என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி, கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    கோட்டைப்பட்டினம்:

    மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி, கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் அரசர்குளம், மாங்குடி, நாகுடி, கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில், மீமிசல், கரூர், பொன்பேத்தி, திருப்புனவாசல், அமரடக்கி, அம்பலாவனேந்தல், கரகத்திக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறந்தாங்கி மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.
    பொன்னமராவதியில் புதிய வழித்தடங்களுக்கான பஸ்போக்குவரத்தை அமைச்சர் ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார்.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி பஸ்நிலையத்தில் செறிவூட்டப்பட்ட குடிநீர் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் ரகுபதி திறந்து வைத்து பேசியதாவது:-

    இப்பகுதியில் ஏற்கனவே நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொன்னமராவதியிலிருந்து இரவு நேரத்தில் மணப்பாறை, குளித்தலை, நாமக்கல் வழியாக சேலம், மேட்டூருக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொன்னமராவதியிலிருந்து சிவகங்கை, சிங்கம்புணரி, மதுரை வழியாக திருநெல்வேலிக்கு பஸ்கள் இயக்கப்படும். பொன்னமராவதி பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற உள்ளது. பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தவும், நீதிமன்றம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தொடர்ந்து அவர் புதிய வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இந்த பஸ் தினமும் பொன்னமராவதியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு கொன்னையூர், முலங்குடி, செவலூர் வழியாக நெய்வேலிக்கு 7.40 மணிக்கு சென்றடையும்.

    பின்னர் அங்கு இருந்து புறப்பட்டு குழிபிறை, பனையப்பட்டி, லட்சுமிபுரம் வழியாக திருமயத்திற்கு 8.30 மணிக்கு சென்றடையும். அதன்பின் அங்கு இருந்து புறப்பட்டு கடியாபட்டி, ராயபுரம், தேக்காட்டூர் வழியாக நமணசமுத்திரத்திற்கு காலை 9.45 மணிக்கு சென்றடையும்.

    தொடர்ந்து அங்கு இருந்து புறப்பட்டு தேக்காட்டூர், ராயபுரம், கடியாபட்டி வழியாக திருமயத்திற்கு மதியம் 11.20 மணிக்கு வந்தடையும். பின்னர் அங்கு இருந்து புறப்பட்டு குழிபிறை, செவலூர், மேலமேலநிலை, முலங்குடி வழியாக பொன்னமராவதிக்கு மதியம் 12.20 மணிக்கு வந்தடைகிறது. அதன்பின்அங்கு இருந்து புறப்பட்டு சிங்கம்புணரிக்கு 1.20 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் அந்த பஸ் மீண்டும் பொன்னமரவதிக்கு மதியம் 2.30மணிக்கு வந்தடைகிறது.

    முன்னதாக அமைச்சர் ரகுபதி பொன்னமராவதி வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, ஒன்றியக் குழுத் தலைவர் சுதாஅடைக்கலமணி, ஒன்றிய ஆணையர்கள் வெங்கடேஷ், சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகினர். புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும், இறப்பு எண்ணிக்கை அவ்வப்போது அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று தொடர்பாக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து895 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 31 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 164 ஆக அதிகரித்தது.

    கொரோனாவுக்கு மாவட்டத்தில் தற்போது 371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் இணை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி, 77 வயது முதியவர், 69 வயது முதியவர் ஆகியோர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது.

    புதுக்கோட்டையில் பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நியூ டைமண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜராஜன். இவர் நேற்று தனது மனைவியுடன் மதுரையில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வீட்டை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று ராஜராஜன் பார்த்த போது, பீரோ திறந்து கிடந்ததுடன், அதில் இருந்த பொருட்கள் வெளியே கலைந்து கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருடு போகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து டவுன் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை, பணத்தை திருடிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடு போனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விவசாயிகளை திருடன் என்று கூறிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை முதல்வர் ஸ்டாலின், அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என எச் ராஜா கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யநாதபுரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி நடந்த விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் அப்போதைய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது போலீசார் மற்றும் நீதிமன்றம் பற்றி விமர்சித்து பேசியதாக எச்.ராஜா உள்பட 18 பேர் மீது திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் எச்.ராஜா தரப்பில் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    மனுவை நீதிபதிகள் விசாரித்து, மனுதாரர் திருமயம் கோர்ட்டில் 23-ந் தேதி ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி நேற்று காலை திருமயம் நீதிமன்றத்தில் நீதிபதி இந்திராகாந்தி முன்னிலையில் ஆஜரானார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரும் ஆஜராகினர்.

    இந்த வழக்கை நீதிபதி செப்டம்பர் மாதம் 17-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இதனை தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த எச்.ராஜா, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

    பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, இந்து சமுதாயத்த இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

    விவசாயிகளை திருடன் என்று கூறிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை முதல்வர் ஸ்டாலின், அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்.

    தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளன. இவற்றை ஆக்ரமிப்பாளரிடம் இருந்து மீட்கும் நடவடிக்கையை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விரைவாக செய்து வருவது பாராட்டுக்குரியது. கோவில் நில ஆக்கிரமிப்பு பட்டியலை என்னிடம் அமைச்சர் கேட்டுள்ளார்.

    அமைச்சர் சேகர் பாபு

    திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் அறநிலையத்துறையின் கோவில் இடங்களை வாங்கி சிலர் திருமண மண்டபம், வணிக வளாகம் கட்டி வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள், கடைகளை மீட்டால் ஆயிரம் கோவில்களில் புனரமைப்பு பணிகளை செய்யலாம்.

    வன்முறைவாதி ஸ்டேன் சாமி, உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தியதுக்கு முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

    இதையும் படியுங்கள்...சென்னையில் பெண்கள், குழந்தைகளுக்கான உதவி மையம் -காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

    கிள்ளனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூர்:

    கிள்ளனூர் அருகே பெரம்பூர் குளத்துகரை பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் (வயது 55), ராமராசு (35), பாலசுப்பிரமணியன் (55), பிரபு (32), வடிவேல் (38) ஆகிய 5 பேரை உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு கைது செய்தார். அவர்களிடம் இருந்து ரூ.150 மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து கறம்பக்குடியில் சிபிஐஎம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடைமுக்கத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சிபிஐஎம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ரம்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய துணைத்தலைவர் விமலா ராணி முன்னிலை வகித்தார்.

    இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டரை சுற்றி வந்து ஒப்பாரி வைத்து நூதன முறை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நூதன முறை ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும் முதியோர்களின் ஓய்வூதியத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி பல்வேறு கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
    திருமயத்தில் பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருமயம்:

    திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள் மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியை சேர்ந்த கம்பர்மலைப்பட்டி அய்யனார் (வயது 29), கீழவளவு ராஜவீதியை சேர்ந்த அழகர் (38) என தெரியவந்தது. மேலும் அவர்கள். திருமயம், கல்லல், அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் தனியாக சென்ற பெண்களை தாக்கி நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து அவரிடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலியை மீட்டனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    கரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், ஆவுடையார்கோவில் அனைத்து வர்த்தக சங்கமும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தினர்.
    ஆவுடையார்கோவில்:

    ஆவுடையார்கோவில் அரசு மேல் நிலைப்பள்ளியில் கரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், ஆவுடையார்கோவில் அனைத்து வர்த்தக சங்கமும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தினர். முகாமில் வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில் மருத்துவர், சுகாதார ஆய்வாளர் வீரகுமார் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தினார்கள். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன், வர்த்தக சங்க தலைவர் பொன் மாணிக்கம் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    கறம்பக்குடி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி அம்புக்கோவில் முக்கம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பாலு (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    திருமயம் அருகே ரெயில் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமயம்:

    திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் ரெயில் நிலையம் பகுதியில் நேற்று மாலை திருச்சியில் இருந்து காரைக்குடி சென்ற ரெயிலில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து நமணசமுத்திரம் போலீசார், காரைக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில்  புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 748 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 38 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 955 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 351 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×