என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வம்பன் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் முத்துக்குமார் (வயது 26). இவர், ஆலங்குடியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து முத்துக்குமார் தனது மோட்டார் சைக்கிளில் வம்பன் காலனியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். கோவிலூர் நான்கு ரோடு அருகே வந்த போது, முன்னால் ஒரு நாய் வந்ததால் திடீரென பிரேக் போட்டு மோட்டர் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அப்போது, ஆலங்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துக்குமார் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முத்துக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். தகவல் அறிந்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தை ஏற்படுத்திய காரை ஆலங்குடி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் விபத்தில் இறந்த முத்துக்குமார் மனைவி பாண்டி மீனா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 52 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் பலியாகினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 351 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கோட்டை சந்தைபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கோவேக்சின் தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்தும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில், கூட்டம் அலைமோதியதால் டோக்கன் கொடுக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தை போலீசார், நகராட்சி ஊழியர்கள் ஒழுங்குபடுத்தி வரிசையில் நிற்க வைத்தனர். பின்னர் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    மணமேல்குடியில் சிங்கவனம் வட்டார மருத்துவ அலுவலகம் மற்றும் மணமேல்குடி வர்த்தக நலச்சங்கம் இணைந்து அனைத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    மணமேல்குடி:

    மணமேல்குடியில் சிங்கவனம் வட்டார மருத்துவ அலுவலகம் மற்றும் மணமேல்குடி வர்த்தக நலச்சங்கம் இணைந்து அனைத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை மருத்துவர் ஞானசேகர் தொடங்கி வைத்தார். வர்த்தக நலச் சங்க தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். முகாமில் மணமேல்குடி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். முகாமில், சங்கத்தின் செயலாளர் செல்வம், பொருளாளர் வாசன் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல பொன்னமராவதியில் உள்ள லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் லயன்ஸ் சங்கம், காரையூர் வட்டார சுகாதாரத்துறை துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் லயன்ஸ் சங்க தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. முகாமில் சங்கத்தின் செயலாளர் நாகராஜன், பொருளாளர் காசி விஸ்வநாதன், மருத்துவர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், ஆலவயல், கோவனூர், நல்லூர், உசிலம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
    மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
    அரிமளம்:

    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கொசவபட்டி பாம்பாறு பகுதியில் இருந்து மினி லாரியில் மணல் கடத்தி வந்ததாக சீவிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாலு என்கிற பாலகுரு, புதுவயல் பழைய ஊரணி பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது 21) ஆகிய 2 பேர் மீது கே.புதுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்தார். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 684 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 47 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம், கொரோனாவால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 349 பேர் உயிரிழந்துள்ளனர்.
    விராலிமலை அருகே லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, அண்ணாபண்ணையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி லட்சுமி (வயது 48). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விராலிமலை அருகே தேத்தாம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை அண்ணாபண்ணைக்கு செல்வதற்காக தேத்தாம்பட்டி அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி எதிர்பாராத விதமாக லட்சுமி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    தொண்டைமான்நல்லூர், நீர்பழனி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    ஆவூர்:

    தமிழ்நாடு மின்சார வாரிய கீரனூர் செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குளத்தூர் தாலுகா தொண்டைமான்நல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தொண்டைமான்நல்லூர், உடையவயல், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், தென்னதிரையான்பட்டி, சிட்கோ, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
    சிறுமிக்கு ஏற்கனவே ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில், மேலும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மூலங்குடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது26). இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி தனது உறவினர் மகளான 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக சிறுமியின் தரப்பில் திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கார்த்திக் மீது போக்சோ சட்டத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கார்த்திக்கு போக்சோ சட்டத்தில் ஒரு பிரிவில் ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், மற்றொரு பிரிவில் ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில், மேலும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அங்கவி ஆஜராகி வாதாடினார். இந்த பாலியல் வழக்கில் புலன் விசாரணை செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டினார்.
    கறம்பக்குடி அருகே ஓட்டு கட்டிடத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி அருகே உள்ள துவார்கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நடுநிலைப்பள்ளியாக இருந்த இந்த பள்ளி அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 2013-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தபட்டது.

    8 ஆண்டுகள் ஆகியும் உயர்நிலைப்பள்ளிக்கு உரிய எந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்யபடவில்லை. நடுநிலைப்பள்ளியாக இருந்தபோது இருந்த அதே ஓட்டு கட்டிடத்திலேயே உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கல்வி பயில வேண்டிய நிலை உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் மழைகாலங்களில் சிரமம் அடைந்து வருகின்றனர்,

    மேலும் மாணவ- மாணவிகளுக்கு இந்த பள்ளியில் முறையான குடிநீர் மற்றும் கழிவறை வசதியும் இல்லை. எனவே துவார் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது குறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகி கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுஉயர்நிலைப்பள்ளிகளில் நபார்டு வங்கி உதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து 8 ஆண்டு ஆனநிலையில் கூடுதல் கட்டிடம் இல்லாதது மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது. தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் போதிய வசதிகள் இல்லாததால் இப்பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் தயங்குகின்றனர். எனவே துவார் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்றார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 3 பேர் பலியாகினர். புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனால் இறப்பு எண்ணிக்கை அவ்வப்போது அதிகரித்து வருகிறது. அரசு நேற்று வெளியிட்டப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து585 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 38 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து729 ஆக அதிகரித்தது.

    இந்த நிலையில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகியினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 510 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    புதுக்கோட்டை அருகே கடையில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் அருள் கென்னடி (வயது 50). பிளக்ஸ் கடை உரிமையாளரான இவர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தனது கடையில் ரூ.1 லட்சத்து70 ஆயிரத்தை ஊழியர்கள் உமா உள்பட 3 பேர் திருடியதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தவேல் (வயது 52). இவரது மனைவி லட்சுமி. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த அமிர்தவேல் மனைவி அடக்கம் செய்யப்பட்ட சுடுகாட்டுக்கு அடிக்கடி சென்று கல்லறையில் படுத்து அழுவது மட்டுமின்றி அங்கேயே தூங்கி விடுவாராம். மேலும் ஊருக்குள் வரும்போது, மனைவியை பற்றி பேசிக்கொண்டு புலம்பியபடியே செல்வார். இந்த நிலையில் அமிர்தவேல் சுடுகாட்டில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×