என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • கேரளாவில் வலுப்பெற்றுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
    • பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை மற்றும் இரவில் மழை பெய்தது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டதோடு, நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.

    இதன் தொடர்ச்சியாக வழக்கமாக சம்பா, குறுவை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் போதிய நீர் ஆதாரம் இல்லாததால் சாகுபடி பரப்பை குறைத்தனர். அதேபோல் பயிரிட்டுள்ள நெல் நாற்றுகள் தண்ணீரின்றி கருகும் நிலையும் உருவானது.

    இந்தநிலையில் கேரளாவில் வலுப்பெற்றுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை மற்றும் இரவில் மழை பெய்தது. இதற்கிடையே இன்று காலை முதல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    ராமநாதபுரம், பரமக்குடி, சாயல்குடி, கமுதி, பசும்பொன், ஆர்.எஸ்.மங்கலம், திருப்புல்லாணி, திருவாடானை, தேவிப்பட்டினம் மற்றும் கடலோர பகுதிகளான ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் அடைமழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியதால் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று காலை வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றனர். காற்றின் தாக்கம் அதிகம் இல்லாத நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இந்த மழை காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சம்பா சாகுபடி பணியை மீண்டும் தொடங்கி அதற்கான நடவடிக்கைகளில் மும்முரம் காட்டி வருகிறார். அத்துடன் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிறைபிடிப்பு தொடர்பாக இன்று ராமேசுவரத்தில் மீனவர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • வருகிற 18-ந் தேதி பாம்பனில் சாலை மறியல் நடத்தப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 27 மீனவர்களுடன் 5 படகுகளை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி சிறைபிடித்து சென்றனர். இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் சிறைபிடிப்பு தொடர்பாக இன்று ராமேசுவரத்தில் மீனவர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை உடனே விடுவிக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று முதல் ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. மேலும் வருகிற 18-ந் தேதி பாம்பனில் சாலை மறியல் நடத்தப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    • ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டில் 24 கிலோ கெட்டுப்போன மீன்கள் அழிக்கப்பட்டது.
    • இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர், மீன்வள துணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் (வடக்கு) வழிகாட்டுதலின் பேரில் ராமநாதபுரம் நகராட்சி, மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் தலைமையில் மாவட்ட மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹிர், சார் ஆய்வாளர் அய்யனார், மேற்பார்வையாளர் நடேஷ் மற்றும் கடல் அமலாக்கப்பிரிவு காவலர் காதர் இபுராஹிம் ஆகியோருடன் ராமநாதபுரம் டவுன் மீன் மார்க்கெட்டில் ரசாயணம் மற்றும் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுகிறதா? என்று இன்று காலை சோதனை செய்யப்பட்டது. இதில் 24 கிலோ கெட்டுப்போன மீன்களை ஆய்வு செய்து அதிகாரிகளால் கைப்பற்றி அழிக்கப்பட்டது. \

    மேலும் ரசாயணம் கலந்த மீன்கள் ஏதும் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டது. இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனைபடைத்தனர்.
    • தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், பள்ளி முதல்வர், நிர்வாக அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித் துறை சார்பில் 'ஆகலாம் கலாம்' என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் ராமநாதபுரம் தனியார் பள்ளியில் நடந்தது. பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இதில் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி மாணவிகள் வினாடி வினா போட்டியில் 6-8-ம் வகுப்பு பிரிவில் ராஜ கிரிஷா, பாத்திமா சனா ஆகியோரும், 11-12-ம் வகுப்பு பிரிவுகளில் நசாஹா, ஆயிஷா ரபிஹா ஆகியோரும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், பள்ளி முதல்வர், நிர்வாக அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்

    • முதல்வர் குறித்து அவதூறு பேச்சு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மீது வழக்குபதியப்பட்டது.
    • சப்-இன்ஸபெக்டர் நாகைய்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள உச்சிப்புளியில் நடப்பாண்டு ஜன.22-ந் தேதி அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா நடந்தது. அதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு சப்-இன்ஸபெக்டர் நாகைய்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சீரமைத்து தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பிரசித்தி பெற்ற வல்மீகநாதர்-பாகம்பிரியாள் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். திங்கள், வியாழக்கிழமை தங்கி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்கு உள்ள வாசுகி தீர்த்தக்குளத்தில் நீராடி அம்மனை தரிசனம் செய்தால் தீராத நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தக்குளம் தூர்வாரபட்டுள்ளது.

    இருப்பினும் அதில் தேங்கி உள்ள தண்ணீர் பாசி படர்ந்து நீராட முடியாத நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் நீராட தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையில் குளத்தில் தேங்கி உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி புதிதாக மணல் பரப்பி குளத்தை சீரமைத்து தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய வாரச்சந்தையை அமைச்சர் திறந்து வைக்கிறார்.
    • முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் மாலதி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பகுதியில் வாரச்சந்தை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இது தொடர்பாக அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் அவர்கள் மனு அளித்தனர். இதை தொடர்ந்து முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரே ரூ.2 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை அமைக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார். இந்த வாரச்சந்தை கட்டி முடிக்கப்பட்டு செயல்பட தயாராக உள்ளது.

    இந்த நிலையில் இதன் திறப்பு விழா நாளை 16-ந்தேதி நடக்க உள்ளது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு வாரச்சந்தையை திறந்து வைக்க உள்ளார். முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் மாலதி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    • மக்கள் நீதிமன்றத்தில் ரூ.2.23 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டது.
    • வாகன விபத்து வழக்குகள், சிவில், குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் ராமநாதபுரம், முதுகுளத்துார், பரமக்குடி, ராமேசுவரம், திருவாடானை, கமுதி, கடலாடி ஆகிய இடங்களில் நடந்தது. இதில் 8 அமர்வுகளில் வங்கி காசோலை வழக்குகள், கடன் வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில், குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    ராமநாதபுரத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி கதிரவன், கூடுதல் மகிளா நீதிபதி இ.வெர்ஜின்வெஸ்டா, நீதித்துறை நடுவர் எண் 2 பிரபாகரன், வழக்கறிஞர் சங்க இணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். இந்த லோக் அதாலத் நிகழ்வில் மொத்தம் 535 வழக்குகள் எடுத்துக்கொண்டு அதில் 57 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டு தீர்வுத்தொகையாக 2 கோடியே 23 லட்சத்து 568 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

    • முகமது சதக் அறக்கட்டளை பொன்விழா நடந்தது.
    • ஏற்பாடுகளை அறக்கட்டளை செயல்திட்ட அலுவலர் விஜயகுமார் செய்திருந்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகமது சதக் அறக்கட்டளை 1973-ம் ஆண்டு மாவட்டத் தில் கல்வி வளர்ச்சிக்கான கல்வி நிறுவனங்களை தொடங்கியது. இந்த நிறுவனம் தற்போது கீழக் கரை, ராமநாதபுரம், சென்னை ஆகிய இடங்க ளில் 17 கல்வி நிறுவனங் களை நடத்தி வருகிறது.

    இதன் பொன் விழா நிகழ்ச்சி கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அல் ஹாஜ் டாக்டர் எஸ்.எம்.தஸ்தகீர் அரங்கில் நடந்தது.

    இதில் முகமது சதக் அறக்கட்டளை தலைவர் முகமது யூசுப் வரவேற்றார்.அறக்கட்டளையின் வளர்ச்சி குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டு பொன்விழா மலர் வெளி யிடப்பட்டது. முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் முதல்வர் அலா வுதீன் வெள்ளி செங்கோல் வழங்கினார்.

    அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் பி.ஆர்.எல்.ஹாமீது இப்ராகீம், பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் சேக்தாவூது ஆகியோர் வெள்ளி வாள் வழங்கி கவுரவப்படுத்தினர்.

    தொடர்ந்து ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு கலிய மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில் சாமி அண்ணாதுரைக்கு தேசத்தின் பெருமை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    மயில்சாமி அண்ணா துரை பேசுகை யில், நாட்டில் ஆண்-பெண் இரு பால் மாணவர்களும் இந்தி யாவை அறிவியலின் உச் சிக்கு எடுத்துக் சென்று பெருமைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    ராமநாதபுரம் உதவி கலெக்டர் சிவானந்தம், முன்னாள் மாணவர்கள் ராஜ்சுப்ரமணியம், லோக சண்முகம், பரமேஸ்வரன், அருள்ராஜ் குமார், புரு ஷோத்தமன், மோகன், ரிஸ்வான் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சிறந்த தொழிலதிபர் விருது சீனிவாசராஜாவுக்கும், சிறந்த பெண் தொழிலதிபர் விருது ரவூபா, பிரதிமா குப்பாலா ஆகியோருக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது ஓடந்துறை சண்மு கம், சிறந்த பரோபகாரர் விருது பாத்திமா ரபீக், கதீஜா ரகுமான் ஆகியோ ருக்கும், அறிவியல் வித்தகர் விருது ரைஹானா பேகம், பெண்களின் பெருமை விருது ஷகிலா பாரூக் ஆகியோருக்கு வழங்கப் பட்டது.

    மேலும் மாணவர் சேவை, தொழில் சாதனை விருதுகளும் வழங்கப் பட்டது. முகமது சதக் அறக்கட்ட ளையின் இயக்குனர் எஸ்.எம்.ஏ.ஜெ.ஹபீப் முகமது, செயலாளர் ஹாஜியானி எஸ்.எம்.எச்.சர்மிளா ஆகியோர் சிறப்புரை யாற்றினர். அறக்கட்ட ளை கல்வி நிறுவ னங்களில் 25 வருடங்கள் மற்றும் அதற்கு மேலும் பணியாற்றி யவர்களுக்கு பணியாளர் சேவை விருது வழங்கப் பட்டது.

    முடிவில் முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குநர் எஸ்.எம்.ஏ.ஜெ.அப்துல் ஹலீம் நன்றி கூறினார். இதில், மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் பணியா ளர்கள் என 2 ஆயிரத்திற்கும் அதிக மானோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செயல்திட்ட அலுவலர் விஜயகுமார் செய்திருந்தார்.

    • தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்த விளங்குகிறது என்று இஸ்ரோ தலைவர் கூறினார்.
    • அப்துல் கலாம் இந்தியாவின் கடைக்கோடி பகுதியில் இருந்து வந்து நாட்டின் உயர்ந்த நிலைக்கு வந்தவர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் இன்று ஏ. பி.ஜே.அப்துல்கலாம் சர்வ தேச அறக்கட்டளை சார்பில் அவரது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அறக்கட்டளை ஒருங்கி ணைப்பாளர் நசிமா மரைக்காயர் தலைமை வகித்தார். ஜெய்னுலாவுதீன் முன்னிலை வகித்தார். சேக் சலீம் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் மற்றும் விஞ் ஞானி வெங்கடேஷ் வர சர்மா, சின்னத்துரை அப்துல்லா உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது:-

    ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவரது குடும்பத்துடன் உணவ ருந்தியது மகிழ்ச்சி யாக உள்ளது. அப்துல் கலாம் இந்தியாவின் கடைக்கோடி பகுதியில் இருந்து வந்து நாட்டின் உயர்ந்த நிலைக்கு வந்தவர். நானும் கேரளாவில் மின்சார வசதி கூட இல்லாத இடத்தில் இருந்து வந்து உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளேன்.

    இந்தியா தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கு கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பல்வேறு மாணவ-மாணவிகள் பி.எஸ்.எல்.வி. சந்திராயான் போன்ற ராக்கெட் மாதி ரியை பார்வைக்கு வைத்தி ருந்தனர். அதனை இஸ்ரோ தலைவர் பார்வையிட்டார்.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி துவக்க விழா மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு 10 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்யை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதனைதொடர்ந்து, ராமேசுவரம் பேக்கரும்பு அப்துல்கலாம் நினைவிடத் தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி துவக்க விழா மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொள்வதற்காக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் ராமேசுவரம் வருகை தந்தார். அவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் பூங்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி வரவேற்றனர். இதனைதொடர்ந்து, மாரத்தான் போட்டியை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    முதல் போட்டி 21 கிலோ மீட்டர், இரண்டாவது போட்டி 5 கிலோ மீட்டர், மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி 3 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு 10 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெ.தங்கதுரை, உதவி கலெக்டர் சிவானந்தம், கலாம் பேரன் சேக்சலீம், நகர்மன்ற தலைவர் நாசர் கான், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா மற்றும் உள்ளாட்சி பிரநிதிகள் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

    • யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • முடிவில் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர் ராஜ வேணி, ஆணையாளர் செந்தாமரை செல்வி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடந்த விவா தங்கள் வரு மாறு:- கவுன்சி லர் ராஜ்குமார்:-வெண்ணத்தூர் ஊராட்சி முத்த ரவு நாதபுரம் கிராம கண்மா யில் தேவி பட்டி னம் ஊராட்சி குப்பைகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. கண்மாயில் கொட்டாமல் மாற்று இடம் தேர்வு செய்து குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர் மனோ கரன்:-கலெக்டர் அலுவலக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பேராவூர் ஊராட்சி குப்பைகளை கொட்டுவதால் அப்பகுதி மக்கள் பாதிப்படை கின்றனர். எனவே அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும். ஆணை யாளர்:- கவுன்சிலர்கள் தெரிவித்த குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் உலக ராணி, சீனி இப்ராஹிம் அம்மாள், மாணிக்க சாரதி, கல்பனா தேவி, பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.முடிவில் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் நன்றி கூறினார்.

    ×