என் மலர்
பெரம்பலூர்
- எசனை காட்டு மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
- மஞ்சள் நீர்-விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவடைந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எசனையில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் உள்ள காட்டுமாரியம்மன் கோவிலில் கடந்த 23-ந் தேதி பூப்போடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழா கடந்த 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. திருவிழாவின்போது ஏகாந்தசேவை, அன்னம், சிம்மம், பள்ளி கொண்ட காட்சி, சூரியன், சந்திரன் பிரபை ஆகிய அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் தினமும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகளும், கடந்த 7-ந் தேதி பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் நடந்தது.
நேற்று முன்தினம் பொங்கல் வழிபாடு, மாவிளக்கு பூஜை, வெட்டுங்குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா ஆகியவை நடந்தன.இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் பெரியசாமி, செல்லமுத்து, லோகுநல்லுசாமி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள், ஆய்வாளர் தீபாதேவி, வேணுகோபாலசுவாமி கோவில் செயல் அலுவலர் தேவி மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தாரை, தப்பட்டை முழங்க, மேளதாளங்களுடன் எசனை கடைவீதியில் இருந்து புறப்பட்ட தேர் புதுப்பிள்ளையார் தெரு, வேணுகோபாலசுவாமி, அக்ரகாரம், சிவன் கோவில் தெரு உள்ளிட்ட கிராமத்தின் பிரதான வீதிகள் வழியாக இழுத்து செல்லப்பட்டு மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில் எசனை, அரும்பாவூர், அன்னமங்கலம், பாப்பாங்கரை, சோமண்டாபுதூர், கோனேரிபாளையம், வேப்பந்தட்டை, தொண்டபாடி, அனுக்கூர், பெரம்பலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீர்-விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவடைந்தது.
- சத்துணவு ஊழியர் வீட்டில் 4 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருட்டு போனது
- இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்;
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மனைவி சசிகலா (வயது 37). இவர் தழுதாழை அரசு தொடக்கப் பள்ளியில் சத்துணவு ஊழியராக பணியாற்றி வருகிறார். சிவசுப்பிரமணியன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனை தொடர்ந்து சசிகலா தனது மகளுடன் அ.மேட்டூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகலா தனது வீட்டை பூட்டிவிட்டு, அருகில் உள்ள தனது தாயார் சித்ரா வீட்டில் மகளுடன் தங்கியுள்ளார்.
பின்னர் அவர் தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ெபாருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் தோடுகள், 2 பவுன் சங்கிலி, வெள்ளிக்கொலுசு மற்றும் ரூ.30 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து அரும்பாவூர் போலீசில் சசிகலா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் உயிரிழந்தது
- மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டவர் முன்னிலையில் வனக்காப்பாளர் அன்பரசுவிடம் அந்த மானின் உடல் ஒப்படைக்கப்பட்டது
அகரம்சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள லெப்பைக்குடிக்காட்டில் இருந்து பென்னக்கோணம் ரோட்டில் ஒரு வீட்டின் அருகே போடப்பட்டிருந்த கம்பி வேலியில் 5 மாத ஆண் புள்ளிமான் ஒன்று சிக்கி உயிரிழந்தது. இதுகுறித்து ரஞ்சன்குடி எல்லைக்கு உட்பட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டவர் முன்னிலையில் வனக்காப்பாளர் அன்பரசுவிடம் அந்த மானின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லெப்பைகுடிகாடு உதவி கால்நடை மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு மங்களம் காப்புக்காடு பகுதியில் அந்த மானின் உடல் புதைக்கப்பட்டது.
- பெரம்பலூரில் 2 ஆண்டு சாதனை விளக்க நிகழ்ச்சியில் 892 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த சாதனை விளக்க நிகழ்ச்சி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துறைமங்கலம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ரூ.9 கோடி செலவில் 892 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் முன்னிலையில் வழங்கினார்.
விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த சாதனை விளக்க மலரினை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டார்.பின்னர் அமைச்சர் பேசும்போது, பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் எறையூர் கிராமத்திற்கு நேரடியாக வந்து காலனி தொழில் பூங்கா கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி உள்ளார்.
இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் நபர்களுக்கு நம்முடைய பகுதியில் வேலை கிடைக்கும்.அரசால் அனைவருக்கும் அரசுத் துறையில் வேலை வழங்க முடியாது என்ற காரணத்திற்காக, தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்களை பெரம்பலூரில் நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன தேவை என்பதனை அறிந்து, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பல்வேறு திட்டங்களை அறிவித்தது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்தி வருபவர்தான் நம் முதலமைச்சர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சி.ராஜேந்திரன், வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- கூலி உயர்வு கோரி நடைபெற்றது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தமிழ்நாடு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர்- வடக்கு மாதவி சாலையில் உள்ள மாவட்ட அரசு டாஸ்மாக் குடோன் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அகஸ்டின் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.ஆர்ப்பாட்டத்தின்போது, கூலி உயர்வு கேட்டு போராடும் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களை போலீசாரை கொண்டு மிரட்டி, தொழில் அமைதியை சீர்குலைக்கும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும். தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் கூலி உயர்வு பிரச்சினையில் தலையிட்டு, மதுபாட்டில்கள் பெட்டி இறக்குவதற்கான கூலியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் அச்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் மதுபாட்டில்களை இறக்க முடியாமல் டாஸ்மாக் கிடங்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- சேற்றில் சிக்கி விவசாயி சாவு உயிரிழந்தார்.
- மீன் பிடிக்க ஏரிக்கு சென்றவர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் வேப்பந்தட்டை: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 40). விவசாயி. இவர் நேற்று தழுதாழையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் மீன் பிடிக்க சென்றார். ஏரியில் இறங்கி மீனுக்காக வலை விரித்தபோது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கிக்கொண்டார். பின்னர் வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரும்பாவூர் போலீசார், குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகா மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது
- தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அடுத்த பிரம்மதேசத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதுபோன்று இந்தாண்டும் கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி 25 அடி உயர தேரை பூக்களால் அலங்கரிக்கும் தலை அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சாமியை தலையிலும், தோளிலும் சுமந்து வந்து தேரில் எழுந்தருள செய்தனர். இதைத்தொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் பிரம்மதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தகோடிகள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- நம்ம ஊரு சூப்பர் திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- வேப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து வேப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பர் திட்டம் செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் கேசவன் தாஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் ஆயத்த நடவடிக்கைகள், வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்துதல், பொது இடங்களில் சுகாதார மேம்பாடு, துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பான உபகரணங்களை வழங்குவது, சுய உதவி குழு உறுப்பினர்கள் மூலம் வீடுகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் மேலாண்மை முக்கியத்துவம், வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் தடுப்பு மருத்துவம் மற்றும் குடும்ப நலன் குறித்து இரண்டு நாள் சுகாதார முகாம்கள் ஏற்பாடு செய்வது ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
- ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது
- பிளஸ் -2 பொதுத்தேர்வில் சிறப்பு
பெரம்பலூர்:
பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ்- 2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.மாணவி ரிபாயா 600க்கு 592 மதிப்பெண்னும், மாணவர் அருண்சங்கர், மாணவி அபிராமவல்லி 588-ம், மாணவர் அபிஷேக் 587 என மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். வேதியியல் பாடத்தில் 13 பேரும், உயிரியல் பாடத்தில் 12 பேரும், இயற்பியல், கணிதம், கணக்குபதிவியியல் ஆகிய பாடங்களில் தலா 2 பேரும், வணிக கணிதம் பாடத்தில் 7 பேரும், கணினி பயன்பாடு பாடத்தில் 5 பேரும் ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.மேலும் 580 மதிப்பெண்களுக்கு மேல் 9 மாணவர்கள், 575க்கு மேல் 75 மாணவர்கள், 550க்கு மேல் 97 மாணவர்கள், 500க்கு மேல் 358 மாணவர்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களையும் ஸ்ரீராமகிருஷ்ணா கல்விநிறுவன தலைவர் சிவசுப்ரமணியம், செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். நிகழ்ச்சியின்போது முதல்வர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
- பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது
- மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம், என்று பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
- 2 வீடுகளில் திருடியவர் கைது செய்யப்பட்டார்
- 4 பவுன், ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
பெரம்பலூர்.
குன்னம் தாலுகா, நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகைகளையும், மேலும் அதே கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.90 ஆயிரத்தையும் மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இது தொடர்பான புகார்களின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இந்த திருட்டில் ஈடுபட்டது தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே குருவாடிபட்டி கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்த மதியழகன் (வயது 38) என்பது தெரியவந்தது. இவர், நல்லூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், ராமச்சந்திரன் ஆகியோரது வீடுகளில் திருடியது தெரியவந்தது. பின்னர் மதியழகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரிடம் இருந்து 4 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரம், ஒரு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.
- மாற்று திறனாளிகளிடம் இருந்து மனுக்களை கலெக்டர் கற்பகம் பெற்றுக்கொண்டார்
- 3 மாற்று திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி 7 மனுக்கள், வேலைவாய்ப்பு வேண்டி 5 மனுக்கள், 3 சக்கர சைக்கிள் வேண்டி 1 மனு, இலவச வீடு மற்றும் பட்டா வேண்டி 12 மனுக்கள், வங்கி கடன் வேண்டி 6 மனுக்கள், உதவித்தொகை வேண்டி 5 மனுக்கள், திருமண உதவித்தொகை வேண்டி 1 மனு, 100 நாள் வேலை முழு ஊதியம் கிடைக்க வேண்டி 2 மனுக்கள், சிறப்பு (ஏ.ஒய்.ஒய்.) குடும்ப அட்டை வேண்டி 1 மனு, உதவி உபகரணங்கள் வேண்டி 5 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் காதொலி கருவி, ஊன்றுகோல் போன்ற உதவி உபகரணங்கள் கேட்டு மனு அளித்த 3 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.






