என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    சேந்தமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேந்தமங்கலம்:

    மாரமங்கலத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 36). கட்டிட மேஸ்திரியான இவர் வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலையும் பார்த்து வந்தார். இந்த நிலையில் சேந்தமங்கலம் அருகே உள்ள நடுக்கோம்பை குட்டுக்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உயிருக்கு போராடிய அவரை வீட்டில் இருந்தவர்கள் சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி பலியான கோவிந்தராஜிக்கு சசிகலா (31) என்ற மனைவியும், 11 மற்றும் 9 வயதில் 2 மகள்களும் உள்ளனர்.
    ஆலங்குளத்தில் காரை உடைத்து ரகளை செய்த 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    விராலிமலை தாலுகா, ஆலங்குளத்தில் உள்ள கடைவீதியில் அப்பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் பல நாட்களாக மாலை நேரத்தில் மதுபோதையில் கடைகளில் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்து வருவதாக போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த பிச்சை மனைவி சரஸ்வதி (வயது 50) என்பவர் தனது மகனுடன் நேற்று முன்தினம் விராலிமலை சென்றுவிட்டு இரவு 9.30 மணியளவில் வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கடை வீதியில் மதுபோதையில் நின்றுகொண்டு தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சூரியூர் முருகேசன் மகன் பாலசுப்பிரமணி (வயது 23), திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா சொக்கம்பட்டி அழகு மகன் மணிகண்டன் (23), சூரியூர் பழனிசாமி மகன் உதயகுமார் (21), எழுவம்பட்டி முருகேசன் மகன் தமிழரசன் (21), செம்புலிங்கம் மகன் கோபிநாத் (20), அருவங்கால்பட்டி கருப்பையா மகன் லெட்சுமணன் (21) ஆகிய 6 பேரும் சரஸ்வதி, சுரேஷ்குமார் ஆகியோர் வந்த காரை வழிமறித்து கதவை உடைத்து அவர்களை வெளியே வருமாறு தகாத வார்த்தையில் பேசி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி ஆகியோர் நேற்று காலை ஆலங்குளம் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாத்தூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மதுபோதையில் கடைவீதியில் நின்றுகொண்டு ரகளையில் ஈடுபட்ட பாலசுப்பிரமணி உள்பட 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    ஊதிய பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தினர் நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பணிமனை தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். மத்திய சங்க துணைத்தலைவர் சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

    ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு பண பலன்கள், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு ஆகியவற்றை உடனே அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ஓய்வு பெற்ற ஊழியர் சங்க தலைவர் கணபதி, செயலாளர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல வேதாரண்யம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வேதாரண்யம் போக்குவரத்து கிளை செயலாளர் கவுதமன் தலைமை தாங்கினார்.

    ஊதிய பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    கிராமங்களில் உள்ள கண்மாய், குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கூடலூர் அணைக்கட்டு மதகுகளை சரி செய்ய விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    அரிமளம்:

    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், சமுத்திரம் ஊராட்சி, துறையூர் ஊராட்சி, கீழ பனையூர் ஊராட்சி, ஓனாங்குடி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் உள்ள குளங்கள், கண்மாய்கள் நிரம்பவில்லை. கூடலூர் அணைக்கட்டிலிருந்து கொள்ளளவை விட அதிக அளவு தண்ணீர் கிடைக்கும் போது, ஆற்றில் கலப்பதற்கு பல மதகுகளும் கிராம குளங்களுக்கு தண்ணீர் சென்று கலப்பதற்கு சில மதகுகளும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.

    சங்கிலி போன்று உள்ள கிராம குளங்கள் மற்றும் கண்மாய்கள் ஒவ்வொன்றாக நிரம்பி கடைசியில் எஞ்சிய நீர் மற்றொரு வழியாக ஆற்றில் சென்று கலக்கும். இந்நிலையில் கடந்த 10 தினங்களாக பெய்த தொடர் மழையில் சமுத்திரம் ஊராட்சி, துறையூர் ஊராட்சி, கீழப்பனையூர் ஊராட்சி, ஓனாங்குடி ஊராட்சி, அரிமளம் பேரூராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் நிரம்பவில்லை. இதற்கு முக்கிய காரணம் கூடலூர் அணைக்கட்டு நிரம்பிய பிறகு மிதமிஞ்சிய தண்ணீர் கிராமங்களுக்கு செல்வதற்காக சில மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கிராமப்புறங்களுக்கு செல்லும் பகுதியில் உள்ள கரைகள் பலவீனமாக இருப்பதால் கிராம பகுதிகளுக்கு செல்லும் மதகுகளை திறக்கும் பொழுது தண்ணீர் மீண்டும் அணைக்கட்டு உள்ளே சென்று ஆற்றில் கலந்து விடுகின்றது. இதனால் குளங்கள், கண்மாய்கள் நிரம்பவில்லை.

    இதை அடுத்து தாஞ்சூர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் கூடலூர் அணைக்கட்டிலிருந்து தண்ணீர் கிடைக்காததால் கொத்தடி கண்மாயில் இருந்து பனைய கண்மாய்க்கு வரும் வரத்து வரியை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணியை சமுத்திரம் ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. கூடலூர் அணைக்கட்டு பகுதியில் கரைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் தண்ணீர் திறந்த உடன் மீண்டும் தண்ணீர் ஆற்றில் கலந்து விடுகின்றது. தண்ணீர் ஆற்றில் கலக்காமல் இருப்பதற்காக பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகள் கொண்டு அடக்கி வைத்தாலும் மதகுகள் ஒரு அடி உயரத்துக்கு மேல் திறக்க முடியவில்லை. இதனால் அரை அடி ஒரு அடி உயரத்தில் மட்டுமே கதவுகள் திறக்கப்பட்டு கிராமங்களில் உள்ள குளங்கள், கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    இருப்பினும் இது பலனளிக்கவில்லை. விவசாயத்தை அடிப்படையாக கொண்டு திகழும் கிராமப்புறங்களில் உள்ள குளங்கள் கண்மாய்கள் தண்ணீர் இல்லாததால் அப்பகுதியில் உள்ள நெற்பயிர்கள் இந்த ஆண்டு விளையுமா என்பது விவசாயிகளிடம் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி கூடலூர் அணைக்கட்டில் உள்ள மதகுகள் கரைகளை சரிசெய்து பலப்படுத்த வேண்டுமென அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    ஆசிரியை விஜயலட்சுமிக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தினர், நூலகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
    உடுமலை:

    அமெரிக்காவில் வாஷிங்டன் மேரிலேண்ட்டில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் சிறந்த நூல்களுக்கு விருது மற்றும் முனைவர் பட்டம் வழங்கும் விழா சென்னை அரும்பாக்கத்தில் நடந்தது. 

    விழாவில் பல்கலைக்கழக வேந்தர் சாந்தி ஓமகுண்டம் தலைமை வகித்தார்.  

    ஓய்வு பெற்ற நீதிபதி கணேசன், எழுத்தாளர் ரஜத் எழுதிய ரத்தத்தின் ரத்தமே எம்.ஜி.ஆர். வரலாறு என்ற புத்தகத்திற்கு சிறந்த நூலுக்கான விருதை வழங்கினார். 

    தமிழ் பல்கலைக் கழகம் சார்பில் சிறந்த நூல்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் சென்னையில் நடந்தது.

    இதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி புவியியல் ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்ற விஜயலட்சுமிக்கு அவரது கல்வி மற்றும் வரலாறு சார்ந்த சேவையை பாராட்டி மதிப்புறு முனைவர் பட்டமும் வரலாற்று ஆய்வு அறிஞர் விருதும் வழங்கப்பட்டது.

    அவரை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தினர், நூலகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 
    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றன. புயல் சின்னம், தொடர் மழையால் கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை கோட்டைப்பட்டினம் திடீர் நகர் பகுதியை சேர்ந்த மணிமுத்து (வயது 45), கணேசன் ஆகிய இருவரும் அனுமதி பெறாமல் பதிவு செய்யப்படாத நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு அவர்கள் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சுமார் 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் காற்றின் வேகம் திடீரென்று அதிகரித்தது. இதில் நாட்டுப்படகு அலைக்கழிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் தலைகுப்புற படகு கவிழ்ந்தது. அதிலிருந்து தவறி விழுந்த மீனவர்கள் இருவரும் நடுக்கடலில் தத்தளித்தனர்.

    இதைப்பார்த்த அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மற்ற மீனவர்கள் விரைந்து வந்து கணேசனை பத்திரமாக மீட்டனர். ஆனால் மணிமுத்துவை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து பல மணி நேரமாக அந்த பகுதி முழுவதும் தேடியும் எந்த தகவலும் இல்லை.

    இதையடுத்து மீட்கப்பட்ட மீனவருடன் கரை திரும்பியவர்கள், இதுபற்றி மற்ற மீனவர்களுக்கும், கடலோர காவல் படைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்று காலை 6 மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் கடலுக்கு சென்று மாயமான மீனவர் மணிமுத்துவை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தற்போது தொடர் மழை காரணமாக அணைமேடு கலுங்கு பகுதியில் கடந்த 2 மாதங்களாக நீர் அருவி போல் கொட்டிவருகிறது.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் பகுதியில் கடந்த சிலநாட்களாக தொடர்மழை பெய்து வருவதால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அப்பகுதியில் உள்ள அணைமேடு நீர்வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் கொட்டுகிறது.

    இந்த நீர்வீழ்ச்சியில் கரைகள் சேதம் அடைந்து விடுவதை தவிர்க்க கலுங்கு எனப்படும் தடுப்புச்சுவர் கற்களால் ஆன கரை அணை மேடு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது.

    வெள்ளப்பெருக்கின் போது இந்த கலுங்கின் வழியாக நீர்வீழ்ச்சி கொட்டுகிறது. அவ்வாறு கொட்டும் தண்ணீர் சிறிது தூரம் கிளை ஆறாக பெருக்கெடுத்து சென்று மீண்டும் சரபங்கா நதியில் கலக்கும் வகையில் பண்டைய காலத்தில் வெள்ளத்தடுப்பு பாதுகாப்பு அமைப்பாக ஏற்படுத்தப்பட்டது.

    தற்போது தொடர் மழை காரணமாக அணைமேடு கலுங்கு பகுதியில் கடந்த 2 மாதங்களாக நீர் அருவி போல் கொட்டிவருகிறது. இந்த காட்சியை கண்டு ரசிக்கவும் குளித்து மகிழவும் மக்கள் குடும்பம் குடும்பமாக படை எடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒருவாரகாலமாக தண்ணீர் அதிக அளவில் கொட்டி வருவதால் குளிக்கும் போது 10-க்கும் மேற்பட்ட நபர்கள் வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர்.

    மேலும் அசம்பாவிதம் ஏற்படாவண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து சேலம் மாவட்ட நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் உத்தரவின்படி அணைமேடு நீர்வீழ்ச்சியில் குளிக்க, செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீர்விழ்ச்சிக்கு செல்லும் அனைத்து பகுதிகளையும் தடுப்பு அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் நீர்விழ்ச்சியில் குளிக்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
    அறந்தாங்கி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே குன்னக்குரும்பியை சேர்ந்தவர் ராஜா (வயது 26). தொழிலாளி. நேற்றுமுன்தினம் அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையில் படுத்திருந்த மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை ஒதுக்கிய போது, நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் நின்ற மரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதையறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் இரவு நேரத்தில் சாலையில் மாடுகள் தூங்குவதால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. மாடுகளை பிடித்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விக்கிரவாண்டி அருகே வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவன் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி அருகே உள்ள வா.பகண்டை பகுதியை சேர்ந்தவர் செல்வமணி மகன் ஜீவித் (வயது 4). நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு அக்கம் பக்கத்தில் உள்ள சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஜீவித் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுபற்றி விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, மாயமான சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி தாசில்தார் இளவரசன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் தலைமையிலான மீட்பு குழுவினர் மற்றும் அக்கிராம இளைஞர்கள் வ.பகண்டையில் உள்ள நீர்நிலைகளில் இறங்கி சிறுவனை தேடினர்.

    அப்போது வாதானூரான் வாய்க்காலில் பிணமாக கிடந்த சிறுவனின் உடலை மீட்டனர். ஜீவித் விளையாடியபோது வாய்க்காலுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே செல்வமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியை சேர்ந்தவர் இருதய லியோ (வயது21). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் காதல் தோல்வியின் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பென்னாகரம் அருகே குளிக்க சென்ற போது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பென்னாகரம்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கரியம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன். விவசாயி. இவருடைய மகன் அஸ்வின் (வயது 8). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் அஸ்வின் தனது அண்ணன் அகிலன் மற்றும் நண்பர்களுடன் கரியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்கசென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவன் தண்ணீரில் மூழ்கினான். நீண்ட நேரமாகியும் அஸ்வின் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அகிலன் மற்றும் நண்பர்கள் மேலே வந்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கிணற்றுக்கு வந்தனர். கிணற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்ததால் இதுகுறித்து அவர்கள் பென்னாகரம் தீயணைப்பு நிலையத்திற்கும், அகிலனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனை பிணமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதையடுத்து சிறுவனின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    புதுக்கோட்டையில் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடும் திருடும் கும்பல் ஒன்றினை விரட்டிச் சென்ற போது அக்கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இச்சம்பவத்திற்கு கண்டம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ''நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கயவர்களால் நேற்று இரவு வெட்டிக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் தான் நம்முடைய காவல்துறை சகோதர சகோதரிகள் பணியாற்றுகிறார்கள். பணி நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு சிறப்பு சட்டம் எதுவும் கிடையாது, இது போன்ற நிகழ்வுகள் அந்த சிறப்பு சட்டம் வேகமாக வர வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது.

    புதுக்கோட்டை எஸ்ஐ
     
    மாநில அரசு கூட இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும். அன்னாரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்'' என்று அவர் கூறியுள்ளார். 

    ×