என் மலர்
புதுக்கோட்டை
- கணவர் முழுமையாக குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்த ராஜலெட்சுமிக்கு கணவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
- இடிந்து போன ராஜலெட்சுமி கணவரின் முகத்தையாவது பார்க்க வேண்டும் என அழுது புரண்டார்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மைனாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). இவரது மனைவி ராஜலெட்சுமி. இந்த தம்பதியினருக்கு ஹரித் (8), ஹர்சன் (4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
உள்ளூரில் வேலை பார்த்து கிடைத்த வருமானம் குடும்பம் நடத்த சுரேசுக்கு போதுமானதாக இல்லை. குழந்தைகளின் படிப்பு உள்ளிட்டவைகளை சமாளிக்க முடியாமல் தவித்தார்.
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றால் கைநிறைய சம்பாதிக்கலாம் என்று உற்றார், உறவினர்கள், நண்பர்கள் கூறியதையடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் சுரேஷ் மேற்கொண்டார்.
அதன்படி சுரேஷ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலகின் பணக்கார நாடு என்று புகழப்படும் புருனே நாட்டிற்கு கூலி வேலைக்காக சென்றார். அங்கு 3 மாதம் வேலை பார்த்த நிலையில் திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து உடன் பணியாற்றும் நண்பர்கள், உறவினர்கள் மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சையிலிருந்த அவர் குணமடைந்து வருவதாக நண்பர்கள் மூலம் மனைவி ராஜலெட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவர் முழுமையாக குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்த ராஜலெட்சுமிக்கு கணவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. மேலும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்குள் பேரிடியாக கடந்த டிசம்பர் 25-ந்தேதி சுரேஷ் இறந்துவிட்டதாக அங்கிருந்த நண்பர்கள் கூறியுள்ளனர்.
இதனால் இடிந்து போன ராஜலெட்சுமி கணவரின் முகத்தையாவது பார்க்க வேண்டும் என அழுது புரண்டார். ஆனால் ரூ.24 லட்சம் கட்டினால் மட்டுமே உடலை வாங்க முடியும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனையடுத்து தனது கணவர் உடலை மீட்டுத்தர வலியுறுத்தி கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் அவர் மனு அளித்தார்.
ஆனாலும் உடலை இதுவரை வாங்க முடியாத சூழ்நிலையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு தனது கணவர் உடலை பெற்றுத்தர வேண்டும் ராஜலெட்சுமி மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கணவரை இழந்து வாடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
இறந்த கணவரின் முகத்தைக்கூட காணமுடியாமல் மனைவிக்கும், வாடிய முகத்துடன் தவிக்கும் குழந்தைகளுக்கும் உறவினர்கள் கூறும் ஆறுதல் போதுமானதாக இல்லை. குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று இறந்த கணவரின் உடலை வாங்க 15 நாட்களுக்கும் மேலாக கண்ணீருடன் போராடி வரும் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது.
- பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல்
- பணம் வைத்து சூதாடிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை:
அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே முத்தூர் கலையரங்கம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 8 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதை பார்த்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார். அவர்களிடமிருந்து ரூ.400 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்தனர்.
- மாத்தூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
- இத்தகவலை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை
விராலிமலை ஒன்றியம், மாத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் ெபறும், மாத்தூர் டவுன் மற்றும் அதற்குட்பட்ட இண்டஸ்ட்ரியல் பகுதி, குண்டூர் பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர், சாமிஊரணிபட்டி, மலையேறி, ஆம்பூர்பட்டி, நால்ரோடு, புதுப்பட்டி, செங்களாக்குடி, சீத்தப்பட்டி, குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம்பட்டி, சஞ்சீவிராயர் கோவில் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மாத்தூர் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
- தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
- கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே குப்பக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை. இவருக்கு சொந்தமாக சுமார் 20 அடி ஆழம் ெகாண்ட, கிணறு உள்ளது. கிணற்றின் அருகில் ஒரு பசுமாடு மேய்ந்த போது கால் தடுமாறி கிணற்றில் விழுந்து விட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் மற்றும் மீட்பு குழுவி னருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, கிணற்றில் விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
- புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது
- அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட மாநாடு நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. தமிழ் நாடு மாநில செயலாளர் தினேஷ் சீரங்கராஜ் கலந்து கொண்டு மனறத்தின் கொடியை ஏற்றி வைத்து பேசினார். மாணவர் பெருமன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் செங்கோடன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் கைலாச பாண்டியன் மற்றும் தேசியக்குழு உறு ப்பினர் வழக்கறிஞர் பவதாரணி, இந்திய மாதர் தேசிய சம்மேள னத்தின் மாவட்டச் செயலாளர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் விஜய் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
- புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள சேவுகம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மனைவி தனுஷ்யா (வயது 26). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.இந்நிலையில் கணவன், மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சமபவத்தன்று ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த பாலமுருகன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து மனைவியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த தனுஷ்யா மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தனுஷ்யா செம்பட் டிவிடுதி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு என்ற பெருமை பெற்றது.
- இதில் தஞ்சையைச் சேர்ந்த ராஜ்குமார் காளைக்கு முதல் பரிசாக பைக் வழங்கப்பட்டது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் புனித அடைக்கல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜனவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
பாதுகாப்பு காரணங்களால் 2-ம் தேதி நடத்தப்பட்ட இந்த போட்டி கடந்த ஆண்டு கொரோனா காரணமாக 13-ம் தேதி நடைபெற்றது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தயாராக இருந்த நிலையில், பாதுகாப்பு நலன் கருதி ஜல்லிக்கட்டு போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக கலெக்டர் கவிதாராமு அறிவித்தார்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை முறையாக மேற்கொள்ளவில்லை, மாடுகள் வெளியே வரக்கூடிய கலெக்ஷன் பாயிண்ட் முறையாக அமைக்கவில்லை, மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு ஆன்லைன் முறையில் முறையாக டோக்கன் வழங்கப்படவில்லை, வீரர்களுக்கான கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. பணிகள் அனைத்தும் முடித்த பிறகு ஜல்லிக்கட்டு குழுவினர் எந்த தேதியில் அனுமதி கேட்கிறார்களோ அந்த தேதியில் அனுமதி வழங்கப்படும் என்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த தச்சங்குறிச்சி கிராம மக்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர் அதிகாரிகளின் வாகனங்கள் முற்றுகை, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து இன்று (8-ம் தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் அடிப்படையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக 500 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அதேபோல் 300 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். அவர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. பலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.
முன்னதாக புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க நேரம் கருதி காலை 6.30 மணிக்கு கோவில் 15 கோவில் காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப் பட்டன.
இதையடுத்து காலை 8.30 மணிக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கலெக்டர் கவிதா ராமு, எம்.எல்.ஏ.க்கள் சின்னதுரை, டாக்டர் முத்துராஜா, வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் ஆகியோர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
முன்னதாக, மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பேன், காளைகளை துன்புறுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் களத்தில் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் வாடிவாசலில் இருந்து திமிறியும், சீறிப்பாய்ந்தும் துள்ளிக்குதித்து வந்த காளைகளை திமிலை பிடித்து அடக்கினர். இதில் பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி களத்தில் நின்று விளையாடியது.
அந்த காளைகளுக்கும், அதேபோல் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள், கட்டில், பீரோ, சேர், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் தஞ்சையைச் சேர்ந்த ராஜ்குமார் காளைக்கும், திருநல்லூரை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற வீரருக்கும் முதல் பரிசாக பைக் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு என்ற பெருமை பெற்றதையடுத்து போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் திரண்டனர். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் அருகே தயார் நிலையில் ஆம்புலன்சு, தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் துரத்தியதிலும், தூக்கி வீசியதிலும் பெண் காவலர் உள்பட 70 பேர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 4 பேர் உடனடியாக ஆம்புலன்சு மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- ஆலங்குடி மேலாத்துாரில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது
- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பொது மக்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கினார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலாத்தூர் ஊராட்சி நீர் பாசன சங்கம் சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரும் விராலிமலை தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கினார்.விழாவில் நீர் பாசன சங்க தலைவர் குமார், மேலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சோபா புஷ்பராஜ், ஆலங்குடி ஊராட்சி மன்ற திருவரங்குளம் முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, கரம்பக்காடு ஜெமீன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குழ.சண்முகநாதன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 212 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டது
- தஞ்சை மாவட்ட எல்லைப் பகுதியான கைகாட்டி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்
ஆலங்குடி:
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி எல்லைப் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்று வருவதாக, புதுக்கோட்டை மாவட்ட போலீசாருக்கு தஞ்சை மாவட்டப் போலீசார் தகவல் கொடுத்திருந்தனர். இதன் தொடர்ந்து, புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லைப் பகுதியான கைகாட்டி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆலங்குடி அருகே உள்ள கைகாட்டி அண்ணா நகர் புதுத்தெரு பகுதியில் கார் ஒன்றை நிறுத்தி, பூட்டி விட்டு ஓடுவது சந்தேகமாக இருபதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் தகவல் அளித்த இடத்திற்கு சென்ற மாவட்ட மதுவிலக்கு மற்றும் போதைத் தடுப்பு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் ஆலங்குடி மது விலக்கு இன்ஸ்மபெக்டர், மணமல்லி , சப்-இன்ஸ்கபெக்டர் கவிதா உள்ளிட்ட போலீசார் அந்த காரை சோதனையிட்ட போது, ஏழு மூட்டைகளாக கட்டப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான, 212 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது
. காருடன் அதனை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்கு பதிந்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். மேலும் தஞ்சையில் இருந்து இதனை அனுப்பியவர் யார்? புதுக்கோட்டையில் யார் யாருக்கு சப்ளை? செய்யப்படுகிறது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்
- அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என்றார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது. திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் முன்னே ற்றத்திற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் ஒன்றிய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 45 திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் பரவலாக மேற்கொள்ளவும், அரசின் திட்டங்கள் ஏழை, எளிய பொதுமக்களை சென்றடையும் வகையில் முன்னுரிமை அளித்து செயல்படுத்துவதுடன், அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் எம்.எல்.ஏ.க்கள் முத்துராஜா, ராமச்சந்திரன், வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெய லட்சுமிதமிழ்செல்வன், நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கவேரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக குழு உறுப்பினர்களிடையே மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழுக் கூட்டம், திருநாவுக்க ரசர்தலைமையில் நடைபெற்றது.
- பொன்னமராவதியில் அனைவருக்கும் வீடுகள் கணக்கெடுப்பு பயிற்சி நடந்தது
- இதற்கான படிவம் தயாரித்தல் குறித்து செயல்முறை விளக்கம் வழங்கினர்
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைவருக்கும் வீடுகள் கணக்கெடுப்பு ஊராட்சி ஒன்றிய அளவிலான பயிற்சி நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய ஆணையர் தங்கராசு தலைமை வகித்தார். ஒன்றிய துணைஆணையர் வளர்ச்சி குமார், கணினி உதவியாளர் பாண்டி ஆகியோர் அனைவருக்கும் வீடுகள் கணக்கெடுப்பு பற்றிய விளக்கம், கணக்கெடுக்கும் முறைகள் குறித்து விளக்கி பேசினார்
. மேலும் இதற்கான படிவம் தயாரித்தல் குறித்து செயல்முறை விளக்கம் வழங்கினர். இதில் ஊராட்சித்தலைவர்கள் காமராஜ், செல்வமணி, கிரிகீதா, சுமதி, ராமாயி, ராமசாமி, சௌந்தர்ராஜன், ராமையா, கிராம நிர்வாக அலுவலர்கள் சண்முகம், ரெங்கராஜ், ஒன்றிய அலுவலர்க்ள், ஊராட்சித்தலைவர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மகளிர்குழு கூட்டமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- கந்தர்வகோட்டையில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது
- விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருள்மிகு அமராவதி உடனுறை ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.






