என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கொரோனா தொற்றுள்ளவர்களை அனுமதித்ததால் அறந்தாங்கி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் அறந்தாங்கி தாலுகாவில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு முதியவர் பரிசோதனை முடிவு வரும் முன்பே இறந்து விட்டார். இந்நிலையில் மீதம் உள்ள 18 பேரையும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில், குழந்தைகள் வார்டுக்கு அருகே சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் குழந்தைகள் வார்டில் உள்ள பெண்கள் அச்சம் அடைந்தனர். மேலும் இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவமனை நுழைவுவாயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையில் போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து வர்த்தக சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அறந்தாங்கி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன், கோட்டாட்சியர் கிருஷ்ணன், தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, 18 பேரும் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அறந்தாங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே அறந்தாங்கி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக விக்னேசபுரத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியையும், கல்லனேந்தலில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியையும் அறந்தாங்கி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ரவி, கோட்டாட்சியர் கிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் அரசு பாலிடெக்னிக்கை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    அன்னவாசல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் அருகே உள்ள அகரப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 60). இவர் அன்னவாசல் கோல்டன் நகரில் வசித்து வந்தார். இவருக்கும், இவருடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சுப்பிரமணியன் அன்னவாசலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள தைலமரக்காட்டில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். அருகில் மதுபாட்டில் மற்றும் விஷ பாட்டில் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற அன்னவாசல் போலீசார், சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சுப்பிரமணியன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்ததாக, தெரியவந்தது.
    புதிய உச்சமாக ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக நேற்று ஒரு நாளில் மட்டும் 58 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 673 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 387 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டுள்ளனர். மேலும் 278 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

    அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த வாலிபர் புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மிரட்டுநிலை கிராமத்தை சேர்ந்த 46 வயது பெண்ணுக்கு கடந்த 11-ந் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இதயநோய் பிரச்சினைக்காக மருந்து, மாத்திரை சாப்பிட்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அரிமளம் ஒன்றியத்தை சேர்ந்த பல்வேறு கிராமங்களுக்கு அமெரிக்கா, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அரிமளம், கடியாப்பட்டி, கே.புதுப்பட்டி ஆகிய ஊர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் நெருங்கிய தொடர்புடையவர்கள் உள்ளிட்ட 24 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கறம்பக்குடியில் தொற்று இல்லாத பெண்ணை கொரோனா வார்டுக்கு அழைத்துச்சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், நள்ளிரவில் அவரை திருப்பி அனுப்பினர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கச்சேரி வீதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் அவருடைய மனைவி, மகன், மகளுக்கும் தொற்று உறுதியானது.

    இதையடுத்து அவர்களை நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தனர். அப்போது நகைக்கடை உரிமையாளரின் மருமகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி, அந்த பெண்ணையும் ஆம்புலன்சில் ஏற்றி புதுக்கோட்டைக்கு அழைத்து சென்றனர்.

    மருத்துவமனைக்கு சென்ற பின்னர், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பட்டியலை சரி பார்த்தபோது, நகைக்கடை உரிமையாளரின் மருமகளுக்கு தொற்று இல்லாத நிலையில், அவரை அழைத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை நள்ளிரவில் ஊருக்கு திரும்பி செல்லுமாறு ஊழியர்கள் அனுப்பிவிட்டனர்.

    பஸ் இல்லாத நிலையில் புதுக்கோட்டையில் தவித்த அந்த பெண், பின்னர் உறவினருக்கு தகவல் தெரிவித்து கார் ஏற்பாடு செய்து, அதில் ஊருக்கு திரும்பினார். தொற்று இல்லாத பெண்ணை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் ஒரே ஆம்புலன்சில் அழைத்து சென்றது கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    கறம்பக்குடியில் தொற்று இல்லாத பெண்ணை கொரோனா வார்டுக்கு அழைத்துச்சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், நள்ளிரவில் அவரை திருப்பி அனுப்பினர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கச்சேரி வீதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் அவருடைய மனைவி, மகன், மகளுக்கும் தொற்று உறுதியானது.

    இதையடுத்து அவர்களை நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தனர். அப்போது நகைக்கடை உரிமையாளரின் மருமகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி, அந்த பெண்ணையும் ஆம்புலன்சில் ஏற்றி புதுக்கோட்டைக்கு அழைத்து சென்றனர்.

    மருத்துவமனைக்கு சென்ற பின்னர், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பட்டியலை சரி பார்த்தபோது, நகைக்கடை உரிமையாளரின் மருமகளுக்கு தொற்று இல்லாத நிலையில், அவரை அழைத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை நள்ளிரவில் ஊருக்கு திரும்பி செல்லுமாறு ஊழியர்கள் அனுப்பிவிட்டனர்.

    பஸ் இல்லாத நிலையில் புதுக்கோட்டையில் தவித்த அந்த பெண், பின்னர் உறவினருக்கு தகவல் தெரிவித்து கார் ஏற்பாடு செய்து, அதில் ஊருக்கு திரும்பினார். தொற்று இல்லாத பெண்ணை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் ஒரே ஆம்புலன்சில் அழைத்து சென்றது கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆலங்குடி அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி (பொறுப்பு), அப்பகுதியில் உள்ள திருவள்ளுவர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற வாலிபரை, இன்ஸ்பெக்டர் பிடித்து விசாரித்தார். இதில் அவர், தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா குருவிக்கரம்பையை சேர்ந்த மதியழகனின் மகன் ஆனந்தன்(வயது 23) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் நேற்று கடைகளில் மீன், கோழி மற்றும் ஆட்டிறைச்சி வாங்குவதற்காகவும், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காகவும் ஏராளமானவர்கள் குவிந்தனர்.
    திருவரங்குளம்:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் இன்று மளிகை, காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி, மீன் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருக்கும். இதனால் திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் நேற்று கடைகளில் மீன், கோழி மற்றும் ஆட்டிறைச்சி வாங்குவதற்காகவும், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காகவும் ஏராளமானவர்கள் குவிந்தனர். அதில் பலர் முக கவசம் அணியவில்லை. மேலும் சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்படவில்லை. அவர்கள் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, ஒட்டி உரசியபடி நின்றதால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் விதிமுறைகளை கடைப்பிடிக்காத வரை கொரோனா பரவலை தடுக்க முடியாது என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
    கந்தர்வகோட்டை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை அருகே உள்ள நரியன்குடிப்பட்டியை சேர்ந்த ரெங்கசாமியின் மகன் சாமிநாதன்(வயது 30). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சாமிநாதன், திருமணம் ஆகாத ஏக்கத்தில் தனது விவசாய நிலத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்டவர்கள் அவரை மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இது குறித்து ரெங்கசாமி அளித்த புகாரின்பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை அருகே தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்த கார் மீது லாரி மோதியதில் 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா கொடும்பாளூர் சத்திரத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் மிதுன்கிஷோர்(வயது 23). இவரும், இவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சரவணனின் மகன் அரவிந்த்(23), ராசுவின் மகன் பரத் (23) ஆகியோர் நேற்று ஒரு காரில் கொடும்பாளூர் சத்திரத்தில் இருந்து விராலிமலை நோக்கி வந்தனர்.

    கொடும்பாளூர் சத்திரத்தை அடுத்துள்ள வடகாட்டுப்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது கார் மோதி கவிழ்ந்தது. அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி, கார் மீது மோதி காரின் மீதே கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி, நசுங்கியது.

    இதில் காரில் இருந்த மிதுன் கிஷோர், அரவிந்த், பரத் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) முருகேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மொழிஅரசு மற்றும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் விபத்தில் இறந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கறம்பக்குடி பகுதியில் மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலருக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் 3 வீதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டன. மேலும் கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கறம்பக்குடி பகதியில் மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதற்கிடையே திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கிராம பகுதிகளில் இருந்து கறம்பக்குடிக்கு பொருட்கள் வாங்க வந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதேபோல் பூக்கள், காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்ய கடைகளுக்கு கொண்டு வந்த விவசாயிகளும் பாதிப்பு உள்ளாகினர். மேலும் இந்த ஊரடங்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக சிறு வியாபாரிகள் பலர் சங்க நிர்வாகிகளிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    இதற்கிடையே கறம்பக்குடி பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டு செயல்பட்டதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். அதேநேரத்தில் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். வெளியே சென்றவர்களை போலீசார் மறித்து விசாரித்தபோதும், டாஸ்மாக் கடைக்கு செல்வதாக அவர்கள் கூறிச்சென்றனர்.

    இதேபோல் ஆவுடையார்கோவில் அருகே ஒக்கூர் கிராமத்திலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து உள்ளூரில் உள்ள கடைகளுக்கு நேற்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து, ஊரின் முக்கிய எல்லைகளை அடைத்து முழு ஊரடங்கை பின்பற்றியுள்ளனர். மேலும் அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பல பகுதிகளில் ஊரின் எல்லைகள் கட்டைகள், முள்வேலிகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளன.
    மாவட்டத்தில் டாக்டர் உள்பட மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், நேற்று பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது. நேற்று மட்டும் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 280 பேர் சிகிச்சையில் உள்ளனர். 246 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 40 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை இதுவரை 8 ஆக உள்ளது.

    அன்னவாசல் அருகே காவேரிநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காவேரிநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டு, வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அறந்தாங்கி பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள ஒரு மளிகை கடையில் இருந்த ஒருவர் ஏற்கனவே கொரோனால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று அந்த மளிகை கடையில் வேலை பார்த்த மேலும் 2 பேருக்கும், வீரமாகாளியம்மன் கோவில் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த 36 வயது வாலிபர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் வாங்குவதற்காக திருச்சி சென்று திரும்பிய அவருக்கு, பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    கறம்பக்குடியில் நேற்று முன்தினம் கச்சேரி வீதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருடைய மனைவி, மகள், பேரக்குழந்தை ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் மழையூர் ஆரம்ப சகாதார நிலைய நர்சுக்கு தொற்று இருந்த நிலையில், நேற்று அவருடைய 8 வயது மகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று பரவியதால் கறம்பக்குடி பேரூராட்சி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    மின்கம்பத்தில் ஆட்டோ மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சாந்தநாதபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 51). ஆட்டோ டிரைவரான இவர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் நேற்று புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணியை ஏற்றிச்சென்று, திருவப்பூர் பகுதியில் இறக்கி விட்டுவிட்டு, மீண்டும் புதிய பஸ் நிலையம் நோக்கி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் ஆட்டோ மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த நாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×