என் மலர்
புதுக்கோட்டை
- புனித அதிசய மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது
- அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள புனித அதிசியமாதா ஆலய தேர்த்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதுக்கோட்டை மறைவட்ட அதிபர் சவரிநாயகம் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.
18, 19, 20 ஆகிய தேதிகளில் கோட்டைக்காடு எம்.எம்.ஐ. பங்குத்தந்தை செங்கோல் மேலப்பட்டி ஐயங்காடு மற்றும் வம்பன் காலனி மற்றும் ஆவுடையார்கோயில் உதவி பங்குத்தந்தை பிராங்கோ எடின், குளவாய்ப்பட்டி வாழைக்கொள்ளை மற்றும் வண்ணாச்சிக்கொள்ளை, மற்றும் வேளாங்கண்ணி பங்குத்தந்தை அற்புதராஜ் ஆகியோர் கலந்துகொண்டு இறை மக்களுக்காக திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர்.
இன்று 21-ந்தேதி சிறுவர், சிறுமிகளுக்கான திவ்ய நற்கூருணை (புது நன்மை) விழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் நவ நாட்களில் பங்கு மக்கள் குடும்பத்தோடு அனைத்து திருப்பலி நிகழ்ச்சிகளிலும் திரளாக கலந்துகொண்டனர்.
தேர் பவனி நிகழ்ச்சியில் தேவமாக திருஉருவம் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஆர்கே அடிகளார் தலைமையில் சித்தேரிமுத்து முன்னிலையில் ஆலங்குடி நகர மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து உள்ள கிறிஸ்தவ மக்கள் தேவாலய தேவமாதா புகழ் பாடிக்கொண்டு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற தேர் பவனி ஆலங்குடி முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.
விழாவில் சுற்றுச்சூழல் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் திருவரங்குளம் ஒன் றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார், ஆலங்குடி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பங்கு பணியாளர்கள், அருட்சகோதரிகள் பக்தசேவைக் குழுக்கள் அன்னதான குழு மற்றும் இளையோர் இயக்கம் ஆகியோர்களால் சிறப்பாக திருவிழா நடைபெற்றது. ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- மாடு, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
- சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா எட்டியத்தளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமுனி ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம்.
நேற்று நடைபெற்ற மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கை பந்தையத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 43 ஜோடி மாடுகள் மற்றும் 36 குதிரைகள் கலந்து கொண்டன.
மூன்று பிரிவுகளாக நடைபெற்ற எல்கை பந்தையத்தில் நடுமாடு பிரிவில் 16 ஜோடிகளும், பூஞ்சிட்டு மாடு பிரிவில் 27 ஜோடி மாடுகளும், நடு குதிரை பிரிவில் 36 குதிரைகளும் பந்தையத்தில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாடு மற்றும் குதிரைகளுக்கு ரூ.2 லட்சம் ரொக்கப்பணமும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.
மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு, சிறப்பு பரிசு மற்றும் கேடயங்கள் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. பந்தையத்தைக்கான அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டிருந்து கண்டு ரசித்தனர்.
- வீட்டுக்கு தீ வைத்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது
- குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அவலம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 48). இவரது மனைவி செல்வி (46). இவர்களுக்கு பொன்னழகு (28), போதுமணி (26), முத்துலட்சுமி (24) ஆகிய மூன்று மகள்களும் ஆனந்த் (23) என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இவரது மூன்றாவது மகள் முத்துலட்சுமி (24) என்பவர் தனது வீட்டிற்கு தெரியாமல் மாற்று சமூகத்தை சேர்ந்த காதலித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
இதனால் பழனியப்பன் குடும்பத்தினரை கட்டையாண்டிபட்டி கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனியப்பன் குடும்பத்தினரை ஊரில் சேர்த்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த ஜூன் மாதம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் பழனியப்பன் மனு கொடுத்துள்ளார். இந்த புகார் மனுவுக்கு எந்தவித நடவடிக்கையும் காவல்துறை எடுக்காததால் கடந்த ஜூலை மாதம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பழனியப்பன் மனு கொடுத்துள்ளார். ஆனால் இது நாள் வரை அவரது கிராமத்தில் பழனியப்பனை ஊரில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கட்டையாண்டிபட்டி ஊரணி அருகே உள்ள பழனியப்பனின் களத்து வீட்டுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து அந்தக் களத்து வீட்டிற்கு அருகாமையில் இருந்தவர்கள் தங்கள் வீட்டில் பராவாமல் இருக்க தண்ணீர் ஊற்றி அந்த தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் பழனியப்பனின் களத்து வீடு முழுமையாக தீயில் எரிந்து நாசமானது.
பழனியப்பன் பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு சென்று தனது களத்து வீட்டை மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து சென்றதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள நிலையில் மீண்டும் தன்னையும் தனது குடும்பத்தாரையும் ஊரில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பொன்னமராவதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது
- நம்ம ஊரு சூப்பரு திட்டம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டத்தின்கீழ், ஊரகப் பகுதிகளில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், கலெக்டர் கவிதாராமு வழிகாட்டுதலின்கீழ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை மாவட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தண்ணீர், சுகாதாரம் மற்றும் திட, திரவக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்துதல் தொடர்பாக மாவட்ட அளவிலான அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவித் திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்), அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரம் குறித்து பொதுமக்கள் அறியும் வண்ணம் விளம்பரப்படுத்தவும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியோர்களுக்கு பிரச்சாரம் தொடர்பாக பயிற்சி அளித்திடவும், அனைத்து கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் செயல்படுத்திட அனைத்து துறை அலுவலர்களும் பங்கு கொண்டு, அது தொடர்பான அறிக்கைகளை தினசரி வழங்கிட தெரிவிக்கப்பட்டது.
பிராச்சாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இணை இயக்குநர் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள் இருப்பார். அவருக்கு உறுதுணையாக உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவித்திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) ஆகியோர் இருப்பார்கள்.
அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரம் வெற்றிபெற செய்ய வேண்டும் என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி தெரிவித்தார்.
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ருதி, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) ஜோஸ்மின் நிர்மலா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கிராவல் மண் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தப்பியோடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
விராலிமலை தாலுகா, ஆலங்குடி ஊராட்சிக்குட்பட்ட கைகுடிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி சிலர் கிராவல் மண் அள்ளி செல்வதாக போலீசாருக்கு தகவல் சென்றது. அதன்பேரில் மண்டையூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது கைகுடிப்பட்டி கருப்பர் கோவில் அருகே பொக்லைன் எந்திரத்தின் மூலம் கிராவல் மண் அள்ளி டிராக்டரில் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய பொக்லைன் எந்திர டிரைவர் இலுப்பூர் தாலுகா ராப்பூசல் தொட்டியப்பட்டியை சேர்ந்த சூசை மகன் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 21), டிராக்டர் டிரைவர் சித்தாம்பூர் பழனிவேல் மகன் தனபால் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பொக்லைன் எந்திரம், டிராக்டர் ஆகியவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ், தனபால் ஆகியோரை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் கிராவல் மண் அள்ளிய இடத்தில் மற்றொரு டிராக்டருடன் தப்பியோடிய சித்தாம்பூரை சேர்ந்த முருகேசன் மகன் ராமையா (28) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
- சிறுவர்கள் கிருஷ்ணர் வேடம் அணிந்து பங்கேற்றனர்.
புதுக்கோட்டை:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தங்களது வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து மகிழ்ந்தனர். மேலும் குழந்தை பருவத்தில் கண்ணன் வீட்டிற்கு வருவது போன்று வாசலின் நுழைவுவாயிலில் இருந்து பூஜை அறை வரை சிறு குழந்தைகளின் கால் தடங்களை பதித்து, கண்ணன் விரும்பும் சீடை, முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை படைத்து வழிபாடு நடத்தினார்கள். இதனால் கிருஷ்ணர் தங்கள் இல்லத்துக்குள் வந்து ஆசி வழங்குவார் என்பது ஐதீகம்.
புதுக்கோட்டை விட்டோபா பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சிறுவர்கள் கண்ணன், ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர். இதேபோல் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டையில் கிருஷ்ணா பக்தி இயக்கம் சார்பில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. மேலும் கிருஷ்ணர், ராதை அலங்காரம் போட்டி நடைபெற்றது. இதில் சிறுவர்- சிறுமிகள், கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து பங்கேற்றனர்.
மணமேல்குடி அருகே பொன்னகரத்தில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் சீதேவி, பூதேவி உடனுறை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியொட்டி பெருமாளுக்கு தங்க அங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி கந்தர்வகோட்டை அருகே உள்ள கொத்தகப்பட்டி கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பின்னர் கிருஷ்ணருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
- “மளிகைக்கடையில் 2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை:
விராலிமலை தாலுகா, மலம்பட்டி பகுதியில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று மாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதே ஊரை சேர்ந்த மருதன் (வயது 48) என்பவரது மளிகை கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ் உள்ளிட்ட 2 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதனை கைது செய்தனர்.
- தந்தை உடலுக்கு மயானம் வரை வந்து மகள் இறுதி சடங்கு செய்தார்
- ஆலங்குடி அருகே நெகிழ்ச்சி சம்பவம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இருசக்கர வாகன மெக்கானிக்கான இவர் நேற்று உடல்நலைக்குறைவால் இறந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை அவர்கள் செய்தனர்.
இதையடுத்து இறந்த சேகருக்கான மயானக்கரை கொள்ளி வைக்கும் சடங்குகளை செய்வதில் உறவினர்கள் கேள்வி எழுப்பினர். இறுதியில் அவரது மூத்த மகளான ஆனந்தி என்ற பட்டதாரி மகள் தந்தைக்கான காரியங்களை நானே செய்கிறேன் என்று கூறினார். அதன்படி மயானம் வரை சென்ற அவர் தந்தையின் உடலுக்கு தீ மூட்டினார்.
ஆண்பிள்ளை இல்லாத குறையை தீர்த்து தனது தந்தைக்கு கொள்ளி வைத்த பட்டதாரி பெண் ஆனந்தியை அங்கு வந்த உறவினர்கள் மற்றும் ஊரார்கள் பாராட்டினர்.
இதற்கிடையே ஆலங்குடி இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் இறந்த சேகர் குடும்பத்திற்கு இறுதி சடங்குகள் செய்வதற்காக ரூ.20 ஆயிரம் வழங்கி உதவி செய்தனர்
- கும்பாபிஷேக விழா நடத்துவதில் இருதரப்பினரிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது
- சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் வடக்கு வட்டம் பட்டவையனார், கொம்புக்காரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்துவேறுபாடு மற்றும் மோதல் ஏற்படும சூழல் இருந்தது. இதுதொடர்பாக கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அளித்த புகாரையடுத்து அவர்களை அழைத்து சமாதான கூட்டம் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆலங்குடியில் உள்ள அலுவலகத்தில் வருவாய் வட்டாட் சியர் செந்தில்நாயகி தலைமையில் மற்றும் கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, தலை மையிடத்து துணை வட்டாட்சியர் பாலகோபாலன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி வருகிற (செப்டம்பர்) 5-ந்தேதி அன்று கும்பாபிசேகம் நடத்துவது என்றும், மற்றொரு பிரிவினர் தங்களுடைய குலதெய்வங்களான கருப்பர் மற்றும் சன்னாசி ஆகிய தெய்வங்களுக்கு தை மாதம் கும்பாபிஷேகம் நடத்துவது என்றும், கரை தொடர்பான பிரச்சனையை பின்னர் நீதிமன்றம் சென்று பரிகாரம் தேடிக்கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.
இதில் இருதரப்பினரிடையே ஏதேனும் முரண்பாடு ஏற்படும் பட்சத்தில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஒரு பிரிவினர் ஒத்துக்கொண்டு கையொப்பமிட்டனர். மற்றொரு பிரிவினர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.
இதனால் அறிவித்தபடி கும்பாபிஷேகம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பழனி என்கிற பழனியாண்டி சின்னபூசாரி (வயது 65). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, பழனியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல் அறந்தாங்கி இந்திரா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (46). இவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சரவணனிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான சான்றிதழை போலீசார் காண்பித்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- பல்பொருள் விற்பனை அங்காடியில் ரூ.42 ஆயிரத்தை மூதாட்டி திருடினார்.
- கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி
புதுக்கோட்டை:
கறம்பக்குடி சுலைமான் நகர் பகுதியை சேர்ந்தவர் பீர்முகமது (வயது 42). இவர் கறம்பக்குடி கடைவீதியில் பல்பொருள் விற்பனை அங்காடி நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறந்த சிறிது நேரத்தில் வாடிக்கையாளர் கேட்ட பொருளை எடுப்பதற்காக கடைக்கு அருகில் இருந்த குடோனுக்கு சென்றார். அப்போது கடையில் வேலை ஆட்கள் யாரும் இல்லை. குடோனில் எடுத்த பொருளை வாடிக்கையாளரிடம் கொடுத்துவிட்டு பணப்பெட்டியை பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ.42 ஆயிரத்தை காணவில்லை. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். மூதாட்டி ஒருவர் கடையில் யாரும் இல்லாததை அறிந்து முன்பக்க மேஜையில் இருந்த பணக்கட்டை குனிந்து எடுத்து அவரது கைபைக்குள் போட்டு செல்வது பதிவாகி இருந்தது. ஆனால் அந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து பீர்முகமது கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மூதாட்டி யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கீரனூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது
புதுக்கோட்டை:
மாத்தூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விராலிமலை ஒன்றியம், தொண்டைமான் நல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தொண்டைமான் நல்லூர், உடையவயல், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், களமாவூர், காரப்பட்டு, தென்னத்திரையான்பட்டி, சிட்கோ, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு இதில் அவர் கூறியுள்ளார். குளத்தூர் மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கீரனூர் தேர்வு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான பரந்தாமன் நகர், கீழ காந்திநகர், மேல காந்தி நகர், நான்கு ரதவீதிகள், எழில் நகர், என்.சி.ஓ.காலனி, முஸ்லிம் தெரு, பஸ் ஸ்டாண்டு, ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங்யூனிட், பசுமை நகர், அழகுநகர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்"






