என் மலர்
செய்திகள்

கறம்பக்குடி அருகே ஓட்டு கட்டிடத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியை படத்தில் காணலாம்.
ஓட்டு கட்டிடத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்ட பெற்றோர்கள் கோரிக்கை
கறம்பக்குடி அருகே ஓட்டு கட்டிடத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே உள்ள துவார்கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நடுநிலைப்பள்ளியாக இருந்த இந்த பள்ளி அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 2013-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தபட்டது.
8 ஆண்டுகள் ஆகியும் உயர்நிலைப்பள்ளிக்கு உரிய எந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்யபடவில்லை. நடுநிலைப்பள்ளியாக இருந்தபோது இருந்த அதே ஓட்டு கட்டிடத்திலேயே உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கல்வி பயில வேண்டிய நிலை உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் மழைகாலங்களில் சிரமம் அடைந்து வருகின்றனர்,
மேலும் மாணவ- மாணவிகளுக்கு இந்த பள்ளியில் முறையான குடிநீர் மற்றும் கழிவறை வசதியும் இல்லை. எனவே துவார் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகி கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுஉயர்நிலைப்பள்ளிகளில் நபார்டு வங்கி உதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து 8 ஆண்டு ஆனநிலையில் கூடுதல் கட்டிடம் இல்லாதது மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது. தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் போதிய வசதிகள் இல்லாததால் இப்பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் தயங்குகின்றனர். எனவே துவார் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்றார்.
Next Story






