என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • லெப்பைக்குடிகாடு பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • வேப்பூர் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கண்டித்து

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழக்குடிகாடு வெள்ளாற்று தடுப்பணையில் இருந்து 73 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதற்காக தமிழக அரசு வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி 70 சதவீத பணிகளை முடித்துள்ளது.

    இந்தநிலையில், லெப்பைக்குடிகாடு, பென்னகோணம், கீழக்குடிகாடு ஆகிய கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தை நீர் ஆதாரம் உள்ள வேறு பகுதியில் தமிழக அரசு தொடங்க நடவடிக்கை எடுக்கக்கோரி லெப்பைக்குடிகாடு நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில், லெப்பைக்குடிகாடு நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் லெப்பைக்குடிகாடு, கீழக்குடிகாடு, பென்னகோணம், அரங்கூர், வாகையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் லெப்பைக்குடிகாடு பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மங்களமேடு உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் எறையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    • கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது
    • பெரம்பலூரில் நாளை முதல்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நாளை (5-ந் தேதி) முதல் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான கோடைக்கால கலைப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருச்சி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் நீலமேகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் பள்ளிக்கல்வியோடு துணைக்கல்வியாக கலைப் பயிற்சி வழங்கி அவர்களின் கலைத் திறனை மேம்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் செயல்பட்டு வரும் சவகர் சிறுவர் மன்றத்தில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே, சிலம்பம் ஆகிய கலைப்பயிற்சிகள் 5 வயது முதல் 16 வயது வரையில் உள்ள மாணவர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழ நாளை (5ம்தேதி) முதல் வரும் 14 -ந் தேதி வரை கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.

    இப்பயிற்சி முகாம் காலை 9 மணி முதல் நண்பகல் ஒரு மணிவரை நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி நிறைவு நாளில் பங்கேற்புச் சான்று வழங்கப்படும்.

    பயிற்சி முகாமில் கலந்து விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது வயதுச் சான்றிதழுடன் பெரம்பலூர் அரசு இசைப்பள்ளிக்கு நாளை காலை 9 மணிக்கு வருகை தந்து கலைப்பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் பல பயிர் சாகுபடி செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.
    • மண்வளம் பெருக்க

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் மண் வளம் காக்க பல பயிர் சாகுபடி செய்யலாம் என வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

    இது குறித்து பெரம்பலூர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் தெய்வீகன் தெரிவித்துள்ளதாவது,

    பல பயிர் சாகுபடி என்பது ஒரே வயலில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிர்களை ஒன்றாக விதைத்து அவை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதன் மூலம் மண்ணின் வளத்தை பெருக்குவதாகும். பொதுவாக தானியங்களில் 2 வகை, எண்ணெய் வகை வித்துக்களில் 2 வகை, பயறு வகைகளில் 2 வகை, பசுந்தாள் ஒரு வகை என ஒவ்வொன்றும் ஒரு கிலோ வீதம் 7 கிலோ ஒரு ஏக்கருக்கு போதுமானது.

    கோடையின் இறுதியில் பருவப்பயிருக்கு முந்தைய காலத்தில் கிடைக்க பெறும் இடைக்காலத்தில் பசுந்தழை பயிர்களோ பல பயிர்களோ பயிரிட்டு அவற்றை மடக்கி உழுது அடுத்த பயிருக்கு உரமாக்குவது அங்கக வேளாண்மையின் சிறந்த ஒரு தொழில்நுட்பம் ஆகும். பல ஆண்டுகளாக செயற்கை உரம் மற்றும் பூச்சிகொல்லி பயன்பாட்டில் வளம் இழந்துள்ள மண்ணின் வளத்தை மீட்டெடுக்கவும் இயற்கை விவசாயத்தை துவக்குவதற்கும் விவசாயிகள் முதலில் மேற்கொள்ள வேண்டிய பல பயிர் விதைப்பு நடவடிக்கையாகும்.

    இம்முறையில் தானிய வகை பயிர்களான சோளம் ஒரு கிலோ, கம்பு அரை கிலோ, தினை, சாமை தலா 250 கிராம், உளுந்து, பாசிசப்பயறு, தட்டைப்பயறு, கொண்டைக்கடலை ஆகியவை தலா ஒரு கிலோ எண்ணெய் வித்து பயிர;களான நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு தலா 2 கிலோ, எள் 500 கிராம், பசுந்தாள் பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பை தலா 2 கிலோ ஆகியவற்றை ஒரே நிலத்தில் விதைக்க வேண்டும். இந்த விதைகளை குறிப்பிட்ட அளவு பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயமில்லை. நிலத்தின் பரப்பு கிடைக்கும் விதைகளை பொறுத்து விதைக்கலாம்.

    விதைகள் வளர்ந்து 45-50 நாட்களாகி பூத்த பின்பு செடிகளை மடக்கி உழவு செய்ய வேண்டும். இதன் மூலம் மண்ணில் நுண்ணுயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டசத்து இயற்கையாகவே கிடைத்திட இது வழி செய்கிறது. பல ஆண்டுகளாக பயன்படுத்திய செயற்கை உரம், பூச்சிகொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறைவதோடு மண்ணின் கரிமச்சத்து அளவு அதிகரிக்கிறது. பல தானிய பயிர்களை மடக்கி உழுத பிறகு இயற்கை உரங்களான சாணம், கோமியம், பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயம் துவங்க ஏதுவாகும் என தெரிவித்துள்ளார்.

    • சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் உள்ள ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் சித்ரா உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்களுக்கு இணையான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750-ஐ அகவிலைப்படியுடன் சேர்த்து வழங்க வேண்டும். தமிழ்நாடு சத்துணவு துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் உடனே நிரப்பிட வேண்டும். சத்துணவு மையங்களில் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் நடைமுறையை தனியாருக்கு கொடுக்காமல் சத்துணவு ஊழியர்கள் மூலமே காலை சிற்றுண்டி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றனர்.

    • சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.
    • போலீஸ் அலுவலக வளாகத்தில்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையம் மற்றும் சிறப்பு போலீஸ் பிரிவினர் கலந்து கொண்டனர். முகாமில் 19 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 6 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது
    • ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் அண்ணாமலை, கிருஷ்ணமூர்த்தி, செல்லமுத்து, துரைராஜ், கண்ணதாசன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாசலம் மே தின சிறப்புக்கள் குறித்தும், அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்தும் பேசினார். மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் சிவசுப்ரமணியம், மீனவர் பிரிவு இணை செயலாளர் தங்கமணி, முன்னாள் எம்பி சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பேசினர்.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், சிவப்பிரகாசம், மாவட்ட நிர்வாகிகள் குணசீலன், ராஜாராம், ராஜேந்திரன், டாக்டர் நவாப்ஜான், முத்தமிழ்செல்வன் மற்றும் துறைமங்கலம் சந்திரமோகன், கீழப்புலியூர் நடராஜன், வக்கீல் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் ராஜபூபதி வரவேற்றார். முடிவில் மின்வாரிய பிரிவு கோட்ட பொருளாளர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

    • பட்டியல் அணி சார்பாக நடைபெற்றது
    • கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன

    பெரம்பலூர்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து பெரம்பலூரில் பாஜக மாவட்ட பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பாரதிய ஜனதா கட்சி, பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் அவர்கள் கடந்த 27ம்தேதியன்று சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலையை கண்டித்தும், பாஜக நிர்வாகிகள் மீது தொடர் தாக்குதலை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் நேற்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதன்படி பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்டில் பாஜக பட்டியல் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சதீஸ்குமார் தலைமை வகித்தார். பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ், பட்டியல் அணி மாநில செயலாளர் பிச்சைமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி மாநில தலைவர் தடா.பெரியசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.இதில் மாநில துணை தலைவர்கள் பாலாஜி தேவேந்திரன், கலைச்செல்வன், மாவட்ட பொதுசெயலாளர் முத்தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நகர தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொதுசெயலாளர் ஜெயபால் நன்றி கூறினார்.

    • கர்ப்பத்தை மாத்திரை கொடுத்து கலைத்தார்
    • வழக்கு பதிந்து போலீசார் வாலிபர், அவரின் அத்தையை கைது செய்தனர்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 26 வயதுடைய பட்டதாரி பெண்ணுக்கும், சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த மாணிக்கவாசுவின் மகன் கிஷோர்குமார் (வயது 24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. அந்த பெண்ணை விட கிஷோர்குமார் 2 வயது குறைந்தவராக இருப்பினும், கடந்த 3½ வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கிஷோர்குமார், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கி பழகியதால், அந்த பெண் கர்ப்பமடைந்தார். இதையடுத்து, கிஷோர்குமாரின் அத்தை முறை உறவினரான சித்ரா, அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த ெபண், கிஷோர்குமாரிடம் பலமுறை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் கிஷோர்குமார், அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும் அவரது தாய் அமுதா (50), தம்பி ஹரிசங்கர் (22) ஆகியோர் அந்த பெண்ணை தவறாக பேசி, அவரை தாக்கி விரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், கிஷோர்குமார் மீது பாலியல் பலாத்காரம், எஸ்சி.எஸ்டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் கிஷோர்குமாரின் அத்தை சித்ராவும் கைது செய்யப்பட்டார்.

    • மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    பெரம்பலூர்,

    செட்டிகுளம் அருகே உள்ள புதுவிராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுசாமி (வயது 62). இவர் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே அப்பகுதியை சேர்ந்த விஜய் ஆனந்த்(33) பேன்சி கடை வைத்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கண்ணுசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடையை திறக்காமல் இருந்தார். இந்நிலையில் அவரது கடையில் திடீரென வயரில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பற்றி எரிந்தது. இதில் பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் அருகே உள்ள விஜய் ஆனந்த் கடைக்கும் தீ பரவியது. இதனைக் கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பெரம்பலூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களை தாக்கிய 3 பேர் கைது செய்யபட்டனர்
    • காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

    பெரம்பலூர:

    பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி சூரியா நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ரஞ்சித் (வயது 22). இவரது நண்பர் சின்னசாமி மகன் ராஜ்குமார் (28). இவர்கள் 2 பேரும் நேற்று காலை எசனையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் 2 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ரஞ்சித்தின் தம்பி ராம்கி (20), தாயார் ராஜேஸ்வரி, ராஜ்குமாரின் தாயார் கனகா ஆகியோர் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றனர்.

    அப்போது, அங்கு தற்காலிக ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வரும் காவலாளி சின்ராஜ் (53), காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை உள்ளே செல்ல அனுமதி மறுத்து வெளியே காத்திருக்குமாறு கூறியுள்ளார். ஆனால், அவர்கள் உள்ளே சென்றுள்ளனர். இதனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராம்கி, ரஞ்சித், ராஜ்குமார் ஆகியோர் சின்ராஜை தாக்கியுள்ளனர். இதனை தட்டி கேட்ட தற்காலிக ஒப்பந்த ஊழியர்களின் கண்காணிப்பாளர் அசோக் (28), காவலாளிகள் சுரேஷ்குமார் (37), வினோத்குமார் (42), துப்புரவு பணியாளர்கள் கவுரி (31), சங்கீதா (32) ஆகியோரையும் மேற்கண்ட 3 பேரும் தாக்கியுள்ளனர்.

    இதில் காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ராம்கி, ரஞ்சித், ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் இது தொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    • பெரம்பலூரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
    • ஒகளூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது

    பெரம்பலூர:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஒகளூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமையிலும், அகரம்சீகூர் ஊராட்சியில் தலைவர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையிலும் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • பெரம்பலூர் அருகே தச்சு தொழிலாளர் வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை போனது
    • வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்ற போது சம்பவம் நடந்தது

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே குவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் ரவிச்சந்திரன் (வயது 48). தச்சுத் தொழிலாளியான இவர், திருமணமாகி குடும்பத்துடன் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் வீட்ைட பூட்டிவிட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டைக்கு குடும்பத்துடன் சென்றார்.இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி விட்டனர்.

    இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன், உடனே வீடு திரும்பினார். பின்னர் பீரோவை பார்த்த போது அதில் இருந்த 16 பவுன் நகை திருடு போயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×