என் மலர்
புதுக்கோட்டை
- நகராட்சி சார்பில் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது
- குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மாற்று ஏற்பாடு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் கோடை காலம் தொடங்கிய நிலையிலும், குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணிகளின் காரணமாகவும் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை போக்குவதற்காக நகராட்சி நிர்வாகம் மூலம் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த வார்டுகளில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகிக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் நேற்று முதல் லாரிகளில் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கியது. திருவள்ளுவர் நகர் கோல்டன் நகரில் அருகே லாரிகளில் குடிநீர் வினியோகிக்கப்பட்டதை பொதுமக்கள் வரிசையில் நின்று குடங்களில் பிடித்து சென்றனர். இதனை தஞ்சை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்திலும், பல்வேறு திட்டப்பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
- கல்லூரி மாணவிகளுக்கான விடுதி பயன்பாட்டிற்கு வந்தது
- காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் கல்லூரி மாணவிகள் விடுதி பாபு ஜெகஜீவன்ராம் சத்ரவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 50 கல்லூரி மாணவிகள் தங்கும் வகையில் 5 தங்கும் அறைகளும், காப்பாளினி அறை, சமையலறை, உணவுக் கூடம், கழிவறை உள்ளிட்டவைகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதேபோல முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிக்கு நபார்டு நிதியுதவியுடன் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் 8 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தப்படி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். மருதன்கோன்விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி, கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் மாலா ராஜேந்திரதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், கல்லூரி முதல்வர் சந்திரவதனம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் காணொலியில் திறந்து வைத்த புதிய கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
- ஆம்னி வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்
- புதுக்கோட்டைக்கு சென்ற போது விபத்து
புதுக்கோட்டை,
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே மருதூர் பொன்பரப்பியை சேர்ந்தவர் டிரைவர் செல்வக்குமார் (வயது 49). இவரது மனைவி சுமதி (41) மற்றும் கோகிலா (38), மோனிஷா (12), வர்ணீஷ் (8), மகேஷ் (12). இவர்கள் 6 பேரும், சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டிக்கு ஆம்னி வேனில் புதுக்கோட்டை- அரசமலை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கீரங்குடி பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ஆம்னி வேன் சாலையிக் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 6 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்த 6 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரசவத்திற்கு பின் வலிப்பு ஏற்பட்டு பெண் பலியானார்
- ஆண் குழந்தை பிறந்த நிலையில் உயிரிழப்பு
புதுக்கோட்டை
பொன்னமராவதி தாலுகா தொட்டியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி தேன்மொழி (வயது 22). பிரசாந்த் தனது மனைவியை பிரசவத்திற்காக மேலைச்சிவபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தேன்மொழிக்கு திடீரென வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே தேன்மொழி பரிதாபமாக இறந்தார். கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் திடீரென வலிப்பு ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேன்மொழிக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆவதால் இலுப்பூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
- தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது
- 20 பேருக்கு பணியிட மாறுதலுக்கான ஆைண வழங்கப்பட்டது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் அருகில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வு இணைய தள வாயிலாக நேற்று நடைபெற்றது.இதில் அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 35 தலைமையாசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 20 தலைமையாசிரியர்கள் விரும்பிய பள்ளிகளை இணைய தள வாயிலாக தேர்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்தில் 20 தலைமையாசிரியர்களுக்கு அதற்கான ஆணையினை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி மஞ்சுளா வழங்கி வாழ்த்தினார்.இந்த நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ( உயர்நிலை) ராஜூ, கண்காணிப்பாளர் கார்த்திக்கேயன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை.செந்தில், இருக்கைப்பணி கண்காணிப்பாளர் சீனிவாசன், பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, பிரிவு உதவியாளர் ராஜ்மோகன் மற்றும் பலர் கலந்துகொ ண்டனர்.பொது மாறுதல் கலந்தாய்வின் வாயிலாக விரும்பிய பள்ளிகளை இணைய தள மூலம் தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தந்த தமிழக முதல்வருக்கும், தமிழக கல்வி அமைச்சருக்கும், கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கும் தலைமையாசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.
- அங்காளபரமேஸ்வரி, மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி இந்திரா நகரில் அங்காளபரமேஸ்வரி, மாசாணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த மூன்று நாட்களாக கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நேற்று யாக சாலையில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவில் மூலஸ்தான விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- முத்துமாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது
- தேர் வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே கரம்பக்காட்டில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கோவிலுக்கு புதிய ேதர் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் 4 வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதையடுத்து கோவில் திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது. பின்னர் காப்பு கட்டுதல் நடைபெற்றது. தேர் வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- அரிமளம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 10 பேர் காயமடைந்தனர்.
- இதில் 43 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே புதுநிலைப்பட்டி கண்ணுடை அய்யனார், குருந்துடை அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று காலை 10 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.முன்னதாக காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் ஜல்லிக்கட்டு திடலுக்கு அனுமதிக்கப்பட்டனர். முதலில் உள்ளூர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை.
அதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 43 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது.இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், பொன்னமராவதி, திருச்சி, காரைக்குடி, திருப்பத்தூர், திருமயம், பனையப்பட்டி, விராச்சிலை, அறந்தாங்கி, சிங்கம்புணரி, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 150 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த 2 பேர் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் பாத்திரம், ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமசுப்புராம், காங்கிரஸ் வட்டார தலைவர் புதுப்பட்டி கணேசன் மற்றும் அரிமளம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.
- ஆலங்குடி அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது
- ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே துவரங்கொல்லைப்பட்டியில் பிடாரியம்மன், சித்திவிநாயகர், முத்துமுனீஸ்வரர், உருமநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு சித்தி விநாயகர் திடலில் நேற்று நடந்தது. கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி உறுதிமொழி வாசிக்க அதனை வீரர்கள் ஏற்றுக்கொண்டனர். முத்துராஜா எம்.எல்.ஏ., கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவ.பாஞ்சாலன், துணை தாசில்தார் செல்வராஜ், முதுநிலை வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். இதில், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 11 காளைகள் கலந்து கொண்டன. 11 சுற்றுகளாக நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 99 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். இதில் காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கட்டில், வெள்ளி நாணயம், மின்விசிறி, சில்வர் அண்டா, குக்கர், ஹாட் பாக்ஸ், மின்சார அடுப்பு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. மஞ்சுவிரட்டில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு உரங்களுடன் இடுபொருட்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கபடும்
- வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான 1312 மெட்ரிக் டன் யூரியா தூத்துக்குடியில் இருந்து ரெயில் மூலம் வந்துள்ளது. இவைகள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.எனவே, மாவட்டத்தில் உள்ள சில்லரை உர விற்பனையாளர்கள், உரக் கட்டுப்பாட்டு ஆணைப்படி மானிய விலை உரங்களை விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும்.
உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் விவசாயிகளின் பார்வையில் படும்படி பராமரிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான உரங்களுடன் வேறு சில இடுபொருட்களை இணைத்து வழங்கக் கூடாது.மொத்த உர விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பிற மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பிடவும், பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதும் கூடாது. உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் இருப்பு வைப்பதும், உரங்களை விற்பனை செய்வதும் கூடாது. இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-இன்படி உர உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.
- கடலில் மீன்பிடிக்க சென்ற முதியவர் பலியானார்
- இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
மணமேல்குடியை அடுத்த பத்தகாடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65). இவர் நேற்று அதிகாலை அம்மாபட்டிணம் கடற்கரை கிராமத்திலிருந்து கடலில் மீன் பிடிக்க சென்றார். இவர் கைவீச்சு வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவர் கடலில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரது உடல் மணமேல்குடி கோடியக்கரையில் மிதப்பதாக வந்த தகவலின் பேரில் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புகையிலை பொருட்களை விற்ற 5 பேர் கைது செய்யபட்டனர்
- சிறப்பு காவல் படை குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
கே.புதுப்பட்டி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சிறப்பு காவல் படை குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏம்பல் பகுதியில் உள்ள மதகம் கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 44), இரும்பநாட்டை சேர்ந்த ஐயாசாமி (77), கொங்கன் தெருவை சேர்ந்த பாண்டியன் (47) ஆகியோர் தங்களது கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மேற்பனைக்காடு பகுதியை சேர்ந்த பாலதண்டாயுதம் (44), மாங்காடு பூச்சிக்கடை பகுதியை சேர்ந்த தர்மராஜ் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.






