என் மலர்
புதுக்கோட்டை
ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:
சிவகங்கை மாவட்டம் ஆத்திரம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது32). ஆட்டோ டிரைவரான இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று குடும்பத்தகராறு காரணமாக பழனிச்சாமி பி.அழகாபுரியில் உள்ள புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோவில் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரமங்கலம்:
குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மது எடுப்புத்திருவிழாவும், வாரந்தோறும் வழிபாடுகளும் நடத்தப்படும். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் வாராந்திர பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கம் போல பூஜைகள் செய்ய அதே ஊரை சேர்ந்த பூசாரி வேலாயுதம் (வயது 62) என்பவர் கோவிலுக்கு வந்த போது கோவில் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, கருவறை பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. இது குறித்து அவர் கிராமத்தினருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து கிராம மக்கள் வந்து பார்த்தபோது, சாமி கழுத்தில் கிடந்த தங்க தாலி, மணிகள், காசுகள், சங்கிலி உள்ளிட்ட சுமார் 4 பவுன் தங்க நகைளும், உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து பூசாரி வேலாயுதம் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாத்தூர் அருகே டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:
மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை கோரையாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்திவயல் கிராமத்தின் அருகே ஆற்றுப்பகுதியில் இருந்து வந்த ஒரு டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் அப்பகுதியில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒரு யூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்திய சாத்திவயல் கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.
ஊரடங்கை கடைப்பிடிக்காமல் ஜவுளிக்கடைகள் திறந்திருந்ததை கண்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகரப்பகுதியில் கடைவீதிகளில் கொரோனா ஊரடங்கை மீறி ஜவுளிக்கடைகள் உள்பட அனுமதிக்கப்படாத கடைகள் திறந்திருப்பதாக நகராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பரக்கத் மற்றும் அதிகாரிகள் கடைவீதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கை கடைப்பிடிக்காமல் ஜவுளிக்கடைகள் திறந்திருந்ததை கண்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தனர். இதில் 8 ஜவுளிக்கடைகள், 2 செல்போன் கடைகளுக்கு அபராதமாக ரூ.37 ஆயிரம் விதிக்கப்பட்டது.
பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
கே.புதுப்பட்டி போலீஸ் சரகம் கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து. இவருடைய மனைவி மல்லிகா. இவர் வீட்டு முன்புள்ள வராண்டாவில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் மல்லிகாவின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அன்னவாசலில் சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:
அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோல்டன்நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய காலாடிப்பட்டியை சேர்ந்த சுப்பையா (வயது 42) உள்பட 5 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.730-ஐ பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது தினமும் தொற்று பாதிப்பு 100-க்கும் கீழே குறைந்துள்ளது. அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து20 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 140 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து810 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். இதனால் இறப்பு எண்ணிக்கை மாவட்டத்தில் 284 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழே குறைந்து 926 ஆக உள்ளது.
தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் 21-ந் தேதி முதல் நகர பஸ்கள் இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரிமளம், கீழாநிலை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த தலா ஒருவருக்கும், கடியாபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 3 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
கே.புதுப்பட்டி அருகே நள்ளிரவில் பெண்களிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரிமளம்:
புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தேனீப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு அறையிலும், இவருடைய தாய் ரெத்தினம் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தனர்.
அப்போது அவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கார்த்திக் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
இதேபோல, பாப்பான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (55) இவருடைய மனைவி கலையரசி. இவர்கள் இருவரும் வீட்டின் முன் பகுதியில் உள்ள கார் நிறுத்தும் இடமான போர்டிகோவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு நேரத்தில் கலையரசி கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துக் கொண்டு தைல மர காட்டுப் பகுதிக்குள் புகுந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கார்த்திக் மற்றும் கிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்தில் நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அரிமளம்:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்தில் நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், ராயவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நச்சாந்துபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திருமயம்:
திருமயம் ஊராட்சி மன்றம் அருகே உள்ள சமுதாயக் கூடத்தில் நச்சாந்துபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில், மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு திருமயம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்த்தில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்தனர். புதிதாக 69 பேருக்கு தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 259 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 670 ஆக உயர்ந்துள்ளது.
ஆனால், 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 282 ஆக அதிகரித்தது. தற்போதைய நிலவரப்படி 985 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் புதிதாக 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவா்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் இப்பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாரி நகரை சேர்ந்த 77 வயது முதியவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பாலாஜி சரவணன், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நிஷா பார்த்திபன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் புதுக்கோட்டையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிஷா பார்த்திபன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் மாவட்டத்திற்கு 49-வது போலீஸ் சூப்பிரண்டாவார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதற்கு முன்பு வித்யாகுல்கர்னி, உமா, ராஜேஸ்வரி ஆகிய 3 பெண் போலீஸ் சூப்பிரண்டுகள் பணியாற்றியுள்ளனர். நிஷா பார்த்திபன் 4-வது பெண் போலீஸ் சூப்பிரண்டாவார். புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபனுக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நடத்திய காணொலி காட்சி ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்றார். போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:- தற்போது கொரோனா காலக்கட்டமாக இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு தேவையான உதவிகளை போலீஸ் தரப்பில் இருந்து செய்து தரப்படும். மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்படும். ரவுடியிசம், மணல் கடத்தல், சாராயம் காய்ச்சுதல் உள்பட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை விபத்தினை தடுக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள், போலீஸ் நிலையங்களில் அளிக்கும் புகார் மனுக்கள் மீது போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நிலையங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் எந்நேரமும் காவல்துறையினரை அணுகலாம். நவீன தொழில்நுட்பங்கள் காவல்துறையில் பயன்படுத்தப்படும். ரோந்து பணிக்கும் செல்லும் போலீசார் பட்டா புத்தகத்தில் கையெழுத்திடுவது வழக்கம். இதனை மின்னணு முறையில் இ-பட்டா புத்தகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






