என் மலர்
ராமநாதபுரம்
- மிளகாய் வத்தல் வணிக வளாகத்தில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
- ஒழுங்குமுறை விற்பனைக்குழு செயலாளர் ராஜா, கண்காணிப்பாளர் மங்கலசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் எட்டிவயல் ஊராட்சியில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் ஒருங்கிணைந்த மிளகாய் வத்தல் வணிக வளாகத்தை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 2 ஆயிரம் மெட்ரிக்டன் குளிர்பதன கிட்டங்கியில் விவசாயிகள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் விவசாயிகள்-உழவர் உற்பத்தியாளர் குழுவினர் மற்றும் வியாபாரிகளால் இருப்பு வைக்கப்பட்டுள்ள 47.80மெ.டன் (2369 மூடைகள்) அளவுள்ள மிளகாய் வத்தல், 12.3மெ.டன் (1315 பெட்டிகள்) அளவுள்ள புளி, .03மெ.டன் தட்டைப்பயறு விளைபொருட்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காதபட்சத்தில் மேற்கண்ட கிட்டங்கியில் வாடகை அடிப்படையில் இருப்பு வைத்து கூடுதல் விலை கிடைக்கும்போது நல்ல விலைக்கு விற்று பயனடையலாம் என தெரிவித்தார். ஒழுங்குமுறை விற்பனைக்குழு செயலாளர் ராஜா, கண்காணிப்பாளர் மங்கலசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
- மாநில அளவிலான நெசவாளர் விருது பெற்றவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
- பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினருக்கு முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சரகத்தில் 85 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.பரமக்குடியில் 11ஆயிரத்து 257 கைத்தறி நெசவாளர்கள் இயங்கி வருகின்றனர். இந்த பகுதியில் கைத்தறி பருத்தி சேலைகள், செயற்கை பட்டு, காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் மற்றும் பிற விற்பனை யாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
2022-23-ம் ஆண்டில் தமிழ்நாடு அளவில் மாநில நெசவாளர் விருது பரமக்குடி சரகத்தை சேர்ந்த பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் சரவணனுக்கு முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவர் ராமாயண போர் காட்சியை தத்ரூபமாக கைத்தறி சேலையில் வடிவமைத்ததற்காக முதல் பரிசாக ரூ.5 லட்சமும், சான்றிதழும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பெற்றுள்ளார்.
மேலும் கலைமகள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த உறுப்பினர் நாகராஜன் இயற்கை காட்சியை தத்ரூபமாக கைத்தறி சேலையில் வடிவமைத்ததற்காக 2-ம் பரிசு ரூ.3 லட்சத்தை முதல்வரிடம் இருந்து பெற்றுள்ளார்.
மேற்கண்ட 2 நெசவாளர்கள் ராமநாதபுரம் மாவட்ட கலெ்டர் ஜானிடாம் வர்கீஸை சந்தித்து முதல்வரிடம் இருந்து பெற்ற பரிசுகளையும், சான்றிதழ்களையும் காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பரமக்குடி சரக கைத்தறித்துறை உதவி இயக்குநர் ரகுநாத் உடனிருந்தார்.
- ராமநாதபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் 15 நாட்கள் நடக்கிறது.
- 1-ந்தேதி காலை 7மணியளவில் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் ஆஜராகி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான 15 நாட்கள் நடைபெறும் கோடைகாலப் பயிற்சி முகாம் 1.5.2023 முதல் 15.5.2023 வரை சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கையுந்துபந்து, டென்னிஸ், இறகுப்பந்து, ஜுடோ ஆகிய விளையாட்டுகளில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி நேரம் காலை 6.30 முதல் 8.30 வரையும், மாலை 4 முதல் 6 மணி வரையும் ஆகும். முகாமில் கலந்து கொள்பவர்கள் 1-ந்தேதி காலை 7மணியளவில் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் ஆஜராகி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாநில சிலம்ப போட்டியில் கமுதி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
- மதுரையில் மாடக்குளம் கலிங்க வஸ்தாத் 7-ம் தலைமுறை பாரம்பரிய சிலம்ப தேக பயிற்சி பள்ளி சார்பில் நடந்தது.
பசும்பொன்
மதுரையில் மாடக்குளம் கலிங்க வஸ்தாத் 7-ம் தலைமுறை பாரம்பரிய சிலம்ப தேக பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தென்னாட்டு போர்க் கலைச் சிலம்பம் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்கள், பயிற்சியாளர் சரத்குமார் தலைமையில் பங்கேற்றனர். தனித்திறன் போட்டியில் 6 மாணவர்கள் முதலிடமும், 2 மாணவர்கள் 2-ம் இடமும், 5 மாணவர்கள் 3-ம் இடமும் பெற்றனர். இரட்டைக் கம்பு பிரிவில் 2 மாணவர்கள் முதலிடமும், 2 மாணவர்கள் 2-ம் இடமும் பெற்றனர்.
- ராமநாதபுரத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- மலேரியா காய்ச்சல் பரவும் விதம், காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் முறை பற்றி மாவட்ட மலேரியா அலுவலர் பேசினார்.
பரமக்குடி
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ந்தேதி உலக மலேரியா விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திரா தலைமை தாங்கினார். அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குமரவேல் முன்னிலை வகித்தார். பயிற்சி அலுவலர் ஹரிகரன் வரவேற்றார். மலேரியா காய்ச்சல் பரவும் விதம், காய்ச்சலை பரப்பும் கொசுக்களையும், கொசுப்பழுக்களையும் ஒழிக்கும் முறை பற்றியும், மலேரியா காய்ச்சலுக்கு உண்டான மருத்துவ சிகிச்சை பற்றியும் மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் பேசினார்.
சுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திரா தலைமையில் மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மருத்துவ அலுவலர் மாலினி, சுகாதாரத்துறை துணை இயக்குநரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் சேக் அப்துல்லா, இளநிலை பூச்சியியல் வல்லுநர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பக்கீர் முகமது நன்றி கூறினார்.
- ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான தென்னை நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நாளை நடக்கிறது.
- இந்த தகவலை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தென்னையானது சுமார் 8250 எக்டர் பரப்பளவில் திருப்புல்லாணி மற்றும் மண்டபம் வட்டாரங்களில் பிரதான பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. தென்னையை தாக்கும் முக்கிய பூச்சி மற்றும் நோய்களான காண்டாமிருக வண்டு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, கருந்தலை புழு, சிவப்பு கூன் வண்டு, முரணை சிலந்தி, தஞ்சாவூர் வாடல் நோய், இலை கருகல் நோய் மற்றும் குருத்தழுகல் நோய் ஆகியவை அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.
காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது தென்னையில் மேற்கூறிய பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் உச்சிப்புளி அரசு தென்னை நாற்றாங்கால் பண்ணையில் தென்னையை தாக்கும் முக்கிய பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நாளை(27-ந் தேதி) நடைபெற உள்ளது.
இந்த முகாமை வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் இணைந்து நடத்துகின்றனர். இதில் தென்னையை தாக்கும் முக்கிய பூச்சி மற்றும் நோய் குறித்த கண்காட்சி, தொழில்நுட்பங்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல், தொழில்நுட்ப உரை, செயல் விளக்கங்கள், விவசாயிகள்- விஞ்ஞானிகள் கலந்துரையாடல் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில் தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்துள்ளார்.
- அச்சுந்தன்வயல் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்.
- மகளிர் குழு எடுத்த முயற்சியை போல் மற்ற பகுதிகளிலும் மகளிர் குழுவினர் சாதனை படைக்க வேண்டும் என்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அங்கன்வாடி மையத்திற்கான புதிய கட்டிடம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் கட்டப்பட்டு வருகிறது. இதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்து அவர்களின் பணியை பாராட்டினார். பின்னர் அவர் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவி தலைமையில் 30 உறுப்பினர்கள் கட்டுமான தொழில் மேற்கொள்வதற்கான பயிற்சியை 2 மாத காலம் பெற்றனர். இந்த பயிற்சியில் புதிதாக கட்டிடம் கட்டுதல், கம்பி கட்டுதல், சிமெண்டு உரை தயாரித்தல், ஹாலோ பிளாக் கல் தயாரித்தல் போன்ற பணியை அனுபவமிக்க பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி பெற்றனர். அதனை தொடர்ந்து தற்பொழுது முதன்முறையாக அங்கன்வாடி மையம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதன் மூலம் ஆண்கள் பார்த்து வந்த கட்டுமான பணி தற்போது பெண்களாலும் முடியும் என்ற நிலையை உருவாக்கி உள்ளது. இது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும். இந்த மகளிர் குழு எடுத்த முயற்சியை போல் மற்ற பகுதிகளிலும் மகளிர் குழுவினர் சாதனை படைக்க வேண்டும் என்றார்.
- விவசாயிகள் வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளை வாட்ஸ்-அப் மூலம் பெறலாம் என அதிகாரி தெரிவித்துள்ளனர்.
- இந்த தகவலை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாயம் பருவ மழையை நம்பி உள்ளது. பருவமழை பொய்த்துப்போகும் ேபாதெல்லாம் வறட்சியின் பாதிப்பும், கூடுதல் மழை காரணமாக பயிர்களில் பாதிப்பு ஏற்பட்டு உணவு உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளது. பருவ காலங்கள் வாரியாக பார்க்கும்போது வடகிழக்குப் பருவமழை காலங்களில் மொத்த மழையில் 61 சதவீதம் பெறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை நம்பியே மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. உணவு உற்பத்தியில் வானிலை காரணிகளில் ஏற்படும் மாறுதல்கள், அதாவது காலம் தவறிய மழை, அதிக மற்றும் குறைந்த வெப்பநிலை, காற்றின் திசை மற்றும் வேகம், காற்றின் ஈரப்பதம் ஆகியவையும் பயிர் வளர்ச்சி மற்றும் உணவு உற்பத்தியை கடுமையாக பாதிக்கக்கூடும்.
மழைப்பொழிவும் காலநிலை மாற்றம் காரண மாக சீராக இல்லாமல் பெரு மளவு மழை சில நாட்களி லேயே பெய்து விடுவதால் விவசாய பணிகளுக்கு பயன்படாமல் மழைநீர் பெருமளவு வீணாகிறது. இந்த சூழ்நிலையில் இயற்கை இடர்பாடுகள் மூலம் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க வானிலை சார்ந்த வேளாண் செயல்பாடுகள் அவசியமான ஒன்றாகிறது.வேளாண்மை யில் பருவகால மாற்றம் மற்றும் பாதகமான காலநிலையின் காரணமாக ஏற்படும் இழப்பு களை முழுஅளவு தவிரப்பது என்பது இயலாத காரியமாக உள்ளது. இருப்பினும் வானிலை பற்றி முன்கூட்டியே அறிந்தால் தக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இழப்பை ஓரளவிற்கு தவிர்க்க முடியும்.
இதனை கருத்தில் கொண்டு இந்திய வானிலை ஆய்வுத்துறையால் மத்திய கால வேளாண் முன்னறிவிப்பானது கணினி மாதிரிகள் மூலம் கணிக்கப் பட்டு விவசாயிகளின் பயிர் நிலையை அறிந்து மாறுபடும் வானிலைக்கு ஏற்றவாறு வானிலை முன்னறிவிப்பு மற்றும் வேளாண் ஆலோச னைகள் வட்டார வாரியாக வாரத்திற்கு 2 முறை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விவசாயிகளுக்கு வாட்ஸ்-அப் செயலி மூலம் வேளாண்மை அறிவியல் நிலையம் அளித்து வருகிறது.
இந்த அறிக்கையின் உதவியால் பருவமழை பொழி விற்கு ஏற்ப பயிர் விதைப்பு செய்யவோ அல்லது விதைப்பை தள்ளிப்போடவோ முடிவெடுக்கலாம். மேலும் நடவு, நிலம் தயாரித்தல், உரமிடுதல், நீர்ப்பாசனம், பயிர் பாதுகாப்பு, அறுவடை மற்றும் அறுவடைக்குப்பின் நேர்த்தி போன்ற மேலாண்மை உத்திகளை வேளாண் பணிகளில் முடிவெடுப்பதில் முன்னறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும்.
எனவே உழவர் பெரு மக்கள் வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளை பெறுவதற்கு வேளாண் அறிவியல் நிலையத்தின் வாட்ஸ்-அப் குழுவில் வேளாண் அறிவியல் மையத்தின் திட்டத்தை வழங்கக்கூடிய வெங்கடேசுவரியின் 95003 98922 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்துள்ளார்.
- த.மு.மு.க. எஸ்.பி.பட்டணம் கிளை சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- மாநில செயலாளர் சாதிக் பாட்சா பங்கேற்றார்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எஸ்.பி.பட்டணம் கிளையின் சார்பாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட துணை செயலாளர் நிசார் பாய் தலைமையில் நடந்தது.
த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு த.மு.மு.க.வின் சேவைகள், கடந்தகால சேவைகள் பற்றி பேசினார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஜாவித் அஸ்ஸாம் கொடி ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் யாண்பு இப்ராஹிம், முன்னாள் ஒன்றிய செயலாளர் வசந்தம் ரகுமான், தொண்டி பேரூர் நிர்வாகிகள் காதர் பரக்கத் அலி, மைதீன், மங்களக்குடி கிளை தலைவர் ஜாகிர், புதுவலசை கிளை துணை செயலாளர் செயலாளர் முகம்மது அப்சர், பனைக்குளம் செய்யது இப்ராஹிம், எஸ்.பி.பட்டினம் கிளை தலைவர் பஷீர் அலி, கிளை செயலாளர் ஹாஜி முகம்மது, ஒன்றிய பொருளாளர் முகமது அலி ஜின்னா, மாவட்ட செயலாளர் கவிஞர் பாக்கி, ம.ம.க. கிளை செயலாளர் ஜாவித், இளைஞர் அணி செயலா ளர் புஹாரி, ம.ம.க. கிளை செயலாளர் அப்துல்லாஹ், இஸ்லாமிய பிரசார பேரவை செயலாளர் முஹம்மது இலியாஸ், விளையாட்டு குழு கிளை செயலாளர் மிஸ்பா, கிளை செயலாளர் அபுத்தாஹிர், கிளை நிர்வாகி அப்சர், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் அருகே வாலிபரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
- உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள சேர்வைக்காரன் ஊரணியை சேர்ந்தவர் முனீசு வரன்(வயது21). இவருக்கும் பெருங்குளத்தை சேர்ந்த காளீசுவரன், முனீஸ்கண்ணன் ஆகியோ ருக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் முனீசுவரன் ராமநாதபுரத்திற்கு சென்று தனது சித்தியிடம் ரூ.58 ஆயிரம் வாங்கினார். பின்னர் உறவினர் சதீசு வரனுடன் அங்கிருந்து சேர்வைக்காரன் ஊரணிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர்கள் பெருங்குளம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது காளீசுவரன், முனீஸ்கண்ணன் ஆகியோர் அவர்களை வழிமறித்து அரிவாளால் தாக்கினர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.58 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவர்களை மீண்டும் அரிவாளால் வெட்ட முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு முனீசு வரனும், சதீசுவரனும் அங்கிருந்து ஓடி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து உச்சிப்புளி போலீசில் முனீசுவரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கமுதி அருகே சூறைக்காற்று வீசியதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
- பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோரைப்பள்ளம், ராமசாமிபட்டி, கிளாமரம், நீராவி மேலராமநதி, காவடிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்று வீசியது.
இந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் நடவு செய்யப்பட்டிருந்தன. அவை அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தன. நேற்று சூறைக்காற்றுடன் பெய்த மழையால் கோரை பள்ளத்தை சேர்ந்த விவசாயி ராமர் என்பவரது தோட்டத்தில் உள்ள 2 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
இதேபோல் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளான சுப்பிரமணி, கந்தசாமி, வீரமணி ஆகியோரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்களும் முறிந்து சேதமடைந்தன. சூறைக்காற்றால் அந்த பகுதியில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
பாறைகுளம் பகுதியில் விவசாயி கருப்பையா என்பவரின் 200-க்கும் மேற்பட்ட எலுமிச்சை மரங்களும் வேரோடு சாய்ந்து நாசமானது. இதன் காரணமாக அதனை பயிரிட்டிருந்த விவசாயிகள் கவலையடைந்தனர். அவர்கள் கூறுகையில், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20ஆயிரம் வரை-செலவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நாட்டு வாழை மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் விழுந்து சேதம் அடைந்தன. இதனால் நாங்கள் பெரிதும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். ஆகவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
- தொழில் நலிவடைந்ததால் ஜிம்ப்ளா மேள கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.
- தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அபிராமம்
தமிழகம் முழுவதும் ஜிம்ப்ளா மேளத் தொழிலாளர்கள் உள்ளனர். குறிப்பாக தென்மாவட்டங்களில் மேளம் என்றாலே ஜிம்ப்ளா மேளம்தான் என்ற பெயர் உண்டு. கோவில் திருவிழாக்கள், எருதுவிடும் திருவிழா, இல்ல வைபவங்கள், துக்க நிகழ்ச்சிகள், கலை இரவு போன்றவற்றில் இந்த வகை மேளம் பயன்படுத்தப்பட்டது.
காலப்போக்கில் இந்த மேளத்துக்கு மவுசு குறைந்துவிட்டது. இந்த தொழில் செய்து வந்த மேள கலைஞர்கள் தற்போது கஷ்டப்பட்டு வருகின்றனர். குடும்பத்தின் அத்தியாவசிய செலவுக்கு கூட சிரமப்படுகின்றனர். இந்த நிலையை கருத்தில் கொண்டு பாதிக்கப்படும் ஜிம்ப்ளா மேள கலைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து ஜிம்ப்ளா மேளக்கலைஞர் ராசு கூறியதாவது:-
எங்களது பூர்வீக தொழில் ஜிம்ப்ளா மேளம் அடிப்பதாகும். தமிழகம் முழுவதும் நாங்கள் பரவலாக இருந்து வருகிறோம். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் கீரனூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடியிருந்து ஜிம்ப்ளா மேளத்தொழில் செய்து வருகிறோம். ஆரம்பகால கட்டத்தில் தென்மாவட்டங்களில் எல்லா விழாக்களுக்கும் ஜிம்ப்ளா மேளம்தான் தேவைப்பட்டது. காலப்போக்கில் அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும் டிரம் செட், பேண்டு வாத்தியம், செண்டை மேளம் என நவீன கருவிகளுக்கு மக்கள் மாறிவிட்டனர். இதனால் பாரம்பரிய ஜிம்ப்ளா மேளத்திற்கு தற்போது மவுசு குறைந்து வருகிறது. இதனை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான மேள கலைஞர்கள் வேலையிழந்து வாடும் நிலை உள்ளது.
இளமை காலங்களில் எப்படியும் பிழைத்துக்கொள்ளும் நாங்கள், வயதானவுடன் வாழ வழியின்றி தவித்து வருகிறோம். அழிந்துவரும் இந்த ஆதிகாலத்து கலையை மீட்டெடுத்து ஜிம்ப்ளா மேள கலைஞர்களுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






