என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் சாரதா தேவி பள்ளியில் நடைபெற்றது
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரிக்கை
பெரம்பலூர்,
பெரம்பலூரில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையமான ஸ்ரீ சாரதா தேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் நடந்த தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிவேலன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் வெங்கடேசன், முன்னாள் மாநில செய்தி தொடர்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் மணிவாசகன் கலந்துகொண்டு பேசுகையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்கவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து அமல்படுத்தவேண்டும், உயர் கல்விக்கான ஊக்கத்தொகை நிறுத்தி வைத்ததை மீண்டும் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வதை நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாக மீண்டும் வழங்கவேண்டும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றி ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என வலியுறுத்தி பேசினார். இதில் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜனகிராமன் நன்றி கூறினார்.
- சட்டசபையில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் பேச்சு
- தனிக்காவல் நிலையங்கள் அமைத்து தரவும் கோரிக்கை
பெரம்பலூர்,
நேற்றைய சட்டப்பேரவை நிகழ்வின் போது மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய தி.மு.க.வை சேர்ந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.அப்போது பேசிய அவர், "பெரம்பலூர் நகர், வி.களத்தூர், அகரம் சீகூரில் தனிக் காவல் நிலையம் அமைத்து தர வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்திற்கு இரண்டு தனி கோட்டாட்சியர்களை நியமிக்க வேண்டும்", என கோரிக்கை வைத்து பேசினார்.மேலும் அமைச்சர் உதயநிதியின் உன்னதமான உழைப்பு, பொதுமக்களை கனிவாக அணுகும் முறை, செயலாற்றும் பாங்கு ஒரு துறையோடு நின்றுவிடக்கூடாது. முதலமைச்சரின் துணை நின்று அனைத்து துறைகளிலும் மேற்கொள்ள வேண்டும். இன்று பலரும் வாழ்த்தும் வண்ணமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி பதவி ஏற்று பலரும் பாராட்டத்தக்க வகையில் செயலாற்றி வருகிறார்.இன்னும் சொல்லப்போனால் அவர் பாணியில் நின்று விளையாடி போர், சிக்ஸர் என கலக்குகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உன்னதமான உழைப்பு, பொதுமக்களிடம் அவரது கனிவான அணுகுமுறை, செயலாற்றும் பாங்கு ஓரிரு துறைகளோடு நின்று விடக்கூடாது. அதையும் தாண்டி நமது நம்பர் 1 முதலமைச்சரின் தலைமையின் கீழ் அனைத்து துறைகளிலும் அவரது உழைப்பு, சீரிய சிந்தனை, மகளிர் உயர்வு குறித்த தொலைநோக்கு திட்டம் ஆகியவை குறித்த பணிகளை முதலமைச்சரின் துணை நின்று மேற்கொள்ள வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் என இவ்வாறு பேசினார்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்ற பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரனின் சூசகமான இந்த பேச்சு தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
- போலீசார் ரோந்து பணியின் போது சிக்கினர்
- மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு
பெரம்பலூர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது ஒதியம் கிராமத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த, அதே கிராமத்தை சேர்ந்த பச்சமுத்துவை (வயது 50) போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சிறுகுடல் கிராமத்தில் பீல்வாடி-அருமடல் சாலையில் உள்ள ஓடை அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த சிறுகுடல் தெற்கு தெருவை சேர்ந்த செல்லப்பிள்ளையை(45) மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுன. மேலும் இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ, சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 9498100690 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும், என்று போலீசார் தெரிவித்தனர்.
- மாணவியை கடத்திய சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
- மாணவியை போலீசார் மீட்டனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வில் கடைசி தேர்வை எழுதி முடித்து வெளியே வந்த 17 வயதுடைய ஒரு அரசு பள்ளி மாணவி வீடு திரும்பவில்லையாம். இது தொடர்பாக மாணவியின் உறவினர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் மாணவியை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் வெளியூருக்கு கடத்தி சென்று ஒரு வாரம் தங்கி விட்டு, பின்னர் தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்கியிருந்தது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாணவியை மீட்ட மகளிர் போலீசார், சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
- 39 கிராமங்களில் நடைபெற்றது
- வேட்டையாடப்பட்ட முயல்கள் அம்மனுக்கு படையலிடப்பட்டது
பெரம்பலூர்,
நாவலூர், லாடபுரம், பாளையம், குரும்பலூர், களரம்பட்டி, கீழக்கணவாய், தம்பிரான்பட்டி, செல்லியம்பாளையம், விளாமுத்தூர், நொச்சியம், எசனை, புதுநடுவலூர், அரணாரை, சத்திரமனை, செஞ்சேரி, சிறுவாச்சூர், அம்மாபாளையம், வேலூர், மேலப்புலியூர், கோனேரிபாளையம் ஆகிய 20 கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா நடைபெற்றது.பாடாலூர் பகுதியில் கண்ணப்பாடி, நத்தக்காடு, நக்கசேலம், குரூர், சிறுவயலூர், பாடாலூர், டி.களத்தூர், பொம்மனபாடி, செட்டிகுளம், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், அடைக்கம்பட்டி, விஜயகோபாலபுரம், தெரணி, தேனூர் ஆகிய 15 கிராமங்களிலும், மருவத்தூர்பகுதியில் அய்யலூர், கல்பாடி எறையூர், கல்பாடி ஆகிய 3 கிராமங்களிலும், அரும்பாவூர் பகுதியில் விசுவக்குடி கிராமத்திலும் முயல் வேட்டை திருவிழா நடைபெற்றது.வேட்டையாடியதில் கிடைத்த முயல்களுடன் அவர்கள் கிராமத்தின் ஒரு பகுதியில் மாலை கூடினர். அப்போது அங்கு வேட்டைக்கு சென்றவர்களின் குடும்பத்திலுள்ள பெண்கள், அவர்களுக்கு உணவு மற்றும் புத்தாடை எடுத்துக்கொண்டு அப்பகுதிக்கு வருகை புரிந்தனர். வேட்டைக்கு சென்ற அனைவரும் குளித்து, புத்தாடை அணிந்து, பின்னர் அங்கிருந்து முயல்களை குச்சிகளில் தோரணமாக கட்டி தொங்கவிட்டு, மேளதாளங்களுடன் ஆடிப்பாடி தெருக்களில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். ஊர்வலத்தின் போது, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, கண் திருஷ்டி நீங்கவும், நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக இருக்கவும், அவர்களுக்கு முகம் மற்றும் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, ஊர்வலமாக அழைத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு முயல்களை பலி கொடுத்து படையல் செய்யப்பட்டது. பின்னர் முயல் இறைச்சி சமமாக பங்கு பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது. இதனை சமைத்து வீட்டிலேயே அம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்து, உண்டு மகிழ்ந்தனர்.
- பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- கண்களில் கருப்பு துணி கட்டி பெண்கள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்,
பெண்களுக்கு எதிரான தொடர் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட மகளிர் பாசறை சார்பில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நூர்ஜஹான் தலைமை தாங்கினார். மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் செல்லம்மாள், இணைச் செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் தமிழகத்தில் பெண் குழந்தைகள், பெண்கள் மீதும் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் பாலியல் வன் கொடுமைகள் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பெண்கள் பணியிட பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மகளிர் பாசறையினர் தங்களது கண்களில் கருப்பு துணியை கட்டி கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
- சாலையில் ஓடிய ஆசிட்டில் இருந்து எழுந்த புகையால் பெண் மயக்கம்
- தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை தெளித்து நடவடிக்கை
பெரம்பலூர்,
பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே இருசக்கர வாகனத்தில் ஆசீட் அடங்கிய பெரிய குடுவைகளுடன், ஒருவர் சென்று கொண்டிருந்தார். இதில் இருந்து ஒரு குடுவை கீழே விழுந்து உடைந்து உள்ளது. உடையும் பொழுது பெரும் சத்தத்தை ஏற்படுத்த உள்ளது. இதனால் அந்த வாகனத்திற்கு பின்னால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு பெண் மயங்கி விழுந்துள்ளார். ஆனால் இது பற்றி எதுவும் அறியாமல், ஆசிட் ஏற்றி சென்ற இருசக்கர வாகன ஓட்டி சென்று விட்டார். ஆசிட்' தண்ணீர் போல் சாலையில் ஓடியது. மேலும் கொளுத்திய வெயிலுக்கு 'ஆசிட்' பொறிந்து கொண்டிருந்தது. இதனால் மீண்டும் வெடிக்கலாம் என்று பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாலையில் கொட்டி கிடந்த 'ஆசிட்' மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து சாலையை தூய்மைபடுத்தினர். 'ஆசிட்' வெடிக்கும் போது, அதனருகே யாரும் இல்லாததால் பெரிய அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் 'ஆசிட்' கொண்டு சென்றது யார்? அவர் எதற்காக 'ஆசிட்' கொண்டு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கை, கால் வலியால் அவதிபட்டு வந்தவர் தற்கொலை
- போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை
பெரம்பலூர்.
தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி வடக்கு தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 88). வயது மூப்பின் காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக விஸ்வநாதனுக்கு கை, கால் வலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் கடந்த 14-ந் தேதி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த விஸ்வநாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பெரம்பலூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது
- கலந்து கொள்ள மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி அழைப்பு
பெரம்பலூர்,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள 2-ம் நிலை காவலர் (காவல்துறை, தீயணைப்புதுறை மற்றும் சிறைத்துறை) மற்றும் நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (சட்டம்-ஒழுங்கு, ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்படை) ஆகிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துறைமங்கலத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிக்காட்டுதல் மையத்தில் நாளை (புதன்கிழமை) முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பானது காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தேர்வில் அனுபவமுள்ள சிறந்த பயிற்சியாளர்களால் நடத்தப்படவுள்ளது. எனவே இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இருபாலரும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் தனிப்பிரிவை 9498100690 என்ற செல்போன் எண்ணிலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 9799055913 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.
- தீத்தொண்டு நாள் வார விழா நடைபெற்றது
- உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந்தேதி தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தொண்டு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தீயணைப்புப் பணியில் ஈடுபட்ட, தீயணைப்பு வீரர்கள் சிலர், தீயில் கருகி வீரமரணம் அடைந்தனர். இதனால் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந்தேதி தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதன்படி பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வளாகத்தில் நேற்று தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மாவட்ட தீயணைப்பு அம்பிகா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உதவி மாவட்ட அலுவலர் அக்கீம்பாஷா மற்றும் நிலைய அலுவலர் உதயக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.பின்னர் தமிழ்நாடு தீயணைப்பு, மீட்பு பணித்துறை சார்பில் ஏப்ரல் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை தீத்தொண்டு நாள் வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான வீரர்கள் பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட், பாலக்கரை ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் தீ விபத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
- பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர்:
தமிழ் புத்தாண்டையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் தமிழ்புத்தாண்டையொட்டி அதிகாலையில் இருந்தே திரளான பக்தர்கள் குவிந்தனர். மேலும் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பல் மண்டல அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடந்தது. இதில் மகாசித்தர்கள் டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகினிமாதாஜி, தவயோகிகள் மகாலிங்க சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் ஸ்ரீபிரம்மரிஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஈசன் அம்பாள் மற்றும் உற்சவமூர்த்திகள் ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீசந்திரசேகரர் பஞ்சமூர்த்திகள் ஸ்ரீமகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீவெள்ளந்தாங்கியம்மன், ஸ்ரீசெல்லியம்மன் ஆகிய உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணியளவில் ஈசன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதே போல் பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவில், எளம்பலூர் சாலை பாலமுருகன் கோவில், செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி கோவில், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாசலஸ்வரர் கோவில், எஸ். ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களில் சுவாமிகள் அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டு அருகே காவல்துறை சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
- தண்ணீர் பந்தலை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி திறந்து வைத்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால தண்ணீர் பந்தலை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் பேசும்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக பொதுமக்கள் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து செல்கிறார்கள்.
பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் முக்கியமான இடமாக உள்ள பகுதிகளில் கோடையின் தாக்கத்தினால் ஏற்படும் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது என தெரிவித்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோரினை எஸ்.பி. வழங்கினார். நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. மதியழகன், டி.எஸ்.பி. பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் எஸ்.ஐ.க்கள், போலீசார், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.






