என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற தடகள மாணவர்கள் 59 பேர் தேர்வு செய்யபட்டுள்ளனர்
- தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பயிற்சி வழங்கப்படும்.
பெரம்பலூர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு இந்தியா (கேலோ இந்தியா) திட்ட நிதியுதவியில் தொடக்க நிலை தடகள பயிற்சிக்கான விளையாட்டு மையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த தடகள பயிற்சிக்கான தேர்வு போட்டியினை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் தொடங்கி வைத்தார்.
இதில் பயிற்சியாளர்கள் துர்கா (தடகளம்), பரணி (டேக்வாண்டோ), உடற்கல்வி ஆசிரியர்கள், தற்காலிக பயிற்சியாளர்கள் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை நடத்தினர். தடகள போட்டிகளில் மாவட்டத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் 100க் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பாக செயல்பட்ட 35 மாணவர்கள், 24 மாணவிகள் என மொத்தம் 59 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பயிற்சி வழங்கப்படும். அவர்களுக்கு 11 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவர் என மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் தெரிவித்தார்.
- லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யபட்டார்
- அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அகரம்சீகூர்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளாதேவி உத்தரவின்பேரில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மங்களமேட்டை அடுத்துள்ள சின்னாறு ஆர்ச் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மங்களமேடு உட்கோட்ட துணை சூப்பிரண்டு சீராளன் மேற்பார்வையில் மங்களமேடு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகளை விற்றுகொண்டிருந்த லெப்பைகுடிக்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 43) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
- செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலில் படி பூஜை விழா நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படி பூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலையில் படி பூஜை நடைபெற்றது. சித்திரை மாத முதல் நாளில் படி பூஜை நடத்தினால், அந்த ஆண்டும் முழுவதும் வாழ்க்கை படியில் முன்னேறி செல்லலாம் என்பது பக்தர்களின் ஐதீகம். படி பூஜை விழாவை முன்னிட்டு மலையின் அடிவாரத்தில் உள்ள படிக்கட்டில் கணபதி பூஜை, கோ பூஜை நடைபெற்றது. இதில் படியின் இருபுறங்களிலும் அமர்ந்திருந்த பெண் பக்தர்கள் படியில் தேங்காய், பழம், பூ, பத்தி ஆகியவற்றை வைத்து படி பூஜை செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தர்கள் மற்றும் திரளான பெண்கள் கையில் செங்கரும்பை ஏந்தி மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். படி பூஜையை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு தண்டாயுதபாணிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவுள்ளனர்
- உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பெரம்பலூர்:
நாடு முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு, பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, உதவி மாவட்ட அலுவலர் ஹக்கீம் பாஷா, நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். வருகிற 20-ந் தேதி வரை தீ தொண்டு வார விழா "தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும்" என்ற தலைப்பின் கீழ் கடைபிடிக்கப்படவுள்ளது. அப்போது மாவட்டம் முழுவதும் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி, தீ விபத்து, பேரிடர்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது? என்பது குறித்து தீயணைப்பு நிலைய வீரர்கள் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவுள்ளனர்.
- போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
- போலீசார் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் கோடை காலத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட போலீசார் சார்பில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோா் பந்தல் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோரினை வழங்கினார். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி, பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 3 பேர் குணமாகியுள்ளனர்
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 7 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 31 பேரில், 3 பேர் குணமாகியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
- தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மீட்டனர்
- கிணற்றில் குளித்தவர் உயிரிழந்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி காந்தி நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் முருகேசன் (வயது 23). இவரும், அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர்களான மருதையின் மகன் சாமிநாதன் (25), தொப்புளானின் மகன் விக்னேஷ் (23) ஆகிய 3 பேரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் குளிப்பதற்காக அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்கு சென்றனர். அப்போது முருகேசன் அவரது சட்டை, லுங்கி, காலணி ஆகியவற்றை கழற்றி வைத்து விட்டு கிணற்றில் குளித்தார். பின்னர் கிணற்றில் இருந்து அவர் மேலே வரவில்லை.இந்த நிலையில் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சாமிநாதனும், விக்னேசும் இதுகுறித்து ஊருக்குள் சென்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.அதனை தொடர்ந்து பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, கிணற்றில் இருந்து முருகேசனை பிணமாக மீட்டனர். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொளுத்தும் வெயிலால் மக்கள் தவித்து வருகின்றனர்
- பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் தவித்து வருகின்றனர் பெரம்பலூர் குடை பிடித்தபடி செல்கின்றனர் கொரோனா ஒருபுறம் அச்சுறுத்தி வரும் அதேவேளையில் சத்தமில்லாமல் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது.
நேற்றும் வெயில் கடுமையாக கொளுத்தியது. வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் சாலையில் நடந்து செல்வோர்கள் குடை பிடித்தபடியும், தலையில் துணி போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும் சென்றனர்.
வாகன ஓட்டிகள் சிரமம் வெயிலின் தாக்கத்தினால் சாலையில் கானல் நீர் தோன்றுகிறது. மேலும் வெயிலோடு சேர்ந்து அனல் காற்றும் வீசுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். வெயிலின் கொடுமையை சமாளிக்க முடியாமல் வெளியில் செல்வதை தவிர்த்து பலர் வீடுகளிலேயே முடங்கினர்.
- சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது
- 34 மனுக்கள் பெறப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி தலைமையில் நேற்று நடந்தது. முகாமில் போலீசார் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 34 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு ஏதுவாக போலீசார் சார்பாக பாலக்கரையில் இருந்து மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்கும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்தார்.
- முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
- அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
பெரம்பலூர்:
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம், பொம்மனபாடி கிராமத்தில் வசித்து வருபவர் நடராஜன்(வயது 65). இவர் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) நேற்று காலை குடித்துவிட்டார். இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்
- வளர்ச்சி திட்ட பணிகளையும் பார்வையிட்டார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்து வகைகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகளின் இருப்பு பதிவேடு, நோயாளிகளின் வருகை பதிவேடு, அனைத்து வகையான கர்ப்பிணிகள் குறித்த பதிவேடு, மக்களைத்தேடி மருத்துவ திட்ட பதிவேடு, தடுப்பூசி இருப்பு வினியோக பதிவேடு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்ததற்கான பதிவேடுகள் ஆகியவை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சுகாதார நிலைய அலுவலர்கள், மருத்துவர்கள், நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்கிறார்களா?, தேவையான மருந்து- மாத்திரைகள் வழங்கப்படுகிறதா? என்றும், சிகிச்சை பெற வந்த நோயாளியிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.50 லட்சம் செலவில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சேகர், குன்னம் தாசில்தார் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தடகள பயிற்சிக்காக 59 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- மாவட்ட விளையாட்டு அலுவலர் தகவல்
பெரம்பலூர்:
பெரம்பலூர் தடகள பயிற்சிக்கான தேர்வு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு இந்தியா (கேலோ இந்தியா) திட்ட நிதியுதவியில் தொடக்க நிலை தடகள பயிற்சிக்கான விளையாட்டு மையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடகள பயிற்சிக்கான தேர்வு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
பயிற்சியை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் தொடங்கி வைத்தார்.
தேர்வு தடகள போட்டிகளில் மாவட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 35 மாணவர்கள், 24 மாணவிகள் என மொத்தம் 59 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவார்கள், என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் தெரிவித்தார்.






