என் மலர்
உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழா நடத்துவதில் இருதரப்பினரிடையே கருத்துவேறுபாடு
- கும்பாபிஷேக விழா நடத்துவதில் இருதரப்பினரிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது
- சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் வடக்கு வட்டம் பட்டவையனார், கொம்புக்காரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்துவேறுபாடு மற்றும் மோதல் ஏற்படும சூழல் இருந்தது. இதுதொடர்பாக கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அளித்த புகாரையடுத்து அவர்களை அழைத்து சமாதான கூட்டம் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆலங்குடியில் உள்ள அலுவலகத்தில் வருவாய் வட்டாட் சியர் செந்தில்நாயகி தலைமையில் மற்றும் கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, தலை மையிடத்து துணை வட்டாட்சியர் பாலகோபாலன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி வருகிற (செப்டம்பர்) 5-ந்தேதி அன்று கும்பாபிசேகம் நடத்துவது என்றும், மற்றொரு பிரிவினர் தங்களுடைய குலதெய்வங்களான கருப்பர் மற்றும் சன்னாசி ஆகிய தெய்வங்களுக்கு தை மாதம் கும்பாபிஷேகம் நடத்துவது என்றும், கரை தொடர்பான பிரச்சனையை பின்னர் நீதிமன்றம் சென்று பரிகாரம் தேடிக்கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.
இதில் இருதரப்பினரிடையே ஏதேனும் முரண்பாடு ஏற்படும் பட்சத்தில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஒரு பிரிவினர் ஒத்துக்கொண்டு கையொப்பமிட்டனர். மற்றொரு பிரிவினர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.
இதனால் அறிவித்தபடி கும்பாபிஷேகம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






