சவரன் நகைகள் மற்றும் கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    சோளிங்கர் அருகே பைக் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமம் அருந்ததியர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (22). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். 

    இவர் நேற்று முன்தினம் இரவு காவேரிப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். 

    மங்கலம் கிராமம் அருகே பைக்கில் வந்த போது அதே பகுதியை சேர்ந்த குமார் (42). என்பவரின் சைக்கிள் மீது  பைக் மோதியது. இதில் சைக்கிளில் சென்ற குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

    ஆனால் பைக்கில் வந்த பார்த்திபன் பலத்த காயமடைந்து மயக்கம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    அரக்கோணம் அருகே ஆற்றில் மூழ்கி இளம் பெண் பரிதாபமாக இறந்தார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த அரிகிலாபாடி பாளையக்கார கண்டிகையை சேர்ந்தவர் தனசேகர் (36). டிராக்டர் டிரைவர் இவரது மனைவி நந்தினி (29). இவர்களுக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு பெண் மற்றும் 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். 

    நந்தினி மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று கல்லாறில் மாடுகளை சுத்தம் செய்வதற்காக ஆற்றில் இறங்கியபோது ஆழமான பகுதி இருப்பது தெரியாமல் கால் தவறி நீரில் மூழ்கினார். 

    இதனை கண்ட அங்கிருந்தவர்கள் உடனே ஆற்றில் இறங்கி தேடினர். ஆனால் நந்தினி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரை பிணமாகதான் மீட்க முடிந்தது.

    அரக்கோணம் தாலுகா போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    அரக்கோணத்தில் குடிநீர் விநியோகம் செய்யாததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடி தண்ணீர் வினியோகம் செய்யப்படாததால்  பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

    இதனை கண்டித்தும் சீரான குடிநீர் வழங்ககோரியும் பழனிப்பேட்டை பகுதியில் உள்ள பொது மக்கள் திடிரென பழனி பேட்டை காந்தி ரோட்டில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். 

    தகவலறிந்து அங்கு வந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சினிவாசன் மற்றும் நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

    அப்போது மறியலில் ஈடுபட்டவர்களுடன் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பைப் லைன்கள் பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் சீரான குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதாகவும். 

    மேலும், தக்கோலம் நீரேற்று நிலையம் மட்டுமே செயல்படுவதால் போதிய குடிநீர் வழங்க முடியவில்லை என்றும் தொடர்ந்து பொய்கைப்பாக்கம் அருகே பைப் லைன் உடைப்பு ஏற்பட்டுள்ளதை சரி செய்யும் பணி நிறைவு பெறும் நிலையில் இருப்பதால் விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். 

    இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    காவேரிப்பாக்கம் அருகே இன்று காலை தாயுடன் குளிக்க சென்ற 2 சிறுமிகள் கிணற்றில் விழுந்த உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள அம்மனேரி கிராமத்தை சேர்ந்தவர் முரளி. கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ரேகா (வயது32). தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவரது மகள்கள் கோமதி (12) அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். தீவிகா (8) 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று ரேகா அவரது மகள்களை அழைத்துக் கொண்டு காவேரிப்பாக்கம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

    இன்று காலை அவரது தாய் வீட்டிற்கு சொந்தமான விவசாய நிலத்திலுள்ள பம்புசெட்டில் மகள்களுடன் குளிக்க சென்றார்.

    ரேகா பம்புசெட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது கோமதி, தீவிகா இருவரும் கிணற்றின் அருகே சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டனர்.

    சத்தம் கேட்டு ரேகா சென்று பார்த்தார். அப்போது 2 சிறுமிகளும் கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை ரேகாவால் மீட்க முடியவில்லை. அவர் அழுது துடித்தபடி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கோமதி, தீவிகா இருவரும் கிணற்றுக்குள் மூழ்கி விட்டனர். சிறுமிகளை நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுமிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். 30 நிமிட தேடுதலுக்கு பிறகு இருவரையும் பிணமாக மீட்டனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காவேரிப்பாக்கம் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அரக்கோணம் பேரிடர் மீட்பு படை இயக்குனர் 4 வது பட்டாலியனில் ஆய்வு செய்தார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம்தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநர் அத்துல் கார்வால் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை 4 வது பட்டாலியனில் ஆய்வு மேற்கொண்டார். 

    அப்போது வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்பு வீரர்களுடன் உடற்பயிற்சி மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.

    மேலும் பேரிடர் காலங்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் மோப்ப நாய்களையும் பார்வையிட்டார் பின்பு வீரர்களுடன் கலந்துரையாடி குறை நிறைகளை கேட்டறிந்தார் .

    பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகள் குறித்தும் பயிற்சிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் படைப்பிரிவின் சீனியர் கமாண்டன்ட் ரேகா நம்பியார் மற்றும் அதிகாரிகளின் கலந்துகொண்டனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, சோளிங்கர் மற்றும் மேல்விஷாரம் ஆகிய 5 நகராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையமான வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. 

    அங்கு நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

    இக்கல்லூரியில் பிரதான கட்டிடம் தரைத்தளத்தில் வாலாஜா நகராட்சி மற்றும் ராணிப்பேட்டை நகராட்சியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அறைகளும், அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா கட்டிட தரைதளத்தில் ஆற்காடு நகராட்சியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அறைகளும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் தரைத்தளத்தில் மேல்விஷாரம் மற்றும் சோளிங்கர் நகராட்சியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அறைகளும் அமைக்கப்படுகிறது.

    ஒரு அரங்கில் வாக்குப் பெட்டிகள் வைக்கும் பாதுகாப்பு அறையும், மற்றொரு அறையில் வாக்குகளை எண்ணும் அறையும் அமைக்கப்படுகிறது. இதற்கான வழித்தடங்கள் தனித்தனியாக அமைக்கப்பட உள்ளது. 

    வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தனித்தனியாக செல்லவும் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கவும் பாதைகள் அமைக்கப்படும் என தேர்தல் பொது பார்வையாளர் தெரிவித்தார்.

    தொடர்ந்து ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் உள்ள கட்டிடத்தில் தரைதளத்தில் தக்கோலம், பனப்பாக்கம், நெமிலி, காவேரிப்பாக்கம் பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அறைகளும், முதல் தளத்தில் அம்மூர், விளாப்பாக்கம், திமிரி, கலவை பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

    வாக்கு எண்ணும் அறைகளுக்கு தனித்தனியாக வேட்பாளர்களும், அலுவலர் களும் சென்று வருவதற்கான பாதைகளையும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்வதற்கான பாதைகளும் எவ்வித இடையூறும் இல்லாமல் அமைக்கப்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபு, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
    ராணிப்பேட்டையில் வாக்குபதிவு அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு தேதி மாற்றம்
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.

    வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை (புதன்கிழமை) நடைபெற  இருந்து. 

    நிர்வாக காரணங்களுக்காக 10-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும். வாக்குப்பதிவு அலுவலர்கள் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அதே இடத்தில் மற்றும் நேரத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். 

    இந்த தகவலை  கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,067 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1067 பேர் போட்டியிடுகின்றனர். 4 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அரக்கோணம் நகராட்சியில் 216 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 210 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் 49 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 161 பேர் போட்டியிடுகின்றனர்.

    ஆற்காடு நகராட்சியில் 116 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 18 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 96 பேர் போட்டியிடுகின்றனர். 

    மேல்விஷாரம் நகராட்சியில் 137 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 135 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 6 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 129 பேர் போட்டியிடுகின்றனர்.

    ராணிப்பேட்டை நகராட்சியில் 126 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 123 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 23 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 100 பேர் போட்டியிடுகின்றனர்.

    சோளிங்கர் நகராட்சியில் 167 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 162 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 46 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 116 பேர் போட்டியிடுகின்றனர்.

    வாலாஜா நகராட்சியில் 92 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. 91 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 7 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 86 பேர் போட்டியிடுகின்றனர்.

    மொத்தமுள்ள 6 நகராட்சிகளில் 854 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 837 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 149 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 686 பேர் போட்டியிடுகின்றனர்.

    அம்மூர் பேரூராட்சியில் 70 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 19 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். 51 பேர் போட்டியிடுகின்றனர்.
    கலவை பேரூராட்சியில் 49 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. 48 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. யாரும் வாபஸ் பெறவில்லை. 48 பேர் போட்டியிடுகின்றனர்.

    காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 7 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 57 பேர் போட்டியிடுகின்றனர்.

    நெமிலி பேரூராட்சியில் 53 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. 52 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 6 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 46 பேர் போட்டியிடுகின்றனர்.

    பனப்பாக்கம் பேரூராட்சியில் 44 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. 43 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். 41 பேர் போட்டியிடுகின்றனர்.

    தக்கோலம் பேரூராட்சியில் 65 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 12 மேற்கு வாபஸ் பெற்றுக்கொண்டனர். 53 பேர் போட்டியிடுகின்றனர்.

    திமிரி பேரூராட்சியில் 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. 55 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 10 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 44 பேர் போட்டியிடுகின்றனர். 

    விளாப்பாக்கம் பேரூராட்சியில் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. 45 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 3 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

    41 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தமுள்ள 8 பேரூராட்சிகளில் 447 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 442 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 59 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 381 பேர் போட்டியிடுகின்றனர்.

    மாவட்டம் முழுவதிலும் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் 1301 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 22 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 1279 ஏற்றுக்கொள்ளப்பட்டது. 208 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். 4 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1067 பேர் போட்டியிடுகின்றனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 15-ந் தேதி முதல் செயல்பட உள்ளது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டு சம்பா பருவ நெல் கொள்முதல் செய்ய 27 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வருகிற 15-ந் தேதி முதல் செயல்பட உள்ளது.

    அரக்கோணம் தாலுகாவில் செய்யூர், இச்சிப்புத்தூர், சோகனூர், பள்ளூர், தக்கோலம், சோளிங்கர் தாலுகாவில் சோளிங்கர், கேசவனாங்குப்பம், கொடைக்கல், போலிப்பாக்கம், ஆற்காடு தாலுகாவில் வளையாத்தூர், அரும்பாக்கம், புதுப்பாடி குட்டியம், குப்பிடிசாத்தம், மேல் புதுப்பாக்கம், கீழ்ப்பாடி, நெமிலி தாலுகாவில் சிறுகரும்பூர், ஆயர்பாடி, சிறு வளையம், பானாவரம், அகவலம், ஜாகீர் தண்டலம் கண்டிகை, கோடம்பாக்கம், பனப்பாக்கம், சயனபுரம், வாலாஜா தாலுகாவில் அம்மூர், ஆயிலம் ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது.

    விவசாயிகள்  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்துகொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இணையத்தில் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில்   www.tncsc.tn.gov.in மற்றும்  www.tncsc&edpc.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    கொள்முதல்  நிலையத்திற்கு நெல் மூட்டைகளை கொண்டு வரும் தேதி, வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கிக் குறிப்பிடு எண், வருவாய் ஆவணங்கள், பட்டா, சிட்டா நகல் மற்றும் அடங்கலில் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் விவசாயிகள் நிலம்  இருக்கும்  கிராமங்களின் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 

    இணையவழியில் மூலமாகவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும். 
    வாலாஜா அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.
    வாலாஜா

    வாலாஜா அடுத்த திருமலைச்சேரி கிராமம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் இவரது மனைவி சித்ரா (வயது 42) தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

    சித்ராவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு அதற் குண்டான மாத்திரை களை சப்பிட்டு வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஓராண்டாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சித்ரா கடந்த 5&ந்தேதி ரத்தக்கொதிப்பு சர்க்கரை நோய் மாத்திரைகள் 40 எடுத்து சாப்பிட்டு மயங்கினார். 

    உடனடியாக அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

    சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    ×