என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • மயானத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • தாசில்தார் தலைமையில் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே சேந்தாக்குடி ஊராட்சியில் வெள்ளக்கொள்ளை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மயானத்திற்காக இடம் உள்ளது. இந்த இடத்தை தனி நபர் ஒருவர் திடீரென்று ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து ஒரு பிரிவினர் ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று மயானத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து புகார் கூறினார்.

    இதையடுத்து ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமையில், வட்ட துணை தாசில்தார் பழனியப்பன், வெண்ணவல்குடி வருவாய் ஆய்வாளர் குப்புசாமி, சேந்தாக்குடி, பாலையூர், வெண்ணவால்குடி கிராம நிர்வாக அதிகாரிகள் சுப உலகநாதன், கார்த்திகையன், கணேசன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் மயானத்திற்கு உட்பட்ட இடத்தை அளந்து அடைக்கப்பட்டிருந்த முள்வேலிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை ஆலங்குடி போலீசார் பாதுகாப்புடன் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கம்பன் பெருவிழா நடைபெற உள்ளது.
    • வரும் 15-ந் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் நகர் மன்ற வளாகத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 24 -ந் தேதி வரை 10 நாட்கள் கம்பன் கழகம் 47ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவை நடத்துகிறது. இதுகுறித்து கம்பன் கழக செயலகத்தில் கம்பன் கழக தலைவரும் தொழிலதிபருமான ச.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது,

    கம்பன் கழகம் 47ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா வருகின்ற 15ம் தேதி முதல் 10 நாட்கள் தினந்தோறும் மாலை 5.30 மணியிலிருந்து நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இதில் மகளிர் அரங்கம், தமிழிசை அரங்கம், கவியரங்கம், உரைக்களம், வழக்காடு மன்றம், நடன அரங்கம், உரை அரங்கம், தேனிசை அரங்கம், எழிலுரை, நற்றமிழ் முற்றம், கவிதைச் சோலை, கனல் உரை, இளையோர் அரங்கம், ஐயம் தெளிவு அரங்கம், பரிசளிப்பு, பல்பணி அரங்கம், பட்டிமன்றம் ஆகியவை நடைப்பெறுகிறது.

    விழாவில் உச்சநீதிமன்றம் நீதியரசர் ராமசுப்பிரமணியன், உயர்நீதிமன்றம் நீதியரசர் சுரேஷ்குமார், கலந்துக் கொண்டு கம்பன் மாமணி, இலக்கிய மாமணி, கம்பன் பணி விருதுகளை வழங்குகின்றர். நிறைவு விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சோரி ஆளுநர் டாக்டர தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துக் கொண்டு சிறப்பிக்கிறார். டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி கம்பனின் சொல் நயம் எனும் பொருளில் எழிலுரையாற்றுகிறார். மேலும் தமிழக அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் அமைச்சர் பெருமக்கள் என கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளனர். எனவே 10 நாட்களும் ஆன்றோர், சான்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டும். தமிழகமே திரும்பி பார்க்கும்படி விழா நடத்தப்படும் என்றார். மேலும் 50வது ஆண்டு விழா சிறப்பாக நடத்தப்படும் என்றார். பேட்டியின் போது செயலாளர் சம்பத்குமார் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

    • சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறும்.
    • கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை,:

    சமூக பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்பு புள்ளி விபரங்களின் அடிப்படையில் அகம் ஆசாதி சே அந்த்யோதயா திட்ட பிரச்சாரத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கையினை ஆய்வு செய்து சரியான முறையில் திருத்தம் செய்து திருந்திய எண்ணிக்கையிலான அறிக்கையினை, இன்று தற்போது சாதாரண தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சிகளை தவிர்த்து ஏணைய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இந்த 'சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

    • தண்ணீர் பிடிக்க சென்ற பள்ளி மாணவி மானபங்கம் செய்யப்பட்டார்
    • வாலிபர் மீது போக்சோவில் வழக்கு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி சவேரியார் பட்டினம் மேற்கு பகு–தியை சேர்ந்தவர் இஸ்தாகிர் (வயது 67). இவரது பேத்தி அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்த பால் பீட்டர் மற்றும் அவரது மனைவி நியூமன் தெரசா ஆகியோர் பொது குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப் போது அங்கு வந்த மாணவி தண்ணீர் பிடிக்க முயன்ற போது பால் பீட்டர் தடுத்துள்ளார். இதுபற்றி கேள்வி எழுப்பினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பால் பீட்டர் அந்த மாணவியிடம் தவறாக நடந்துள்ளார். மேலும் அவரது மூக்கில் கையால் குத்தி காயப்ப–டுத்தி உள்ளதாக கூறப்படு–கிறது. இதுகுறித்து மாண–வியின் தாத்தா இஸ்தாகிர் கறம்பக்குடி காவல் நிலை–யத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் கறம்பக் குடி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சாந்தி மற்றும் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை ஆகியோர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசா–ரித்து வருகின்றனர்.

    • இலங்கை கடற்படைக்கு ஒவ்வொரு நாளும் நாங்கள் பயந்து தொழில் செய்ய வேண்டியுள்ளது.
    • நாங்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் எங்களை அத்துமீறி கைது செய்கிறார்கள்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதி பெற்று 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள் கரையில் இருந்து 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் காரைநகர் அருகே இந்திய எல்லை கடல் பகுதியில் வலைகளை விரித்து மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு குட்டி ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக்கூறி கார்த்திக் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் அதில் சென்ற கார்த்திக் (24), தேவராஜ் (35), சுரேஷ் (47), திருமேனி (31), வேல்முருகன் (29), சுந்தரம் (47) ஆகிய 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். முன்னதாக அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் உள்ளிட்ட மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.

    இன்று அவர்கள் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னரே மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா என்று தெரியவரும். கடந்த வாரம் 4-ந்தேதி கடலுக்கு சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மகேந்திரன், மதன், வசந்த், மெல்வின், சத்தியராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்திருந்த நிலையில் ஒரு வார இடைவெளியில் மீண்டும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து சக மீனவர்கள் கூறுகையில், கடன் வாங்கி நாங்கள் தொழிலுக்கு செல்கிறோம். இலங்கை கடற்படைக்கு ஒவ்வொரு நாளும் நாங்கள் பயந்து தொழில் செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் எங்களை அத்துமீறி கைது செய்கிறார்கள்.

    இது தொடர்ந்து வாடிக்கையான நிகழ்வாகியும் வருகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகையும் விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தாய் இறந்த சோகத்தில் மகனும் உயிரிழந்தார்
    • பழனியப்பன் இதய சிகிச்சை எடுத்து வந்தார்.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள பி.உசிலம்பட்டியில் வசித்து வந்தவர் மருதம்பாள் என்ற சின்னபிள்ளை (வயது 90). இவரது மகன் பழனியப்பன்(52). சம்பவத்தன்று சின்னப்பிள்ளை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது இறுதிசடங்கிற்கான ஏற்பாடுகளை பழனியப்பன் செய்து வந்தார். மேலும் தாய் இறந்த சோகத்தில் மனமுடைந்த நிலையில் அவர் இருந்து வந்தார். இந்நிலையில் பழனியப்பனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். பழனியப்பன் இதய சிகிச்சை எடுத்து வந்தார் என்பது குறுப்பிடத்தக்கது. இதையடுத்து தாய்-மகனுக்கும் இடுகாட்டில் அடுத்தடுத்து இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது. ஒரே குடும்பத்தில் தாய் இறந்த சோகத்தில் மகனும் ெநஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்த பழனியப்பனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.


    • டிராக்டர் மூலம் மணல் எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு டாரஸ் மற்றும் டிப்பர் லாரிகள் மூலம் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா பானாவயல் பகுதியில் கடந்த 1 மாதகாலமாக அரசு அனுமதியுடன் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து உள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு டிப்பர், டாரஸ் லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் உள் மாவட்டங்களுக்கு பயன்படும் வகையில் ட்ராக்டர் மூலம் மணல் அள்ள மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கல்லணைக்கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, பானாவயல் கிராம பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மணல்குவாரியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு டாரஸ் மற்றும் டிப்பர் லாரிகள் மூலம் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில் உள் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்கள், குடியிருப்பு பகுதிகளில் டிப்பர் லாரிகள் செல்ல போதிய பாதை வசதி இல்லை. இதனால் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படுகின்ற வீடுகள் மற்றும் சின்னச் சின்ன கட்டுமானப் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே உள் மாவட்டத்தில் லாரிகள் செல்ல முடியாத குக்கிராமங்களுக்குள் செல்ல ஏதுவாக உள்ள ட்ராக்டரில் மணல் எடுக்க மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


    • நார்த்தாமலை பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது

    புதுக்கோட்டை:

    குளத்தூர் துணை மின்நிலையத்தில் ம ாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால். இங்கிருந்து மின்வினியோகம் பெறும், குளத்தூர், இளையா வயல், நாஞ்சூர், பிரதகம்பாள்புரம், சத்தியமங்கலம், முத்துக்காடு, காவேரி நகர், திருமலைராயபுரம், உப்பிலியகுடி, தாயினிப்பட்டி, விள்துப்பட்டி, ஒடுக்கூர், நார்த்தாமலை ஆகிய பகுதிகளில் நாளை (12-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பு தெரிவித்துள்ளார்.


    • மணல்மேல்குடி அரசு பள்ளி வளாகத்தில் குப்பைகளை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்

    புதுக்கோட்டை:

    அந்தாங்கி அருகே மணமேல்குடி அரசுப்பள்ளி பழைய கட்டிடத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இதே பள்ளி வளாகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது, இக்கட்டிடம் விரிசலடைந்து கானப்படுவதால் கட்டிடத்தை அகற்றுவதற்காக அரசின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஒப்பந்ததாரர்களிடம் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது.

    அதனை தொடர்ந்து பழை கட்டிடத்தில் ஏதேனும் பொருட்கள் இருந்தால் அகற்றும்படி ஒப்பந்ததாரர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, வட்டாரக் கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் ஆகியோர் ஆட்களுடன் சென்று குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருடன் சென்றவர்கள் குப்பைகளை கூட்டி கட்டிடத்திற்குள்ளேயே தீ வைத்துள்ளனர். இதில் கட்டிடத்திலிருந்து புகை வெளியேறியுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி வளாகத்திலிருந்து புகை வருகிறதே என்ற அச்சத்தில் தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் உள்ளே சென்று பார்க்கையில் குப்பைகள் எரிந்து கொண்டிருந்துள்ளது.அதனை தொடர்ந்து தீயை அணைத்த அவர்கள் குப்பைகளை கூட்டி வெளியே தள்ளியுள்ளனர். பள்ளி வளாகத்திற்குள் தீ விபத்து என்ற பொது மக்களின் அச்சத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




    • ஆலங்குடியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
    • ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் 31-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதா நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி, நகராட்சி அலுவலகங்கள், பேருந்து, ரெயில் நிலையங்கள், பூங்காக்கள் என மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் புனித அற்புத மாதா நடுநிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    இதில் ஆலங்குடி சுகாதார ஆய்வாளர் ஜேம்ஸ், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்


    • புதுக்கோட்டையில் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள புத்தக திருவிழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகள் புத்தகம் வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
    • மாவட்டம் முழுவதும் அனைவரும் வாசிப்பு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளின்படி புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் இணைந்து புதுக்கோட்டையில் ஐந்தாவது புத்தகத் திருவிழாவை இந்த மாதம் (ஜூலை) 27-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது.

    அதனுடைய ஒரு நிகழ்வாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழிகாட்டுதல்படி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அனைவரும் வாசிப்பு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளின்படி புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற தலைப்பில் பள்ளி நூலக நூல்களை வாசித்தனர்.

    அந்த அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் நடுநிலைப்பள்ளியில் அனைத்து மாணவர்களும் பள்ளி நூலக புத்தகங்களை வாசித்தனர்.

    குரல் மணி கதைகள், டார்வின் ஆய்வும் விளைவும், கல்விக்கு முதலிடம், நல்லாசிரியரும் நன் மாணவரும், சிந்தனை சிதறல்கள், மறைமலை அடிகளார் கடிதங்கள், பாவேந்தரின் பாட்டு கதைகள், குறள் தந்த பரிசு, விண்வெளிப் பயணம், அறிவியல் வல்லுனர்கள், சுத்தமே சுகாதாரம் போன்ற பல்வேறு நூல்கள் அடங்கிய நூல்களை வாசித்தனர்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன், ஆசிரியர்கள் சீனிவாசன், ஜெயஜோதி, மணி, சுவாமிநாதன், மனோஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வித்திறன் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்ட பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    மேலாண்மை குழு கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரெத்தினகுமார் தலைமை தாங்கினார்.

    பள்ளியின் உதவி ஆசிரியர்கள் அருளரசி, ரவிச்சந்திரன் கோவிலூர் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் மற்றும் ஆலங்குடி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலாண்மை குழு கூட்டத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வித்திறன் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    இறுதியாக பள்ளி மேலாண்மை குழு மறுகூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    ×