search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கான தென்னை நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்
    X

    விவசாயிகளுக்கான தென்னை நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்

    • ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான தென்னை நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தென்னையானது சுமார் 8250 எக்டர் பரப்பளவில் திருப்புல்லாணி மற்றும் மண்டபம் வட்டாரங்களில் பிரதான பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. தென்னையை தாக்கும் முக்கிய பூச்சி மற்றும் நோய்களான காண்டாமிருக வண்டு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, கருந்தலை புழு, சிவப்பு கூன் வண்டு, முரணை சிலந்தி, தஞ்சாவூர் வாடல் நோய், இலை கருகல் நோய் மற்றும் குருத்தழுகல் நோய் ஆகியவை அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.

    காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது தென்னையில் மேற்கூறிய பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் உச்சிப்புளி அரசு தென்னை நாற்றாங்கால் பண்ணையில் தென்னையை தாக்கும் முக்கிய பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நாளை(27-ந் தேதி) நடைபெற உள்ளது.

    இந்த முகாமை வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் இணைந்து நடத்துகின்றனர். இதில் தென்னையை தாக்கும் முக்கிய பூச்சி மற்றும் நோய் குறித்த கண்காட்சி, தொழில்நுட்பங்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல், தொழில்நுட்ப உரை, செயல் விளக்கங்கள், விவசாயிகள்- விஞ்ஞானிகள் கலந்துரையாடல் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×