என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • பேரிடர் காலமீட்பு பணிகள் குறித்து 100 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
    • மத்திய அரசின் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மத்திய அரசின் ஆப்தமித்ரா திட்டம் மூலம் பேரிடர் காலமீட்பு பணிகள் குறித்து 100 தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

    அறந்தாங்கி தனியார்ப்பள்ளி வளாகம் ஒன்றில் நடைபெற்று வரும் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில், கோட்டாட்சியர் சொர்ணராஜ் முன்னிலை வகித்து நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.

    பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் 300 தன்னார்வலர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    முதற்கட்டமாக அறந்தாங்கி பகுதியில் 100 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டது. பயிற்சியாளர் பிரியா மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.12 நாட்கள் பயிற்சிக்கு பிறகு 100 தன்னார்வலர்களுக்கும் தலா 9 ஆயிரம் மதிப்புள்ள பேரிடர் காலமீட்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு அரசின் சார்பில் இலவச ஆயுட்காப்பீடும் செய்யப்படவுள்ளது.

    • பயணிகள் நிழற்குடை கட்டித்தர அதிகாரிகள் உறுதியளித்தனர்
    • இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே துவால் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு எதிரே பேருந்து நிழற்குடை சேதமடைந்து இருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதனை அகற்றிவிட்டு, அதே இடத்தில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    இவர்களின் கோரிக்கையை ஏற்ற நிர்வாகம், அப்பகுதியில் அதே இடத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நிழற்குடை கட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து, அந்த இடத்தை ஆக்ரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிழற்குடை அமைக்கும் பணி தடைப்பட்டது.

    இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் நிழற்குடை கட்ட கோரி, கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில்

    மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பயணியர் நிழல் குடை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்த அடிப்படையில் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்ட த்தால் அவ்வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கிணறுகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், அடிகுழாய்கள் உள்ளிட்டவை செயலற்ற நிலையில் கிடந் ததோடு, பொதுமக்கள் தண்ணீருக்காக பல மைல் தூரம் செல்லும் நிலை இருந் தது.
    • திருமயம் பஞ்சாயத்தை விரைவில் அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ள தன்னிறைவு பெற்ற பஞ்சாயத்தாக மாற்றும் அளவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திறம்பட நிறைவேற்றி வருகிறார்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட் டம் திருமயம் பஞ்சாயத்து தலைவராக கடந்த உள்ளாட்சிதேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிக்கந்தர். அவர் பொறுப்பேற்றது முதல் இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீர்க்க முடியாத நிலையில் இருந்த பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு கண்டு வருகிறார்.

    குறிப்பாக அப்பகுதி பொதுமக்கள் நலன் கருதி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயனற்று கிடந்த பல்வேறு நீர் நிலைகளை சரி செய்து மேம்படுத்தி இன்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

    கிணறுகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், அடிகுழாய்கள் உள்ளிட்டவை செயலற்ற நிலையில் கிடந் ததோடு, பொதுமக்கள் தண்ணீருக்காக பல மைல் தூரம் செல்லும் நிலை இருந் தது. தேர்தல் சமயத்தில் தனது வாக்குறுதிகளில் முக்கியத்துவம் கொடுத்து பிரசாரம் செய்த பஞ்சாயத்து தலைவர் சிக்கந்தர், தான் வெற்றி பெற்றது முதல் அந்த வாக்குறுதிகளை திறம்பட கையாண்டு நிறைவேற்றி வருகிறார்.

    மக்களின் அன்றாட அடிப்படை தேவைகளை நிறைவேற்றித்தரும் பொருட்டு பிரச்சினைகள் உள்ள பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்து அதனை சரி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்டு வருகிறார்.

    அதிலும் 100 ஆண்டுகளுக் கும் மேலாக பல்வேறு கட்சி தலைவர்கள், கலெக்டர்கள், அதிகாரிகள் பெயரளவிற்கு பார்வையிட்டு சென்ற பயன் பாடற்ற நீர் நிலைகளை இன்று பயன்பாட்டுக்கு கொண்டு வந்த தனித்துவம் பெற்றுள்ள பஞ்சாயத்து தலைவர் சிக்கந்தர், பாழடைந்த கிணறுகளை உரிய முறையில் தூர் வாரி, குப்பைகளை அகற்றி அதன் கட்டமைப்புகளை மேம்படுத்தி பொதுமக்கள் இன்று பயன்படுத்தும் வகையில் சரிசெய்து கொடுத்துள் ளார்.

    தண்ணீருக்காக பல மைல் தூரம் நடந்த திருமயம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே குடிநீர் பிடித்தும், எடுத்துக் கொள்ளும் நிலைக்கு வந் துள்ளனர். அதேபோல் குண்டும், குழியுமாக, மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறி பயன்படுத்த முடியாத அளவில் இருந்த மகமாயிபுரம், அம்பாள்புரம் பகுதிகளில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார்ச்சாலைகளை பஞ்சாயத்து தலைவர் சிக்கந் தர் அமைத்து கொடுத் துள் ளார். இது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    மேலும் பல இடங்களில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலைகளிலும், குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டு தொற்று நோய்களை பரப்பி வந்ததை சரிசெய்யும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுத்த சிக்கந்தர், அகில்துறை, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைத்து தந்துள்ளார். திருமயம் பஞ்சாயத்தை விரைவில் அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ள தன்னிறைவு பெற்ற பஞ்சாயத்தாக மாற்றும் அளவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திறம்பட நிறைவேற்றி வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக ஓலகுடிப்பட்டி பகுதியில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் மினி குடிநீர் டேங்க் அமைத்து அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை கேட்டதோடு அல்லாமல் நிறைவேற்றி தந்துள்ளார். அந்த டேங்க் மூலம் பொதுமக்கள் காலை, மாலை இருவேளையும் சுகாதாரமான குடிநீரை பிடித்து செல்கிறார்கள்.

    அதேபோல் அடிகுழாய் இருந்த இடங்களில் மின் மோட்டார் பொருத்தி, அதன் மூலம் தண்ணீரை மினி டேங்கிற்கு கொண்டு சென்று 24 மணி நேரமும் தண்ணீர் வசதி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாளும் தவறாமல் காலை 6 மணி முதல் 9 மணி வரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளை உடனுக்குடன் டிராக் டர்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு, அதனை விரைவுப்படுத்தி மக்கள் குறைகளை உடனுக் குடன் நிவர்த்தி செய்து வருகிறார்.

    இதனால் திருமயம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பொது மக்கள் பஞ்சாயத்து தலைவர் சிக்கந் தரை பெயரளவிற்கு மட்டுமல்லாமல் தன்னெழுச்சியுடன் பாராட்டி வருகிறார்கள். இதற்காக அவர்கள் பல இடங்களில் விழா எடுத்தும் வருவது புதுக்கோட்டை மாவட்டத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

    • மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    கீரனூர் அருகே கோவில் வீரக்கொடியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பாலமுருகன் (வயது 30). இவர், எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தார். மேலும் தினமும் பெற்றோரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதையடுத்து அவரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமடைந்த பாலமுருகன் நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலமுருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • தனியார் பஸ்களை மறித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • “திருமயம் நகருக்குள் தனியார் பஸ்கள் வராததை கண்டித்து

    புதுக்கோட்டை:

    திருமயம் நகருக்குள் திருச்சி-காரைக்குடி, காரைக்குடி-திருச்சி ஆகிய தனியார் பஸ்கள் பகல் நேரங்களில் வந்து செல்கின்றன. ஆனால் மாலை நேரத்திற்கு பின்பு திருமயம் நகருக்குள் தனியார் பஸ்கள் வராமல் புறவழிச்சாலை வழியாக சென்று விடுகிறது. மேலும் திருமயம் நகருக்குள் வருவதற்காக பொதுமக்கள் காரைக்குடி மற்றும் புதுக்கோட்டையில் பஸ்களில் ஏறினால் திருமயத்திற்குள் செல்லாது என பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

    இதனை கண்டித்து திருமயம் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமையில் நேற்று திருமயம் பஸ் நிலையத்திற்கு வந்த 2 தனியார் பஸ்களை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள், தனியார் பஸ் டிரைவர்களிடம் கூறுகையில், மாலை நேரங்களில் புறவழிச் சாலையை பயன்படுத்தி அந்த வழியாக செல்வது போன்று, பகல் நேரத்திலும் திருமயம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

    அதனைத் தொடர்ந்து தனியார் பஸ் டிரைவர்கள் எப்போதும் திருமயத்திற்குள் பஸ்கள் வந்து செல்லும் என்று கூறினர். அதனைத் தொடர்ந்து மறித்து வைத்து இருந்த 2 பஸ்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • 10 ரவுடிகள் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
    • தனிப்படை போலீசாருக்கு பாராட்டு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் குற்றத்தில் ஈடுபடுவோர்களை கைது செய்யவும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், குற்றப்பின்னணி கொண்டோரை கண்காணிக்க தனிப்படை அமைத்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டிருந்தார். இந்த தனிப்படையினர் அந்தந்த பகுதி போலீசாருடன் இணைந்து குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியை தொடங்கினர்.

    இதில் புதுக்கோட்டை நகரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ரவுடிகளான திருவப்பூர் கீழத்தெருவை சேர்ந்த பொன்னுசாமி மகன் யோகேஸ்வரன் (24), மாயாண்டிசாமி நகர் செல்லத்துரை மகன் சந்தோஷ்குமார் (28), கீரமங்கலம் அண்ணாதுரை மகன் சுரேஷ்குமார் (23), புதுக்கோட்டை சார்லஸ் நகர் பாபு மகன் ஜெயராமன் (20), வடக்கு 4-ம் வீதியை சேர்ந்த குமார் மகன் விஜய் (20), மச்சுவாடி சுப்பிரமணி மகன் அஜி (20) ஆகிய 6 பேரை கைது செய்தார். இவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் திருக்கோகர்ணம் பகுதியில் திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஆயுதங்களைடன் சுற்றித்திரிந்த ரவுடிகளான புதுக்கோட்டை காமராஜபுரம் அய்யப்பன் மகன் பூபதி (27), அடப்பன்வயல் 3-ம் வீதியை சேர்ந்த நாகராஜ் மகன் நெருப்பு தினேஷ் (22), சுப்பையா மகன் கொள்ளு சக்தி (24) ஆகிய 3 பேரை கைது செய்தார். இதேபோல, இலுப்பூர் பிரான்சிஸ் பிருதிவிராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, தனிப்படை போலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார்.

    • கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
    • குடிநீர் எடுத்த போது நடந்த சம்பவம்

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் மகன் வெள்ளைச்சாமி (வயது 48) கூலித் தொழிலாளியான இவர், 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குடத்துடன் இறங்கி குடிதண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பும் பொழுது, குடத்துடன் தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். அக்கம் பக்கம்தினார் கொடுத்த தகவல்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், கிணற்றில் இறங்கி சடலமாக கிடந்த வெள்ளைச்சாமியின் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து காரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆய்வகத்தில் மயங்கிய மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது
    • பயிற்சியில் ஈடுபட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வாராப்பூர் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. சம்பவத்தன்று பள்ளி ஆய்வகத்தில் பயிற்சியில் ஈடுபட்ட ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவர்கள், காப்பர் சல்பேட் என்ற திரவ பொருளை தவறுதலாக சோதனையின்போது உட்கொண்டு மயக்க நிலையில் கிடந்தனர். இதைப்பார்த்த சக மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில், ஆசிரியர்கள் விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்வம் குறித்து தகவலறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பின ர் முத்துராஜா நேரில் சந்தித்து பார்வையிட்டு உரிய சிகிச்சையை அளிக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • நெடுவாசல் கிழக்கு கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் ரூ.2.50 கோடி மொய் வசூல் ஆகியுள்ளது
    • நாடே டிஜிட்டல் மயமாக மாறிவரும் சூழ்நிலையில் இந்த விருந்தில் கலந்துகொண்ட கிராமத்தார் முதல் நகரத்தார் வரை ஆன்லைன் மூலமாக பண பரிமாற்றம் செய்தனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்ட எல்லை கிராமங்களில் ஆனி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரையில் பாரம்பரிய நிகழ்வான மொய்விருந்து விழாக்கள் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

    கஜா புயல் மற்றும் அதனைத்தொடர்ந்து கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மொய் விருந்து விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

    ஆனாலும் பிறந்தநாள் விழா, காதணி விழா என்ற பெயர்களில் மொய் விருந்து நிகழ்ச்சிகள் ஒருபுறம் நடத்தப்பட்ட போதிலும் வழக்கமான உற்சாகம் இன்றி காணப்பட்டது.

    களை இழந்து காணப்பட்ட பாரம்பரிய நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஆனி மாதம் இறுதி முதல் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் வெகு விமரிசையாக தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான மொய் விருந்து விழாக்கள் நிறைவடையும் நிலையில் நேற்று முன் தினம் நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து ஒரே இடத்தில் மொய் விருந்து விழா நடத்தினர். இதற்காக முன்கூட்டியே அழைப்பிதழ் வழங்கப்பட்டது. தடபுடல் ஏற்பாடுகளுடன் மொய் விருந்து தொடங்கியது.

    இந்த விருந்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அசைவ விருந்தை ருசித்தனர். இதன் மூலம் அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.15 கோடி மொய் வசூல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெடுவாசல் கிழக்கு கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் ரூ.2.50 கோடி மொய் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் அந்த விழா நடத்தியவர்களில் 20-க்கும் மேற்பட்டோருக்கு தனிப்பட்ட முறையில் தலா ரூ.50 லட்சம் வரை மொய் தொகை வசூல் ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த மொய் விருந்து விழாவை நடத்தியவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    நாடே டிஜிட்டல் மயமாக மாறிவரும் சூழ்நிலையில் இந்த விருந்தில் கலந்துகொண்ட கிராமத்தார் முதல் நகரத்தார் வரை ஆன்லைன் மூலமாக பண பரிமாற்றம் செய்தனர். இதற்காக வங்கி ஊழியர்கள் தயார் நிலையில் அங்கு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.

    மேலும் பணம் எண்ணுவதற்கான எந்திரங்களும் அங்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

    • கந்தர்வகோட்டையில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • மரக்கன்றுகளை நட்டவுடன் பாதுகாப்பிற்காக மூங்கில் கூடு அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.


    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பட்டுக்கோட்டை சாலை மற்றும் திருச்சி சாலையில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.விழாவில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நடராஜன், உதவிப் பொறியாளர் கோட்டை ராவுத்தர் மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மரக்கன்றுகளை நட்டவுடன் பாதுகாப்பிற்காக மூங்கில் கூடு அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    • எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மதச்சார்பற்ற இந்தியாவை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
    • பொதுக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, மாவட்ட தலைவர் ஸலாஹுதீன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    புதுக்கோட்டை :

    கந்தர்வகோட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 14 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டுபேருந்து நிலையம் அருகே மதச்சார்பற்ற இந்தியாவை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    பொதுக்கூட்டத்துக்கு கந்தர்வகோட்டை நகரச் செயலாளர் முஹம்மது அன்சாரி தலைமை தாங்கினார்.மாவட்ட, தொகுதி, நகர கிளை, நிர்வாகிகள் மற்றும் ஜமா அத்தார்கள் முன்னிலை வகித்தனர்.

    பொதுக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, மாவட்ட தலைவர் ஸலாஹுதீன், மகளிர் அணி மாநில செயலாளர் தஸ்லிமா ெஷரிப்ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிறைவாக நகரத் தலைவர் ஷேக் முகமது நன்றி கூறினார்.

    • கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    • கிராம சபைக்கூட்டத்தை மீண்டும் கூட்ட வேண்டும்

    புதுக்கோட்டை:

    திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழாத்தூரில் ஊராட்சி மன்றத்தலைவர் இந்திரா தலைமையில் கிராம சபைக்கூட்டம் தொடங்கியது. இதில் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அலுவலர் ஒருவரும், கிராமத்தினரும் கலந்து கொண்டனர். அப்போது அனைத்துத்துறை அலுவலர்களையும் கலந்து கொள்ள செய்த பிறகு கூட்டத்தை நடத்த வேண்டும் என பொதுக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    பின்னர் வரவு செலவு கணக்கில் முரண்பாடு இருப்பதாக கூறி மீண்டும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஊராட்சி நிர்வாகத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்கு உரிய ஆவணங்கள் கொண்டு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

    ஆனால் உரிய ஆவணங்கள் உடனே கொண்டு வரப்படாததால் மாலை வரை கூட்டம் நடத்தப்படவில்லை. இதற்கிடைய கிராம சபைக்கூட்டம் நடத்தியதாகவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவு அலுவலர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்ததாக தெரிகிறது.

    இதை தொடர்ந்து கீழாத்தூரில் உரிய வரவு, செலவு ஆவணங்களுடன் கிராம சபைக்கூட்டத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என அதே கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கலெக்டர் கவிதா ராமுவிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

    ×