என் மலர்
பெரம்பலூர்
- சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- நிகழ்ச்சியில் தீ விபத்தை தடுப்பது குறித்த நடவடிக்கைகளையும் செயல்முறை விளக்கமாக செய்து காண்பித்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தின் கீழே நேற்று நடைபெற்றது. தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில், சிறப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுங்கச்சாவடி அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்களுக்கு தீ விபத்து ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தீ விபத்தை தடுப்பது குறித்த நடவடிக்கைகளையும் செயல்முறை விளக்கமாக செய்து காண்பித்தனர்.
- வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
- நீர்ப்பாசன வசதி உள்ள விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
பெரம்பலூர்:
தமிழ்நாடு வனத்துறையின் பெரம்பலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர் வனச்சரகம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் தேக்கு, கொய்யா, புங்கன், மகாகனி, வேம்பு, சவுக்கு மற்றும் பல இன மரக்கன்றுகள் வழங்கப்படும். நீர்ப்பாசன வசதி உள்ள விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இலவச மரக்கன்றுகள் தேவைப்படும் பெரம்பலூர், பேரளி, குன்னம், மாத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 8838543275, சிறுவாச்சூர், ஆலத்தூர், செட்டிகுளம், காரை ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9003771622, ரஞ்சன்குடி, லெப்பைக்குடிகாடு, அகரம்சீகூர், வி.களத்தூர், குரும்பலூர், புதுவேலூர், நக்கசேலம், டி.களத்தூர், அம்மாபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9965659632, லாடபுரம், எசனை, மேலப்புலியூர், ஆலம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9655476094 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம், என்று பெரம்பலூர் வனச்சரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமைபெற்ற மதுரகாளியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 5-ந் தேதி விமரிசையாக நடந்தது. இதைத்தொடர்ந்து தினமும் மண்டல பூஜைகள் நடைெபற்று வருகின்றன. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் சென்னை கோட்டூர் ஸ்ரீமகாமேரு மண்டலி சார்பில் 13-வது சித்ரா பவுர்ணமி விழா நேற்று முன்தினம் தொடங்கியது.
இதனை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழவும் வேண்டி முதல்நாள் சண்டி மஞ்சரி மகா ஹோமமும், நேற்று ஸ்ரீநவாவரண ஹோமமும் நடந்தது. விழாவிற்கு ஸ்ரீமதுராம்பிகானந்த பரமேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் தலைமை தாங்கி ஹோமங்கள் மற்றும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனையை தொடங்கி வைத்தார். இதில் ஸ்ரீமகா மேரு மண்டலியின் நிர்வாக பொறுப்பாளர் சுப்ரமணியன் முன்னிலையில் கும்ப பூஜைகளும், ஸ்ரீமதுரகாளி உற்சவ அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன.
நேற்று காலை குருவுக்கு பாத பூஜையும் நடந்தது. அதனைத்தொடர்ந்து ஸ்ரீநவாவரண பூஜையும், ஸ்ரீநவாவரண ஹோமமும், உச்சிகாலம் வரை அகண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணமும், குங்கும அர்ச்சனையும் நடந்தது. இதில் மகாமேரூ மண்டலியின் ஆன்மிக மெய்யன்பர்கள், சென்னை, தஞ்சை, அரியலூர் திருவாரூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த சுமங்கலி பெண்கள் திரளாக கலந்து கொண்டு லலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் குங்கும அர்ச்சனை செய்து, அம்பாளை வழிபட்டனர். பின்னர் சித்தர்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டு, அன்னதானம் நடைபெற்றது.
- கிணற்றில் தவறி விழுந்த டிரைவர் பலியானார்
- இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்புமணி (வயது 55). இவர் தண்ணீர் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரி டிரைவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வருவதாக தனது மனைவி செல்வியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் செல்வி, அன்புமணியை பல்வேறு இடங்களில் தேடினார். இந்நிலையில் சிறுவாச்சூர் கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வயலில் லாரிக்கு தண்ணீர் ஏற்றும் குழாயை எடுத்தபோது அன்புமணி கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டதாக செல்விக்கு இரவில் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்த்தபோது தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் விழுந்த அன்புமணியை தேடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து அன்புமணியை பிணமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அன்புமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள திருவாலந்துறையை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 56). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான வயலில் உள்ள மின் மோட்டாருக்கான சுவிட்சை போட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சின்னத்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிரைவர் வீட்டில் 4 பவுன் நகை-லேப்டாப் திருட்டு போனது
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகரம்சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அடுத்துள்ள கீழ்க்குடிகாடு மேற்குத்தெருவை சேர்ந்தவர் அறிவழகன் டிரைவர். இவரது மனைவி சுசிலா(வயது 47). அறிவழகன் வேலைக்காக வெளியூர் சென்று விட்டார். சுசிலா வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் உள்ள பீரோவை உடைத்து, அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ஒரு மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுசிலா, இது குறித்து மங்களமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பெரம்பலூரில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோவிலில் நேற்று காலை ஸ்ரீராமர், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் ஆகிய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், கலச பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் நடத்தினார். இரவில் கேடயத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
இதில் கோவில் பரம்பரை ஸ்தானிகம் பொன் நாராயண அய்யர், முன்னாள் அறங்காவலர் தெ.பெ.வைத்தீஸ்வரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மூலவர் மற்றும் ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரர் மற்றும் பஞ்சமூர்த்தி உற்சவ மூர்த்திகளுக்கு காலையில் மகா அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.
அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் சிவாச்சாரியார் நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
- மாணவர்களுக்கான எதிர்காலம் குறித்து சிறப்பு விருந்தினர் பேசினார்
- ராமகிருஷ்ணா கல்வி குழுமத்தில் 'ஞானோத்சவ்-23' விழா நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனம் சார்பில் 'ஞானோத்சவ்-23' மற்றும் கலைத்திருவிழா ஸ்ரீ சாரதா மகளிர் கலைக்கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் விவேகானந்தன், ஸ்ரீசாரதா மகளிர் கலை கல்லூரி முதல்வர் சுபலெட்சுமி, ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகரும், எழுத்தாளருமான ஈரோடு மகேஷ் கலந்துகொண்டு பேசுகையில், அறிவு என்பது வேறு, ஞானம் என்பது வேறு. அறிவு என்பது நீங்கள் முன்னேற பயன்படுவது, ஞானம் என்பது நீங்கள் பெற்ற அறிவின் மூலம் சமுதாயத்திற்குப் பயன்படுவதாகும். மாணவர்கள் தங்களுக்கான எதிர்காலத்தைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். எண்ணங்களை எப்பொழுதும் தங்களின் தோள்களில் சுமக்க வேண்டும், தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல் அதனை ரசனையுடன் ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
மாணவர்கள் எப்பொழுதும் மன உறுதியுடனும், தைரியத்துடனும் தான் மேற்கொண்ட இலக்கை அடைய வேண்டும். மாணவ, மாணவிகள் குடும்பச் சூழ்நிலைக்கேற்றவாறு பயணிக்க வேண்டும் என தெரிவித்தார்.இதில் துணை முதல்வர்கள், துறைதலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கில துறை தலைவர் ராமேஸ்வரி நன்றி கூறினார்.
- நாய்கள் துரத்தி கடித்ததில் மான் உயிரிழந்தது
- வனத்துறையினர் மானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து, வனப்பகுதியில் புதைத்தன
பெரம்பலூர:
பெரம்பலூர்-துறையூர் சாலையில் நேற்று வழித்தவறி வந்த ஒரு மானை அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த நாய்கள் சேர்ந்து துரத்தி சென்று கடித்தன. இதில் காயத்துடன் தப்பிய மான் பெரம்பலூர் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் ஓடி வந்தது. இதனைக்கண்ட மருத்துவமனையில் இருந்தவர்கள் அந்த மானை ஒரு மரத்தில் கட்டி வைத்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் வருவதற்குள் அந்த மான் பரிதாபமாக இறந்தது. இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து, வனப்பகுதியில் புதைத்தனர். இறந்தது ஆண் மான் என்றும், அதற்கு 1 வயது இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
- மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது
- வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் ஸ்பேஸ் லேப் திறப்பு விழா நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வரிசைப்பட்டி வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் ஸ்பேஸ் லேப் திறப்பு விழா நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் எம்.என்.ராஜா தலைமை தாங்கினார். பள்ளி மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் குத்துவிளக்கேற்றி விழா தொடங்கப்பட்டது. விழாவில் பள்ளியின் முதல்வர் செண்பகா தேவி வரவேற்புரை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக இஸ்ரோவில் இருந்த இந்திய விண்வெளி ஆராய்சியாளர் டி.கே.சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு ஸ்பேஸ் லேப்பினை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியது: மாணவர்கள் கல்வி கற்கும் போது சுதந்திரமாகவும், விருப்பத்தோடும் கற்க வேண்டும், ஒவ்வொரு மாணவர்களும் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று வாழ்த்தினார்.
பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடி மாணவர்கள் கேட்கும் பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடையளித்தார்.விழாவிற்கு வரதராஜன் கல்வி நிலையத்தின் அறக்கட்டளை குழுமத்தின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நவாஸ் எடுடெக் அமைப்பிலிருந்து ரோகித், ரவிகிருஷ்ணா, மீனா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் செய்திருந்தார்.
- கலெக்டர் கற்பகம் எச்சரிக்கை
- வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு என்ற பிரச்சார இயக்கம் ஜூன் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் பிரச்சார இயக்கத்துக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பேசுகையில், நம்ம ஊரு சூப்பரு பிரசார முனைப்பு இயக்கத்தினை அனைத்து கிராமங்களிலும் 100 சதவீதம் முழுமையாக செயல்படுத்தி, கிராமங்கள் தோறும் துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொண்டு, சுத்தம் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும்.
அதன்படி, கிராம ஊராட்சிகளில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பொது இடங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்றவற்றை பொதுமக்களோடு, கிராம துப்புரவு பணியாளர்களை ஒருங்கிணைத்து, அரசு பணியாளர்களும் தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.இந்த பணியை அனைத்துதுறை அலுவலர்களைக் கொண்டு கண்காணிக்க வேண்டும்.கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியினை (பிளாஸ்டிக் பைகள்) பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
செப்டிக் டேங்க் கழிவுகளை நீரு நிலைகள் மற்றும் பொது இடங்களில் வெளியேற்றும் நிலயைத் தடுக்கும் வகையில், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் நகராட்சி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் மலக்கசடு மேலாண்மை மையத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.இதை மீறும் செப்டிக் டேங்க் லாரி உரிமையாளர்கள் மீது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும், என்றார்.இதில் வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அருளாளன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மீன் வலையில் 5 அடி மலைப்பாம்பு சிக்கியது
- பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவர், தனது நண்பர்களுடன் நேற்று மீன் பிடிப்பதற்காக ஏரியில் வலை விரித்து வைத்துள்ளார். அவ்வலையை இழுத்த போது வலை கனமாக இருந்துள்ளது. பெரிய மீன் மாட்டியுள்ளது என நினைத்து வலையை ஆர்வமுடன் இழுத்தனர். ஆனால் மீன் வலையில் மீன் சிக்காமல் சுமார் 5 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து அந்த மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.






