search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீர் வெளியேறாமல் இருக்க மணல் மூட்டை  அடுக்கி வைத்திருப்பதை படத்தில் காணலாம்.
    X
    தண்ணீர் வெளியேறாமல் இருக்க மணல் மூட்டை அடுக்கி வைத்திருப்பதை படத்தில் காணலாம்.

    கிராமங்களில் உள்ள கண்மாய்-குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் வேதனை

    கிராமங்களில் உள்ள கண்மாய், குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கூடலூர் அணைக்கட்டு மதகுகளை சரி செய்ய விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    அரிமளம்:

    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், சமுத்திரம் ஊராட்சி, துறையூர் ஊராட்சி, கீழ பனையூர் ஊராட்சி, ஓனாங்குடி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் உள்ள குளங்கள், கண்மாய்கள் நிரம்பவில்லை. கூடலூர் அணைக்கட்டிலிருந்து கொள்ளளவை விட அதிக அளவு தண்ணீர் கிடைக்கும் போது, ஆற்றில் கலப்பதற்கு பல மதகுகளும் கிராம குளங்களுக்கு தண்ணீர் சென்று கலப்பதற்கு சில மதகுகளும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.

    சங்கிலி போன்று உள்ள கிராம குளங்கள் மற்றும் கண்மாய்கள் ஒவ்வொன்றாக நிரம்பி கடைசியில் எஞ்சிய நீர் மற்றொரு வழியாக ஆற்றில் சென்று கலக்கும். இந்நிலையில் கடந்த 10 தினங்களாக பெய்த தொடர் மழையில் சமுத்திரம் ஊராட்சி, துறையூர் ஊராட்சி, கீழப்பனையூர் ஊராட்சி, ஓனாங்குடி ஊராட்சி, அரிமளம் பேரூராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் நிரம்பவில்லை. இதற்கு முக்கிய காரணம் கூடலூர் அணைக்கட்டு நிரம்பிய பிறகு மிதமிஞ்சிய தண்ணீர் கிராமங்களுக்கு செல்வதற்காக சில மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கிராமப்புறங்களுக்கு செல்லும் பகுதியில் உள்ள கரைகள் பலவீனமாக இருப்பதால் கிராம பகுதிகளுக்கு செல்லும் மதகுகளை திறக்கும் பொழுது தண்ணீர் மீண்டும் அணைக்கட்டு உள்ளே சென்று ஆற்றில் கலந்து விடுகின்றது. இதனால் குளங்கள், கண்மாய்கள் நிரம்பவில்லை.

    இதை அடுத்து தாஞ்சூர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் கூடலூர் அணைக்கட்டிலிருந்து தண்ணீர் கிடைக்காததால் கொத்தடி கண்மாயில் இருந்து பனைய கண்மாய்க்கு வரும் வரத்து வரியை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணியை சமுத்திரம் ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. கூடலூர் அணைக்கட்டு பகுதியில் கரைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் தண்ணீர் திறந்த உடன் மீண்டும் தண்ணீர் ஆற்றில் கலந்து விடுகின்றது. தண்ணீர் ஆற்றில் கலக்காமல் இருப்பதற்காக பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகள் கொண்டு அடக்கி வைத்தாலும் மதகுகள் ஒரு அடி உயரத்துக்கு மேல் திறக்க முடியவில்லை. இதனால் அரை அடி ஒரு அடி உயரத்தில் மட்டுமே கதவுகள் திறக்கப்பட்டு கிராமங்களில் உள்ள குளங்கள், கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    இருப்பினும் இது பலனளிக்கவில்லை. விவசாயத்தை அடிப்படையாக கொண்டு திகழும் கிராமப்புறங்களில் உள்ள குளங்கள் கண்மாய்கள் தண்ணீர் இல்லாததால் அப்பகுதியில் உள்ள நெற்பயிர்கள் இந்த ஆண்டு விளையுமா என்பது விவசாயிகளிடம் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி கூடலூர் அணைக்கட்டில் உள்ள மதகுகள் கரைகளை சரிசெய்து பலப்படுத்த வேண்டுமென அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×