என் மலர்
உள்ளூர் செய்திகள்

விக்கிரமராஜா
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும்
வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்படைவதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என விக்கிரமராஜா கூறியுள்ளார்.
வாணியம்பாடி:
வாணியம்பாடியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ளாட்சி, நகராட்சி மாநகராட்சியின் மூலம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளுக்கு அதிக அளவு கட்டணம் வசூலிப்பதுடன் கொரோனா காலத்தில் மிகவும் தொல்லை கொடுக்கின்றனர். இதனால் வியாபாரப் பெருமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். அரசு இதனை ஒருமுறைபடுத்த முன்வர வேண்டும்.
இதேபோல் காய்கறி மார்க்கெட்டில் கொரோனா காலத்தில் பல்வேறு இடையூறுகளை சந்தித்து உள்ளனர், ஒரு நாளைக்கு ஒரு இடம் என மாற்றும் சூழ்நிலை ஏற்பட்டது, இதனால் வியாபாரிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும், வணிகர் சங்கங்களின் சார்பில் மார்க்கெட் கடைகள் கட்டப்பட்டு அது நியாயமான, குறைந்த விலைக்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளோம், அது விரைவில் செயல்படுத்த உள்ளோம்.
மத்திய மாநில அரசுகள் வியாபார நோக்கத்தில் வியாபாரிகளிடம் தொற்று எனவும், இதரக் கட்டணம் எனவும் கூறி அபராதங்கள் விதிக்கின்றனர்.
இதனை உடனடியாக தடுத்து நிறுத்த அரசு நிர்வாகம் முன்வரவேண்டும். பொங்கல் பண்டிகைக்கு தரமற்ற பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டு வந்தது.
இது டெண்டர் விடப்பட்டு இருந்ததால் அதனை எடுத்தவர்கள் இத்தகைய நிலையை ஏற்படுத்தி விட்டனர். இதுபோன்ற காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் இடமே கூறினால் தரமான நல்ல பொருட்களை நியாயமான விலையில் அரசுக்குத் தர முன்வருவோம்.
கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் என்ற புதிய தொற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உயிர் சேதம் ஏதும் இல்லை என்றாலும் வியாபார மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஏனெனில் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் சனிக்கிழமையன்று அதிக அளவில் கடைகளில் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அப்போது தான் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தற்போது ஏற்றப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மீண்டும் குறைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உள்ளோம்.
அதிலும் குறிப்பாக டோல்கேட் கட்டணம் அதிக அளவில் நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டே போகின்றனர். மேலும் அடாவடித்தனமாக ரவுடிகளை கொண்டும் அந்த பகுதியில் கட்டணத்தை வசூலிக்கின்றனர்.
இதனை தடுக்க முழுமையாக டோல் கேட் கட்டணத்தை ரத்து செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






